பிஎஸ்என்எல்-ஐக் காப்பாற்றுவோம்! தேசத்தைக் காப்பாற்றுவோம்!


28-29 மார்ச் 2022 பொது வேலைநிறுத்தம்

ஜேப்பி

ஒன்றிய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் எவ்வாறு தனியார் கொள்ளைக்கு வழி வகுக்கும் வகையில் படிப்படியாக பலவீனப்படுத்தப்படுகிறது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

மாறிய கொள்கை தொடங்கிய கொள்ளை

“புதிய தாராளமயத்தால்” ஏற்பட்ட தீவிரமான மாற்றங்களின் தொடர்ச்சியாக, 1995ல் “தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை” (NTP) உருவாக்கப்பட்டது. அரசு மட்டுமே வழங்கி வந்த “தொலைத் தொடர்புச் சேவையில்” தனியாரும் நுழைய வசதி செய்யப் பட்டது. தொலைபேசி இணைப்பை “உலகத் தரத்தில்”, “மலிவு விலையில்” வழங்குவதே நோக்கம் என நியாயப் படுத்தப் பட்டது. உண்மையான நோக்கம் இந்தத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்குத் தான் என்பதை ஒன்றிய அரசின் அடுத்தடுத்த செயல்கள் நிரூபித்தன.

இந்தியாவில் மொபைல் சேவைகள் துவங்கிய காலம் அது.  1995ல் Department of Telecom என்ற அரசு நிறுவனத்திற்கு மொபைல் சேவை உரிமம் மறுக்கப்பட்டது.  அதே சமயம் தனியாருக்கு மட்டும் உரிமம் தாராளமாக வழங்கப்பட்டது. அரசு நிறுவனமான BSNLக்கு மொபைல் சேவை உரிமம் ஏழாண்டுகள் கழித்து 2002ல் தான் கிடைத்தது. இந்த ஏழு வருடத்தில் தனியார் நிறுவனங்கள் “மொபைல் சந்தையை” முற்றிலும் தங்கள் கை வசப் படுத்திக் கொண்டன.

வராத வருவாய்

“ரூ.1,25,000 கோடி அரசுக்கு உரிமக் கட்டண வருவாய் கிடைக்கும்” என்று அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் சுக் ராம் தனியார் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு உரிமம் வழங்கப் பட்டதை நியாயப்படுத்தினார். ஆனால், “உரிமக் கட்டணம் அதிகம்” என்று சாக்கு சொல்லி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு உரிமக் கட்டணம் செலுத்த மறுத்தன.

தன் கண்ணையே குத்திய கை

உரிமக் கட்டணத்தை கறாராக வசூலிக்க கடுமையான நடவடிக்கை எதையும் எடுக்காத வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, தன் பங்குக்கு புதிய தாராளமயக் கொள்கைகளை மிகவும் தீவிரமாக அமல்படுத்தியது.

  • கட்டணம் செலுத்தாவிட்டால் உரிமத்தை ரத்து செய்யப் போவதாக தனியார் நிறுவனங்களை மிரட்டிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரை துறை மாற்றம் செய்தது.
  • தனியார் செலுத்த வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரிமக் கட்டண நிலுவைகளை மொத்தமாகத் தள்ளுபடி செய்தது.
  • நிலையான உரிமக் கட்டணம் என்பதை நிறுவனங்களின் வருவாயில் ஓர் அற்ப சதவீதமாக மாற்றி,  நிறுவனங்கள் தங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டுவதன் மூலம் “உரிமக் கட்டண ஏய்ப்பு” செய்ய வகை செய்தது.
  • வெளிநாட்டு தகவல் தொடர்பு சேவை வழங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான VSNLஐ TATAவிற்கு சல்லிக் காசுக்கு விற்றது. இதன் மூலம் வெளிநாட்டு தகவல் தொடர்பு சேவையில் இருந்து அரசுத் துறையை முற்றிலுமாக வெளியேற்றியது.

