ஒரு கோடிக்கு மேல் தற்காலிக ஊழியர்கள் வேலை நிரந்தரம் பெற உதவிய வழக்கின் நாயகர்

 (2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத பாங்க் ஒர்க்கர்ஸ் யூனிடியின் வெள்ளி விழா சிறப்பிதழில் பிரசுரிக்கப்பட்ட பேட்டி)

நமது சிறப்பு நிருபர்கள்: எம்.ஏ.ஹூசைன் மற்றும் சே.ப.ரவிசங்கர்

இன்றைய தொழிலாளர் நிலை என்ன? “Unskilled, Semi Skilled, Skilled, Super Skilled” யாராக இருந்தாலும் வேலை நிரந்தரம் கிடையாது. சம்பள கவருடன் ‘பிங்க்’ தாள் தரப்பட்டால் மறுநாள் வேலைக்கு வரவேண்டாம் என்று பொருள்.

இரவு, பகல் என்று இல்லாமல் நேரம் கணக்கில்லாமல் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் (மன ஆரோக்கியம் உட்பட) கலாசாரத்தைக் கெடுக்கும் பணி நிலைமை, உலகமயமாக்கலின் பரிசு.

இது தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து மற்ற துறைகளுக்கும் விஸ்தரிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு

வங்கித் துறையில் ஸ்டேட் வங்கியில் வேலை நிரந்தரம் கோரி வழக்குகள்

சுந்தரமணி எதிர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ராதாகிருஷ்ணன் எதிர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்த வழக்குகளில் தரப்பட்ட தீர்ப்பு இந்திய நாட்டில் பல்வேறு துறைகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் நிரந்தர வேலை பெற உதவியது இந்த வழக்குதான் என்ன? இதன் நாயகன் யார்? அவர் சந்தித்த பிரச்சனைகள் என்ன? அவற்றை அவர் எப்படி சமாளித்தார்.

இதோ…

JH என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தோழர் J.ஹேமச்சந்திரன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பின்தங்கிய தொகுதியான திருவட்டாறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், CITUவின் தமிழ் மாநிலத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், தொழிலாளர்களை புரட்சிப் பாதையில் ஒன்றுதிரட்ட தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். மிக எளிமையான வாழ்பவர். எந்த சாதாரண மனிதனாலும் எளிதாக அணுகக்கூடியவர். இனிமையாக பழகுபவர்.

BWU : தோழர் JH ஸ்டேட் பேங்கில் தொழிற்சங்கம் இருக்கும்போது இந்த வழக்கு உங்களிடம் எப்படி வந்தது?

JH : 1970களின் துவக்கத்தில் ஒரு நாள் அலுவலகத்திற்கு ஒரு ஸ்டேட் வங்கி ஊழியர் வந்தார். சாம் தர்மராஜ் என்ற அந்த ஊழியர் நாகர்கோவில் கிளையில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டவர். ஸ்டேட் பாங்க் நிர்வாகம் பலரையும் தற்காலிகமாக வேலையில் அமர்த்தியுள்ளது என்றும் பல வருடங்கள் பணிபுரிந்த பிறகும் உச்சவரம்பு வயதைக் கடந்த பிறகு வேலையிலிருந்து எடுத்துவிடுகிறது என்றும் கூறி இதில் நான் ஏதாவது தலையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவரைப் போலவே மற்றும் இரு தற்காலிக ஊழியர்கள் ராதாகிருஷ்ணன் – நாகர்கோயில் கிளை, சுந்தரமணி – குழித்துறை கிளை. இவர்களோடு நாகர்கோவில் கிளை ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத் தலைவரை சந்தித்து பேசினோம். அவர் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிட்டார்.

பின்னர் சாஸ்திரி அவார்டு, தேசாய் அவார்டு, வங்கி ஊழியர் ஒப்பந்தங்கள் அனைத்தையும் படித்துப் பார்த்தேன். ரிசர்வ் வங்கி ஊழியர் அசோசியேஷன் தலைவர் தோழர் WRவரதராசனோடு கலந்து ஆலோசித்தேன். CITU தலைவர்களோடு கலந்து பேசினேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதென முடிவு செய்து ராவ் அண்ட் ரெட்டி குழுவின் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்துடன் கலந்தாலோசித்து ரிட் மனு தாக்கல் செய்தோம்.

