உ.ரா.வரதராசன் – நினைவில் நீங்காத் தலைவர்!

தி.தமிழரசு

பாட்டாளி வர்க்கத் தலைவர் அருமைத் தோழர் உ.ரா.வரதராசன் அவர்கள் மறைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அவரின் பன்முகத் திறமையும், எளிமையான வாழ்க்கையும், தோற்றமும் இன்றும் நம் கண்முன் நிழலாடுகின்றன.

ரிசர்வ் வங்கியில் பணி புரிந்த காலத்திலேயே ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்திற்கு தலைமை ஏற்று, கூட்டுறவு வங்கி ஊழியர்களை திரட்டிட முன்முயற்சி எடுத்து அத்துறையில் பெரும் படையையே உருவாக்கினார். தன்னலம் கருதாது, பாட்டாளி வர்க்க நலனுக்காகவே தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தார்.  சாதி மறுப்புத் திருமணம், கிடைத்தற்கரிய பாரத ரிசர்வ் வங்கிப் பணியை துறந்து  முழு நேர கட்சிப் பணி – இவை அனைவரையும் பிரமிக்க வைத்தன.

சென்னை மாவட்ட கூட்டுறவு ஊழியர் சம்மேளனம், சென்னை மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கம், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் என அவரது பணி மற்றும் வழிகாட்டுதல் கூட்டுறவு தொழிற்சங்க இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்தது. பல பொதுத்துறை வங்கிகளில், கிராம வங்கியில் தொழிற்சங்கங்களை வளர்த்தெடுத்ததில் உ.ரா விற்கு பெரும் பங்குண்டு.

சட்டமன்றப் பணி

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிபிஐ(எம்) வேட்பாளர் என்ற சாதனையை படைத்தவர். சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய பணி முத்திரை பதிக்கும் வகையில் அமைந்தது. தொகுதியின் மூலை முடுக்குகள் முதல் ஏரி குளங்கள், கண்மாய்கள், கால்வாய்கள் வரை அனைத்தும் இவருக்கு அத்துப்படி.

இவருடைய பணியை கண்டு அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் “சட்டமன்ற வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டுமென்பதை  உ.ரா.வரதராசனிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்” என்று தனது கட்சிக்காரர்களிடம் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.

தொழிற்சங்கப் பணி

சென்னை நகரத்தில் பி அண்டு சி மில் தொழிற்சங்கம், மதராஸ் லேபன் யூனியன், சிம்சன் யூனியன், இந்தியா மீட்டர் என எண்ணற்ற தொழிற்சங்கங்களுக்கு தலைமையேற்று அல்லும் பகலும் உழைத்தவர். பிற்காலத்தில் அவர் பல தொழிற்சங்கங்களுக்கு தலைமையேற்று சிஐடியு தலைமையகத்தில் செயல்பட டெல்லி சென்றார். சிஐடியுவின் அகில இந்திய செயலாளராகி பல்வேறு மாநிலங்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளம் என நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.

அகில இந்திய தலைவர்களின் ஆங்கில உரையை மிகத் துல்லியமாக தமிழாக்கம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இவருடைய அருமைகளையும் பெருமைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். இவர் மறைவின்போது சென்னை நகர பாட்டாளி வர்க்கமே கண்ணீர் வடித்தது.

பொது வாழ்க்கையில் தூய்மையாக நடந்து மக்கள் பணியாற்றிய உ.ரா.வின் புகழ் தொழிலாளிகளின் மனதை விட்டு என்றென்றும் நீங்காது.

(2022 பிப்ரவரி 11 – தோழர் உ ரா வரதராசன் அவர்களின் 13 வது நினைவு தினம்)

Comment here...