உள்ளத்தைத் தொட்ட உணர்வுபூர்வமான அனுபவம்
வி. கோபி
ஓடிடியில் (நெட் ஃப்ளிக்ஸ்) நானி நடித்த “சியாம் சிங்கா ராய்” படத்தை பார்த்தேன்.
கதாநாயகன் சியாம் சிங்கா ராய் ஒரு முற்போக்கு எண்ணம் கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடும் வாலிபன். தேவதாசி முறையை எதிர்க்கும் ஒரு போராளி. தேவதாசிகள் வழி வந்தவர்தான் கதாநாயகி. நாயகன் அவரை விடுவித்து வெளி உலகிற்கு கொண்டு வந்து முழு சுதந்திரத்துடன் உலவ விடும் போராளியாகவும் திகழ்கிறார்.
தேவதாசிகள் கடவுளின் மனைவிகள் என்றும், அவர்களை பூசாரிகள் மட்டும் இல்லத்திற்கு அழைத்துக் கொள்ளலாம் என்பதும் தேவதாசிகள் குறித்த சமூக விதி. இதை எதிர்த்துப் போராடி, தேவதாசிகளைத் துன்புறுத்தும் பூசாரியைக் கொன்றுவிட்டு, நாயகியை அழைத்துக் கொண்டு கல்கட்டாவிற்குச் செல்கிறார் கதாநாயகன்.
அதையடுத்து நாளிதழ்களிலும், பல்வேறு நூல்களையும் எழுதும் பிரபல புரட்சி எழுத்தாளராகவும், பல்வேறு உயர்வுகளை எட்டுகிறார். பின்னர் தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொந்த ஊருக்கு ஏமாற்றி அழைத்துச் செல்லப்படும் அவர், தான் நிச்சயம் திரும்ப வருவதாகக் கூறிச் செல்கிறார். ஆனால் அவர் அங்கு சொந்த சகோதரர்களாலேயே கொல்லப்படுகிறார்.
கணவரின் வருகைக்காக மனைவி காத்துக் கொண்டிருக்க, கணவர் மறுஜென்மம் எடுக்கிறார். மறு ஜென்மத்தில் அவர் ஓர் இயக்குநர். அவர் திரைக்கதை எழுதும்போது, தமக்கு ஏற்பட்ட இனம் புரியாத உணர்வில், தன் சொந்தக் கதையையே (சியாம் சிங்கா ராய்) எழுதுகிறார். ஏற்கனவே கதாநாயகன் முன் ஜென்மத்தில் நடத்தி வந்த எஸ் ஆர் பப்ளிகேஷன், கதாநாயகனது சகோதரர் மற்றும் சகோதரர் பிள்ளைகளிடம் செல்கிறது. அவர்கள் தங்கள் எஸ் ஆர் பப்ளிகேஷன் கதையைத் திருடியதாக அந்த இயக்குநர் மீது வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கின் இறுதியில் அந்த இயக்குநர் தான் கொல்லப்பட்ட சியாம் சிங்கா ராயின் மறு ஜென்மம் என்பதை சகோதரரே ஏற்றுக் கொள்கிறார். சகோதரர் வழக்கைத் திரும்ப பெற்றுகொள்கிறார். எஸ் ஆர் பப்ளிகேஷன் கதாநாயகனிடம் ஒப்படைக்கப் படுகிறது. கடைசியில் இவருக்காகக் காத்திருக்கும் மனைவியைப் பார்க்கிறார். மூப்படைந்த மனைவி கதாநாயகன் மடியிலே உயிர் விடும் இடத்தில் நிறைவு பெறுகிறது படம்.
கதாநாயகனாக நடித்த நானியின் நடிப்பு முதிர்ச்சியைக் காட்டுகின்றது, சியாம் சிங்கா ராயாகவே வாழ்கிறார். இயக்குநர் ராகுல் சாங்கிருத்தியாயன் படைப்பு உண்மையின் வெளிச்சமாக உள்ளது. அருமையான கதைக் களத்தைப் படைத்துள்ளார் ஜங்கா சத்யதேவ். இயக்குநர் ராகுல் சாங்கிருத்தியாயன் திரைக்கதையை நிஜ வாழ்கையைப் போல் கண்முன்னே காட்டுகிறார். மிக்கி ஜே மேயரின் இசை, நம்மைக் கதைக்குள் இருப்பது போல்தான் செய்கின்றது. மொத்தத்தில் மிக அருமையான விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் இடையில் செங்கொடி, தீக்கதிர் என்ற பாடல்கள், காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் தென்பட்டன. கதாநாயகன் ஒரு கம்யூனிஸ்ட்டாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படத்தின் கதைக்களம் மற்றவருக்காக நாம் என்ற எண்ணத்தையும், மற்றவர்களுக்காகப் போராடும் குணத்தையும் மற்றும் அழகிய காதலையும் அருமையாக காட்டியுள்ளது.
இப்படம் என் மனதைத் தொட்ட படம் ஆகிவிட்டது. ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது எவ்வளவு பெருமை, எவ்வளவு மகிழ்ச்சி என்பதை கம்யூனிச சிந்தனை கொண்டிருப்போர் நிச்சயம் அனுபவத்தில் உணரவே செய்வார்கள்.