சாம் தர்மராஜ் தாக்கல் செய்த ரிட் மனுவில் உயர்நீதிமன்றம் அவரை வேலையிலிருந்து நிறுத்தியதற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அவருக்குத் தொடர்ந்து வேலை தரப்பட்டது.

BWU : அவ்வளவு எளிதாக முடிந்துவிட்டதா?

JH : இல்லை இது துவக்கம்தான். என்.சுந்தரமணியும் (முதலில் வழக்கு தொடர்ந்தவர் இவர்தான்) ராதாகிருஷ்ணனும்கூட வேலையில் சேர்ந்தனர். பின்னர் 25 வயது வரை வேலை செய்து வெளியேற்றப்பட்ட பலரும் நிர்வாகத்திடம் மனு தந்தனர். சிலருக்கு வேலை தந்தனர். ஆனால் பலருக்கு வேலை தரவில்லை. சுந்தரமணி வழக்கு நீதிபதி நாராயணசாமி முதலியார் முன்பு (அண்ணா அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவர்) விசாரணைக்கு வந்தது. இதில் நிரந்தர வேலை கொடுக்க நிர்வாகத்திற்கு உத்தரவு இடப்பட்டது. ஆனால் எஸ்.பி.ஐ. நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

BWU : உங்கள் வழக்கு எந்த அடிப்படையில் தொடரப்பட்டது?

JH : தொழில் தகராறு சட்டத்தின் 25 எப் பிரிவில் ஒரு காலண்டர் ஆண்டில் 240 நாட்கள் வேலை செய்வோருக்கு நிரந்தர வேலை கொடுக்கப்பட வேண்டும் அல்லது இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நாகர்கோவில் கிளை மேலாளர் மட்டும் வேலையிலிருந்து நீக்கப்படுபவர்களுக்கு கடிதம் கொடுத்து அனுப்பினார். இதனை பயன்படுத்தி அனைவரும் வழக்கு தொடுத்து வேலை பெற்றுக் கொள்ளட்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருந்திருக்கலாம்.

BWU : இந்த காலகட்டத்தில் குழித்துறை கிளையில் ஏதோ நிகழ்ச்சிகள் நடந்ததாக கூறுவார்களே அது என்ன?

JH : குழித்துறை கிளையில் வேலை பார்த்த வி.ராதாகிருஷ்ணனுக்கு 240 நாட்கள் முடிய பத்து அல்லது 12 நாட்கள்தான் இருந்தன. 240 நாட்களுக்கு மேல் விட்டுவிட்டு வேலை பார்த்த சாம் தர்மராஜ் மற்றும் எஸ்.ராதாகிருஷ்ணன் போன்றோரை வேலைக்கு எடுத்துக் கொண்ட நிர்வாகம் தன்னை விடுவிப்பதற்கு முன் தடை உத்தரவு பெற வேண்டும் என்று கோரினார்.

(மற்றவர்களை வேலைக்கு எடுத்ததுகூட தற்காலிகமாகத்தான். ஆனால் தொடர்ந்து வேலை கொடுக்கப்பட்டு வந்தது) இவ்வழக்கில் நீதிபதி ராம் பிரசாத் ராவ், வி.ராதாகிருஷ்ணனை பணியிலிருந்து நிறுத்த தடை உத்தரவு பிறப்பித்தார். அவர் 240 நாட்கள் முடிக்கும் முன்பே அதாவது 29.7.73க்கு முன்பே தடை உத்தரவு கிடைத்தது.

BWU : இதற்கெல்லாம் பணத்திற்கு என்ன செய்தீர்கள்?

