இரயில்வேயை விற்காதே!  தேசத்தை அழிக்காதே!


28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம்

ஜேப்பி

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய இரயில் கட்டமைப்பாக இந்திய இரயில்வே உருவாகி இருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் அன்றாட பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தாக விலை மலிவான சேவையை  பொதுத்துறையில் இயங்கும் இந்திய இரயில்வே வழங்கி வருகிறது. நாள் தோறும் கோடிக்கணக்கான டன் சரக்குகளை இடம் பெயர்த்து தேசத்தின் பொருளாதாரம் உயிர்ப்புடன் இயங்க உதவுகிறது. முதுகொடிக்கும் வேலை, தொடர் வேலை, பிணி, பட்டினி, ஆபத்தான நிலப்பரப்பு என்று எதையும் பாராத இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பாலும், மக்களின் வரிப்பணத்தாலும்தான் இந்தக் கட்டமைப்பின் உருவாக்கம் சாத்தியமாகியிருக்கிறது.

நரியின் கண் கோழி மீது
தொண்டுக்காக தனியாரால் முதலீடுகள் செய்யப்படுவதில்லை. உள்நாட்டு வெளிநாட்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், “மக்கள் சொத்தை கையகப்படுத்தி சுரண்டிக் கொழுப்பதுதான் சிறந்த வழி” என்பதை நன்கு அறிவார்கள். இந்தக் கொள்ளைக்கு வழிவகை செய்ய தேசத்தின் அனைத்து செல்வங்களையும் தனியார் வசம் ஒப்படைப்பதுதான் “புதிய தாராளமயம்“. இதனால் பொதுத்துறை நிறுவனமான இந்திய இரயில்வேயும் தனியார்மயமாக்கலின் ஒரு இலக்காகிவிட்டது.
1998 ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சியில் இருந்த வாஜ்பாயின் பாஜக அரசு, கேட்டரிங் (உணவு விற்பனை), கட்டுமானம், இரயில் பாதை-இயந்திரம்-இரயில் பெட்டி-வேகன்-சிக்னல் ஆகியவற்றின் பராமரிப்பு முதலிய இரயில்வே சேவைகளைத் தனியாருக்கு அவுட்சோர்ஸ் செய்தது.


தற்போதைய மோடியின் பாஜக அரசு, இரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களை ஈர்க்க, முதலில் பல திட்டங்களை முன்வைத்துப் பார்த்தது. இதற்கு நிறுவனங்கள் எதுவும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, ‘தேசிய பணமாக்கல்’ திட்டம் மூலமாக – இரயில் நிலையங்கள், பயணிகள் இரயில்கள், இருப்புப் பாதைகள், சரக்குக் கொட்டகைகள், கொங்கன் இரயில்வே, மலை இரயில் பாதைகள், பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், இரயில்வே காலனிகள் மற்றும் இரயில்வே ஸ்டேடியங்கள் – என அனைத்து இரயில்வே சொத்துக்களையும் தனியாருக்குத் தாரைவார்க்கத் தீர்மானித்துள்ளது.


அதோடு டீசல், மின்சார என்ஜின், கோச்சு, சக்கரம்-ஆக்சில் தயாரிக்கும் 8 உற்பத்தி நிலையங்களை நிறுவனங்களாக மாற்றி, பின்னர் அவற்றை தனியார்மயமாக்கவும் முடிவு செய்துள்ளது. சரக்கு வேகன் உற்பத்தி முழுவதும் ஏற்கனவே தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது.


பிரம்மாண்டமான  உள்கட்டமைப்பை மிகச் சிறிய தொகைக்குப் பெற்று கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டுவார்கள் தனியார்.

மக்கள் தலையில் வைக்கப்படும் கொள்ளி
தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் விரோதமானவை. “உலகத் தரம் வாய்ந்த சேவைகள்” என்பதன் பொருள் மக்களுக்கு மலிவான பொதுப் போக்குவரத்து மறுக்கப்படும் என்பதுதான்.

