எம்.தங்க மாரியப்பன் & இ.பரிதிராஜா
நாடு முழுவதும் 43 கிராம வங்கிகள் 282000 கிளைகளுடன் வியாபித்துள்ளன. கிராமங்களில் உள்ள 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகின்றன. அவற்றைப் பற்றி அறிவோம்.
பிராந்திய கிராம வங்கி என்றால் என்ன?
குறைந்த முதலீடு, குறுகிய வணிக எல்லை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட சேவைகள் என்பதே “கிராம வங்கி” அமைப்புக்கான அடிப்படை. கிராம வங்கி என்பது தேசத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் அதன் உள்கட்டமைப்புகளையும் மக்களின் வாழ்நிலையையும் பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் வகையில் வங்கிச்சேவையை வழங்கும் ஓர் அமைப்பு.
இந்தியாவில் கிராமவங்கிகள் எப்போது உருவாக்கப்பட்டன? முதல் வங்கி எங்கு உருவாக்கப்பட்டது?
கிராம வங்கிகளை உருவாக்க, பிரத்தேயகமாக குறைந்த செலவில் கிராமங்களுக்கு வங்கி சேவை வழங்கும் பரிந்துரையை, நரசிம்மம் கமிட்டி முன் மொழிந்தது. இந்தியாவில் கிராம வங்கிகள் 1975ம் ஆண்டு காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ல் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த ஓர் அசாதாரண காலகட்டத்தில் குறைந்த செலவில் வங்கிச் சேவைகளை வழங்கும் வகையில் கிராமங்களுக்கான பொருளாதாராத்தை வலுப்படுத்தும் நோக்கில் கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டன. முதல் கிராம வங்கி உத்திரபிரதேசம் மூர்தாபாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரதம கிராம வங்கி ஆகும்.
கிராம வங்கிகள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன?
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 70% பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். கிராமப்புற பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரத்தின் மையநீரோட்டத்துடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவைதாம் கிராம வங்கிகள். இந்தியாவில் வணிக வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்ட பின்னரும், நாட்டின் பெரும்பாலான கடைக்கோடி மக்களுக்கு வங்கி சேவையை நீட்டிக்க ஆட்சியாளர்கள் பெரும் முனைப்பு காட்டவில்லை. விவசாயிகளுக்கும், கிராமப்புற தொழில்களுக்கும் கடன் சேவை கொடுப்பதற்கு குறைந்த செலவில் ஓர் அமைப்பு அவர்களுக்கு தேவைப்பட்டது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய நெருக்கடி அரசுக்கு இருந்தது. மேலும், அக்காலத்தில் நிலவிய கடுமையான வேலையில்லா திண்டாட்டத்திற்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் அரசு இருந்தது. கிராம வங்கிகள் ஆரம்பிப்பதற்கான அவசியம் நாடெங்கிலும் இருந்தது. இந்த சூழலில் தான் கிராம வங்கிகள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்த வங்கிகளை நடத்துபவர்கள் யார்?
கிராமவங்கிகளை நடத்துபவர்கள் என்று சொல்வதென்றால் அந்த பெருமை ஒவ்வொரு கிளையிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமே உரித்தான ஒன்று. ஒன்றிய அரசு, மாநில அரசு, ஸ்பான்ஸர் வங்கி , நபார்ட், இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளைக்கொண்ட இயக்குநர் குழு ஒவ்வொரு கிராமவங்கியையும் நிர்வகிக்கிறது.
கிராம வங்கிகள் தனியார் வங்கிகளா? இல்லை பொதுத்துறை வங்கிகளா?
கிராம வங்கிகளைப்பொறுத்தவரை மத்திய அரசின் பங்கு 50% ஆகவும், மாநில அரசின் பங்கு 15% ஆகவும், ஸ்பான்ஸ்சர் வங்கியின் பங்கு 35% ஆகவும் உள்ளது. எனவே கிராம வங்கிகள் என்பவை முழுக்க முழுக்க அரசின் பங்கேற்போடு அரசாங்க வங்கிகளாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இன்று செயல்படும் வணிக வங்கிகள் கூட உருவாகும்போது தனியார் வங்கிகளாக இருந்து பின் அரசுடைமையாக்கப்பட்டன. ஆனால் கிராம வங்கிகள் பிறப்பிலேயே அரசாங்கங்களின் மூலதனத்தோடு முழுமையான அரசு வங்கிகளாகவே உருவாக்கப்பட்டன. எனவே இன்றளவிலும் பொதுமமக்களின் நம்பிக்கை கொண்ட அனைத்துதரப்பு மக்களுக்கான வங்கிச் சேவையை திறம்பட வழங்கிவரும் அமைப்பாக செயல்பட்டு வருகின்றன.