JH : அது ஒரு சுவாரசியமான விஷயம். நான், ராதாகிருஷ்ணன், மற்றொருவர் சென்னைக்கு வந்தோம். எங்களிடம் போதிய பணமில்லை. ஆட்டோவிற்கு கொடுக்க பணமில்லாமல் நடந்தே செல்வோம். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் படுத்துக் கொள்வோம். இரவில் ஆளுக்கு ஒரு தோசை, பாலில்லாத தேநீர் குடித்துவிட்டுப் படுப்போம். வக்கீல் குமாஸ்தா வழக்கு பதிவு செய்ய காசு கேட்டபோது என்னிடமிருந்த பத்து ரூபாய் மட்டும் தந்தேன். “என்ன JH பிச்சை காசு மாதிரி தறீங்க” என்றார் குமாஸ்தா. “ஜெயிக்கட்டும் பாக்கலாம் என்றேன்” நான்.

BWU : குழித்துறை கிளையில் நடந்த சம்பவம் என்ன?

JH : ஒருவழியாக வி.ராதாகிருஷ்ணன் தடை உத்தரவைப் பெற்றுக் கொண்டு குழித்துறை கிளைக்கு வந்து கிளை மேலாளரை அணுகினால் அன்றைய கிளை மேலாளர் திரு.பீட்டர் வென்ஸ்லாஸ் இதைத் தெரிந்து விடுப்பில் சென்றுவிட்டார்.

மேலாளர் பொறுப்பில் இருந்த முனியாண்டி என்ற முஸ்தாபா மேலாளர் வரட்டும் என்று காலம் தாழ்த்தினார். இதில் மூன்று நாட்கள் சென்று விட்டன. இதற்கிடையில் நான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அணுகி உயர் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவரும் வி.ராதாகிருஷ்ணனை கிளைக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வேலைக்கு செல்லும்படி கூறினார்.

அன்று சனிக்கிழமை வி.ராதாகிருஷ்ணன் கையெழுத்து இட்டுவிட்டு தனது வழக்கமான இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது கேஷ் ஆபீஸர் பொறுப்பில் இருந்த அவார்ட் ஸ்டாஃப் ஊழியரான ஸ்தாணு நாயர் வி.ராதாகிருஷ்ணன் unauthorised நபர். அவர் இருந்தால் நாங்கள் வேலை பார்க்க மாட்டோம் என்று சொல்லவும் கிளை மேலாளருக்கு கிளை சங்கத் தலைவர் ஐயப்பன் மூலமாக தெரிவித்துவிட்டு அனைவரும் வெளியேறி விட்டனர். அது மட்டுமல்ல ராதாகிருஷ்ணனை வெளியேற்ற குழித்துறை நீதிமன்றத்தை அணுக முயற்சித்து அது சிரமம் என்ற தெரிந்த பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முறையிட்டனர். போலீசாரும் வி.ராதாகிருஷ்ணனை மிரட்டினர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நான் கண்காணிப்பாளரைப் பார்த்து விட்டுதான் வந்துள்ளேன் என்ற விஷயத்தையும் உயர்நீதிமன்ற உத்திரவை பற்றியும் கூறிய பிறகு போலீசார் அந்த முயற்சியை கைவிட்டனர். அன்று முழுவதும் ஸ்டேட் பேங்க் கிளையில் எந்த வேலையும் நடைபெறவில்லை. மாலை ஐந்து மணி வரை இருந்துவிட்டு வெளியேறும் போது வருகை பதிவேட்டை கேட்டபோது மேலாளர் தர மறுத்துவிட்டார். ஆனால் காவல் துறை ஆய்வாளர் நீங்கள் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இங்கு வந்ததற்கும் மாலையில் சென்றதற்கும் நான் சாட்சி என்று வி.ராதாகிருஷ்ணனிடம் கூறினார்.

BWU : இத்துடன் விவகாரம் முடிந்து விட்டதா?

