நரக மாளிகை – நூல் அறிமுகம்

எ. சண்முகம்

                நகர சாகேதத்திலே உள்ளறகள் என்ற மலையாள நூல் சுதீஷ் மின்னி அவர்களால் எழுதப்பட்டு,  இதுவரை, 17 பதிப்புகள் வெளியிடப்பட்டு 102,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் இதை தோழர் சதாசிவன் அவர்கள்  மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

“பாரதத்தின் புகழ் பெற்ற பழம் பெரும் பண்பாடு” என்ற பெயரில் ஒற்றைப் பண்பாட்டு சிந்தனையை திணிக்கும் முயற்சியில் செயல்பட்டு வரும் RSS என்னும் பாசிச அமைப்பின் கொடூரமான இரகசிய செயல்பாடுகளை அம்பலபடுத்தும் ஒரு முன்னாள் RSS முழு நேர செயல்பாட்டாளரின் ஒப்புதல் வாக்குமூலம்தான் இந்த நூல்.

                நூலாசிரியர் கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் ஆயித்தரை என்ற இடத்தில் சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.  கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். RSSசின் அடிப்படை பயிற்சி தொடங்கி  தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்.  நாக்பூரில் உள்ள RSSன் தலைமையகத்தில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார்.

                RSSன் பாசிச இயக்கத்தில் 25 ஆண்டுகள் பல முக்கிய பொறுப்புகளின் செயல்பட்டு வந்த சுதீஷ்மின்னி தற்பொழுது சங்பரிவார் அமைப்புகளில் இருந்து வெளியேறி இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகின்றார்.

       சிறு குழந்தைப்  பருவத்திலிருந்தே எப்படி இந்த அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு படிப்படியாக எப்படி போதிக்கபடுகிறார்கள் என்பதை தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே ஒவ்வொன்றாக தொகுத்திருக்கின்றார்.

       சிறு குழந்தையாக இருக்கும்போதே தான் பால கோகுலம் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டதாகவும்  அங்கு குழந்தைகளுக்கு போதிக்கப்பட்ட சரித்திர, இந்துமத கதைகள் எவ்வாறு திரித்து போதிக்கப்படுகின்றன என்பதை விரிவாக விவரித்துள்ளார். அகண்ட பாரதம் என்பது சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானீஸ்தான்,  பூடான் போன்ற நாடுகளை இணைத்தது என்றும்,  நாதுராம் கோட்சேவின் சாம்பலைக் கரைக்காமல்  இப்போதும் பாதுகாத்து வைத்திருப்பதாகவும், அகண்ட பாரதம் என்று நனவாகிறதோஅன்றுதான் அது கரைக்கப்படும் என்றும் தொடர்ந்து போதிக்கப்படுவதை நினைவு கூறுகின்றார். இந்த நூலை படிக்க, படிக்க எப்படி குழந்தைகள் மனதில் நஞ்சு விதைக்கப்படுகிறது என்பது தெளிவாக புரிகிறது.

தினமும் உடல் பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன் ஷாகாக்கள் நடத்தப்படும் என்றும் அதில் முஸ்லீம்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்ட்கள் விரோதிகளாகவும், இந்திய நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்களாகவும் தொடர்ந்து அவர்கள் மேல் நிரந்தர வெறுப்பு வரும் வகையில் பிரச்சாரம் நடத்தப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதையெல்லாம் படிக்கும்போது நமது நெஞ்சம் பதைபதைக்கிறது. 

                சிசுவாடிகள் என்ற பெயரில், வட இந்தியாவில் மேல் சாதிக்காரர்கள், தலித் பெண்களை பலாத்காரமாகவோ, வசீகரித்தோ தன்வயப்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை உபநயனம் செய்து சத்ரிய வம்சத்தினராக மாற்றும் கொடூரச் செயலை இந்த நூல் தெளிவாக விவரிக்கின்றது. அவர்களை படிக்க வைத்து, சத்ரிய முறையில் ஆயுத பயிற்சியும் அளித்து பின்னர் அவர்கள்  நடத்தும் வகுப்புவாத கலவரங்களில்  உபயோகிக்கும் மோசமான செயல்களை விரிவாக பதிவு செய்கிறது இந்த புத்தகம். இதுபோன்ற செயல்கள் 1950களிலேயே நாக்பூரில் தொடங்கப்பட்டுள்ளன.  இதே முறை பிற்காலங்களில் முஸ்லீம், கிறித்துவ பெண்களிலும் சத்ரிய கருவை வளர்க்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ள கொடூர செயல்களும் நினைவு கூறப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் கூட ஓர் இயக்கம் செயல்பட முடியுமா என்று நம்மை பீதியடையச் செய்கிறது.

RSS முக்கிய கூட்டங்களிலும், ஷாகாக்களிலும் தொழிலதிபர் அதானி உட்பட பல பெரும் தொழிலதிபர்களும், பெரும் செல்வந்தர்களும், IAS, IPS அதிகாரிகளும், ஓய்வு பெற்ற நீதிபதிகளும் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளதையும் நினைவு கூறுகிறார் ஆசிரியர்.

