சி.பி.கிருஷ்ணன்
வங்கிகளில் கணினி முன்பு அமர்ந்து பணி செய்யும் வங்கி எழுத்தர்களைத்தான் பொதுவாக எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால், எழுத்தர்கள் மற்றும் காசாளர்கள் செய்யும் அத்தனை வேலையையும், வங்கிக் கிளையிலேயே அமராமல், வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் சுற்றியலைந்து பணி செய்யும் வங்கி ஊழியர்களைப் பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாது. வணிக முகவர்கள் (Business Correpondents) என்ற பெயரில் அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகள் இவர்களை பணியமர்த்துகின்றன. இவர்கள் சொற்ப சம்பளத்தில் கிராமப்புறங்களிலும், சிறு நகர்ப்புறங்களிலும் நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கப்படுகிறார்கள். வங்கி விடுமுறை நாட்களிலும் கூட இவர்கள் வேலை செய்ய நேரிடுகிறது.
தமிழ்நாடு கிராம வங்கியில் வணிக முகவர்கள்
தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள வணிக முகவர்களின் அன்றாட பணியைப் பற்றித் தெரிந்து கொண்டால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி இணைக்கப்பட்டு 2019 ஏப்ரல் 1 முதல் தமிழ்நாடு கிராம வங்கி உருவானது. இவ்விரண்டு வங்கிகளின் வணிக முகவர்களின் பணி நிலைமையில் சற்று வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் இன்றளவில் தமிழ்நாடு கிராம வங்கியில் பணி புரியும் சுமார் 700 வணிக முகவர்களின் நிலையும் ஒரே மாதிரி மோசமாகத்தான் உள்ளது. இவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.
குறைந்த வருமானம்
இவர்கள் மாதம் குறைந்தது 150 பரிவர்த்தனைகள் செய்தால் மட்டுமே இவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு மாதம் 150இல் ஒன்று குறைந்தாலும், அதாவது 149 பரிவர்த்தனைகள் செய்தால் கூட, அந்த மாதம் அவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்காது. வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கணக்கிலிருந்து பணம் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து கணக்கில் பணம் வாங்கவோ செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் முகவர்களுக்கு ரு.3/- கமிஷனாக கொடுக்கப்படும். ஒவ்வொரு முதியோர் பென்ஷன் பட்டுவாடாவுக்கும் ரூ.10/- கமிஷனாக வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்ட சம்பளப் பட்டுவாடா, புதிய கணக்கு தொடங்குவது, வராக் கடனை வசூல் செய்வது, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா இப்படி எல்லா வேலைகளையும் இவர்கள் செய்ய வேண்டும். இப்படி மாதம் முழுவதும் வேலை செய்தாலும் ஊக்கத்தொகையையும் சேர்த்து பெரும்பாலான வணிக முகவர்களின் வருமானம் மாதம் ரூ.3000/- முதல் ரூ.5000/- வரைதான். சிலர் ரூ.7000/- முதல் ரூ. 8000/- வரை வருமானம் ஈட்டுகின்றனர்.
10 வது வரை படித்தவர்கள் இதற்கான தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே இந்தப் பணிக்கு வர முடியும். அத்துடன் அவர்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். பணியில் சேரும் போது 50000 ரூபாய் டெபாசிட் பணம் செலுத்த வேண்டும். அவர்கள் பெயரில் அதற்கு கணக்கு துவங்கப்பட்டு அந்தப் பணத்திலிருந்துதான் அவர்களுக்கு அன்றாடம் முன் பணம் கொடுப்பார்கள். நாளிறுதியில் கையிலிருக்கும் பணத்தை அவர்கள் வங்கியில் செலுத்த வேண்டும். வணிக முகவர்களிடம் வங்கி ஓர் ஒப்பந்தம் போடும். மூன்றாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும். ஆனால் அந்த ஒப்பந்த நகல் எதுவும் முகவர்களிடம் கொடுக்கப்படாது. வங்கி தன் கைவசமே வைத்துக் கொள்ளும்.
கடும் பணிச் சுமை
ஒரு வணிக முகவர் சராசரியாக இரண்டு பஞ்சாயத்தில் 6 ஊர்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 60 கிலோமீட்டர் வரை இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும். வாகனத்தையும் அவர்கள் தான் சொந்த செலவிலோ, கடனாகவோ வாங்க வேண்டும். அதற்கான பெட்ரோல் செலவையும் நிர்வாகம் கொடுக்காது. வணிக முகவர்களேதான் செலவு செய்ய வேண்டும். அவர்கள் அன்றாடம் கையாளும் பணத்திற்கு காப்பீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது நடைமுறையில் கிடைப்பதில்லை. இரண்டு வருடத்திற்கு முன்னால் ஒரு பெண் முகவரை சில கயவர்கள் அடித்துப் போட்டு அவருடைய இரு சக்கர வாகனம், அவர் போட்டிருந்த நகை, வங்கிப் பணம் ரூ.27000/- ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள். காவல் துறையில் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை போடப்பட்டும் கூட இன்று வரை காப்பீட்டுப் பணம் கிடைக்கவில்லை.
