பங்குச்சந்தையைக் கட்டுப்படுத்திய யோகி 

க.சிவசங்கர்

சுமார் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்டு இயங்கிவரும் உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தை நிறுவனங்களில் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின்(National Stock Exchange – NSE) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிய ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் ரவி நரேன் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வகையில் தேசிய புலனாய்வுத் துறையால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடப்பதற்கு உடந்தையாக இருந்தார் என்று சித்ரா ராமகிருஷ்ணா மீது பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தின் (Securities and Exchange Board of India-SEBI-செபி) மூலம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யார் இந்த ஆனந்த் சுப்ரமணியன்?

சித்ரா ராமகிருஷ்ணா 2013ஆம் வருடம் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டிலேயே அவர் ஆனந்த் சுப்பிரமணியன் என்ற நபரை தனது ஆலோசகராக பணியமர்த்திக் கொள்கிறார். பங்குச் சந்தை குறித்து எந்த முன் அனுபவமும் இல்லாத, தனது முந்தைய நிறுவனத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வந்த ஆனந்த் சுப்ரமணியன், நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை நிறுவனத்தின் மிக உயரிய பொறுப்பில் ஆண்டுக்கு சுமார் 1.6 கோடி ரூபாய் சம்பளத்துடன் பணியில் அமர்த்தப்படுகிறார். (ஏறக்குறைய பத்து மடங்கு உயர்வு..!!) மேலும் ஒரு குறுகிய காலத்திலேயே அவரது சம்பளம் ஆண்டிற்கு 4 கோடி ரூபாய் என்ற அளவிற்கு மின்னல் வேகத்தில் உயர்கிறது. இவருக்கு ஆகாய விமானத்தில் முதல் வகுப்பில் உலகம் முழுக்க சுற்றி வர சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் தவறான வகையில் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுகிறது என்று அனாமதேய புகார் ஒன்று வருகிறது.

அந்தப் புகாரின் அடிப்படையில் செபி ஒரு விசாரணைக் கமிட்டியை நியமித்து தேசிய பங்குச் சந்தை நிறுவனத்திற்கு அனுப்புகிறது. அந்த கமிட்டியின் அறிக்கைப் படி பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்த தகவல்கள் சில புரோக்கர்களுக்கு மட்டும் விரைவாக கிடைக்கும் வகையில் அவர்களின் சர்வர்கள் தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தின் மெயின் சர்வருக்கு அருகிலேயே அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட புரோக்கர்களுக்கு மட்டும் பங்குச்சந்தைப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் மற்றவர்களை விட சில வினாடிகள் முன்னதாகவே கிடைத்து விடுவதாகவும் தெரியவருகிறது.

பொதுவாகவே பங்குச்சந்தைப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு விநாடி நேரமும் மிக முக்கியமானது. ஒருசில வினாடிகளில் ஒருவர் பெரும் பணக்காரராகவும், மற்றொருவர் பரம ஏழையாகவும் மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் இந்த சில வினாடிகள் முன்னிலையின் மூலம் குறிப்பிட்ட அந்த சில புரோக்கர்கள்  மிகப்பெரிய அளவிற்கு லாபங்களை குவித்திருப்பர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலும் இந்த விசாரணையின்போது இமயமலையில் வசிக்கும் “பரமஹம்ச யோகி” ஒருவரின் ஆலோசனைப் படியே ஆனந்த் சுப்பிரமணியனைத் தலைமை ஆலோசகராக நியமித்ததாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். அந்த யோகியை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை எனவும்,  “ரிக்யஜூர்சாம (Rikyajursama)” என்ற ஈமெயில் முகவரியின் வழியாக மட்டுமே அவர் தன்னோடு தொடர்பு கொள்வார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். விசாரணை வளையம் தீவிரமானதைத் தொடர்ந்து 2016ம் வருடம் இறுதியில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் விட்டார். 

இவை அனைத்திற்கும் சேர்த்து சித்ரா இராமகிருஷ்ணாவுக்கு வர வேண்டிய சுமார் 4.37 கோடி ரூபாய் மதிப்புடைய விடுப்பு பணமாக்கல் மற்றும் நீட்டிக்கப்பட்ட போனஸ் ஆகியவற்றை நிறுத்தச் சொல்லி தனது உச்சபட்ச தண்டனையை வழங்கி இருக்கிறது செபி…!!!

