இந்தியன் வங்கியில் அதிகரிக்கும் தொழில்நுட்பச் சிக்கல்கள்

நமது நிருபர்

இந்தியா முழுவதும் பரந்து விரிந்த அளவில் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்ட இந்தியன் வங்கியில் சமீபகாலமாக தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சனைகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சம பலம் பொருந்திய அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பிற்குப் பிறகு வங்கியின் செயல்பாட்டு முறைகளில் நிர்வாகம் தொடர்ச்சியான மாற்றங்களைப் புகுத்தி வருகின்றது. மாற்றங்கள் குறித்த சரியான திட்டமிடல்களோ,  ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சிகளோ வழங்காத நிர்வாகம், புதிய தொழில்நுட்பங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது என்று குமுறுகின்றனர் ஊழியர்கள்.

திட்டமிடப்படாமல் அமலாக்கப்படும் புதிய நடைமுறைகள்

புதிதாக துவக்கப்படும் சேமிப்புக் கணக்குகள் ஒருசில மணி நேரங்களில் செயல்பாட்டிற்கு (Activation) வந்து கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அதன் தொழில்நுட்பத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது நிர்வாகம். அதன் விளைவு, சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகிறது. அவ்வாறு சில மாதங்கள் ஆகியும் செயல்பாட்டிற்கு வராத கணக்குகள் மட்டும் ஆயிரக்கணக்கில் உள்ளதாகவும், இன்றைய தேதி வரை இந்த அவல நிலை தொடர்வதாகவும் தெரிய வருகிறது.

மேலும் ஏடிஎம் கார்டுகள் வழங்குவதிலும் மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது. தலைமை அலுவலகத்தில் தேவையான அளவிற்கு ஏடிஎம் கார்டுகள் கைவசம் இல்லாததால் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் புதிய கணக்கு தொடங்குபவர்கள் மட்டுமல்லாது பழைய வாடிக்கையாளர்களும் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். 

இதே காலகட்டத்தில் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஊழியர்களுக்கான மனிதவள மேம்பாட்டு வலைத்தளத்திற்கான (HRM site) மென் பொருளையும் புதியதாக மாற்றி அவற்றிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாக குமுறுகின்றனர் ஊழியர்கள். இதனால் தங்களது விடுப்பு தொடர்பான தகவல்கள், பணிமாறுதல்கள் தொடர்பான தகவல்கள், வருமான வரி பிடித்தங்கள் தொடர்பான தகவல்கள் போன்ற அனைத்திலும் பாதிப்புகள் ஏற்படுவதாகச் சொல்கின்றனர் ஊழியர்கள்.

மோசமான நெட்ஒர்க் இணைப்பால் தவிக்கும் வாடிக்கையாளர்கள்

வங்கி இணைப்பிற்குப் பிறகு அவ்வப்போது தலைக்காட்டிய நெட்ஒர்க் இணைப்பு தொடர்பான பிரச்சனைகள் கடந்த இரண்டு மாதங்களாக உச்சத்தைத் தொட்டுள்ளதாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக இந்த மாதம் ஒரே வாரத்தில் மூன்று நாட்கள் நெட்ஒர்க் இணைப்பு ஏறக்குறைய முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் கிளைகளுக்கு வரும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவசர மருத்துவத் தேவைகளுக்கு பணம் எடுக்க வருபவர்கள், மூத்த குடிமக்கள், வேலைக்கு விடுப்பு எடுத்து வருபவர்கள், தொழில் தொடர்பான அவசரப் பணப்பரிமாற்ற தேவைகளுக்காக வருபவர்கள் போன்றவர்களின் நிலைமைகள் பரிதாபமாக உள்ளன. 

வங்கியின் மோசமான நெட்ஒர்க் இணைப்பால் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி நடக்கும் பரிவர்த்தனைகளிலும் தடைகள் ஏற்படுகின்றன. இதனால் தங்களது அவசரத் தேவைகளுக்காக ஏடிஎம் கார்டை நம்பிச் செல்லும் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பல நேரங்களில் அவர்களின் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டும், இயந்திரத்தில் இருந்து பணம் வெளிவருவது இல்லை. அது போன்ற நிலைகளில் அவர்கள் தங்கள் கிளைகளுக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு நாட்கணக்கில் தங்கள் பணத்திற்காகக் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் வங்கியின் மொபைல் செயலியான Indoasis கடந்த பத்து நாட்களாக சரியாக செயல்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளர்களிடம் சிக்கித் தவிக்கும் ஊழியர்கள்

மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளும் வங்கியின் உயர்மட்ட நிர்வாகத்தின் தவறான திட்டமிடல்களால் நடைபெறுபவையாக இருந்தாலும், இவற்றால் பெருமளவில் பாதிக்கப்படுவது கிளைகளில் பணிபுரியும் முன்கள ஊழியர்களே ஆவர். ஒருபுறம் போதிய அவகாசம் இன்றி அமல்படுத்தப்படும் நிர்வாகத்தின் திடீர் மாற்றங்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியாமலும், , மறுபுறம் கிளைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் சிக்கித் தவிக்கின்றனர் ஊழியர்கள். 