JH : இல்லை திங்கட்கிழமை என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஞாயிற்றுக்கிழமையன்று போலீசார் கேட்டனர். வேலைக்கு செல்லப் போகிறேன் என்று வி.ராதாகிருஷ்ணன் கூறினார். அப்படியானால் கேஷ் ஆபிஸர் அருகில் இருக்கை போட்டுத் தந்தால் அங்கு அமர்வீர்களா என்று கேட்டனர். வி.ராதாகிருஷ்ணன் சரி என்றார். அதற்குள் அன்றைய SBI பிராந்திய மேலாளர் சண்முகவடிவேலு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்து குழித்துறைக்கு திங்கட்கிழமை வந்து மாவட்ட கண்காணிப்பாளரை பார்த்து கேட்டபோது எஸ்.பி. அவரை அரசு வக்கீலை பார்த்து பேசச் சொன்னார். நான் அதற்கு முன்பே PP (Public Prosecutor) திரு.தர்மராஜைப் பார்த்து பேசியிருந்தேன். PP தர்மராஜ் RM. சண்முகவடிவேலுவிடம் வி.ராதாகிருஷ்ணனைத் தடுக்கவோ அல்லது கைது செய்யவோ முடியாது என்று கூறிவிட்டார்.

திங்கட்கிழமை வங்கி கிளையில் முன்வாசல் பூட்டப்பட்டு ஊழியர்கள் பின்வாசல் வழியாகச் சென்றனர். வி.ராதாகிருஷ்ணன் பின்வாசல் வழியாகச் சென்றார். அவரை வங்கி காவலர்கள் தடுத்தனர். வி.ராதாகிருஷ்ணன் 10 மணிக்கு முன் வாசல் வழியாக வந்தபோது R.M.சண்முக வடிவேலு வழமறித்து தடுத்தார். இருவரும் தொடர்ந்து வாதம் செய்தனர். அவர்கள் வி.ராதாகிருஷ்ணன் தகராறு செய்தால் R.M..ஐ. தாக்கியதாக கூறி கைது செய்யலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. R.M. சண்முகவடிவேலு வி.ராதாகிருஷ்ணனிடம் நீங்கள் கோர்ட் உத்தரவுபடி வந்தாலும் நாங்கள் மறுத்ததால் மீண்டும் கோர்ட்டுக்கு செல்லலாமே. ஏன் இங்கு வந்து இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். அன்று சம்பள பட்டுவாடா நாள். அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை உசுப்பிவிடும் விதத்தில் வி.ராதாகிருஷ்ணனைப் பார்த்து நீங்கள் இப்படி செய்து இவர்களுக்கு சம்பளம் கிடைப்பதையும் மற்றும் வங்கி வேலையையும் ஏன் தடுக்கிறீர்கள் என்றார்.

உடனே பொதுமக்கள் அரசு ஊழியர்கள் R.M.சண்முகவடிவேலுவைப் பார்த்து வி.ராதாகிருஷ்ணன் வேலைதானே கேட்கிறார். அதற்குப் பதில் சொல். அதற்குப் பிறகு எங்களுக்கு சேவை செய்தால் போதும் என்று சத்தம் போட்டனர். பிராந்திய மேலாளரும் கிளை மேலாளரும் அதிர்ந்து போய்விட்டனர்.

அன்று சம்பள பட்டுவாடாவை அரசு கருவூலத்திற்கு மாற்றி விட்டனர். வங்கியிலிருந்து பணம் பின்பக்கம் வழியாக அங்கீகரிக்கப்பட்ட சங்க ஊழியர் மற்றும் அதிகாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. அன்று முழுவதும்  RM மற்றும் வி.ராதாகிருஷ்ணன் விவாதித்துக் கொண்டே மாலை 5 மணி ஆகிவிட்டது. நமது தரப்பில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் வங்கி நிர்வாகம் பம்பாயிலுள்ள King and Patridge வழக்கறிஞர் குழாம் மூலமாக Order-ஐ கோர்ட்டில் வெக்கேட் செய்து விட்டது. சுந்தரமணி வழக்கு தடை பெறுவதைக் கூறி Stay Order-ஐ Vacate செய்துவிட்டனர்.

