தேர்தல் பத்திரம் பற்றி அறிவோம்

ஆர். மகேஸ்வரன்

தேர்தல் பத்திரம் என்றால் என்ன, அதனால் யார் பயனடைகிறார்கள் மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

தேர்தல் பத்திரம் என்றால் என்ன?

தேர்தல் பத்திரங்கள் என்பது உறுதிமொழி பத்திரங்களைப் (Promissory Note) போல அதாவது ரூபாய் நோட்டுக்களை போல. இது யார் கையில் இருக்கிறதோ அவர்களே அதன் சொந்தக்காரர்கள். வாங்குபவர் பெயர், பணம் பெறுபவரின் (Payee) பெயர் எதுவும் குறிப்பிடப்படாது. வட்டி எதுவும் கிடையாது. இதன் ஆயுட்காலம் 15 நாட்கள்.

தேர்தல் பத்திரங்களை வெளியிடுபவர்கள் யார்? எப்பொழுது வெளியிடப்படும்?

தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது பாரத ஸ்டேட் வங்கி.  தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் 29 குறிப்பிட்ட கிளைகளில் (designated branches), ₹1,000/- 10,000/- 1,00,000/- 10,00,000/- 1,00,00,000/- என்று வாங்கிக் கொள்ளலாம். ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் பத்து நாட்களுக்கு தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். பொதுத் தேர்தல் நடைபெறும் வருடத்தில் கூடுதலாக 30 நாட்கள் காலம் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படும்.

தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் யார்?

இந்திய நாட்டின் எந்தவொரு குடிமகனும் அல்லது வணிக நிறுவனமும் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்க தகுதியுள்ளவர்கள். வாடிக்கையாளர்களின் விவரங்களை பூர்த்தி செய்பவர்கள் (KYC) தங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பணம் அனுப்புபவர்கள் மட்டுமே இந்தப் பத்திரங்களை வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தல் பத்திரங்களின் தேவை என்ன?

அரசியல் கட்சிகள் நன்கொடையைப் பணமாகப் பெற்று வருகின்றன. இந்த நன்கொடைகளுக்கு வரி விதிக்கப் படுவதில்லை. ஆனால், ₹ 2000க்கு மேல் நன்கொடை பெறும் பொழுது, யாரிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது என்று அரசியல் கட்சிகள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் நன்கொடை வழங்குவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. அதாவது, தங்களின் கடந்த மூன்று வருட லாபத்தில் 7.5% மட்டுமே அதிகபட்ச நன்கொடையாக வழங்க முடியும். மேலும், யாருக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டது என்பதை அந்த நிறுவனம் தெரிவிக்க வேண்டும். வெளி நாட்டில் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற முடியாது.

இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே இருக்கின்ற அரசியல் நன்கொடை முறை வெளிப்படைத் தன்மை அற்றது என்று கூறி, 2017ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு “தேர்தல் பத்திரங்கள்” திட்டத்தை “பண மசோதாவாக” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை கோடிக்கணக்கில் இருந்தாலும், கொடுத்தவர் யார் எனத் தெரிவிக்க வேண்டாம்.

இதனுடன் கூட அரசியல் நன்கொடை வழங்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை இந்தத் திட்டத்தின் மூலம் அகற்றியது. நன்கொடை வழங்கும் நிறுவனங்கள் மூன்று வருடம் லாபத்துடன் இயங்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதிக பட்ச நன்கொடை என்பதும் நீக்கப்பட்டுவிட்டது.  யாருக்கு நன்கொடை வழங்கப்பட்டது என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டாம். எவ்வளவு வழங்கப்பட்டது என்று கூறினால் போதும். மேலும் இத்திட்டத்தின் மூலம் நன்கொடை வழங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29 A, பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும்.

தேர்தல் பத்திரங்களின் காலக்கெடு (ஆயுட்காலம்) வெளியிடப்படும் நாளில் இருந்து பதினைந்து நாட்கள் மட்டுமே.  அந்த காலத்திற்குள் இந்த பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

இந்தத் தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சிகளின் அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் தான் வரவு வைக்க முடியும்.

இந்தத் திட்டம் பற்றி தேர்தல் ஆணையத்தின் நிலை பாடு என்ன?

உச்ச நீதிமன்ற வழக்கின் பொழுது, இந்த தேர்தல் பத்திரத் திட்டம் “ஒரு பிற்போக்கு நடவடிக்கை” என்று தேர்தல் ஆணையம் கூறியது.   “இந்தத் திட்டம் அநாமதேய நன்கொடைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குகிறது. ஓட்டுரிமை என்பது வேட்பாளர் பற்றி அறிவது மட்டுமல்ல, அவருக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பதை அறிவதையும் உள்ளடக்கியது. வெளிநாட்டு நிறுவனங்கள் ஷெல் கம்பெனிகள் மூலமாக வரம்புகள் எதுவும் இல்லாமல் இந்தியத் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தும் அபாயம் இருக்கிறது” என்று கவலை தெரிவித்தது. அரசு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29(b) பிரிவு மீறப்படுகிறதா என்பதைக் கண்டறிய முடியாது என்றும் கூறியது.

தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன்மை அற்றவையா?