புதிய சேமிப்புக் கணக்குகள் துவங்கி விட்டு, அதில் போட்ட பணத்தை எடுக்க மாதக்கணக்கில் கிளைகளுக்கு அலையும் வாடிக்கையாளர்கள், அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளாக மாறிவிட்ட சூழலில் புதிய ஏடிஎம் அட்டைகளுக்காக மாதக்கணக்கில் அலையும் வாடிக்கையாளர்கள், தங்கள் அவசரத் தேவைகளுக்காக பணபரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் காலை 10 மணி முதல் கிளைக் கவுண்டர்களில் மணிக்கணக்கில் காத்து நிற்கும் வாடிக்கையாளர்கள் என்று அனைவரும் முதலில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது முன்கள ஊழியர்களிடம் தான். அவர்கள் கேட்கும் ஒரே கேள்வி, “எவ்வளவு நேரத்தில் பிரச்சனை சரியாகும்? எப்போது என் பணம் திரும்பி வரும்?” என்பதாகவே உள்ளது. இந்த நியாயமான கேள்விகளுக்கான பதில் நிர்வாகத்தால் எந்த ஊழியருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால் இதை நம்ப மறுக்கும் வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே தினமும் வாக்குவாதங்கள் ஏற்படுவது தொடர்காட்சிகளாக மாறி வருகின்றன. 

பல கிளைகளில் பெண் ஊழியர்கள் இது போன்ற வாடிக்கையாளர்களின் கோபத்துக்கு ஆளாகி பெரும் மனஉளச்சல்களுக்கு உள்ளாகின்றனர். ஒரு சில பகுதிகளில் கோபமடையும் வாடிக்கையாளர்கள் ஊழியர்களைத் தாக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. 

காசாளர் படும் பாடு

பொதுவாகவே வங்கிப் பரிவர்த்தனைகள் என்பவை பெரும்பாலும் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளாகவே இருக்கும். அந்த பரிவர்த்தனைகள் வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கிலும், காசாளர் கணினியில் இருக்கும் மென்பொருளிலும் ஒருசேர பிரதிபலிக்க வேண்டும். ஆனால் நெட்ஒர்க் இணைப்பில் வரும் பிரச்சனைகளால் அப்பரிவர்த்தனைகள் காசாளரின் மென்பொருளில் சரியாக பிரதிபலிப்பது இல்லை. இதனால் பல நேரங்களில் காசாளர்கள் பெரிய அளவிலான பணஇழப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாவதாகவும் ஊழியர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.

உயர்மட்ட நிர்வாகமே பொறுப்பு  

மொத்தத்தில் தொழில்நுட்பங்கள் என்பவை ஏற்கனவே இருக்கும் வேலைமுறைகளை நவீனப்படுத்தி அவற்றை எளிமைப்படுத்துவதாக இருக்க வேண்டிய நிலை மாறி, அவை நடைமுறையில் இருக்கும் வேலை முறைகளை மேலும் அதிக சிக்கல்களுக்கு உள்ளாக்கி தாமதப்படுத்துவதாக மாறிப் போவது வங்கியின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று ஆதங்கப்படுகின்றனர் இந்தியன் வங்கி ஊழியர்கள்.

அரசு வங்கிகள் மீது ஏற்கனவே பொய்யான புகார் கூறி சேற்றை வாரி இறைக்க ஒரு புறம் சில சக்திகள் முயலும் போது, இது போன்ற உயர்மட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் மேலும் அரசு வங்கிகளின் நற்பெயர் பாதிக்கப்படாதா? சாதாரண நடைமுறையில் ஏற்படும் சிறு தவறுகளுக்கெல்லாம் வங்கியின் நற்பெயர் கெட்டுவிட்டது என்று குற்றப்பத்திரிக்கை கொடுக்கும் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு யார் குற்றப்பத்திரிக்கை கொடுப்பது? அவர்களின் பொறுப்பை யார் நிர்ணயிப்பது? இயக்குநர் குழுவில் இருக்கும் ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள் என்ன செய்கின்றனர்?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கின்றனர் தொழிற்சங்க பிரதிநிதிகள்.

