ஜேப்பி
28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம்
பல்லாண்டு காலம் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை நீக்கி அதற்குப் பதிலாக நான்கு தொழிலாளர் நெறிமுறைக் குறியீடுகளை (Labour Codes) ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
நடைமுறையில் இருக்கும் ஊழியர் நலச் சட்டங்கள் யாவும் ரத்து
Code of wages, 2019 என்கிற “ஊதிய நெறிமுறைக் குறியீடு 2019”, நடைமுறையில் இருக்கும் 4 ஊதியச் சட்டங்களை செல்லாதாக்குகிறது. The Industrial Relations Code, 2020 என்கிற “தொழில்துறை உறவுகள் நெறிமுறைக் குறியீடு 2020”, நடைமுறையில் இருக்கும் 3 தொழிலாளர் உறவுச் சட்டங்களை செல்லாதாக்குகிறது. The Code on Social Security, 2020 என்கிற “சமூகப் பாதுகாப்பு நெறிமுறைக் குறியீடு 2020”, நடைமுறையில் இருக்கும் 8 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்கிறது. The Occupational Safety, Health and Working Conditions (OSHWC) Code, 2019 என்கிற “தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் (OSHWC) குறியீடு 2019”, நடைமுறையில் இருக்கும் 13 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய இயற்றப்பட்டுள்ளது.
முதலாளிகளுக்கு சாதகமான மாற்றங்கள்
முதலாளிகளின் ஒட்டு மொத்த நன்மைகளை மட்டுமே கணக்கில் கொண்டு, நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்களில் இருந்து குறிப்பிட்ட சில விதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள நான்கு “தொழிலாளர் நெறிமுறைக் குறியீடுகள்” (Labour Codes) தொழிலாளர்களின் ஏராளமான உரிமைகளைப் பறிக்கின்றன; பணிப் பாதுகாப்பையும், சமுகப் பாதுகாப்பையும் முற்றிலும் நீர்த்துப்போகச் செய்கின்றன.
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் முக்கிய விதிகளை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி முடமாக்கி முதலாளிகளுக்குச் சாதகமாக அரசாங்க அதிகாரிகளே விதி விலக்கு அளித்திட வகை செய்யப்பட்டுள்ளது.
விற்பனைப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை ஊதியச் சட்டப் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றி அவர்களின் ஊதிய நிர்ணயிப்பை முதலாளிகளின் விருப்பத்திற்கே விடுகிறது.
குறைந்த பட்ச ஊதியம் நீக்கப்படுகிறது
வாழ்வாதார ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் ஆகியவை தொழிலாளர்கள் வாழ்வில் கணிசமான, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. வறுமை மற்றும் சமத்துவமின்மையைக் குறைக்க, நிவர்த்தி செய்ய குறைந்தபட்ச ஊதியம் என்பது முக்கியமான ஏற்பாடாகும். குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதையும் அதைக் கடுமையாக அமல்படுத்துவதையும் பற்றி ஊதிய நெறிமுறைக் குறியீடு, 2019 கண்டு கொள்ளவில்லை.
குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிட ஒருநாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 2700 கலோரி உணவு தேவைப்படும் என்பது உட்பட பல அடிப்படை கணக்கீடுகள் 15வது முக்கூட்டு மாநாடு காலத்திலிருந்தே (1957) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. ஆனால் இந்த அடிப்படைக் கணக்கீடுகளை மறுதலித்து, நிர்ணயிப்பை வேண்டுமென்றே அரசாங்கங்களின் விருப்பத்திற்கே விடுகிறது ஊதிய நெறிமுறைக் குறியீடு.
முத்தரப்பு குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை வாரிய அமைப்பு பற்றிய குறிப்பு 2019 சட்டத்தில் இருந்தாலும், வாரியத்தின் பரிந்துரை எதுவும் அரசைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கு ஏதுவாக சட்டத்தின் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச ஊதிய அமலாக்க ஆய்வாளர்களை, “ஆய்வாளர் மற்றும் உதவி புரிபவர்” (Inspector cum facilitator) என்று பெயர் மாற்றியதோடு மட்டுமல்லாமல், வழக்கமான கட்டாய அமலாக்கச் சோதனைகளை உயர் மட்ட அரசாங்க அதிகாரிகளின் முன் அனுமதியுடன் மட்டுமே நடத்த வேண்டும் என்று மாற்றி அமலாக்கத்தை முற்றிலும் முடமாக்குகிறது.
பறிபோகும் பணிப் பாதுகாப்பு
வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் உதவும் என்ற போர்வையில் உருவாக்கப்பட்டுள்ள “தொழில்துறை உறவுகள் நெறிமுறைக் குறியீடு 2020″ன் விதிகள், தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பைப் பறித்து, முதலாளிகளின் விருப்பப்படி “அமர்த்தலாம் – நீக்கலாம்” (hire and fire) என்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
தொழிற்சங்கங்கள் அமைப்பதை மிகக் கடினமாகவும், நடைமுறைச் சாத்தியமற்றதாகவும் மாற்ற தொழில்துறை உறவுகள் குறியீட்டில் பல கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்த உரிமை உட்பட பல கூட்டு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் ஆபத்து உள்ளது.
