செயல்படத் தயாராகும் பேட் பாங்க்

க.சிவசங்கர்

கடந்த நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வங்கித் துறையில் இருக்கும் வாராக் கடன்களை விரைவாக வசூல் செய்யும் வகையில் கடன் மேலாண்மை வங்கி (Bad Bank) என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த வங்கி
தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (National Asset Reconstruction Company Limited- NARCL)  மற்றும் இந்திய கடன் தீர்வு நிறுவனம் (India Debt Resolution Company Limited-IDRCL) ஆகிய இரட்டைக் கட்டமைப்புடன் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதன்படி தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (NARCL) வங்கிகளில் நிலுவையில் உள்ள குறிப்பிட்ட வாராக்கடன் கணக்குகளை கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்யும் பணியினை மேற்கொள்ளும். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் பொதுத்துறை வங்கிகளின் வசம் இருக்கும். மற்றொரு நிறுவனமான இந்திய கடன் தீர்வு நிறுவனம் (IDRCL) கைப்பற்றப்படும் சொத்துக்களின் கடன் தீர்வுகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த நிறுவனத்தின்
பெரும்பாலான பங்குகள் தனியார் வசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்படி அங்கீகரிப்பதில் சிக்கல்

பொதுவாகவே கடன் மறுதீர்வு நிறுவனங்களை (ARC) சர்பேசி (SARFAESI) சட்டத்தின் படியே ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கிறது. இந்த சட்டத்தின்படி கடன்கள் தொடர்பான சொத்துக்களை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மேற்கொள்வது ஒரே நிறுவனமாக இருக்க வேண்டும். ஆனால் கடன் மேலாண்மை வங்கியின் அமைப்பு அவ்வாறு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படக் கூடிய இரண்டு நிறுவனங்களின் கூட்டாக இருந்ததால் இதனை சட்டப்படி அங்கீகரிப்பதில் ரிசர்வ் வங்கிக்கு சிக்கல் உருவானது.

துணை அமைப்பு

எனவே தற்போது உள்ள கடன் மேலாண்மை வங்கியின் இந்த இரட்டை கட்டமைப்பு மாற்றப்பட்டு சொத்து மறுசீரமைப்பு (NARCL) நிறுவனத்தின் துணை அமைப்பாக கடன் தீர்வு (IDRCL) நிறுவனம் இயங்கும் வகையில் (Principal- Agent) இந்த கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி வங்கிகளிலிருந்து கைப்பற்றப்படும் சொத்துக்களுக்கு மறுசீரமைப்பு நிறுவனம் ஓர் அடிப்படை விலையை நிர்ணயம் செய்யும். அந்த அடிப்படை விலைக்கு கீழாக கடன் தீர்வு நிறுவனத்தால் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. கடன் தீர்வு தொடர்பான நடவடிக்கைகளில் சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் முடிவே இறுதியாக இருக்கும்.

தற்போது அதன் தொடர்ச்சியாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் தினேஷ் காரா வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கடன் மேலாண்மை வங்கி செயல்படத் தேவையான அனைத்து அனுமதிகளும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த வங்கி செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிய வருகிறது. மேலும் அவரது அந்த அறிக்கை கீழ்க்காணும் தகவல்களையும் அளிக்கிறது:

# முதற்கட்டமாக வங்கித்துறையில் நிலுவையில் உள்ள 82,845 கோடி ரூபாய்  மதிப்புடைய 38 பெரிய வாராக்கடன் கணக்குகள் கண்டறியப்பட்டு இந்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட உள்ளது.

# இந்த 38 கணக்குகளும் படிப்படியாக கடன் மேலாண்மை வங்கியின் நிறுவனங்களுக்கு மாற்றப்படும். அவற்றில் முதற்கட்டமாக சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கணக்குகள் கண்டறியப்பட்டு அவை இந்த நிதி ஆண்டிற்குள் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்திடம் (NARCL) சேர்க்கப்படும்.

# இதுவரை இந்நிறுவனத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகிய பொதுத்துறை வங்கிகள் 13.27 சதவீத பங்குகளையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 12 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு துவக்கப்படுவதற்கு முன்னரே இந்த கடன் மேலாண்மை வங்கி இந்திய வங்கித்துறையில் இருக்கும் வராக்கடன் பிரச்சனைகளை பெருமளவில் தீர்க்கப் போகும் மாமருந்து என்று அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது நடப்பில் இருக்கும் பல கடன் மறுதீர்வு நிறுவனங்களைப் (ARC) போன்றே தனிப்பட்ட எந்தவொரு சிறப்பு அதிகாரமும் இல்லாத வழக்கமான ஒரு கடன் தீர்வு அமைப்பாக இது இயங்குவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. எது எப்படியாயினும் ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிக் கட்டாத கார்ப்பரேட்டுகளின் ரூ.2 லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்து அவற்றில் பெரும்பாலான தொகையை அரசு வங்கிகள் தலையில் கட்டும் ஏற்பாடே இந்த பேட் பாங்க்.

5 comments

  1. This Central Government and RBI showed some honesty only in naming the bank as BAD BANK” But it is a GOOD BANK for the disgruntled businessmen and industrialists.
    The people’s money is bundled and swindled . It’s time for the people to awake and arise in their interest and in the interest of the the nation as a whole.

  2. பொதுமக்களிடையே பேட் பேங்க் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  3. இந்த வாரா கடன்களை வசூலிக்க ஏற்பாடாகி இருக்கும் இந்த Badbank என்பது புதிதான எந்த ஒரு கட்டமைப்பும் இல்லை, ஏற்கனவே நம்மிடம் இருக்கும் ARC, SARFESI போன்றவை தான். SARFESI மூலம் வாரா கடன்களை வசூலிக்க முடியவில்லை என்றால் BAD BANK மூலமாகவும் முடியாது. இது தான் எதார்த்தம். மேலும் Corporate loan களுக்கு கடன் கொடுக்கும் பாலிசியை திருத்த வேண்டும். அவர்களின் கடன்களில் எத்தனை சதவீதம் சொத்து மதிப்பை வங்கி வாங்குகிறது என்பது முக்கியம். இதெல்லாம் சரி செய்யாமல் மக்களை ஏமாற்றும் வேலை தான் இந்த BAD BANK. நாங்கள் வாரா கடன்களை வசூலிக்கிறோம் என்று கணக்கு காட்ட தான் இந்த ஏற்பாடு. நாம் விழித்து கொள்ளவேண்டிய நேரமிது.

  4. பல் இல்லா சட்டங்கள் தொழிலதிபர்களுக்கே சாதகம். நாளெல்லாம் நம் செல்வம் கொள்ளை போகவோ….

  5. இதுவும் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு சாதகமாகவே அமைய நேரும் என்பதை நன்றாக புரிய வைக்கிறார். வாழ்த்துக்கள்

Comment here...