கொரானாவால் இறந்த குடும்பங்களுக்கு நிவாரணம் – அரசு என்ன செய்ய வேண்டும்?

க.கனகசபை

கொரானா பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் மீது கொடும் தாக்குதலை தொடுத்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, தொழிலாளர்கள் குடிபெயர்வு, குழந்தைகளின் தடைபட்ட கல்வி, கொடுந்தொற்றால் உயிரிழப்புகள் இவையனைத்தும் தொடர்கதையாகும் அவல நிலை.

இது ஒரு பெருந்தொற்று நோய். ஆங்கிலத்தில Pandemic என்று அழைக்கப்படுகிறது. அப்படியென்றால் உலகம் தழுவிய தொற்று நோய என்று பொருள். இத்தகைய பேரிடர் காலத்தில் ஏற்படும் இழப்புகளை வெகுவாக குறைப்பதும், ஏற்பட்ட இழப்புகளை ஓரளவேனும் நேர் செய்ய வேண்டியதும் ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பு. அந்தக் கடமையை அவை செவ்வனே நிறைவேற்றினால் மட்டுமே பாதிப்படைந்த குடும்பங்கள் ஓரளவாவது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலும்.

ஒன்றிய அரசின் அறிவிப்பு

ஒன்றிய அரசு கொரானா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50000, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் பி.எம்.கேர்ஸ் மூலம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் 50000/- நிவாரணம் ஓரளவு சில குடும்பங்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல். ஆனால் ரூ.10 லட்சம் நிவாரணம் யாரையும் சென்றடைந்ததாக தகவல் இல்லை. ஒன்றிய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும். இது தவிர கொரானாவால் உயிரிழந்த குடும்பத்திற்கு மருத்துவக்காப்பீடாக ரூ.5 லட்சத்திற்கு காப்பீடு அட்டை வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறது.  இது வரை தேசிய அளவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,47,492 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாநிலங்கள் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமுக பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய அறிவுறுத்தியிருக்கின்றது.

தமிழக அரசின் நிவாரணம்

தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 11,014 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இதில் 311 குழந்தைகள் இரண்டு பெற்றோர்களையும் இழந்தவர்கள் என்கிறது அறிக்கை.

பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு மொத்தமாக ரூ.3 லட்சமும் இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு மொத்தமாக ரூ.5 லட்சமும் வழங்க அரசாணை பிறப்பித்திருக்கின்றது. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் குடும்பம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தால் மட்டுமே ரூ.3 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்கப்படுகிறது.

இந்தப் பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்கள் ௮னுபவிக்கும் சொல்லொணா துன்பங்களை ஒப்பிட்டால், அரசின் நிவாரணம் எவ்விதத்திலும் ஈடாகாது. இருந்த போதிலும் நிவாரணம் வழங்கும் நடைமுறையில் வரம்புகளைக் களைந்து மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.

மாநில அரசின் கவனத்திற்கு:

1. கொரானா என்கிற கொள்ளை நோய் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதனால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வாழ வழி இழந்து, மனநிம்மதி இழந்து தவிக்கின்றார்கள்; சிலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, மன நலம் பாதிக்கப்பட்டு எதிர்காலமே இருண்டதாக உணர்கிறார்கள் என்பதை அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.

2. வருமானம் ஈட்டும் ஒருவரை ஒரு  குடும்பம் இழந்துவிட்டால், அவர் இறப்பதற்கு முன்பிருந்தபடியே ௮க்குடும்பம் இருக்குமா? அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், கல்வி மேம்பாட்டிற்கும் மற்ற, மற்ற செலவுகளுக்கும் அக்குடும்பம் என்ன செய்யும்? வீடு கட்டவோ, வாகனம் வாங்கவோ கடன் வாங்கியிருந்தால், வருமானம் ஈட்டுபவரின் திடீர் மறைவால் அக்குடும்பம் அவற்றை எப்படி எதிர் கொள்ளும்? அக்குடும்பம் முன்பு நல்ல நிலையில் இருந்தாலும், தற்போது அக்குடும்பத்தின் பொருளாதார நிலை புதிதாகத் தானே கணக்கெடுக்கப்பட வேண்டும்?

3. இரண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக நிற்கும்போது, நிர்கதியான அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்? அவர்களின் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு?

4. கொரானாவின் தாக்கத்திற்குப் பிறகு குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை பல மடங்கு ௮திகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் சுட்டுக்காட்டுகிறது. ௮திலும்  பெற்றோரையிழந்த குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாகும் அபாயம் கூடுதலாக உள்ளது.

மாநில அரசு என்னசெய்ய வேண்டும்?

1.பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ௭ந்த நிபந்தனையுமின்றி ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

2.பெற்றோரில் இருவரையும் இழந்த குழந்தைகளின் வாழ்வாதாரம், கல்வி, சமூகப்பாதுகாப்பு இவற்றுக்கு அரசு முழுவதுமாகப் பொறுப்பேற்க வேண்டும்.

3.உயிரழந்த பெற்றோர் ஆணாக இருந்தால், அவரின் மனைவிக்கு அவரின் கல்வித்தரத்திற்கேற்றார் போல் வேலை வழங்கப்பட வேண்டும்.

4.பெற்றோரில் ஒருவரையோ, இருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையான செலவை அரசே ஏற்க வேண்டும்.

5.பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் தன்னார்வலர்கள்/சேவை அமைப்புகளை ஆய்ந்து அனுமதிக்கலாம். அதன் பின்னும் அரசின் கண்காணிப்பு தொடர வேண்டும்.

6.பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத் தேவையான இறப்புச் சான்று, வாரிசுச் சான்று, வருமானச் சான்று போன்ற சான்றுகள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

7.அரசு தெரிவித்துள்ள புள்ளியியல் கணக்கு முழுமையானதல்ல.  பெரும்பாலான மாவட்டங்களில் இறந்தவர்களின்  குடும்பங்களை அணுகி தகவல் சேகரிக்கப்பட வில்லை. கொரானாவால் உயிரிழந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு நிவாரணம் பற்றிய செய்திகள் முழுமையாக சென்றடையவில்லை.  எனவே ௮ரசு கடந்த இரண்டாண்டுகளி்ல் கொரானாவால் உயிரிழந்தவர்களின் பட்டியல் மூலமாக பெற்றோரை இழந்த குடும்பங்களைக் கண்டெடுத்து நிவாரணம் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

தன்னார்வல அமைப்புகள், சேவை அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம் முழுமையாகக் கிடைக்க வழி வகை ஏற்படும்.

2 comments

  1. பெரும் தொற்று காலத்தில் ஒரு அரசு அதிலும் குறிப்பாக நல அரசாக செயல்பட வேண்டியதை இக்கட்டுரை மக்கள் கோரிக்கைகளாக வைத்திருப்பது தேவையின் அடிப்படைகள். இக்கட்டுரை பெருவாரியான மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

  2. பெருந்தொற்றினால் நிலைகுலைந்த குடும்பங்கள், இழப்புகள், எதிர்காலம் குறித்த நிலயற்ற தன்மை ஆகியவற்றை விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அரசின் கடமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comment here...