நேதாஜி காண விரும்பிய தேசம்!

சே.இம்ரான்

ஒவ்வொரு வருட சுதந்திர தின, குடியரசு தின நாட்களில் இராணுவ உடை தரித்த அவரின் புகைப்படத்தை முன்னிறுத்துவதின் மூலமும், இரத்தம் கொதிக்க ஜெய்ஹிந்த் முழங்குவதின் மூலமும் நம் ஊடகங்களும், ஆளும் அரசுகளும் தொடர்ந்து மக்களுக்கு சொல்ல வருவது தான் என்ன?ஆங்கிலேயர்கள் மீதான எந்த கோபத்திற்கும், வன்மத்திற்கும் அவசியமற்ற இந்த காலகட்டத்தில், நேதாஜி இராணுவம் கட்டி ஆங்கிலேயர்களை எதிர்த்தார் என்பதை மட்டும் தொடர்ந்து பதிவு செய்து நம் நரம்புகள் புடைக்க தேசியவாத உணர்ச்சிகளை தட்டி எழுப்புவதின் நோக்கம், அவர் பேசிய இதர அரசியல் விஷயங்களை மூடி மறைப்பதற்காகத் தான். அவர் காண விரும்பிய தேசத்தை, அதை அடைய அவர் கூறும் வழிமுறைகளை யாரும் தூசுதட்டி அதை பேசுபொருளாக ஆக்கி விடக்கூடாது என்பதற்காக மட்டுமே!

சமதர்ம சமூகம்

பிரிட்டனிடமிருந்து தேசத்தை விடுவிப்பதை விடவும் மிகக் கடினமானது அதற்குப் பிறகான தேச கட்டமைப்பு என்று 1930ல் வங்க ஊடகவியலாளர் குமார் கோஷிற்கு தான் எழுதிய மிக நீண்ட கடிதத்தில் குறிப்பிட்ட நேதாஜி, அரசியல் விடுதலையைப் போலவே மிக முக்கியமானது மக்களின் பொருளாதார விடுதலையும், சமூக விடுதலையும் என்கிறார். வர்க்க பேதமற்ற சமத்துவமான ஒரு சோசலிச இந்தியாவை மார்க்சியத்தின் அடிப்படையில் கட்டமைக்க விரும்புவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டதோடு அல்லாமல் தொடர்ந்து 1929 மிட்னாபூர் இளைஞர் மாநாட்டிலும், 1931ல் கராச்சி மாநாட்டிலும், 1933ல் லண்டன் மூன்றாவது இந்திய அரசியல் மாநாட்டிலும் அதை வழிமொழிகிறார். ஆண்- பெண் பேதமற்ற, பொருளாதார சுரண்டலற்ற, சம வாய்ப்புகளையும், சம ஊதியங்களையும் பெறும் ஒரு சமத்துவ சமதர்ம சமூகத்தை சோசலிசத்தின் வழியே அடைய முடியுமென்று தொடர்ந்து பதிவு செய்கிறார்.

இடதுசாரிகளின் ஒற்றுமை

காந்தியின் அகிம்சை கொள்கைகளில் நம்பிக்கையற்று ஆயுதப்புரட்சி பாதையில் பயணிக்க காந்தியோடு முரண்பட்டதாக வரலாறு பதிவு செய்கிறது. உண்மையில் அன்றைய காங்கிரஸ் நிலக்கிழார்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் ஆதரவாக ஒரு வலதுசாரி கூடாரமாக மாறியதை காண சகிக்காமல் கட்சிக்கு உள்ளேயே இடதுசாரி சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து ஃபார்வார்டு ப்ளாக்கை உருவாக்குகிறார். மேலும் அன்றைய வலதுசாரி ஏகாதிபத்திய ஆதரவு காங்கிரஸ் ஆதிக்கத்திற்கு எதிராக CSP (Congress Socialist Party), இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் இதர இடதுசாரி அமைப்புகளை எல்லாம் ஒரே குடையின் கீழ் ஒர் இயக்கமாக திரட்டுவதே ஒரே வழி என்று அந்த முயற்சியை மேற்கொண்டு தோற்றுப்போனார். அன்று அவர் கண்ட கனவின் தேவை இன்றும் உயிர்ப்புடன் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