நான் தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த காலத்தில், அங்கே என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒரு கம்யூனிஸ்ட் தோழர். அப்பொழுது மாலை நேரங்களில் அவர் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் புத்தங்களை வாசித்துக் கொண்டிருப்பார். எனக்கு அப்போது அவர்கள் யார் என்று தெரியாது. அவரிடம் கேட்பேன், அவரும் எனக்கு எடுத்துரைப்பார். அந்த நேரத்தில் எங்கள் கம்பெனியில் சிஐடியு-தமிழ்நாடு வழிகாட்டுதலில் புதியதாக தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நிர்வாகத்திடம் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்தன. செயற்குழுவில் இருந்தவர்கள் தவிர மற்றவர்கள், நிர்வாகத்திடம் இருந்து சில சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தொழிற்சங்கம் நீர்த்துப் போகச் செய்தார்கள். தொழிற்சாலையில் பணிபுரியும் மற்ற உறுப்பினர்கள் உண்மையாக இருந்து, நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து போராடி, நிர்வாகத்திடமிடமிருந்து பல இன்னல்களுக்கு ஆளானார்கள். அதில் நானும் ஒருவன். அப்போதிருந்தே, தொழிற்சங்க தாகம் உள்ளே கனன்று கொண்டே இருந்தது, பின்னர் போட்டித் தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கையில் கூட்டுறவு வங்கியில் பணி கிடைத்தது. அங்கே தொழிற்சங்கத்தைக் கண்டடைந்து அதில் முக்கிய பொறுப்பேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
மற்றவர்களுக்காகப் போராடும் போது, அவர்களுக்கு அதனால் நலன்கள் விளையும்போது அதில் அடையும் மகிழ்ச்சி அதிகம். ஆனால் சில நேரங்களில் போராட்டத்தின் எதிர்வினைகளையும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய கட்டமும் வருமல்லவா, அப்போது மனம் சஞ்சலப்படும். ஆனால், முந்தைய அனுபவங்களும், வாசிப்பும் சோர்வைப் போக்கி மீண்டும் போராட உரமேற்றும். சியாம் சிங்கா ராய் படம், அந்த வகையிலும் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இப்படத்தை பார்க்க தூண்டும் வகையில் விமர்சனம் அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.
கோபியின் முதல் கட்டுரை, முதல் திரைப் பார்வை, முதல் கலை இலக்கிய எழுத்து என்று உள்ளபடியே நம்ப முடியவில்லை.
திரைக் கதை உள்ளடக்கம், சமூக வரலாற்று விஷயம், நடிப்பு, இயக்கம், தொழில் நுட்ப அம்சங்கள் இவற்றோடு நிற்காமல், தம் சொந்த வாழ்க்கை அனுபவமும் இணைத்தது கிளாசிக்!
அருமை.
தொடர்ந்து எழுத வேண்டும் தோழா…
நல்ல திரை விமர்சனம் .சிறந்த படம் முற்போக்கான இடதுசாரி எழுத்தாளரின் சமூக பங்களிப்பை சித்தரிக்கும் படம்.இளைஞர்களை ஈர்க்கும் வடிவத்திலிருந்து படத்தை துவங்கி சாதிய கொடுமை தேவதாசி முறை ஆகியவற்றை எதிர்த்து போராடும் கருவை வலிமையாக பதிவு செய்துள்ளது.நானி சாய்பல்லவி உட்பட அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
வணக்கம். பிப்ரவரி மாத “படச்சுருள்” இதழில் ஷியாம்சிங்கராய் விமர்சனத்தை யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளார். தயவுசெய்து அதையும் படிக்கவும். தங்கள் விமர்சன பார்வை சிறப்பு. தாகமெடுத்தவன் தண்ணீர் பருக, சாதி பார்ப்பவன் விக்கிக்கொண்டு சாக என்று கதாநாயகன் ஒரு தலித்தைப் பொதுக் கிணற்றினுள் போட்டுவிட்டு சொல்கிற வசனமாகட்டும், படகில் கதாநாயகியை அழைத்து வந்து கவிதை மொழியில் சொல்கிற வசனமாகட்டும் எல்லாம் மிகச்சிறப்பு. வசனம் மதன் கார்க்கி. விகடனில் இயக்குனர் பேட்டியும் Superb. என்ன
கொஞ்சம் Hero worship தூக்கலாக இருக்கும். இருந்துட்டு போகட்டுமே. வணிக சினமாவில் நல்ல படைப்புகள் வருவதை வரவேற்போம். பரவலாகக் கொண்டு செல்வோம்.
Dear Gopi
I was simply astonished about your cinima review. super ! Great; keep writing and take the banner of red flag
T Thamilarasu
Thank you comrades for your valuable comments.
நான் படம் பார்க்கவில்லை, உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. கண்டிப்பாக படம் பார்ப்பேன்….
This is an accurate review, i think you will give tough competition to blue sattai maran
Your review of the film in writing is excellent!