கிராம வங்கிகளின் செயல்பாடு என்ன?
கிராம வங்கிகள் விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் குறைந்த வட்டியில் மானியத்துடன் கூடிய கடன்களை வழங்கிவருகின்றன. சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கும், சுய உதவிக்குழுக்களுக்கும், சிறுதொழில் குழுக்களுக்கும் பெருவாரியான கடன் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு கிராமப்புற மக்கள் எளிய முறையில் வங்கியை அணுகி பயன்பெறும் வகையில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிராம வங்கிகள் வழங்கும் மொத்த கடன் அளவீட்டில் 80% முன்னுரிமை பிரிவினருக்கே வழங்கப்படும். கிராம வங்கிகள் மகளிர்களுக்கான கடன் திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்நிலையை முன்னேற்றுகின்றன. ஒரு லட்சம் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதன் மூலம் படித்த கிராமப்புற மாணவர்களின் அரசாங்க வேலை என்ற கனவை கிராம வங்கிகள் நிறைவேற்றிவருகின்றன.
கிராம வங்கிகளின் சாதனை என்ன?
கிராம வங்கிகள் மிகச் சிறந்த அளவில் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்றதாக இருக்கின்றன. 130 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் சுமார் 30 கோடி பேர் கிராம வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். வணிகத்திலும், நிகர மதிப்பிலும் பிற பெரிய வணிக வங்கிகளுக்கு சற்றும் குறைந்துவிடாமல் கிராம வங்கிகள் சிறந்து விளங்குகின்றன. வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட கிராம வங்கிகளின் நிகர மதிப்பு கடந்த ஆண்டு முடிவில் 30,000 கோடி ரூபாய் ஆகும்.
கிராம வங்கிகள் எதிர்கொள்ளும் சவால்கள் யாவை?
கிராம வங்கிகளை ஆரம்ப காலம் முதல் வணிக வங்கிகளே ஸ்பான்சார் வங்கிகள் என்னும் பெயரில் நிர்வாகம் செய்து வருகின்றன. ஒருபுறம் நிர்வாகிகளாகவும், இன்னொரு புறம் போட்டியாளர்களாகவும் முரண்பட்ட வகையில் அவை செயல்பட்டு வருகின்றன. சேவைத் துறைகள் என்ற பிரிவிலே வகைப்படுத்தப்பட்ட வங்கித் துறை இன்று லாபத்தை நோக்கிய சந்தையில் நிலவும் வணிகப் போட்டிகளின் தாக்கத்தால் மக்களுக்கான சேவை கேள்விக்குறியாகியுள்ளது. வணிக நோக்கத்தில் உள்ள போட்டியில் தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும் அரசாங்கத்தின் நிதி மூலதன உதவிகளின் மூலமும் மட்டுமே கிராம வங்கிகள் அவற்றை நிலைநிறுத்த முடியும்.
கிராம வங்கிகள் மீதான தாக்குதல்களை ஊழியர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்?
ஒன்றிய அரசு 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக கிராம வங்கிகளின் 49% பங்குகளை தனியாருக்கு கொடுக்க வகை செய்துள்ளது. தற்போது அரசு அதிகாரி ஒருவரின் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஒன்றிய அரசின் 50% பங்குகளை ஸ்பான்ஸார் வங்கியிடம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெறுகிறது. இத்தகைய முயற்சிகள் வெற்றி பெற்றால் கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். எனவே அம்முயற்சியை எதிர்த்தும், தேவையான மூலதனத்தை உடனடியாக வழங்கக் கோரியும் ஏஐஆர்ஆர்பிஇஏ தலைமையில் 2021 செப்டம்பர் 27 வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராம வங்கியின் சிறப்பு,பெருமை,அதன் பங்கேற்பு அதனால் சாமான்ய மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவாக கூறி விட்டீர்கள்…