சண்டிகர் யூனியன் பிரதேச மின் துறையை தனியார் மயமாக்காதே

ஆ. ஸ்ரீனிவாசன்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் வரிசையில் தற்போது சண்டிகர் யூனியன் பிரதேச மின் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் ”நகர் மற்றும் புறநகர் மக்களுக்கு மலிவான விலையில், திறமையான வகையில் மின்சாரம் வழங்கி வருகிறது”. இது தொடர்ந்து லாபம் ஈட்டும் நிறுவனமாகும்.

ரூ. 25000 கோடி சொத்துள்ள நிறுவனம் ரூ.871 கோடிக்கு விற்பனை

நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறி, நகர மின் துறை ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டு அதன் பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு கைமாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட தொழில்துறை மற்றும் சேவை நிறுவனமான ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா (RPSG) குழு,  ”ஆண்டுக்கு ரூ. 1,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் இந்நிறுவனத்தை” கையகப்படுத்த, ‘அதிக ஏலத்தில்’ ரூ. 871 கோடிக்கு  கேட்டதாக கூறப்படுகிறது. ரூ.20,000-25,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்ட. இவ்வளவு பெரிய பொதுச் சொத்தை, RPSG குழுமத்திற்கு சொந்தமான கல்கத்தா எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான Eminent Electricity Distribution (EED) என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், நிலம் மற்றும் நிலையான சொத்துகளின் மதிப்பீடு ஆண்டுக்கு 1 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது

தனியார்மயமாக்கல் முடிவு 2020 இல் எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் – சண்டிகர் யூடி பவர்மென் யூனியன் பதாகையின் கீழ் மின்சார ஊழியர்கள் நடத்திய உறுதிமிக்க போராட்டங்களால் இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2021 செப்டம்பரில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முக்கியமான அரசுத் துறையை தனியாருக்கு விற்க இறுதி முடிவை எடுத்தபோது, ​​உடனடியாக சண்டிகர் மின்சார ஊழியர்கள் அக்டோபர் 2021 முதல் பல வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டனர். பின்னர் மீண்டும் பிப்ரவரி 1, 2022 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து பேரணி நடத்தினர். மின்சாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் (NCCOEEE) ஒரு பரந்த அடிப்படையிலான தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மீண்டும், பிப்ரவரி 15, 2022 அன்று முழு சண்டிகர் சிவில் சமூகம் – குடியுரிமை சங்கங்கள், கிராமப்புற விவசாயிகள் உட்பட பொது மக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பெரிய அளவில் அணிதிரண்டனர் .

ஜம்மு காஷ்மீர் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களில் பொறுப்பற்ற முறையில் மின்சாரத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டபோது, ​​அந்தந்த யூனியன் பிரதேசங்களின் மக்கள் ஆதரவுடன் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் ஒருங்கிணைந்த கூட்டு இயக்கத்தால் அது தோற்கடிக்கப்பட்டது. இந்த போராட்டங்களில் இருந்து எந்த பாடமும் கற்காமல், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் அதே வழியில் எதேச்சாதிகார ஆட்சி இறங்கியுள்ளது.

72 மணி நேர தொடர் வேலை நிறுத்தம்

தற்போது சண்டிகர் யூடி பவர்மேன் யூனியன் தனியார்மயமாக்கலை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 2022 பிப்ரவரி 22 முதல் 24 வரை 72 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

”யூனியன் பிரதேச அரசு அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டத்தை பிரயோகித்து போராட்டத்தை ஒடுக்கப் பார்த்தது. அதையெல்லாம் மீறி வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியது. சண்டிகர் நகரமே இருளில் மூழ்கியது. ஆனாலும் போராட்டம் நடத்தும் ஊழியர்களுக்கு ஆதரவாக பொது மக்கள் களமிறங்கினர். முதல் நாள் வேலை நிறுத்த முடிவில் நிர்வாகம் இறங்கி வந்து, “நீதி மன்ற வழக்கு முடியும் வரை தனியார்மயமாக்கலை நிறுத்தி வைப்பதாக” வாக்குறுதி அளித்தது. அதை ஒட்டி வேலை நிறுத்தப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.  இது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்” என்று சிஐடியு வின் அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான் தெரிவித்தார்.

 (ஆதாரம் :சிஐடியு பத்திரிக்கை செய்தி)

5 comments

  1. This government is in haste in Privatising all PSUs. Yet, the workers have success stories of pushing back such policies of the government. Chandigarh UT Electricity is to be protected and should remain in public domain. The author of this article is appreciated for having brought the nuances involved in this regard.

  2. கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.தோழருக்கு பாராட்டுக்கள்.1991 ல் அமுல்படுத்தப்படும் நவீன தாராளமயக் கொள்கையின் முக்கியமான இலக்காக மின்துறை தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. ஒடிசா மகாராஷ்டிர மாநிலங்களில் சில பகுதிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன.இதன் பாதிப்புகளை பேரிடர் காலங்களில் மக்கள் நேரடியாக உணர்ந்தார்கள்.சென்ற வருடம் உ பி அரசு மின்துறையை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து வலிமையானப் போராட்டத்தை மின் ஊழியர்கள் நடத்தி யோகி அரசை பின்வாங்க வைத்தனர்.மின்சார சட்டம் 2020 இன்றும் ஆபத்தான ஆயுதமாக அரசின் கையில் உள்ளது.மார்ச் 28 29 வேலைநிறுத்தக் கோரிக்கையில் மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

  3. தனியார் மயமாக்குதல் ஒன்றே இன்றய பிரச்னைகளுக்கு தீர்வு என்ற ஒன்றிய அரசின் தவறான கொள்கை வருங்கால மக்களின் வாழ்வை இருளில் தள்ளிவிடும்! தொடர்ந்து நடைபெறும் போராட்டங்கள் சதியை முறியடிக்கட்டும்

Comment here...