பொது மக்களைப் பொறுத்தவரை தேர்தல் பத்திரங்கள் முற்றிலும் வெளிப்படைத் தன்மை அற்றவை. யார் நன்கொடை வழங்கினார், யாருக்கு எவ்வளவு வழங்கினார் என்பதை மக்கள் அறிய முடியாது. இந்தத் தகவல்களை பாரத ஸ்டேட் வங்கி, ஒன்றிய அரசு, அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியே அறிய முடியும். இத் தகவல்களை வைத்து அதிகாரத்தில் இருக்கும் கட்சி பயமுறுத்தல் நடவடிக்கைகளில் இறங்க முடியும். ஆக, இருக்கின்ற முறையை சீர்திருத்துவதாகச் சொல்லி, அநாமதேய நன்கொடையை முறைப்படுத்தி இருக்கிறது தேர்தல் பத்திரத் திட்டம்.

தேர்தல் பத்திரங்களால் யாருக்குப் பயன்?

அநாமதேய நன்கொடைக்கு வழங்கப்பட்ட சட்ட அங்கீகாரத்தால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. நன்கொடையாளரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப் படுவதால் அது கருப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும். இத்திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுக்க உதவுவதற்கே உருவாக்கப்பட்டது எனலாம். ஆளும் கட்சி  அதிகமான நன்கொடைகள் பெறுவதற்கான  திட்டம்  இது என்ற எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு  உண்மை என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரம் நிரூபிக்கிறது.


2019-20 ம் நிதியாண்டில்  தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற மொத்த நன்கொடை ₹3,441/- கோடி. அதில் பாஜக பெற்ற நன்கொடை சுமார் ₹2,500/- கோடி (75%),

இத் திட்டத்தின் விளைவு என்ன?

ஆம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முறைகேடான வழியில் ஈட்டிய பணம் ஆளும் கட்சிக்கு செல்வதற்கு துணை புரியும் இந்த திட்டம், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையை தகர்க்கக்கூடிய நடவடிக்கையே என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களே, இத்திட்டம் வரம்பற்ற நன்கொடையை பெரு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கான திட்டம் என்றும், பண மோசடி திட்டம் என்றும் விமர்சித்ததை நினைவில் கொள்வோம்! கார்ப்பரேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அளிக்கும் ரகசிய நன்கொடைகளைப் பெறும் ஆளும் கட்சி, இந்தியாவை தற்பொழுது கூறு போட்டு விற்பதில் வியப்பில்லைதானே!

9 comments

 1. முழுமையாக புாிய வைத்தமைக்கு நன்றி!
  டாட்டா அனுப்பி வைத்த 6 கோடியை CPM திருப்பி அனுப்பியதை உங்கள் வாசகா்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்!

 2. தேர்தல் பத்திரங்கள் பற்றி பலரும் பேசி இருந்தாலும் இதைப்பற்றிய ஒரு புரிதலை எளிய நடையில் தந்தமைக்கு இதன் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இம்மாதிரியான பல முக்கிய விஷயங்களில் இவ்விதழ் தங்களது பதிவுகளை இட வேண்டும்.

 3. தேர்தல் பத்திரம் குறித்த சரியான புரிதல் கிடைத்தது… ஆட்சியில் இருப்பவர்களுக்கு எப்படி பயன் படுகிறது என்பதும் புரிந்தது… பாவம் மக்கள்… இவர்களை இன்னும் நேர்மையானவர்கள் என்று நம்பி கொண்டுள்ளர்கள்

 4. லஞ்சத்திற்கும் ரசீது கொடுக்கும் திட்டம்.
  ஒரு கட்சிக்கு ஏன் நன்கொடை கொடுக்கிறார்கள் என்பதற்கான விடைதான் தற்போது நாட்டிலே நடைபெறும் பெருமுதலாளிகளின் சொத்து குவிப்பு

 5. தேவையான அருமையான விளக்கம். ஆளும் கட்சி மற்றும் corporate company கூட்டணி எவ்வாறு quid pro quo ஆக செயல்படுகின்றன என்பதை நன்கு புரிய வைத்துள்ளார்.

 6. சரியான புரிதல் தரக்கூடிய பதிவு.
  திட்டம் போட்டு திருடரக் கூட்டம் மட்டும் அல்ல, அதை சட்டமாக்கி சங்கி வேலை பார்ப்பது தான், தற்போதைய ஒன்றிய அரசு என்பதற்கு மற்றுமொரு பிரதான சாட்சி. மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களிடம், வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

 7. தேர்தல் பத்திரம் பற்றிய நல்ல அறிமுக கட்டுரை.ஆர்.மகேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள், லஞ்சம் ஊழல்பேர்வழிகள், கறுப்பு பண முதலைகள் ஆகியோரிடமிருந்து ஆளும் கட்சிக்கு நன்கொடை என்ற பெயரில் கோடி கோடியாக சேர்த்துக்கொள்ள மோடி அரசு உருவாக்கிய மோசடி திட்டம் இது.

 8. தேர்தல் பத்திரங்கள் குறித்து அடிக்கடி ஊடகங்களின் வழியே கேள்விப்பட்டிருந்தாலும் அது குறித்து முழுமையான விளக்கங்களைப் பல்வேறு ஆதாரங்களோடு விளங்கிக்கொள்ள உதவியது இந்த கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் அதிகமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். கட்டுரையாளர் தோழர் மகேஸ்வரனுக்கு பாராட்டுகள்…

 9. தேர்தல் நிதி பத்திரச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் !

Comment here...