காந்தியடிகள் – ஒரு வரலாற்றுப் பார்வை

க.சிவசங்கர்

பல்வேறு தேசிய இனங்களையும், பல மொழிகள் மற்றும் பல மதங்களைப் பின்பற்றும் மக்களையும் கொண்ட பரந்து விரிந்த நம் இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு நம் வளங்களும், உழைப்பும் ஒட்ட சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், நாட்டு விடுதலைக்கான போராட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மற்றும் தலைவர்களால் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வந்தன. எனினும் அப்போராட்டத்தில் தேசம் முழுவதும் இருந்த எளிய மக்களை ஒன்றுதிரட்டி ஈடுபடுத்தியதில் மிகமுக்கியப் பங்காற்றியவர் காந்தியடிகள். தன் வாழ்நாள் முழுவதும் எளிமையைக் கடைப்பிடித்து, வாய்மையே வெல்லும் என்று சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் வாழ்ந்து காட்டி உலகின் வேறு எந்த நாட்டு தலைவருக்கும் கிடைக்காத ஒரு பேரன்பை இந்திய மக்கள் மூலம் பெற்றவர் அவர்.

பொதுவாக காந்தியடிகளைக் குறித்த பார்வையில் ஒன்று அவரை வானளாவிப் புகழ்ந்து அவரது செயல்பாடுகளை முழுக்க ஆதரிப்பதாகவும், அல்லது அவரை முழுவதுமாக எதிர்நிலையில் வைத்து விமர்சிப்பதாகவுமே உள்ளது. ஆனால் இவ்வாறு காந்தியை முற்றாக நிராகரிப்பதும், விமர்சனமற்ற வகையில் போற்றிப் புகழ்வதும் சரியான அணுகுமுறை அல்ல. ஒவ்வொரு சூழலிலும் அவரின் முடிவுகளை பிரத்யேகமான முறையில் ஆராய்வதே சரியானதாக இருக்கும்.

காந்தியும், மதச்சார்பின்மையும்:

இயல்பிலேயே ஒரு கருத்து முதல்வாதியாகவும், ஆன்மீகவாதியாகவும் விளங்கிய காந்தி தன் காலம் முழுவதும் மதவெறியைத் தீவிரமாக எதிர்த்தும், மதச்சார்பின்மையை வலியுறுத்தியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு தேசத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது தவிர்க்கவியலாதது என்பதை உறுதியாக நம்பிய அவர்,

“இஸ்லாம் மதத்தின் அல்லாவும், கிறித்துவ மதத்தின் கடவுளும், இந்துக்களின் ஈஸ்வரனும் ஒன்றே!” என்று கூறி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார்.

வேதங்கள், பகவத்கீதை, உபநிடதங்கள் போன்ற இந்துமத நம்பிக்கைகள் மீது மிகப்பெரிய பற்று கொண்டவரான காந்தி, அவற்றைத் தன் வாழ்நாள் முழுவதும் தீவிரமாக கடைப்பிடித்தார். தீண்டாமை என்பது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய காந்தி, அந்த தீண்டாமையையே அடிநாதமாகக் கொண்டிருக்கும் நால்வர்ண முறை என்பது சமூக ஒழுங்கைக் கடைப்பிடிக்க மிகவும் அவசியம் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். 

ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை நோக்கி நகர்த்திய பொதுவுடமைவாதிகளை நோக்கி மக்கள் சென்று விடாமல் தடுக்க, தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாகவே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை “ஹரிஜன்” -கடவுளின் குழந்தைகள்- என்ற பெயரால் அழைத்தார். கடவுளின் குழந்தைகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயர்குடியினர் மற்றும் செல்வந்தர்கள் மனமுவந்து உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு இந்து மதத்தில் உள்ள பிற்போக்குத்தனங்களை எதிர்க்க முன் வராத காந்தி, இந்து மதத்தின் தர்மத்திற்கு உட்பட்டு இந்து மக்கள், தொடர்ந்து இந்துக்களாக ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று விரும்பினார்.

காந்தியும், வர்க்கமும்:

தேச விடுதலைக்கான இயக்கத்தில் நாடு முழுவதும் இருந்த சாமானிய உழைக்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளை எடுத்த காந்தி, அம்மக்கள் முதலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழேதான் செயல்பட வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தார். தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய முதலாளி வர்க்கம், அதற்காக நாட்டின் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளை பெருமளவில் திரட்ட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் தன் நீண்ட கால தேவையின் அடிப்படையில், மக்கள் மத்தியில் வளர்ந்து கொண்டிருந்த புரட்சிகரப் போக்குகளை எதிர்க்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட வன்முறையற்ற போராட்ட உத்தியை மேற்கொள்வது அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் காந்தியை முதலாளி வர்க்கம் சுவீகரித்துக் கொண்டது.

உண்மை, அகிம்சை, நேர்மை முதலிய அறம் சார்ந்த கருத்துக்களை போதித்ததோடு மட்டும் இல்லாமல் தன் வாழ்விலும் அவற்றைக் கடைபிடித்த காந்தி, தன்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே காந்தியுடன் கைகோர்த்த இந்திய முதலாளி வர்க்கம், தன் லட்சியம் நிறைவேறிய பிறகு அவற்றில் இருந்து விலகியதை காந்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு தான் கொண்ட அறநெறிக் கருத்துகளுக்கு உண்மையாக இருந்த காந்தி, நாட்டு விடுதலைக்குப் பிறகான காலத்தில் இந்து முஸ்லீம் பிரச்சனை மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுறுவிய அதிகாரவர்க்கப் போக்கு, மக்களை உதாசீனப்படுத்துதல் போன்ற பிரச்சனைகளில் தன் கட்சிக்குள் இருந்த தன் சக நண்பர்களையே எதிர்த்தார்.