இவ்வாறு ஒரு திரைப்படத்தை மிஞ்சும் திருப்பங்களைக் கொண்ட இந்த நிகழ்வில் நம்முன் உள்ள கேள்வி பல:

# பல லட்சம் கோடி ரூபாய் மூலதனம் கொண்ட உலகின் முன்னணி பங்குச்சந்தையின் தலைமைப் பதவி முகம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி நடத்தப்படுகிறது எனில் அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை என்னவாக இருக்கும்?

# பங்குச்சந்தை குறித்து எந்த அனுபவமும் இல்லாத ஒருவர் தலைமைப் பொறுப்பிற்கு வந்தது குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவர் கூட ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?

# 2015 ஆம் ஆண்டிலேயே  இந்த முறைகேடுகள் குறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார் வந்தும், 2016ஆம் ஆண்டு புகாருக்கு உள்ளான சித்ரா ராமகிருஷ்ணா பதவியில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறியதை அனுமதித்தது ஏன்?

 # 2015 ஆம் ஆண்டில் வந்த புகாருக்கு ஏழு ஆண்டுகள் கழித்து இப்போது வருமான வரித்துறை ஆய்வு செய்வதால் என்ன பயன்?

# நாட்டின் பொருளாதார இறையாண்மையின் மிக முக்கிய அங்கமான தேசிய பங்குச்சந்தையின் தகவல்கள் முறைகேடான வகையில் சிலருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது எனில் இந்த தகவல்கள் அந்நிய நாட்டு உளவு நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டு இருக்காது என்று என்ன உத்தரவாதம்?

# முக்கியத்துவம் வாய்ந்த இந்த முறைகேடு குறித்து இத்தனை ஆண்டுகளாக செபியும், வருமான வரித்துறையும் அலட்சியமாக இருந்தன என்றால் அவற்றின் நம்பகத்தன்மைகள் என்னவாக இருக்கும்?

# இதே செபி மற்றும் NSE யின் கீழ் தான் நாளை நாட்டின் அக்சயப்பாத்திரமாக விளங்கும் எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் நிர்வகிக்கப்பட போகிறது எனில் அவற்றின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

# இத்தனைக்கும் பிறகும் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது எதைக் காட்டுகிறது? அவர்களுக்குப் பின்னால் இருக்கும் அந்த சர்வ அதிகாரம் பொருந்திய பரமஹம்சர் யார்?

இவ்வாறு மக்கள் மத்தியில் எழுந்துள்ள பல கேள்விகளுக்கும் பதில் தந்து தங்கள் நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு செபிக்கும், தேசிய பங்குச்சந்தை நிறுவனத்திற்கும், தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கும் உள்ளது.

 

6 comments

  1. Another classic example of crony capitalism. The author has brought the article in a very simple and easy to understand manner. Good job.

  2. தேசிய பங்குச்சந்தையின் மீது முதளீட்டாளர்களும் ,சாமானியர்களும் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் வைகையில் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் வருத்தமளிக்கிறது.இத்தகைய முறைகேடுகள் கலையப்பட வேண்டும் .ஆசிரியர் அனைத்து விசயங்களையும் அழகாகவும்,திறம்படவும் சொல்லியிருக்கிறார்

  3. A thoughtful insight on NSE fiasco. The author is appreciated. The reasonable questions raised by the author needs answers. The general public also expects the same

  4. One of the main issue in this the co-location. Servers of some of the brokers were kept near the main server of NSE. Whose servers. How they benefit ? How many corporates invovled?!
    Nothing will come out. Everything will be hided under the carpet.

  5. புரிந்துகொள்வதற்கு கடினமான ஊகவணிக உலகத்தைப்பற்றி சிறந்த நடையில் எளிமையாக கட்டுரை விளக்குகிறது. வாழ்த்துக்கள் தோழர் சிவசங்கர்.சித்ரா ராமகிருஷ்ணன் அவர்களின் பங்கு சந்தை திரைக்கதையின் கிளைமாக்ஸில் அந்த பரம யோகி ஆனந்த சுப்ரமணியம்தான் என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.சாதாரண முதலீட்டாளர்களின் சேமிப்புகளை பணயம் வைத்து பங்குசந்தை சூதாட்டத்தில் பெரும்புள்ளிகளே வாரிக்குவிக்கிறார்கள்.

Comment here...