“இந்தியன் வங்கி உங்கள் வங்கி” என்று நம்பி இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே தங்கள் வங்கி என்று உணரவைக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், இயக்குநர் குழுவுக்கும் உள்ளன.

15 comments

  1. தனியார் வங்கிகளில் சீனியர் சிட்டிசன்களை பென்ஷன் கணக்கு ஆரம்பிக்க உள்ளே நுழையக்கூட விட மாட்டார்கள்.

    ஆனால், இந்தியன் வங்கி போன்ற பாரம்பரியமிக்க அரசு வங்கியில் இப்படி நடக்கலாமா? வாடிக்கையாளர்கள்தான் வங்கியின் வளர்ச்சிக்கு ஆதாரம்.

    “மகாத்மா காந்தி” வாடிக்கையாளர் சேவை பற்றி எழுதிய கொட்டேஷன் வரிகளை எழுதி ஒட்டினால் போதுமா? சீனி என்று பேப்பரில் எழுதிக் கொடுத்தால் இனிக்குமா?

    வாடிக்கையாளர் சேவை பற்றி கூடுதல் கவனம் செலுத்தி வங்கி நிர்வாகம் உடனடியாக பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.

  2. இக்கட்டுரை மூலம் வங்கியில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு வங்கியின் நிர்வாகம் பொறுப்பற்று இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இன்று இந்தியன் வங்கி… நாளை..‌? இக்கட்டுரை வங்கி வாடிக்கையாளர்களிடம் பொதுமக்களிடம் பரவலாக்க வேண்டும். ஆசிரியரின் இத்தகைய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  3. I hear a lot like this about our bank nowadays. It is high time that the responsible officials/ executives/top management take necessary steps to settle the issues

  4. In the most competitive environment 2 months to issue Rupay card will defenitely will affect the growth of the Bank. If customers are ignored they have plenty of options in their disposal.

  5. We cannot assure competitiv service to new customers, even good home loan aspirants.
    We compromise ourselves as all banks are ours only.

  6. I was also one of the sufferer. A pos settlement was not credited to my account for more than 15 days. The branch manager admitted that there are problems. He added that if the issue is not addressed quickly, the bank may collapse

  7. Dear sir I am an exemployee, infront of staffs suffering from customers due to connectivity some customer used unparlimentry words. Kindly rectify the problem very soon. In this problem comes after merger with Allaha Bank . If any wrong suggestion excuse me.
    Rajendra Mohan Ex employee Manali Branch.

  8. In the name of advancement , the Bank is losing the goodwill. The Management and RBI experts should sort out the lacuna and improve the service immediately

  9. Instead of Focussing on Tab Account opening and some other new digital schemes, first find solutions to these technical issues.

  10. Indian Bank always had an excellent tradition Since 1907.After amalgamation no doubt the Bank is facing so many technical and digital problems thereby both staff who are at the counters as well as customers are suffering a lot. I would like to express that it is the duty and responsibility of the top management to look into the practical problems experienced both by staff as well as our valued customers by forming a committe of experts immediately.

  11. Is it a deliberate attempt to tarnish the image of P S banks that there is this much delay?. The management’s in effectiveness is very much obvious. To be addressed in a war footing manner.

  12. I am an ex employee of the bank and the problems i face with one of our city branches is horrible. I applied for a home loan plus o Jan 10th after checking up my eligibility. It took nearly 27 days to get it forwarded to RMPC. However RMPC sanctioned it in three days and has reached the branch on FEb 10th. But till now the loan is not released, as I am not able to create MOD for the loan. The bank officials are giving details to the bank advocate one after another only after she asks for it. Our officials should give copies of all documents in one shot as per the rules. I do not know when My loan will be released. Buck passing is easily done by eAB employees on our employees. Unless this is settled in all our branch, I am afraid that our dear institution will loose its glory shortly.

  13. Repeatedly the management refuses to accept responsibility for their actions. It’s now employees of Allahabad Bank vs Indian Bank. Internal strife is rampant. HR does not raise upto expectations and quickly align itself to the needs of the employees, customers and branch / zone head. Inappropriate planning of implementation of changes, lack of appropriate support from technology enablers.. Pathetic…

  14. உண்மை தான். இந்தியன் வங்கியில் இப்போது நமது தேவைகள் முடிய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் தமிழ் தெரியாத அதிகாரிகளை நியமித்து விடுகிறார்கள். போதிய கல்வியறிவு இல்லாத வாடிக்கையாளர்கள் எதுவும் புரியாமல் அலைக்கழிக்கப்படுவதைக் கண்டால் பரிதாபமாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியன் வங்கி இனியாவது சிறப்பாக இயங்கி தனது நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Comment here...