இன்றும் தேவைப்படும் காந்தியக் கொள்கைகள்:

மதத்தின் அடிப்படையில் உருவான தேசப் பிரிவினையை தன்னால் இயன்ற வரை எதிர்த்துப் போராடினார் காந்தியடியகள். நவகாளியில் நடைபெற்ற மிகக் கொடிய மதக்கலவரத்தைப் பார்த்து மனம் துடித்துப் போன காந்தி,

“நான் இருட்டில் எதையோ தேடிக் கொண்டிருக்கிறேன். நான் இந்த தேசத்தை திசை தவற செய்து விட்டேனோ…?” என தன் இயலாமையை வெளிப்படுத்தினார். 

அதன் பிறகும் துவண்டு விடாமல் தன் 77 வயதில் நவகாளியை நோக்கி நடைப்பயணத்தை துவக்கி மூன்று மாத காலத்தில் சுமார் 116 மைல் நடந்த அவரின் அந்த உறுதி, நவகாளியில் இருந்த பதற்றத்தைத் தணித்து மேற்கொண்டு ஏற்பட வாய்ப்பிருந்த உயிர் சேதங்களைத் தடுத்தது. அதே நேரம் அவர் தங்களின் மத ரீதியான திட்டங்களுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதை உணர்ந்த மத வெறியர்கள், நாதுராம் கோட்ஸே என்னும் மத வெறியன் மூலம் நாட்டின் தந்தையாக விளங்கிய காந்தியடிகளைப் படுகொலை செய்தனர். 

கொள்கை அளவில் காந்தியுடன் முரண்பட்ட அம்பேத்கர், பகத்சிங், பெரியார், பொதுவுடமைவாதிகள் என்று எவரும் அவரை விமர்சனத்தின் வாயிலாக மட்டுமே எதிர்கொண்டனர். மாறாக அவர் ஏற்றுக்கொண்ட, கடைப்பிடித்த மதத் தீவிரவாதிகளாலேயே அவர் கொல்லப்பட்டார் என்பது வரலாற்று முரண். 

# காந்தி தீவிர ராம பக்தர். ஜெய் ஸ்ரீ ராம் என்றார். ஆனால் ராம ராஜ்ஜியம் அமைக்க எண்ணியதில்லை. அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்படுகிற மதச்சார்பற்ற நாடாகவே இந்தியா இருக்க வேண்டும் என்றும், அரசியலில் மதம் கலக்கப்படக் கூடாது என்றும் விரும்பினார். 

# காந்தி புலால் உண்ணாமையைக் கடைப்பிடித்தார். ஆனால் எந்த நிலையிலும் பிறர் உணவுப்பழக்கத்தில் தன் மூக்கை நுழைத்தது இல்லை. 

நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற இருக்கிற இன்றைய சூழலில், மத ரீதியான வெறுப்புப் பிரச்சாரங்களும், மதக் கலவரங்களும் ஆட்சியாளர்களின் ஆசியுடனேயே நடைபெற்று வருகின்றன. காந்தியைக் கொன்றவனை தேச பக்தர் என்று மக்கள் பிரதிநிதிகளே அடையாளப்படுத்துகின்றனர். பொதுவெளியில் அந்த தேச விரோதியின் பெயரைச் சொல்லும் உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. தேசத்தின் தந்தையாகப் போற்றப்படும் காந்தி விரும்பிக் கேட்கும் பாடல் நாட்டின் மிக முக்கிய அரசாங்க நிகழ்ச்சி நிரலில்  இருந்து வெளியேற்றப்படுகிறது. ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், இன்னொரு மதத்திற்கு எதிராகவும் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தான் விரும்பும் உணவை உண்டதற்காக நாட்டு மக்கள் கொடூரமான வகையில் துன்புறுத்தப்படுகின்றனர். 

இத்தகைய நிலையில், அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் லட்சிய உலகை அடையும் பயணத்திற்கு மக்களின் மனங்களைத் தயார்ப்படுத்திட, அவர்களை ஒரு வர்க்கமாக ஒன்றுபடுத்திட, காந்தியின் உன்னத கொள்கைகளான மதச்சார்பின்மையும், அறநெறிக் கொள்கைகளும் இன்றும் அவசியம் தேவைப்படுகின்றன.

(ஜனவரி 30 – காந்தியடிகள் நினைவு தினம்)

4 comments

  1. ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து இருப்பது என்பது ஜனநாயக மாண்பு. ஆனால் அதுவே வெறுப்பு அரசியலின் மூலமும் மாறுபட்ட தத்துவார்த்த அதிலும் அந்த நபருக்கு எதிராக மற்றொருவர் உருவானால் அது ஆபத்தை ஏற்படுத்தும். காந்தியின் படுகொலையும் இம்மாதிரியான வெறுப்பு அரசியலே.

  2. மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை மிக அருமை. . அவர் மக்களுக்கு செய்த தியாகங்களையும் தவறுகளை யும் எளிய முறையில் எழுதி உள்ளிர்கள்.

Comment here...