சி.பி.கிருஷ்ணன்
2022 பிப்ரவரி 1 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட மோடி அரசின் நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) வழக்கம் போலவே ஏழைகளை வஞ்சிக்கும் மற்றொரு நிதி நிலை அறிக்கையாகும்.
- நமது நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தை வளர்த்தெடுப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கும் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. ”விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்று ஆட்சியை பிடித்த பாஜக அரசு அனைத்து வேளாண் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை வழங்குவதற்குக் கூட இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக சென்ற பட்ஜெட்டின் திருத்தி அமைக்கப்பட்ட தொகையான ரூ.4,75,000 கோடியை விட இந்த பட்ஜெட்டில் ரூ.1,05,000 கோடி குறைக்கப்பட்டு ரூ.3,70,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. உரமானியத்தில் 25% குறைக்கப்பட்டுள்ளது.
- 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 98000 கோடியிலிருந்து ரூ. 73000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது..
- 39,45,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 16,61,000 கோடி ரூபாய் கடனாகப் பெறப்படுகிறது. அதன் காரணமாக வருவாயில் கணிசமான தொகை கடனுக்கு வட்டி கட்டவே போய் விடுகிறது.
- 2020-21 பட்ஜெட்டில் உணவு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு கிடங்குகளுக்கு ரூ.5,55,000 கோடி ஒதுக்கப்பட்டது. உலக நாடுகளின் பட்டினித் தர வரிசையில் 116 நாடுகளில் 101 வது இடத்தில் நமது நாடு உள்ள இந்தப் பின்னணியில் அது 2021-22 பட்ஜெட்டில் அது ரூ.3,00,000 கோடியாக குறைக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் அதற்கான நிதி மேலும் குறைக்கப்பட்டு ரூ.2,15,643 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
- மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு சென்ற ஆண்டு ரூ.71000 கோடி ஒதுக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில் இந்த ஆண்டு அது ரு.41000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்ன ஆட்சியாளர்கள் இந்த பட்ஜெட்டில் வரும் ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று கூறுகிறார்கள்.
- ஜிஎஸ்டி வருவாய் 2022 ஜனவரி மாதம் இதுவரை இல்லாத அளவில் ரூ.141000 கோடியாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சர் பட்ஜெட்டின் போது அறிவிக்கிறார். இந்த அளவுக்கு சாதாரண மக்கள் மூலம் மறைமுக வரி வசூலிக்கும் ஒன்றிய அரசு, மறுபுறம் புதிதாக துவங்கும் கம்பெனிகளுக்கு தற்காலிகமாக குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரியை அதே அளவில் 15% ஆகவே தொடர அனுமதிக்கிறது.
- 5 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்திற்கு முழுமையாக வரி விலக்கு தருவோம் என்று வாக்குறுதி அளித்து 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த பட்ஜெட்டிலும் அதை நிறைவேற்ற வில்லை. இன்றளவிலும் ஆண்டு வருமானம் ரு.2.5 லட்சம் வரை மட்டுமே முழுமையான வரி விலக்கு என்பது தொடர்கிறது.
- பெட்ரோல், டீசல், சமையல் எரி வாயு மீதான மறைமுக வரி அன்றாடம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
- கற்பக விருட்சமாக, காமதேனுவாக திகழும் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்கப்போகிறோம் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கின்றனர். 5 கோடி ரூபாய் மூலதனத்தில் 65 ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்ட எல்ஐசி ஒன்றிய அரசுக்கு இதுவரை ரூ.28000 கோடிக்கு மேலாக டிவிடெண்ட் ஆக வழங்கியுள்ளது. ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் அரசின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு அடிப்படை கட்டுமானம் அமைக்க நிதி உதவி செய்துள்ளது.
- பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவையே கொடுக்கப்படாத நிலையில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டும் 5ஜி சேவை கொடுக்கப்படப் போவதாக பட்டவர்த்தனமாக அறிவிக்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.
- தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் எனப்படும் பேட் பாங்க் உடனடியாக அமுலுக்கு வரும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ரூ.500 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் வாங்கி திருப்பி கட்டாத கடனாளிகளின் கடன் தொகை ரு.2 லட்சம் கோடி அடிமாட்டு விலைக்கு விற்கப்படும் என்று அர்த்தம். வசூலாகும் சொற்பத் தொகை போக மீதமுள்ள பெரும் தொகையை வங்கிகளும் குறிப்பாக அரசு வங்கிகளும், ரூ.30000 கோடி வரை ஒன்றிய அரசும் ஏற்கும் என்று பொருள்.
