இரண்டாம் இதயம்-புத்தக அறிமுகம்

பாரதி

எத்தனை வயது ஆனாலும் நமக்குள் இனிமையாக,  நடந்தவைகளை பத்திரப்படுத்தி வைப்பது நம் நினைவுகள் தான். இளம் வயதில் நாம் கண்ட வெற்றிகள், தோல்விகள், சொதப்பல்கள் என அத்தனையும் அவரவர் மனதில் நீங்காமல் அப்படியே இருக்கும். கண் மூடி நினைத்தால் நம் முன் காட்சியாகும் அந்த அற்புதத்தை எந்த அறிவியலாலும் அவ்வளவு சீக்கிரம் விளக்கிவிட முடியாது தான். “ஞாபகம் வருதே ஞாபகம் வருதே, பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே” என்று எண்ணி பாடல்கள் பல பாட அனைவருக்குள்ளும் பல நினைவுகள் இருக்கும் தான். அந்த நினைவுகளுக்கு எழுத்துருவம் கொடுத்தது தான் இந்த இரண்டாம் இதயம் என்கிற புத்தகம். ஜா.மாதவராஜ் எழுதியது.  இவர் முன்னாள் பாண்டியன் வங்கி கிராம வங்கியிலும், தற்போது தமிழ்நாடு கிராம வங்கியிலும் 39 ஆண்டு காலம் பணி புரிந்தவர். இக்காலம் முழுவதும் இடையறாது தொழிற்சங்க தலைமைப் பொறுப்பில் செயலாற்றிக் கொண்டே இலக்கிய பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் வரும் காட்சிகளும், கதாபாத்திரங்களும் நம் நினைவிலும் வருபவையாக இருக்கும். நாமும் நாடகங்களில் நடித்திருப்போம், ஏனோ ஆண் மாணவருக்கு பெண் வேடமும்,  பெண் மாணவிக்கு ஆண் வேடமும் தான் கிடைக்கும்.  பள்ளி, கல்லூரி நாடகங்களில்.  மார்கழி மாதம் போட்டி போட்டு கோலம் போடும் பக்கத்து வீட்டு பெண்ணின் கோலத்தை பார்க்க தங்கையும், அவளை பார்க்க அண்ணனும் காலையில் எழுவதும், நெருங்கிய நண்பனிடம் கோபப்பட்டு சண்டை போடுவதும், அவனை பல வருடம் கழித்து பார்க்கும் போது அந்த கோபமெல்லாம் அற்பமாய் தெரிவதும் நமக்கு நம் வாழ்வில் ஒரு முறையாவது நடந்திருக்கும் தானே!

பால்ய காதல், கல்லூரி படிப்பு, வேலை, திருமணம்,  நண்பர்களின் இழப்பு என அத்தனையும் தாண்டிய நாம் மெதுவாக நாற்காலியில் சாய்ந்து படிக்கும் போது புன்னகை உதிர்க்க வைக்கும் புத்தகம் தான் இரண்டாம் இதயம்.

இரண்டாம் இதயம்- நினைவுகளின் சங்கமம்.

3 comments

  1. அட நம்ம மாது தோழர் எழுதிய புத்தகம்னாலே சிறப்பு தானே!! எல்லாராலும் எளிதில் புரிந்து கொள்ளும் எழுத்து நடை அவருக்கு.. இப்போது இணையத்திலும் கிளிக் என்றொரு தொடர் எழுதுகிறார். படிக்க வேண்டும்.

  2. இரண்டாம் இதயம் புத்தகத்திற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்துள்ளீர்கள் தோழர். கண்டிப்பாக அனைவரையும் படிக்கத் தூண்டும்.

Comment here...