ஆட்டோ டாக்சி தொழில்களை நசுக்காதே!!!

(இரண்டாம் பாகம்)

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம்


ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் சந்திக்கும் எரி பொருள் விலை ஏற்றம், கூடுதல் வட்டியில் கடன், அநியாய காப்பீட்டு பிரீமிய உயர்வு, பணிப் பாதுகாப்பின்மை, அரசுக் கட்டண உயர்வு, காவல் துறை துன்புறுத்தல்கள், மீட்டர் திருத்தக் குளறுபடிகள் ஆகியவற்றை எல்லாம் சரி செய்வதற்கு பதிலாக, சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக என்று சொல்லி மேலும் மோசமான நிலைக்கு இத்தொழில் சார்ந்த தொழிலாளர்களைத் தள்ள ஒன்றிய பாஜக அரசு மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2019 ஐ இயற்றியுள்ளது.

பாதகமான மோட்டார் வாகன திருத்தச் சட்டம்

மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசு மூலம் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால், இதற்கு முற்றிலும் நேர் மாறாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கங்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், பாஜக தலைமையிலான அரசாங்கம் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 ஐ, விபத்துகளைக் குறைக்கிறோம் என்று சாக்குச் சொல்லி, இயற்றியது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

  • ஆட்டோ / டாக்சி தொழிலை ஒற்றை வாகன உரிமையாளர்களிடம் இருந்து பிடுங்கி உபெர், ஓலா போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்க ஒரு முக்கிய திருத்தமாக ‘அக்ரிகேட்டர்’ என்ற திரட்டி நிறுவன முறையை மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019 அங்கீகரிக்கிறது. இதன் மூலம்  தனிப்பட்ட ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களை களத்தை விட்டு வெளியேறவோ அல்லது பெரிய கார்ப்பரேட் போக்குவரத்து நிறுவனங்களிடம் சிக்கி சீரழியவோ நிர்ப்பந்திக்கிறது. டாக்சி சேவைகளில், உபெர் அல்லது ஓலாவுடன் ஏற்கனவே தங்கள் வாகனங்களை இணைத்துள்ள ஓட்டுனர்கள் வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்தக்கூடிய வருமானத்தைக் கூடப் பெறுவதில்லை. இதன் காரணமாக பல ஓட்டுனர்கள் உபெர், ஓலா கட்டணம் கட்டுப்படியாகாததால், ஒன்று வெளியேறுகிறார்கள், அல்லது செயலியில் வாடிக்கையாளர் பயணத்தைக் ரத்து செய்கிறார்கள். சமீபகாலமாக சில ஓட்டுனர்கள் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர். ஆட்டோரிக்‌ஷா துறையில் ‘அக்ரிகேட்டர்’ நிறுவனங்களை அனுமதிக்கும் எம்வி சட்டத் திருத்தம் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது.
  • மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அதிக பயணிகளுக்கு இடமளிப்பதை பெரும் அபராதத்திற்குரிய ஒரு தவறான செயலாகக் கருதுகிறது. இதனால் ஷேர் ஆட்டோ / சர்வீஸ்  ஆட்டோ தொழில் முற்றிலும் முடக்கப்படும். எந்த ஆட்டோ ஓட்டுநரும், குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், இத்தகைய சூழ்நிலையில் வாழ முடியாது. நகரங்களில் கூட, பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் உயிர் பிழைக்க முடியாத நிலை ஏற்படும்.
  • எதிர்காலத்தில் அனைத்து பழுதுபார்ப்பு, வாகன பராமரிப்பு சேவைகள் எல்லாம் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கூறுகிறது. மேலும், உதிரி பாகங்கள் கூட பிராண்டட் நிறுவனங்களிடமிருந்து தான் வாங்க வேண்டும், அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்திடம் அதிக கட்டணம் செலுத்தி வாகனத் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறது. இவை அனைத்திற்கும் ஆகும் அதிக செலவுகள் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்களின் சக்திக்கு மீறியதாக இருக்கும்.
  • விபத்துகளைக் குறைப்பதாகக் கூறி, கட்டணம் செலுத்தும் திறனைக் கருத்தில் கொள்ளாமல், ஆட்டோ ஓட்டுனர்கள் மீது விதிக்கப்படும் அபராதங்களும், தண்டனைகளும் வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கப் பட்டுள்ளன. நாட்டில் சாலை விபத்துக்களுக்கு முக்கியக் காரணம் சாலைகளின் மோசமான நிலைதான். பல பகுதிகளில் ஒரு முறை மழை பெய்தாலும் சாலைகள் மோசமாகி விடுகின்றன. பல்வேறு ஏஜென்சிகள் பெரும்பாலும் குழாய்கள் அல்லது கேபிள்களை அமைக்க சாலையை தோண்டி அவற்றை சரி செய்யாமல் விட்டு விடுகின்றன. ஆனால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சாலைகளை மேம்படுத்தவும் அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. மாறாக ஓட்டுனர்களை அநியாயமாகத் தண்டிக்கின்றன.