சமுகப் பாதுகாப்பு சவக்குழியில்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை விரிவுபடுத்துகிறோம் என்ற பெயரில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள, தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சமூகப் பாதுகாப்புப் பலன்களைக்கூட நீர்த்துப்போகச் செய்கிறது “சமூகப் பாதுகாப்பு நெறிமுறைக் குறியீடு-2020”. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமுகப் பாதுகாப்பை விரிவாக்க எந்த ஒரு தீர்மானமான திட்டத்தையும், நிதியுதவி ஏற்பாட்டையும் சட்டம் வகுக்கவில்லை. அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி எந்த முதலாளிக்கும் சமுகப் பாதுகாப்பு விதிகளிலிருந்து விலக்கு அளிக்க சட்டம் வகை செய்கிறது.
பணியாளர் வருங்கால வைப்புத்தொகை, சமூக பாதுகாப்பு நிதி மூலம் திரட்டப்பட்டு தற்பொழுது தொழிலாளர் பாதுகாப்பில் இருக்கும் பணத்தை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க சட்டம் வகை செய்கிறது. குறிப்பாக EPFO மற்றும் ESICன் நிதி சட்டப்படி அமைக்கப்பட்ட முத்தரப்பு குழுக்களின் மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. முத்தரப்புக் குழுக்கள் பற்றி இச்சட்டம் போகிற போக்கில் குறிப்பிட்டு இத்தகைய அமைப்பையே மூட எத்தனிக்கிறது.
நலம் பேணா நலச் சட்டம்
தொழிற்சாலைகள் சட்டம், 1948 மற்றும் மற்ற சட்டங்கள் மூலம் நன்கு வரையறுக்கப்பட்ட “தினசரி வேலை நேரம்”, “வாராந்திர வேலை நேரம்”, “வேலைக் காலம்”, “ஓய்வு இடைவெளி நேரம்”, “ஓவர்டைம் வேலை”, போன்றவற்றை இந்நெறிமுறைக் குறியீடு முற்றிலும் நீக்குகிறது.
தொழிலாளர் உடல்நலம், மனநலம் காக்கக் குருதி சிந்திப் போராடிப் பெற்ற உரிமையான “எட்டு மணி நேர வேலை” என்ற அடிப்படை வேலை நிலைமையைக் கூடக் குறிப்பிட மறுக்கிறது இந்தக் குறியீடு. சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் இது பற்றிப் பரிசீலனை செய்யுமாம்.
தொழிலாளர் பணியிடப் பாதுகாப்பு குறித்து கொள்கை முடிவெடுக்கும் உரிமையை உயர்மட்ட தேசிய முத்தரப்பு வாரியத்திடம் இருந்து பறிக்கிறது.
எந்தவொரு தொழிற்சங்கத்தையும் அங்கீகரிக்கும் உரிமையை முதலாளிகளிடமே விடுவதற்கு ஏதுவாக, அந்தந்த மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே அவ்வப்பொழுது முடிவெடுக்கலாம் என்கிறது இந்தப் புதிய குறியீடு.
அந்தந்த துறைகளுக்கு, உதாரணமாக தோட்டம், பீடி-சுருட்டு, சுரங்கம், கட்டுமானம், மோட்டார் போக்குவரத்து, கப்பல்துறை, விற்பனை பிரதிநிதி, பத்திரிக்கையாளர்கள், கான்டிராக்ட் தொழிலாளர்கள் – என அவரவர்களுக்குப் பிரத்யேகமாக இருந்த 13 சட்டங்களை ஒட்டு மொத்தமாக ரத்து செய்து ஒரே நெறிமுறைக் குறியீட்டின் கீழ் கொண்டு வந்து துறைவாரித் தொழிலாளர்களின் தனிப்பட்ட பணிப்பாதுகாப்பு விதிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.
திரும்ப பெறு
முதலாளிகளுக்கு முற்றிலும் சாதகமாக, இந்தியத் தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுவதைச் சாத்தியமாக்கும் இந்த நான்கு தொழிலாளர் விரோத நெறிமுறைக் குறியீடுகளையும் வாபஸ் வாங்கு என்று 28-29 மார்ச் 2022 வேலை நிறுத்தம் கோருகிறது. தொழிலாளர் நலம் காப்போம்! தேசத்தைக் காப்போம்!
சீர்திருத்தம் என்ற பெயரில் இன்றைய ஒன்றிய அரசு தொழிலாளர் நலன்களை நீர்த்து போகச் செய்வதில் திண்ணமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை. மாற்றியமைக்கப்பட்ட தொழிலாளர் தொகுப்புகள் எவ்வாறெல்லாம் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது என்பதையும் ஆசிரியர் நன்கு விளக்கி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த தொழிலாளர் நலசட்டத் திருத்தம் என்பது நம்மை போன்ற உழைக்கும் வர்க்கத்திற்கே பேராபத்து. போராடும் உரிமையை ஒரு காலமும் விட்டு கொடுக்கக் கூடாது. சீர் செய்ய வேண்டியதை( அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை, வாரா கடன்ககள்) சீர் செய்யாமல் சீராக இருப்பவையை ஏன் சீர் திருத்த வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. போராடி பெற்ற உரிமைகளை நீர்த்து போக செய்யும் இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிரானது. வேலை நிறுத்தம் வெல்லட்டும்.
கார்பரேட் அரசாங்கத்தின் அடுத்த தாக்குதல். இது விவசாயி தொழிலாளி இணைப்பை பலப்படுத்தும். ஒன்றுபட்ட போராட்டம் காலத்தின் கட்டாயம்