தொடர்ந்து வகுக்கப்பட்ட வியூகங்கள்

  • நெட்வொர்க் விரிவாக்கத்திற்கு BSNLக்குத் தேவையான உபகரணங்களை  வாங்குவதற்குக் கூட பல வருடங்கள் அனுமதி வழங்கப் படவில்லை. இதனால், BSNL நெருக்கடியில் சிக்கியது.
  • 2010ல், 3G அலைக்கற்றை பெறுவதற்கான ஏலத்தில் BSNL கலந்து கொள்ளக் கூட அனுமதி வழங்கப் படவில்லை. மற்றவர்கள் நிர்ணயித்த விலையில் தான் BSNL 3ஜி உரிமம் பெற வேண்டி இருந்தது.
  • 2014ல் அறிமுகமான 4ஜி தொழில்நுட்பத்தை  BSNL பயன்படுத்த இன்று வரை முட்டுக்கட்டை போடப் பட்டு வருகிறது. BSNL சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக 4ஜி உரிமம் 2019ல் BSNLக்கு கிடைத்தாலும், மொபைல் கோபுரங்களை (Mobile Tower) மேம்படுத்த மோடி அரசு அனுமதி வழங்கவில்லை.
  • மொபைல் டவர் மேம்பாட்டுக்காக 2020ல் BSNL வெளியிட்ட டெண்டரையும் அரசு ரத்து செய்தது. இதற்கு அரசு வைத்த வாதம் “வெளிநாட்டு விற்பனையாளரிடம் உபகரணங்கள் வாங்கக் கூடாது, உள்நாட்டு நிறுவனங்களிடம் தான் வாங்க வேண்டும்”. ஆனால் இந்த விதி ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் போன்ற தனியாருக்கு பொருத்தப்படவில்லை. BSNLக்கு மட்டும் தனி விதி. அரசுக்குத் தெரியும் உள்நாட்டில் உபகரணம் கிடைக்காது என்று.
  • மோடி அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சி தேசிய பணமாக்கல் ஆகும். BSNL மற்றும் MTNL க்குச் சொந்தமான 14,917 மொபைல் டவர்கள் மற்றும் ஆப்டிக் பைபர் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களிடம் 40,000 கோடி ரூபாய்க்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு முன்னோட்டம் தான்.
  • அடுத்தடுத்த சுற்றுகளில் அதிக மொபைல் டவர்கள் மற்றும் ஆப்டிக் பைபர் கேபிள்கள் தனியார் வசம்  ஒப்படைக்கப்படும்.  ஒப்படைக்கப் பட்டதும், சொந்தமாக இருந்த இந்த டவர்களை பயன்படுத்த பிஎஸ்என்எல் நிறுவனமே பணம் செலுத்த வேண்டும். இயற்கையாகவே இந்தக் கட்டணங்கள் உயர்த்தப்படும். இது BSNLக்கு கூடுதல் நஷ்டத்தை உருவாக்கும். தனியார் நிறுவனங்கள் மக்கள் பணத்தில் கட்டப்பட்ட இந்தக் கோபுரங்களைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும்.

தனியாருக்குத் தோழன்

BSNL பொதுத்துறை நிறுவனத்தைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சிகளை செய்வதோடு மட்டுமல்லாமல், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தோளோடு தோள் கொடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், 5ஜி சேவைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
  • இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, முழு உரிமக் கட்டணத்தையும் செலுத்த மறுத்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் நிலுவைத் தொகை ரூ.1.69 லட்சம் கோடிக்கு நான்கு ஆண்டுகள் அவகாசம் வழங்கியது ஒன்றிய அரசு.
  • வணிகத்தில் ஈடுபடுவது அரசாங்கத்தின் வேலை இல்லை என்று வாதிடுகிற பாஜக அரசு வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.16000 கோடி வட்டிக்கு பதிலாக நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்தின் 35.8% பங்குகளை வாங்கியது.

