தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிடுக – இரண்டாம் பாகம்

ந.ராஜகோபால்

சென்ற இதழில் இத்திட்டம் எவ்வாறு தனியார் துறைக்கு சாதகமாகவும், பொதுமக்களுக்கு பாதகமாகவும், நாட்டிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பார்த்தோம்.

இனி இத்திட்டம் முக்கியமான துறைகளில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும், இதனால் மக்களுக்கு ஏற்படவிருக்கும் சுமைகளை பற்றியும் பார்ப்போம்.

சாலைகள்

தேசிய நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் அரசின் முதலீட்டில் போடப்பட்டவையாகும். 1,36,155 கி.மீ. தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 31,067 கி.மீ. நால்வழி பாதையாகும். இப்பாதையில் சுமார் 26,700 கி.மீ. தூரத்தை நான்காண்டுகளில் தனியாரிடம் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் போடப்படும் நால்வழி சாலைகளும் தனியாரிடம் தரப்படும். இதன்மூலம் நான்காண்டுகளில் ரூ. 1,60,200 கோடி திரட்டப்படும் என்று திட்டம் கூறுகிறது.

ஆண்டுகி.மீரூபாய் (கோடியில்)
2021-22500030000
2022-23547632855
2023-24733043979
2024-25889453366
மொத்தம்26700160200

தமிழ்நாட்டில் 2022-25 ல் தனியார் மயத்திற்குள்ளாகும் முக்கிய சாலைகள்

உளுந்தூர்பேட்டை – கடலூர்         94 கி.மீ
உளுந்தூர்பேட்டை-திண்டிவனம்  73 கி.மீ
திருச்சி – வடலூர்                          38 கி.மீ
கிருஷ்ணகிரி- தோப்பூர் கேட்         63கி.மீ
ஓசூர்-கிருஷ்ணகிரி 6 வழி            80 கி.மீ
தாம்பரம்-திண்டிவனம்             46.5 கி.மீ
திருச்சி-காரைக்குடி                   117 கி.மீ

இந்தச் சாலைகளை குத்தகை எடுக்கும் தனியார் அதற்கான சுங்கவரி வசூலிக்கும் உரிமை பெறுவார். இவ்வாறாக சாதாரண மக்களிடமிருந்து சுங்கவரி என்ற பெயரில் பணம் கொள்ளையடிக்கப்படும்.

ரயில்

விற்பனைக்கு தயாராக இருக்கும் மொத்தச் சொத்துக்களும் அவற்றில் நாலாண்டில் விற்கப் போகும் சொத்துக்களும்

சொத்துமொத்தம்உடனடி விற்பனைக்கு
தண்டவாளம்67368 கி.மீஒரு ரூட் – 1400 கி.மீ
ரயில் நிலையம்7325400
குட்ஷெட்1246265
மலை ரயில்54
கிழக்கு மேற்கு தனிசரக்குப் பாதைகள்2843 கி.மீ673கி.மீ
பயணி ரயில்கள்1316990
கொங்கன் ரயில்வே741 கி.மீ741 கி.மீ
ரயில்வே மைதானம் 15

100 பெருநகரங்களில் 2200 ஏக்கர் நிலத்தில் உள்ள ரயில் நிலையங்களை 45 ஆண்டு குத்தகைக்கு விட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதில் 100 சதவீதம் அன்னிய முதலீடும் ஏற்கப்படும் என்பது தேசியத்திற்கு முரண். ரயில் நிலையத்தின் மின்சாரம், ஓய்வறை, கேன்டீன் உட்பட வணிக நிலையங்கள் அனைத்தும் தனியார் கட்டுப்பாட்டில் வந்துவிடும். டிக்கெட் விற்பனை மட்டும் ரயில்வே துறையிடம் இருக்கும். இதில் மேலும் மோசமான ஷரத்து என்னவென்றால் ஒப்பந்தக்காரர் சுற்றியுள்ள நிலத்தை பயன்படுத்தி வணிக வளாகம் கட்டிக் கொள்ளலாம். தண்ணீரிலிருந்து அனைத்தும் நுகர்வோருக்கு அதிக விலையில் விற்கப்படும். 400 ரயில் நிலையங்களில் 27 ரயில் நிலையங்கள் தமிழ்நாட்டு பட்டியலில் விற்பனைக்கு உள்ளன. இத்திட்டம் சாதாரண பயணிகளை பொருளாதார ரீதியாக தாக்கும். பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்குகின்ற ரயில்வே துறையில் இவை அனைத்தும் பறிபோகும் அபாயம் உள்ளது.