கோவிட் தொற்றுநோய் காலத்தில் விதிக்கப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக, ஆட்டோ ரிக்‌ஷா டாக்சி ஓட்டுனர்கள் பலரும் தங்கள் வருவாயை இழந்து தங்கள் குடும்பத்தை பராமரிக்க மிகவும் அவதிப்படுகிறார்கள். ஒரு சில மாநிலங்களைத் தவிர, கொரோனா காலத்தில் ஆட்டோரிக்‌ஷா ஓட்டுனர்களுக்கு அரசாங்கங்கள் எந்த நிதி உதவியும் வழங்கவில்லை.  ஆட்டோரிக்‌ஷாக்கள் / டாக்சிகளுக்கான தேவை இன்னும் தொற்று நோய்க்கு முந்திய நிலைக்கு உயராததால் ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் வேறு வேலை தேடி வருகின்றனர். ஈஎம்ஐ செலுத்துவதற்காக தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து தாங்க முடியாத தொல்லைகளை எதிர்கொள்கிறார்கள். இவை அனைத்தும் சேர்ந்து, விரக்தியில் தள்ளப்பட்டு, பல்வேறு இடங்களில் சில ஓட்டுனர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர்களின் கோரிக்கைகள்

ஆட்டோ தொழிற்சங்க தமிழ் மாநில பொதுச் செயலாளர் சிவாஜி அவர்களிடம் பேசும் பொழுது, சங்கம் இந்தக் கோரிக்கைகளை முன் வைப்பதாகச் சொன்னார்:

  • மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2019ஐ திரும்பப் பெற வேண்டும்.
  • டிஜிட்டல் முறையில் வெறும் ஆட்டோ எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு எந்தக் கேள்வியும் இல்லாமல் அபராதம் விதிக்கக் கூடிய போக்கை கைவிட வேண்டும்.
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கிராம வங்கிகளிலும் ஐந்து வருட தவணையில் குறைந்த வட்டியில் ஆட்டோ வாங்க கடன் வழங்கப்பட வேண்டும்.
  • பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்
  • ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் அல்லது எரிவாயு மானிய விலையில் வழங்கப்பட வேண்டும்.

வரலாறு காட்டும் உண்மை

தொழிலாளி வர்க்கத்திற்கு உருவாகும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் பின்னப்பட்டு உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள புதிய தாராளமயத்தின் கடந்த முப்பதாண்டு கால அனுபவம் கற்றுக் கொடுத்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற பாதமான கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களின் மகத்தான கூட்டு நடவடிக்கைகள் மட்டுமே மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற அரசாங்கத்தை நிர்பந்திக்க முடியும்.

விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கட்டாயப்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் வெற்றியிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் இதுதான்.

அதனால்தான் இன்று தொழிலாளர்கள் தங்களது உடனடி கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்.

‘மக்களைக் காப்பாற்றுங்கள், தேசத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற போர் முழக்கத்துடன் 2022 மார்ச் 28-29 அன்று நாடு தழுவிய இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டு உள்ளது.

28-29 மார்ச் 2022 பொது வேலை நிறுத்தத்தில் முழுமையாக இணைவோம். 0.1% மக்களுக்காக மட்டுமே செயல்படும் பேரழிவு கொள்கைகளை முறியடித்து, 99.9% மக்கள் பயனடையும் கொள்கைகளை அமலாக்க அரசாங்கத்தை நிர்பந்திப்போம்.

One comment

  1. ஆட்டோ தொழிலின் பிரச்சினைகள் கூர்மையாக முன் வைக்கப்பட்டுள்ளது !
    மார்ச் 28 &29 அகில இந்திய வேலைநிறுத்தம் வெல்லட்டும் 💪

Comment here...