இவை போதாதென்று வேறு பிரச்சினைகளும் உண்டு. கிராமங்களில் சிக்னல் கிடைக்காததால் ஸ்மார்ட் மெஷின் வேலை செய்யாது. இதனால், பட்டுவாடா தாமதமாகும். அது மட்டுமல்லாமல், வங்கி சர்வர், ஆதார் சர்வர், ஸ்மார்ட் மெஷின் சர்வர் இதில் எது பிரச்சனையானாலும் பணப் பட்டுவாடா பாதிக்கும். இப்படிச் சொற்ப வருமானத்திற்கு, மோசமான பணிச் சூழலில் கடுமையாக சுரண்டப்படும் வங்கி முகவர்களில் பலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
மூல காரணம் ரிசர்வ் வங்கி
வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு விடுவதற்கு முக்கியக் காரணம், 2006-ல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட கொள்கை அறிவிப்பில், “பொதுத் துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் கேந்திரமான நிர்வாகப் பணிகள் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் வெளியாட்களுக்கு விட்டுவிடலாம்” என்று பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ளதுதான்.
கூடவே, இவ்வாறு ‘அவுட்சோர்ஸ்’ செய்வதால் நிறுவனத்தின் பெயர் கெடுதல் உள்ளிட்ட பத்து வகையான ஆபத்துகள் உள்ளன. எனவே, பார்த்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறது ரிசர்வ் வங்கி.
கூடுதலான வங்கிக் கிளைகள் திறந்து, நிரந்தரமான ஊழியர்களை பணியமர்த்துவதால் ஏற்படும் செலவைக் குறைக்கவே இந்த ஏற்பாட்டை செய்கின்றன வங்கி நிர்வாகங்கள். நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை பயன்படுத்தி முகவர்களை கடுமையாக சுரண்டுகிறார்கள்.
கார்ப்பரேட் கொள்ளைக்கு வழி
இருக்கும் நிலைக்கும் ஆபத்து வந்து விட்டது. சமீபமாக தமிழ்நாடு கிராம வங்கி எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், முகவர்களை ராஜினாமா செய்து, விசாகப்பட்டினத்தை தலைமையகமாகக் கொண்ட ஒரு கார்ப்பரேட் ஏஜெண்டிடம் இவர்களை உடனடியாகச் சேரச் சொல்லி நிர்பந்திக்கிறது. இது அப்பட்டமான ஒப்பந்த மீறலாகும். இவ்வாறு கார்ப்பரேட்டுகளிடம் சேர்ந்தால் வருமானமும், பணி நிலையும் கடுமையாக பாதிக்கப்படும் என்பது நடைமுறை அனுபவமாக உள்ளது. இவர்களின் ஊக்கத்தொகைக்கான குறைந்தபட்ச பரிவர்த்தனை 150லிருந்து 250 ஆக உயர்த்தப்படும் என்றும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கான கமிஷன் ரூ.3 லிருந்து ரூ.1.20 ஆக குறைக்கப்படும் என்றும், கிடைக்கும் கமிஷனில் 20 % கார்ப்பரேட்டுகள் எடுத்துக் கொள்வார்கள் என்றும் முகவர்கள் புகார் கூறுகிறார்கள்.
எனவே கார்ப்பரேட் நிறுவனத்திடம் முகவர்களை ஒப்படைக்கும் இந்த ஏற்பாட்டை கைவிட வேண்டும் என்று கோரி முகவர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டார்கள். ஆனால் நிர்வாகம் இவர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி மடுக்காததால், 500க்கும் மேற்பட்ட முகவர்கள் ஒன்று திரண்டு சேலத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் தலைமையகம் முன்பாக பிப்ரவரி 23 ஆம் தேதி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் இந்தப் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க முன்வர வேண்டும்.