மக்கள் விரோத தேச விரோதச் செயல்

2021 ஆம் ஆண்டில், மோடி அரசாங்கம் 100% அந்நிய நேரடி முதலீட்டை முக்கியமான தொலைத் தொடர்புத் துறையில் தானியங்கு வழி மூலம் அனுமதித்துள்ளது, இது தேச நலன்களுக்கு எதிரானது.

போட்டியற்ற சூழலில், 2021 ஆம் ஆண்டின் இறுதியில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 20%-25% வரை கட்டணங்களை உயர்த்தின. ஒரு வேளை BSNL முற்றிலும் ஒழிக்கப் பட்டால், இது மேலும் கடுமையாக உயர்த்தப்படும். இதனால் மொபைல் மற்றும் டேட்டா சேவைகள் சாதாரண மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளின் எட்டாக்கனி ஆகும் என்பது உறுதி.

ஒன்றுபட்டு முறியடிப்போம்

தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், BSNLஐ பலவீனப் படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்கள், இதுவரை 100% அரசு நிறுவனமாக BSNL இருப்பதை உறுதி செய்து வந்துள்ளனர். அவர்கள் போராட்டத்தில் பொது மக்கள், பயனாளர்கள், நாட்டுப்பற்றுள்ள அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

“தனியார் மயத்தை எதிர்த்த” மார்ச் 28-29, 2022  பொது வேலைநிறுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்! கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

10 comments

  1. Yet another pro corporate policy of the Govt. brought out clearly. Exposes completely the govt. sabotaging the public sector BSNL.

  2. புதிய தாராளமய கொள்கைகள் நம் நாட்டில் அமுல்படுத்த தொடங்கிய காலங்களில் இருந்தே பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான எல்லா முயற்சிகளையும் அன்றைய இன்றைய ஒன்றிய அரசுகள் செயல்படுத்த முயல்கின்றனர். BSNL தனியார்மயம் என்பது தேச விரோத செயலாகும். கேந்திரிய துறைகள் அரசின் வசமே இருக்க வேண்டும். இக்கட்டுரை அதை நோக்கி எழுதப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

  3. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காகவே வாஜ்பாய் காலத்தில் அருண் ஷோரி மந்திரியாக இருந்தார். அவர் துவக்கி வைத்தது மோடி ஆட்சியில் அமோகமாக நடக்கிறது. பிஎஸ்என்எல் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதை மக்கள் புரிந்து கொண்டு போராட வேண்டும். அதற்கான பிரச்சாரம் தொடர வேண்டும் மார்ச் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை ஒட்டி.

  4. பொதுத்துறையின் பங்குகளை விற்பதற்காகவே வாஜ்பாய் காலத்தில் அருண் ஷோரி மந்திரியாக இருந்தார். கட்டுரை எளிமையாக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. மக்களிடம் மார்ச் 2 நாள் வேலை நிறுத்தத்தை ஒட்டி பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்.

  5. பொது துறை நிறுவனங்களின் கழுத்தை இறுக்கி, கொலை செய்யும் மைய அரசின் கொள்கைகளை தோலுரித்து காட்டும் கட்டுரை… பாராட்டுக்கள்

  6. Today Air India is demanding paymment for bringing back Citizens from Ukraine. This is one fine exmple theCitizens of this country should learn. This is privitatisation. Let’s all be vigilant and protect BSNL by protracted struggles,

  7. தேசத்தின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தேச மக்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் சொத்து தனி ஒருவனுக்கு சொந்தமாக முடியாது. வேலை நிறுத்த போராட்டம் வெல்லட்டும். தேச நலன் காப்போம்.

  8. தொலைத்தொடர்பு துறையின் (BSNL) பங்களிப்பு கட்டமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுகின்றன.ஒன்றிய அரசின் LPG கொள்கைகள் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு கட்டமைப்பையும் கார்ப்பரேட்களிடம் மிக வேகமாக ஒப்படைக்கும் நடவடிக்கைகளையும் விரிவாக கட்டுரை விளக்குகிறது.வாழ்த்துக்கள்

  9. Hail BSNL that survives many an onslaught inflicted by the owner of the very institution, the infamous government of the day.

Comment here...