இந்தியா ஒரு கம்யூனிஸ்ட் நாடாக

1941 ஜனவரியில் தன் வீட்டுக் காவலில் இருந்து நேதாஜி தப்பித்து ஆஃப்கன் வழியே ரஷ்யா சென்றடைந்ததை ‘The Great Escape’ என்று வரலாற்றில் பதிந்தவர்கள், அந்த முயற்சியின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும், அதற்கு உதவியவர்களையும் பற்றி பேசுவதே இல்லை. அன்றைய இந்திய கம்யூனிஸ்ட்களான மியான் அக்பர் ஷா, S A டாங்கே, பகத்ராம் டல்வார் போன்றவர்களின் உதவியுடன் இந்தியாவில் இருந்து வெளியேறியவரின் திட்டம் ரஷ்யாவில் ஸ்டாலினை சந்திப்பதும், ரஷ்யாவின் இராணுவ உதவியுடன் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதும், ரஷ்யாவைப் போல இந்தியாவையும் ஒரு கம்யூனிஸ்ட் நாடாக மாற்றுவதும் தான். ஆனால் அவர் அங்கு சென்று சேர்வதற்குள், அச்சு நாடுகளுக்கு எதிராக பிரிட்டனும், ரஷ்யாவும் கூட்டணி அமைத்ததால் ஜெர்மனியை நோக்கி அவர் பார்வை திரும்பியது.

ரஷ்ய புரட்சியை வெகுவாக பாராட்டி, ஹிட்லரின் பாசிசத்தை, தேசியவாத சர்வாதிகாரத்தை வன்மையாக கண்டிப்பதாக பிரிட்டன் கம்யூனிஸ்ட் தலைவர் ரஜனி பாமே தத்திடம் முன்பு பதிவு செய்த அதே நேதாஜி, இறுதியில் இராணுவ உதவிக்கு ஹிட்லரை நாடியதும், ஹிட்லர் மற்றும் அச்சு நாடுகளின் தோல்வி, நேதாஜியின் தோல்வியாக முடிந்ததும் ஒரு வராற்றுப் பிறழ்வு!

ஆனால் அவர் காண விரும்பிய அதிதீவிர வலது ஆதிக்கத்திற்கு எதிரான அனைத்து இடது, சோசலிச சக்திகளின் ஒற்றுமையின் தேவை இன்னும் அப்படியே இருக்கிறது!

(நேதாஜி அவர்களின் பிறந்த நாள் :1897 ஜனவரி 23)

11 comments

  1. Netaji’s socialist agenda succinctly explained, which is conveniently buried by hyper nationalists

  2. A fine article on one of the tall leaders of our freedom movement. Articles on such other great personalities are to appear regularly

  3. சிறப்பான பதிவு.. இன்று நேதாஜியை தத்தெடுக்க துடிக்கும் வலதுசாரி அரசியல் கட்சி அவரின் சித்தாந்தங்களை படித்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்கு எதிரியாக தெரிவார். கம்யூனிச சித்தாந்தத்தை தன்னகத்தே வரித்துக் கொண்ட வீரன் நேதாஜி.. தோழர் இம்ரான் வாழ்த்துக்கள்…

  4. அருமை. இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாமோ. எழுத்து அப்படி இழுத்துக்கொண்டு போகிறது.

  5. மிக அருமையான தெளிவான பதிவு தோழர். வாழ்த்துக்கள்

  6. நேதாஜியை புரட்சியாளராகப் பார்க்காமல், தங்களது அரசியல் லாப நட்டங்களுக்கான தலைவர் என,எந்த கூச்சமும் இன்றி இன்றும் பார்த்து வருகிறவர்கள் இருக்கும் வரை, அவரது சித்தாந்தங்கள் வெளிவரப் போவதில்லை.

Comment here...