கடனில் தத்தளிக்கும் வோடபோன்- காப்பாற்றத் துடிக்கும் ஒன்றிய அரசு

க.சிவசங்கர்

நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வரும் ஒரே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் விளங்கும் வோடபோன்- ஐடியா நிறுவனத்தில் தன்னை மிகப்பெரிய பங்குதாரராக இணைத்துக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு.

தனியாருக்கு சலுகை

தொலைத்தொடர்பு உரிமத்திற்கான கட்டணம், மொத்த வருவாய் பங்கீடு (Asset Gross Revenue) மற்றும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பயன்பாட்டிற்கான கட்டணம் ஆகிய வகையில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அவற்றின் பயன்பாட்டு அளவைப் பொறுத்து ஒன்றிய அரசிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என்று 2020 ம் வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி ஜனவரி 15, 2022 வரையிலான காலத்தில், வோடபோன்-ஐடியா நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வகைக்கு 2,02,257 கோடி ரூபாயும், மொத்த வருவாய் பங்கீட்டு அளவில் (AGR) 50,399 கோடி ரூபாயும் அரசிற்கு செலுத்த வேண்டும்.  ஆனால் தற்போதைய நிலையில் தங்களால் அந்தத் தொகையினை செலுத்த முடியாது என்று அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அரசிடம் முறையிட்டன. அந்நிறுவனங்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த அரசு, நிலுவைத் தொகையை அந்த நிறுவனங்கள் நான்கு வருடம் கழித்து கட்டத் தொடங்கலாம் என்று சலுகை வழங்கியது.

நட்டமடையும் நிறுவனத்தில் அரசின் முதலீடு

இந்நிலையில் தான் செலுத்த வேண்டிய பணத்திற்கான வட்டித் தொகையாக மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாயை இந்த ஆண்டிற்குள் வோடபோன்- ஐடியா நிறுவனம் அரசிற்கு செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானது. இதைச் சமாளிக்க 16,000 கோடி ரூபாய் மதிப்புடைய தனது நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்து 35.8 சதவீத பங்குகளை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி தற்போது வோடபோன் நிறுவனத்திடம் 28.5 சதவீத பங்குகளும், ஆதித்யா பிர்லாவின் ஐடியா நிறுவனத்திடம் 17.8 சதவீத பங்குகளும் உள்ளன. தனிப்பட்ட முறையில் அரசு மிகப்பெரிய பங்குதாரராக  மாறியிருந்தாலும், அந்நிறுவனத்தின் கொள்கை முடிவுகளை நிறைவேற்றும் உரிமையில் (governing rights) தங்களின் ஆளுமை குறைந்துவிடாத வகையிலான திருத்தங்களையும் இந்த இரண்டு நிறுவனங்களும் செய்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. அதன் படி ஒரு நிறுவனத்தின் கொள்கை முடிவுகளை எடுக்க குறைந்தபட்சம் 21 சதவீத பங்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி 13 சதவீதம் என்று மாற்றப்பட்டு பங்கு விற்பனைக்கு பிறகும் ஐடியா நிறுவனத்தின் ஆளுமை தக்கவைக்கப்பட்டுள்ளது.

லாபம் தனியாருக்கு – நட்டம் அரசுக்கு

மேலும் அரசின் இந்த நான்கு வருட கால நீட்டிப்பு சலுகை மூலம் வோடபோன்-ஐடியா நிறுவனத்தால் சுமார் 60,000 கோடி வரை சேமிக்க முடியும். மறுபுறம் அடுத்த நான்கு வருடங்களுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த காலநீட்டிப்பு சலுகைகளால் அரசிற்கு சில லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும். ஜூன் 2021 மற்றும் செப்டம்பர் 2021 ஆகிய இரண்டு காலாண்டுகளாக தொடர்ந்து சுமார் 7000 கோடி ரூபாய்க்கு  அதிகமாக நட்டத்தைக் காண்பித்து வரும் வோடபோன் நிறுவனப் பங்குகளை வலியப்போய் வாங்கி இருக்கும் அரசு, இதே இரண்டு காலாண்டுகளாக சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கும் மேல் லாபம் ஈட்டிய ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. “லாபம் முழுவதும் தனியாருக்கு, நட்டம் வந்தால் அரசிற்கு” என்ற கொள்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசு.

தனியார் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கும் போது ஓடோடிச் சென்று காப்பாற்றத் துடிக்கும் அரசு, தனது தவறான கொள்கை முடிவுகளால் தத்தளிக்கும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் காப்பாற்ற ஓரடி கூட முன் வரவில்லை என்பது முரண்.  வோடபோன், ஏர்டெல், ஜியோ உட்பட அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடன் தொகை 30,000 கோடி ரூபாய்க்கும் குறைவுதான்.

அரசின் கார்ப்பரேட் பாசம்

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டிற்குத் தேவையான அடிப்படை அம்சமே மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் தான் என்ற நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு 5G தொழில் நுட்பத்தை வழங்கி வரும் அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்றுவரை 4G தொழில்நுட்பம் கூட வழங்கவில்லை என்பதிலிருந்தே அரசின் கார்ப்பரேட் பாசத்தைப் புரிந்து கொள்ளலாம்.

நான்கு பேர் ஓடக்கூடிய ஓட்டப்பந்தயத்தில் மூவருக்கு காலில் ஸ்பிரிங் வைத்த காலணிகளைக் கொடுத்து ஓடவைத்து விட்டு, ஒருவரின் கால்களை கட்டி வைத்து “இவர் பந்தயத்தில் தோற்றுவிட்டார்” என்று அறிவிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

2 comments

  1. நல்ல கட்டுரை. எளிமையான சொல்லாடல்.

  2. ஒன்றிய அரசின் கொள்கை அநீதியானது !
    வோடோபோன் நிர்வாகத்தை அரசின் கீழ் கொண்டு வரவேண்டும், என்ற இயக்கம் முன்னெழ வேண்டும் !

Comment here...