தனியார்மயத்தை கைவிடுக – பிரதமருக்கு பிஎம்எஸ் கடிதம்

ஜி.ஆர்.ரவி

2022 ஜனவரி 4 அன்று பாஜக வின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிஎம்எஸ் என்ற மத்திய தொழிற்சங்கம் “தனியார்மயத்தை கைவிடுக, பணமாக்கல் திட்டத்தை கைவிடுக, தொழிலாளர்-விரோத கொள்கையை மறு பரிசீலனை செய்க” என்று நீண்ட கடிதமொன்றை பாரத பிரதமருக்கு எழுதியுள்ளது.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை எதிர்த்து பிப்ரவரி 23, 24 2022 ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு இந்திய நாட்டின் 10 மத்திய தொழிற் சங்கங்களும் 70 க்கும் மேற்பட்ட அகில இந்திய சம்மேளனங்களும்  அறைகூவல் விடுத்துள்ளன. இதில் பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) என்ற ஆளும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழிற்சங்கம் இதில் பங்கேற்கவில்லை. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர்களிடையே மிகப் பெரிய எழுச்சி உண்டான பின்னணியில், பிஎம்எஸ் 2022 ஜனவரி 4ம் தேதி மேற் சொன்ன வகையில் கடிதம் எழுதியுள்ளது.

தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யாதே

அதில் பொதுத்துறை நிறுவனங்களின் மாண்புகளையும் இந்திய பொருளாதார மேம்பாட்டிற்கு அவை ஆற்றிவரும் அளப்பரிய பங்கினையும் வேலை வாய்ப்பு உருவாக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளது.  ‘சுலபமாக வியாபாரம் செய்ய’ என்ற பெயரில் கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக, போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும்  போக்கினை சுட்டிக்காட்டியுள்ளது.

1991 ஆண்டிலிருந்து, ஆட்சி புரிந்த பாஜக தலைமையிலான கூட்டணி அரசு உட்பட அனைத்து அரசாங்கங்களும் தாங்கள் எதிர் வரிசையில் இருந்த பொழுது கடுமையாக எதிர்த்த அதே தாராளமயக் கொள்கைகளை ஆட்சிக்கு வந்த பின் அமுலாக்குகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது.

பகடைக் காயாக மாறக்கூடாது

நிதி ஆயோக் தொலைநோக்கு பார்வையில்லாமல் அரசுக்கு தவறான தகவல்களை அளித்து வளர்ச்சிப் பாதையை திசை திருப்புவதாக அந்தக் கடிதத்தில் பிஎம்எஸ் கூறியுள்ளது.  இந்த அமைப்பு ஏதோ அரசாங்கத்திற்கு மேல் செயல்படும் ஓர் அமைப்பு போன்ற போலியான  ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளது.  மேலும் ”மோடி தலைமையிலான அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களைப் போல் உள் நோக்கம் கொண்ட அதிகாரிகளின், ஆலோசகர்களின் பகடைக் காயாக மாறக்கூடாது” என்று உபதேசித்துள்ளது.

தனியார்மயக் கொள்கையை மறுபரிசீலனை செய்க

2021 டிசம்பர் 16-17- இரண்டு நாட்கள் தனியார்மயத்திற்கெதிரான வங்கி ஊழியர்களின் மகத்தான வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாத பிஎம்எஸ், இந்திய பொருளாதாரத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்கினையும், மக்களுக்காக அது ஆற்றிவரும் பல் வேறு சமூகநல பணிகளையும் பட்டியலிட்டுள்ளது.  கார்ப்பரேட்டுகள், சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு களவாணிதனத்தாலேயே வங்கிகள் தற்பொழுது இந்த வராக்கடன்  சிக்கலில் உள்ளதாக கூறியுள்ளது.  இதேபோல் பல்வேறு பொதுத்துறை  நிறுவனங்களை தனித்தனியாக பட்டியலிட்டு அவை இந்திய பொருளாதாரத்திற்கு செலுத்திவரும் பங்கினை எடுத்துக்கூறி அரசாங்கம் தன்னுடைய நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அரசாங்கங்கதின் கொள்கையான ‘வியாபாரம் செய்வது அரசின் வேலை அல்ல’ என்பதையும் சுய பரிசோதனை செய்து ஆராயுமாறும் கேட்டக்கொண்டுள்ளது. 

12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 10 மத்திய தொழிற் சங்கங்கள் 2022 பிப்ரவரி 23-24 வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பிஎம்எஸ் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் மற்றும் பணமாக்கல் திட்டங்களை மட்டுமே பிரதானமாக எதிர்க்கிறது.  அதுவும் இது ஏதோ அதிகாரிகளின் ஆலோசகர்களின் தவறான உள் நோக்கம் கொண்ட பரிந்துரையால் நடப்பது போல சித்தரித்துள்ளது.  ஆனால் அரசாங்கத்தின் இந்த செயல் முழுக்க முழுக்க பாஜகவின் சித்தாந்தம்தான் என்பதை லாவகமாக மறைக்கப் பார்கிறது.  பிஎம்எஸ் உறுப்பினர்களும் ஏனைய தொழிலாளிகளைப் போல் எதிர் கொள்ளும் பாதிப்புகளின் காரணமாக ஏற்படுத்தியுள்ள நிர்பந்தம் காரணமாக இந்த எதிர்ப்பு கடிதம் எழுதப்பட்டிருக்கலாம்.  எது எப்படி இருப்பினும் பிஎம்எஸ் தொழிற் சங்கத்தின் கடிதம் பாஜக அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கையை அதனுடைய கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பாலேயே சகிக்க முடியவில்லை என்கிற  உண்மையை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

2 comments

  1. That the propaganda ” privatisation is the panacea for all the economic setbacks ” by the Government is questioned and opposed by its own trade union is proof enough of the authenticity of the claim which is well brought out in the article

  2. தொழிலாளர்களின் பல கட்ட போராட்டம் இன்று பி எம் எஸ் சங்கத்தை ஆட்சியாளர்களின் கொள்கைக்கு எதிராக தங்களது கருத்தை பதிவிட வைத்துள்ளதாக தான் பார்க்கின்றேன். எதுவாக இருப்பினும் இது தொழிலாளி வர்க்கத்தின் கூட்டு போராட்டத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

Comment here...