ஆட்டோ டாக்சி தொழில்களை நசுக்காதே!!!

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம்

(முதல் பாகம்)

ஜேப்பி

ஆட்டோ ரிக்‌ஷாக்களை பயன்படுத்தாத இந்தியனே இன்றைக்கு இருக்க முடியாது.  ஆனால், சில சமயம் சில ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும், மீட்டர் கட்டணத்தில் சவாரிக்கு வர முடியாது எனக் கூறுவதையும் நாம் பார்த்திருப்போம். அப்போது அவர்கள் மீது நமக்குக் கோபம் கூட வந்திருக்கலாம். சண்டை போட்டிருக்கலாம்.

ஏன் இப்படி நடக்கிறது, உண்மை நிலவரம் என்ன, ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதலாகச் சம்பாதிக்கிறார்களா இல்லை, ஆட்டோ வாங்கிய கடனுக்கான வட்டி கட்டவே கஷ்டப் படுகிறார்களா, ஆட்டோ ஓட்டும் தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  மோடி அரசால் கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2019 ஆட்டோ, டாக்சி தொழிலை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றியும் நம்மில் பலர் அறிய மாட்டோம். முதலில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் சந்திக்கும் பொதுப் பிரச்சனைகளைப் பார்ப்போம். இரண்டாம் பாகத்தில் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2019 பற்றிக் காணலாம்.

பொது மக்கள் வாகனம்

நகரங்களில் மட்டுமே இயங்கிய ஆட்டோ ரிக்‌ஷாக்கள், இன்று, கிராமங்களில் கூட இயங்குகின்றன. உள்ளூர் இளைஞர்களால் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள், பொது மக்களுக்கு எளிதாக மலிவாகக் கிடைக்கும் வாகனமாக இருக்கிறது. பெரு நகரங்களில், முதல் மற்றும் கடைசி மைல் இணைப்புக்கு போதுமான பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், நூறாயிரக்கணக்கான பொது மக்கள் ஆட்டோ ரிக்‌ஷாக்களை / ஷேர் ஆட்டோக்களை நம்பியுள்ளனர்.

அதே போல் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள், பெரிய கிராமங்களில் டாக்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உள்ளூர் போக்குவரத்து, சுற்றுலா, அவசர தேவைகள் என மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக பல நகரங்களில் டாக்சிகளை இயக்கும் தனியார் போக்குவரத்து சேவைகள் உருவாகியுள்ளன.

சுய தொழில்

நாளுக்கு நாள் அதிகமாகும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், ஏன், பொறியியல் பட்டதாரிகள் கூட ஆட்டோ டாக்சி ஓட்டும் தொழிலில் நுழைகின்றனர். வாகனங்களை வாங்குவதற்கு அரசாங்கம் எந்த நிதி உதவியும் வழங்குவதில்லை. வங்கிக் கடனும் எளிதில் கிடைப்பதில்லை. ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் 90% சுயதொழிலாக சொந்தமாக வாகனங்களை ஓட்டுகிறார்கள். பலர் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியே வாகனங்களை வாங்குகின்றனர். இந்தக் கடன் சுமை அவ்வளவு எளிதில் இறங்குவதில்லை.

பற்றி எரியும் டீசல் விலை ஏற்றம்

ஓட்டுனர்களில் பெரும்பாலோர் தங்கள் செலவுகள் அதிகரித்து வருவதாலும் வருமானம் குறைவதாலும் அவதியுற்று வருகின்றனர். புதிய தாராளமயக் கொள்கைகளால், டீசல் விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு, தினந்தோறும் ஏற்றப்படுகிறது. மோடி ஆட்சியில், அதிலும் குறிப்பாக 2019-ஆம் ஆண்டிலிருந்து எரி பொருள் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. ஜூலை 2019ல் லிட்டருக்கு ரூ. 66.69 ஆக இருந்த டீசல் விலை பிப்ரவரி 4, 2022 நிலவரப்படி ரூ.91.38 ஆக உயர்ந்தது. அதாவது லிட்டருக்கு ரூ 25 விலை உயர்த்தப்பட்டு, எரி பொருள் செலவு மட்டும் குறைந்த பட்சம் 33% உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அநியாயமானது. இந்த விலையில் சுமார் 53% மத்திய அரசுக்கு வரியாகவே செல்கிறது. ஒரு நாளைக்கு நூறு கிலோ மீட்டர் ஓட்டினால், இந்த அநியாய டீசல் விலை உயர்வால் ஓர் ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டும் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ரூ. 36,500 கூடுதல் செலவாகும்.