இந்த நேரத்தில் சுந்தரமணி வழக்கு வெற்றி பெற்றுவிட்டது. வி.ராதாகிருஷ்ணன் வழக்கு நீதிபதி இஸ்மாயிலிடம் வந்தது.அவரிடம் Single Bench-ல் நீதிபதி ராமபிரசாத் ராவ் கொடுத்த தீர்ப்பு குறித்து கூறியபோது அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் வங்கி நிர்வாகத்திடம் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டார். அதற்கு வங்கி நிர்வாகம் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறியது. பிறகு இதை full Bench-க்கு விடுவதாக கூறி எந்த தீர்ப்பையும் வெளியிட மறுத்துவிட்டார். நீதிபதி நாராயணசாமி முதலியார் வங்கி நிர்வாகத்தை ஊழியர்களின் வழக்கு செலவையும் கொடுத்து வேலை நிரந்தரம் செய்யவும் அறிவுறுத்தி ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார்.

இத்தீர்ப்பின் மூலம் சுந்தரமணிக்கு Interim Relief கொடுக்கப்பட்டது. அப்போது ஊதியம் ரூ.290. இவருக்கு இடைக்கால ஊதியமாக ரூ.150 வழங்கப்பட்டது. ஆனால் அது வி.ராதாகிருஷ்ணனுக்கு மறுக்கப்பட்டது. காரணம் வழக்கினை சீக்கிரம் முடிப்பதாகவும் (Appeal in the Supreme Court) மேலும் வழக்கு நிர்வாகத்திற்கு சாதகமாகத்தான் முடியும் என்றும் வலுவாக நிர்வாகம் நம்பியது.

சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு நீதிபதி V.R.கிருஷ்ணய்யர் முன்பு வந்தது. மரியாதைக்குரிய நீதியரசர் கிருஷ்ணய்யர் கொடுத்த வரலாற்றுமிக்க தீர்ப்பானது:

SBI நிர்வாகம் தன்னிடம் வேலை பார்த்த ஊழியர்களை வஞ்சகமாக வேலை வாங்கிவிட்டு 240 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மேலும் வேலை செய்ய தகுதியானவர்களா என்று பரிசீலிக்காமலே வேலையிலிருந்து விரட்டியது நீதிக்குப் புறம்பானதாகும். இவ்விதமாக தொழிலாளர்களை நடத்துவதற்காக இந்நிர்வாகம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதாகும். ஆகவே இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு உடனே அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக திருப்பி எடுக்க வங்கி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பின் மூலமாக வங்கி

1.     Waiting List-ல் இருந்த தொடர் வேலை பார்ப்பவர்களுக்கு உடனே போஸ்டிங் போட்டது (ஏற்கனவே Test எழுதியவர்கள்)

2.     லிஸ்ட்க்கு வெளியே 240 நாட்கள் முடித்து மீண்டும் அழைக்கப்படாதவர்களிடம் பிறகு மனுக்களை பெற்றுக்கொண்டு டெஸ்ட் வைத்து வேலைக்கு எடுத்துக் கொண்டது.

3.     Recruitment முறைகூட முற்றிலும் மாற்றப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு பிறகும் வி.ராதாகிருஷ்ணனை வங்கி நிர்வாகம் நிரந்தரப்படுத்தவில்லை. அதற்கான தேர்விற்கும் அவர் அழைக்கப்படவில்லை. அவர் சென்னை சென்று RM ஷண்முக வடிவேலுவை சந்தித்தார். RM ராதாகிருஷ்ணனைப் பார்த்து நீங்கள் ஸ்டேட் வங்கியில் நுழைய முடியாது. கோர்ட் உத்தரவுப்படி உங்களுக்கு காலாகாலத்துக்கும் சம்பளம் தருவோமே தவிர நீங்கள் உள்ளே வரமுடியாது என்றார்.