- கிரிப்டோ கரன்சிக்கு ரிசர்வ் வங்கி 2018 ஏப்ரல் 6ஆம் தேதி விதித்த தடையை உச்ச நீதி மன்றம் 2020 மார்ச் 4 ஆம் தேதி நீக்கி விட்டது. இதை ஒழுங்குபடுத்தவோ, டிஜிடல் ரூபாய் கொண்டு வரவோ ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும் எந்த முயற்சியும் எடுக்காததும், இதனால் வங்கிகளுக்கோ, ரிசர்வ் வங்கிக்கோ என்ன பாதிப்பு என்பதை விளக்காத காரணத்தினாலும் தடையை நீக்குவதாக உச்ச நீதி மன்றம் தனது உத்தரவில் கூறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எதையும் செய்யாத ஒன்றிய அரசு இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் ரூபாய் கொண்டு வரப்போவதாக கூறியுள்ளது. அதுவும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள பிளாக் செயின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி.
- யார், யார் தனியார் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர் என்பது பற்றி ஒன்றிய அரசிடம் எந்த விவரமும் இருப்பதாக தெரியவில்லை. முழுக்க முழுக்க தனியார் கட்டுப்பாட்டில் உள்ள, எந்த விதமான கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாத, வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத இதில் வரும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
இந்த பட்ஜெட்டில் எல்லோரும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க எந்த திட்டமும் இல்லை. நமது நாட்டில் ஒரு புறம் பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர். ஏழைகள் மேலும் கொடிய வறுமையில் தள்ளப்படுகின்றனர். 2022 ஆக்ஸ்பாம் அறிக்கையின் படி 142 பில்லியனர்களிடம் உள்ள சொத்து அடி மட்டத்தில் உள்ள 40% ஏழைகளிடம் உள்ள மொத்த சொத்தை விட கூடுதலாக உள்ளது. இந்த உண்மை நிலையை கணக்கில் கொள்ளாமல், கொரானாவால் மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்க்ளின் வாழ்க்கை மேம்பட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இந்த பட்ஜெட் பழைய பாணியிலேயே ஏழைகளை கொடிய வறுமையில் தள்ளவும்,, கார்ப்பரேட்டுகளின் சொத்துக்களை மேலும் அதிகரிக்க வைக்கும் வகையிலேயே உள்ளது.
இம்முறையும் பாஜகவால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை பெருவாரியான மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. விவசாயிகள் தொழிலாளிகள் ஏழை மக்கள் கல்வி சுகாதாரம் என்ற எல்லா தரப்பிலும் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு சரியான முன்னேற்றப் பாதையை வகுக்கவில்லை. ரூபாய் ஐந்து லட்சம் வரை தனி நபருக்கான வருமானவரி விலக்கு என்பதை முன் காலங்களில் போராடிய பாஜக தங்களது நிதிநிலை அறிக்கையில் இன்றுவரை அதை நிறைவேற்றாதது மத்தியதர மக்களிடையே ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது
அருமை. இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராக உள்ளது
இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் படும் துயரம் வருமான இழப்பு வேலை இழப்பு உளவியல் நெருக்கடி மறுகட்டமைப்பு ஆகியவைப்பற்றிதுளியும் கவலைப்படாத ஒன்றிய அரசின் கார்ப்பரேட் பாசம் பொழியும் கொடூர மனம்படைத்த பட்ஜெட் இது.
பட்ஜெட் பற்றிய விமர்சனம் கூர்மையானது. மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்டுக்கு மக்கள்
மார்ச் 28 &29ல் அகில இந்திய வேலைநிறுத்தம் மூலம் பதிலளிப்பார்கள் !
சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல என்பது போல தான் இந்த பட்ஜெட் அறிவிப்பும்.மிக அழகாக நேர்த்தியாக கவலையோடு பதிவு செய்த தோழர் CPK விற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். Ravindran
இந்த அரசு அனைவரையும் “Wealth Creators” ஆக மாறச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது போலும்.