                போலியான கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் சமரசம் பேசுவது என்ற சாக்கில் எதிரிகளிடம் பெரும் பணம் வசூலிக்கும் மோசமான செயல்பாடுகள், பெண்களை பகடை காய்களாக உபயோகித்து பிறரை திட்டமிட்டு மிரட்டும் செயல்பாடுகள் தன்னை வெகுவாக பாதித்ததாக சதீஷ் மின்னி கூறுகிறார்.

            மேலும் கேரளத்தில் கொங்கச்சி என்ற இடத்தில் சுயம் சேவக் கோகுல்தாஸின் வீட்டில் தங்கியிருந்த சமயம், அவரது தாயார் உணவு பரிமாறும்போது, எழுப்பிய அடிப்படை கேள்வி தன்னை மிகவும் சிந்திக்க வைத்ததாக கூறுகின்றார். கம்யூனிஸ்ட்கள் காலையில் துவங்கி பிறரின் பிரச்சனைகள் பற்றியும், மருத்துவமனை உதவிகள், ரத்ததானம், அரசு கடன் உதவி, வங்கிக் கடன் உதவி என்று செய்யும்போது, நீங்கள் மாலையில் சாகா செயல்பாடுகளுக்கு போகிறீர்கள், மனிதனை கொலை செய்ய கற்றுக் கொடுக்கின்றீர்கள், இரவு நேரங்களில் எல்லோரும் வீடுகளில் தூங்கும் போது நீங்கள் சுற்றித் திரிகிறீர்கள்.  ஊரில் எங்கும் விபச்சாரமும், திருட்டும் நடக்கின்றன.  உங்களுடைய அமைப்பு எந்த மாதிரியான அமைப்பு என்ற அடிப்படையான கேள்விகள் தன்னை திரும்பப் பார்க்க வைத்ததாக கட்டுரை ஆசிரியர் கூறுகின்றார். இவ்வாறு அவரின் சிந்தனையை நேர்மறையாக மாற்றிய அந்தத் தாய் வணக்கத்துக்குரியவர்.

                இழந்து போன இளமைப் பருவம் போக மீதமுள்ள தன்வாழ்க்கையை உண்மையான மக்கள் சேவைக்கு அர்பணிக்க முடிவு செய்து அதன்பால் தேடுதலில் ஈடுபட்டு RSS அமைப்பை முழுமையாக எதிர்க்கும் இயக்கமான  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாக கட்டுரை ஆசிரியர் கூறுகின்றார்.

                பாசிச மதவெறி அமைப்பில் தன்னுடைய பசுமையான இளம் பருவத்தை பலி கொடுத்த சுதீஷ் மின்னி தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது போல மற்ற யாரும் வழி தவறி சென்று பாசிஸ்ட்டுகள் விரிக்கும் வலையில் வீழ்ந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு எழுதியதே இந்த நூல்.  எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

மூல நூலின்பெயர்:  நகர சாகேதத்திலே உள்ளறகள்.

ஆசிரியர்: சுதீஷ் மின்னி

தமிழாக்க நூல்பெயர்: நரகமாளிகை

மொழிபெயர்ப்பு – தோழர் சதாசிவன்

வெளியீடு: பரிசல் புத்தக நிலையம்.

6 comments

  1. தோழர் சதாசிவன் மொழிபெயர்ப்பு நூலான நரக மாளிகை பற்றிய விமர்சனம் அருமை. இந் நூலை படிப்பதற்கான ஆவலை தூண்டுகிறது.

  2. இந்த புத்தகத்தின் பெயரே புதிராகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறதே!! அவசியம் படிக்க வேண்டும்…

  3. நூலின் பெயரே புதிராகவும் படிக்க தூண்டுவதாகவும் இருக்கிறதே!! நிச்சயம் வாங்கி படிக்க வேண்டும்.

  4. சிறந்த பதிவு..இந்த நூலைப் படித்தால் RSS வன்முறை கொலைவெறியை முன்னிறுத்தி சிறுவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் மனதில் வெறுப்பு கலந்த நஞ்சை ஊட்டும் அமைப்பாக செயல்படுவதை புரிந்துகொள்ள முடியும்.மநுவின் கோட்பாட்டு அடிப்படையில் வருணாசிரம பிராமணிய மேலாதிக்கத்தை கட்டமைக்கப் படும் அமைப்பு என்றும் புரியும்.இந்த சக்திகளிடம் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது என்பது கவலைக்குரியதாகும்.அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

  5. ஆங்கிலம், இந்தியில் பதிப்புகள் வெளியிட்டால் கோடிகளில் பிரதிகள் விற்பனையாகும் என்று நினைக்கிறேன்.

  6. இப்படி ஒரு தீவிரவாத அமைப்பை பற்றி படிக்கும் போது நெஞ்சு பதை பதைக்கிறது. கண்டிப்பாக ஒரு பிரதியை வாங்கி படிக்க ஆர்வமாய் இருக்கிறது.

Comment here...