அதேபோல் தேசிய அடித்தள கட்டுமான வழித்தடத்தில் 2025க்குள் 500 பயணி வண்டிகளை தனியாரிடம் தாரை வார்க்க திட்டமிட்டுள்ளார்கள். இதனால் ரயில் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும். பெருவாரியான மக்களின் போக்குவரத்திற்கு பெரிதும் உதவும் ரயில்கள் இனி பலருக்கும் எட்டா விஷயமாக மாறிப்போகும். குத்தகைக்கு எடுக்கும் தனியார் ஏற்கனவே வழக்கத்தில் உள்ள அனைத்து பயன்பாட்டையும் உபயோகித்துக் கொள்வார்கள். அதற்கான பயன்பாட்டு கட்டணமாக வரும் வருமானத்தில் ஒரு பங்கு கட்டினால் போதும். 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட அரசு இருந்தும்கூட தனியார் துறை ரயில்களை 15-20 ஆண்டிற்கு குத்தகை எடுக்க ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். காரணம் அதன் பிறகு ரயில் வண்டிகள் பழுதடையும் அபாயமும் அதனால் ஏற்படும் செலவினங்களை தனியார் பார்த்துக் கொள்ள நேரிடும் என்பதனாலும். இது தான் தனியார்களின் லாப வேட்கை. கட்டணம் உயர்த்தினால் பயணிகள் ரயில் வண்டியை புறக்கணிப்பதும் அனுபவத்தில் உள்ளதுதான். உலகம் முழுவதும் ரயில்வேயில் தனியார் முதலீடு தோல்வியையே சந்தித்துள்ளது. அரசுகளே முதலீடு செய்கிறது. கொங்கன் ரயில்வேயும், மலை ரயிலும், ரயில் பெட்டி தொழிற்சாலை மைதானம் உட்பட அனைத்தும் தனியார்மயமானால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இந்திய ரயில்வேயில் 3 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இத்துறை தனியார்மயமானால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் சமூக நீதியும் மறுக்கப்படும் அபாயம் உள்ளது.

மின்துறை

மின் பகிர்வு பிரிவில் 4,13,407 சர்க்யூட் கிலோமீட்டர் பகிர்வு சொத்துக்கள் உள்ளன. இவற்றில் 26,608 சர்க்யூட் கிலோமீட்டரை ரூ. 45,200 கோடிக்கு விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் மொத்த சொத்தும் விற்பனைக்கு உள்ளது என்கிறது. அதேபோல் மொத்த 382 ஜிகாவாட் மின் உற்பத்தியில், , தனியார் பங்களிப்பு என்பது 47%. பொதுத்துறை உற்பத்தியில் ஒரு பகுதியை தனியாருக்கு மேலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மின் உற்பத்தியும் அதன் பகிர்வும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமேயானால் இதுவரை பொதுமக்கள், விவசாயிகள் அனுபவித்து வந்த சலுகைகள் பறிபோகும்.

தொலைத்தொடர்பு

கேந்திரிய துறைகளில் ஒன்றான தொலைத்தொடர்பையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. 2.86 லட்சம் கி.மீ பாரத் நெட் இழையும் 14,917 பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் கோபுரங்களும் ரூ 35,100 கோடிக்கு காசாக்கப்படும். தனியார்மயம் தொலைத்தொடர்பு பயனாளிகளுக்கான கட்டண உயர்வினை ஏற்ப்படுத்தும். அவை நுகர்வோரை பாதிக்கும். புதிய வேலைவாய்ப்பும் இழக்க நேரிடும்.

இத் துறைகளைத் தவிர இயற்கை எரிவாயு குழாய், பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் குழாய், விமான தளங்கள், துறைமுகங்கள், சேமிப்பு கிடங்குகள், சுரங்கம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கும் அரசு சொத்துகளை விற்க ஊக்கம் என்று அத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசின் அனைத்து சொத்துக்களும் தனியாருக்கு குத்தகை என்ற பெயரில் மடைமாற்றம் செய்வதென்பது தனியார்களின் லாபவெறிக்கு வழி வகுப்பதற்கும், சாமானிய மக்கள் அவதிக்குள்ளாவதற்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்பையும், சமூக நீதியையும் இழப்பதற்கும் வித்திடும். எனவே தேசம் காக்க, தேசிய பணமாக்கல் திட்டத்திற்கெதிராக தொழிலாளி வர்க்கம் திரண்டெழ வேண்டும்.

2 comments

  1. This is not hefty charges will be levied in future. What happened in Gujarat Port (drug smuggling -2000 Crores) may also be freely done scot free without accountability if the contract goes to big bossses who are close to ruling parties. It’s a sort of secuirty threat as well.

Comment here...