வங்கி முகவர்கள் பணி நிலைமை ஊதியம் அவர்கள் எவ்வாறு அப்பட்டமாக சுரண்டப்படுகிறார்கள் என்பதை தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத வங்கி முகவர்களின் பணி நிலைமைகள் குறித்து சிறப்பாக எடுத்துச் சொல்லிய கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்…
மேலே சொல்லப்பட்டவற்றையும் தாண்டி முகவர்களை loan recovery தொடர்பான வேலைகளுக்கு பயன்படுத்துவது, கிளைகளில் கடைநிலை ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் போது அவர்கள் பணியையும் சேர்த்து பார்க்கச் சொல்வது என்று எடுப்பார் கைப்பிள்ளைகளாகவே நடத்தப்படுகின்றனர்…
சங்கம் அமைக்கும் வாய்ப்பு, பணி நிரந்தரம் போன்றவை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் உரிமைகள் பாதுக்கப்படும்…
அதிகம் கவனிக்கப்படாத வங்கி முகவர்களின் பணி நிலைமைகள் குறித்து சிறப்பாக எடுத்துச் சொல்லிய கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்…
மேலே சொல்லப்பட்டவற்றையும் தாண்டி முகவர்களை loan recovery தொடர்பான வேலைகளுக்கு பயன்படுத்துவது, கிளைகளில் கடைநிலை ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் போது அவர்கள் பணியையும் சேர்த்து பார்க்கச் சொல்வது என்று எடுப்பார் கைப்பிள்ளைகளாகவே நடத்தப்படுகின்றனர்…
சங்கம் அமைக்கும் வாய்ப்பு, பணி நிரந்தரம் போன்றவை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்களின் உரிமைகள் பாதுக்கப்படும்…
This article clearly exposes the exploitation of labour in the banking sector. If a government bank chooses labour exploitation and cheap labour, what is the message they are signalling to private players. This article while exposing the difficulties of BCs makes a demand absorption of BCs in banks as permanent employees. This is the need of the hour
இந்த நிலை தமிழ்நாடு கிராம வங்கிக்கு மட்டும் இல்லை. இதில் கனரா வங்கி வணிக தொடர்பாளர்களின் நிலை மிக, மிக மிக மோசமாக உள்ளது. அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதே இல்லை. ஒவ்வொருவருக்கும் மாதம் 200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும். மீதி தொகை சுத்தமாக சுரண்டிகொழுக்கிறது “விஷன் இந்தியா” என்னும் கார்ப்பரேட் கம்பெனி. இதற்கு “கனரா வங்கி” நிர்வாகமும் உடந்தையாக செயல்படுகிறது.
It is not only the RBI who is responsible for their precarious service condition. Unions are equal to responsbile. So far they have not taken their issues to the extent it should have been. Better late than never. Atleast now UFBU should take outsouricing issues more seriously.
TNGB வங்கியில் எல்லாவிதமான வங்கிப் பணிகளையும் செய்கின்ற வணிக முகவர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் வங்கி நிர்வாகத்தின் மனிதநேயமற்ற கடும் சுரண்டலையும் சிறந்த முறையில் வெளிக்கொணரும் கட்டுரை.வாழ்த்துக்கள் தோழர் CPK
வங்கி முகவர்கள், பணி, ஊதியம், என்னைக்கு சம்பளம்?மற்றும் பணி நிலைமைகள் மிகுந்த துயரமானவை. நிச்சயம் தொழிற்சங்கங்கள் பக்க பலமாய் நின்று போராட வேண்டும். TNGBWU சங்க தலைமை வழி காட்ட வேண்டும்….
முறையான சுற்றறிக்கை வெளியிடாமல் வாய்மொழி உத்தரவாக வே நிர்வாகத்தை நடத்தி வரும் தமிழ்நாடு கிராம வங்கி வணிக முகவர்கள் விஷயத்திலும் இதையே கடைப்பிடித்து இருக்கின்றது .
அவர்கள் விருப்பம் இல்லாமல் அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்பது அராஜகத்தின் உச்சம்.
கோடி கைகள் சேர்ந்து போராடனும்.சுரண்டல் அதிகமாகி கொண்டே போகுது. கிள்ளு கீரையாக நினைக்கும் அரசுக்கும் நிர்வாகத்துக்கும் முஷ்டி உயர்த்தி நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.கவலையோடு பதிவு செய்த தோழர் CPK அவர்களுக்கு பாராட்டுக்கள்..ரவீந்திரன்
NATURE OF JOB IS PERMANENT, BUT EMPLOYEE PERFORMING THE JOB IS TEMPORARY. THIS TRICK OF NEO-LIBERAL REGIME SHOULD BE DEFEATED IN ALL INDUSTRIES. LET US SHOW THE WAY. ALL THE BEST.
Not only TNGB, CANARA BANK
Central Bank of India also Same thing
Canara Bank same problem