காவு வாங்கிடும் காப்பீடு

அடுத்தடுத்த ஒன்றிய அரசுகள் கடைப்பிடித்த புதிய தாராளமயக் கொள்கைகள், பொதுக் காப்பீட்டுத் துறையை தனியார் நிதி மூலதனத்திற்குத் திறந்து விட்டன. இன்சூரன்ஸ் பிரீமியம் என்ற பெயரில் ஆட்டோ ரிக்‌ஷா / டாக்சி தொழிலாளியை இரக்கமற்ற முறையில் நசுக்கவே இது வழி வகுத்துள்ளது. எந்த விதமான நியாயமும் இல்லாமல் ஒவ்வோர் ஆண்டும் மூன்றாம் நபர் காப்பீட்டுப் பிரீமியம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2014 இல், ரூ. 1212 ஆக இருந்த ஆட்டோ ரிக்‌ஷாவிற்கான வருடாந்திர பிரீமியம், ஏப்ரல் 2018 இல் ரூ.2595 ஆகவும், இப்போது ரூ.5500 முதல் ரூ.7500 வரை உயர்ந்து உள்ளது. சமீபத்திய மாடல் ஆட்டோக்களுக்கு பிரீமியம் ரூ.9500 முதல் ரூ.12000 வரை இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் லாபத்தை அதிகப் படுத்துவதைத் தவிர, இந்த பிரீமிய அதிகரிப்பில் எந்த தர்க்க நியாயமும் இல்லை. தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் ஒரே குறி லாபம் மட்டுமே. இந்த கொள்ளைகளை சட்டப்பூர்வமாக்குவதற்காக உருவாக்கப்பட்ட காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) எவ்வளவு பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான உண்மைகளை வெளியிடுவதில்லை.

வசூல் ராஜா” அரசாங்கம்

ஆட்டோ ரிக்‌ஷா, டாக்சி ஓட்டுனர்களின் அவல நிலையை மேலும் மோசமாக்கும் வகையில், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உரிமம், புதுப்பித்தல், வாகனத் தகுதிச் சான்றிதழ் போன்றவற்றுக்கான கட்டணங்களை அசாதாரணமாக உயர்த்தியுள்ளது. மேலும், போலீஸ் அதிகாரிகளில் கணிசமானவர்கள் இந்த ஆட்டோ டாக்சி தொழிலாளர்களை பலி ஆடுகளாக பாவித்து வருகின்றனர். தங்கள் அதிகாரத்தை தன்னிச்சையாக பல்வேறு வழிகளில் துஷ்பிரயோகம் செய்து ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களிடம் வழக்குப் பதிவு என்ற பெயரில் பிரதி மாதம் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரிடமிருந்தும் ரூ 600 முதல் ரூ 1000 வரை வசூலிப்பது காவல் துறையின் ஒரு பிரிவினருக்கு நிரந்தர வருமான ஆதாரமாகவே மாறியுள்ளது.

பாதுகாப்பற்ற பணி

ஆட்டோ / டாக்சி ஓட்டுனர்களுக்கு ஈஎஸ்ஐ, பிஎஃப் போன்ற சமூக பாதுகாப்பு சலுகைகள் இல்லை. ஓய்வூதியம் போன்ற முதியோர் பாதுகாப்பு எதுவும் இல்லை. 2015ல் நடந்த 46வது இந்திய தொழிலாளர் மாநாடு, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் ரிக்‌ஷா இழுப்பவர்களுக்கும் ஈஎஸ்ஐ சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும் என பரிந்துரைத்தது.  இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான வி.வி.கிரி தேசிய தொழிலாளர் நிறுவனம், ”போக்குவரத்துத் துறையில், ஒரு தொழிலாளி பணிபுரிந்தாலும், அங்கு தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்த அரசும் இதை அமல் படுத்தவில்லை.

வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலும், சிக்னல்களில் ஏற்படும் தாமதங்களும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக அழுத்தம் தரும் கடினமான வேலையாக  வாகனம் ஓட்டுவதை மாற்றி விட்டது.

தொடரும்….

6 comments

  1. ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்களின் பிரச்சினைகள் சவால்கள் பற்றி நம்மில் பலரும் கண்டு கொள்வதில்லை. இக்கட்டுரை துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளிகளை பற்றி அவர்களின் நியாயமான தேவைகளை பற்றி அதை வென்றெடுக்க எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது பற்றி அருமையாக எடுத்துரைத்துள்ளது. இக் கட்டுரையின் ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  2. மிகச்சாதாரணமாக நம்மில் நமக்கு மத்தியில் இருக்கும் ஆட்டோ டாக்ஸி ஊழியர்களை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியுடன் இரண்டாம் அத்தியாயத்தை நோக்கி….

  3. ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களின் அசலான பிரச்சனைகளை விரிவான புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்லும் சிறப்பான கட்டுரை…

    இது தொழிலாளர்கள் மத்தியிலும்,
    பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டு பேசுபொருளாக மாற்றப்பட்டால் மட்டுமே அரசின் கவனத்திற்கு செல்லும்…

  4. Well expressed difficulties and issues faced by the auto and taxi drivers. Few are struggling to make ends meet especially with their repayment, FC and insurance. Ola and Uber are monopolising the auto and taxi rates. Government should definitely intervene and work out a proper format. Above all, many common people have had bad experiences on demanding higher rates once you sit inside or the driver refuses to oblige on the ride. Many such issues also happen, the attitude and approach of the drivers also need change.

  5. அதிகம் பேசப்படாத, அறியாத ஆட்டோ தொழிலாளகளின் நிலைமையை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

Comment here...