இந்த நேரத்தில்தான் SBIல் இருந்த AIBEA சங்கத் தலைவர் தோழர் ஏகாம்பரம், ராதாகிருஷ்ணனை தேடி பிடித்து பாராட்டி தொடர்ந்து உதவிகள் செய்வதாக கூறினார். வழக்கிற்கு தேவைப்படும்போது சம்பள நாட்களில் மற்ற சக ஊழியர்களிடம் நன்கொடை வசூல் செய்து தந்து உதவினார். வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிறகு Rao & Reddy வழக்கறிஞர் குழாமை பார்த்து பேசியபோது அவர்கள் ஒரு Contempt போட்டு வேலை பார்க்க உத்தரவு பெற்று தந்தனர்.

1977ல் நிர்வாகத்தினர் வி.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு தேர்வு வைத்து அந்த Result-ஐ with held செய்தனர். பின்னர் தோல்வி என்றனர். மீண்டும் தேர்வுக்கு அழைத்தபோது ஒரு Protest letter தந்துவிட்டு தேர்வு எழுதினார். அப்போதும் resultஐ with held செய்துவிட்டு பின்னர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

BWU : நேர்முக தேர்வில் ராதாகிருஷ்ணன் என்ன கேட்கப்பட்டார்?

JH : நேர்முகத் தேர்வுக் குழுவில் PO கணேசன் அரசரடி கிளை மேலாளர் கருப்பையா ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் ராதாகிருஷ்ணனிடம் J.ஹேமச்சந்திரன் என்பவர் யார்? என்ன செய்கிறார் என்று கேட்டனர். ராதாகிருஷ்ணன் JH ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்று கூறினார். அவர் கம்யூனிஸ்ட்தானே. இனி நீங்கள் அவருடன் சேரக்கூடாது என்று கூறினர். ராமநாதபுரத்தில் Posting போட்டனர். எந்த கிளையிலிருந்து நீக்கப்பட்டாரோ அங்கேயே வேலை தர வேண்டும் என்ற கோர்ட் உத்தரவை சுட்டிகாட்டிய பிறகு குழித்துறை கிளையில் நிரந்தர ஊழியராக அப்பாயிட்மெண்ட் செய்தனர்.

BWU : இந்த காலகட்டத்தில் நிர்வாகம் உங்களை அணுகியதா?

JH : ஆம் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவரை (Green Tank Estate Manager) என்னிடம் அனுப்பி என்னை இதில் தலையிட வேண்டாம் என்றனர். நான் மறுத்துவிட்டேன்.

BWU : இந்த வழக்கில் Backwages கிடைத்ததா?

JH : இதில் சுந்தரமணி மற்றும் ராதாகிருஷ்ணன் இருவர் மட்டுமே Backwages with interest வாங்கினர்.

JHக்கு நன்றி கூறி விடை பெற்றோம். உண்மையிலேயே ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மட்டுமில்லை. வங்கி ஊழியர்கள் மட்டுமில்லை இந்திய தொழிலாளி வர்க்கமே இந்த தன்னலம் கருதாத வர்க்கப் போராளிக்கு என்றென்றும் செவ்வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. இவருடைய இடைவிடாத போராட்டம் தற்போது உலகமயத்தால் பறிபோகும் நம்முடைய உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு உத்வேகமளிக்கிறது.

(08.02.2022 தோழர் J.ஹேமச்சந்திரன் அவர்களின் 14வது ஆண்டு நினைவு தினம்)

=========================

3 comments

  1. மிக அருமை யான பேட்டி …தன்னலம் கருதாமல் பிறர் நல பேண உழைத்த திரு. ஹேமசந்திரனின் தியாகம் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். 👍

  2. எத்தனை பேருக்கு தொியும் வங்கி சாராத தொழிற்சங்க தலைவா் படைத்த வரலாறு பற்றி!
    ஹேமச்சந்திரன் நினைவை போற்றியமைக்கு BWUக்கு நன்றி

  3. எத்தனை பேருக்கு தொியும் வங்கி சாராத தொழிற்சங்க தலைவா் படைத்த வரலாறு பற்றி!
    ஹேமச்சந்திரன் நினைவை போற்றியமைக்கு BWUக்கு நன்றி

Comment here...