ஏற்கனவே மாணவர்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு, ஊனமுற்றோருக்கு, புற்றுநோய் மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகை விலையில் டிக்கெட்டுகள்-சீசன் டிக்கெட்டுகள் கொடுப்பதை கொரோனா காலத்தில் மோடி அரசு நிறுத்தியது. திரும்பத் தொடங்கும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. நடைமேடை டிக்கெட்டுகளின் விலையும் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு விட்டது. இந்திய இரயில்வே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால்,

  • பயணிகள் கட்டணத்தில் வழங்கப்படுகிற 47% மானியம் வெட்டப்பட்டு, கட்டணங்கள் இரண்டு மடங்கு உயரும்.
  • ஏழைகள் இரயில் சேவையைப் பயன்படுத்துவது இருக்கட்டும், அவர்கள் இரயில் நிலையங்களுக்குள்  நுழையக்கூட முடியாத நிலை ஏற்படும்.
  • அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்கு வழங்கப்படுகிற மானியங்கள் ரத்து செய்யப்படும். இது விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்வது மட்டுமல்ல உணவுப் பாதுகாப்புக்கே ஊறு விளைவிக்கும்.
  • ரிக்‌ஷா மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள் தனியார் இரயில் நிலையங்களுக்கு அருகில் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஓட்டுனர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் ஏழைகள் இந்த மலிவான ரிக்‌ஷா சேவைகளைப் பயன்படுத்தவும் முடியாது.
  • ஏற்கனவே இலட்சங்களில் குறைக்கப்பட்ட வேலை இடங்கள் மேலும் குறைக்கப்படும். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை தீவிரமாக்கும்.
  • நிரந்தர வேலைகள் அகற்றப்பட்டு, கான்டிராக்ட், தாற்காலிக கூலிகளாக ஊழியர்கள் மாற்றப்படுவார்கள். நான்கில் ஒரு பங்கு கூலி என்பது மட்டுமல்ல, பணிப்பாதுகாப்பு; ஈஎஸ்ஐ, பிஎஃப், பென்ஷன் போன்ற சமூகப் பாதுகாப்புகள்; பெண் ஊழியருக்கான மகப்பேறு சலுகைகள்; இட ஒதுக்கீடு என பல உரிமைகளும் மறுக்கப்படும்.
  • இலாபம் வரும் தடங்களில் மட்டும் சேவைகள் வழங்கப்படும். தொலைதூரத் தடங்கள் ரத்து செய்யப்படும். நேரமும் பணமும் கூடுதலாக விரையமாகும். ஏழைகளுக்கு இரயில் பயணம் அந்நியமாகும்.
  • செலுத்த வேண்டிய தொகைகள்கூட நட்டக் கணக்கு காட்டி அரசுக்குச் செலுத்தப்படாமல் ஏய்க்கப்படும், தள்ளுபடி, மானியம் கோரப்படும். அரசுக்கு ஆகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும்.
  • விபத்துக்கள் அதிகரித்து இரயில் பயணம் ஆபத்தானதாகும்.



சர்வதேச அனுபவம்
அர்ஜென்டினா நாட்டில் இரயில்வே 1989 இல் தனியார்மயமாக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இரயில் பாதைகள் நீளம் கால் பங்காகக் குறைந்தது.  தொலைதூர இரயில்கள் நிறுத்தப்பட்டன. பல பாதைகள் மூடப்பட்டன. சேவைகளின் தரம், பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. சுமார் 70000 பேர் வேலை இழந்தனர். 793 ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. பல கிராமங்கள் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டன. விவசாயம் பாதிக்கப்பட்டது. ஒப்பந்தப்படி இரயில்வே உள்கட்டமைப்பு பராமரிக்கப்படவில்லை. தனியார் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டியிருந்தது. எனவே, 2015 இல் அர்ஜென்டினா இரயில் பாதைகள் மற்றும் சேவைகளை முழுமையாக தேசியமயமாக்கியது.


இங்கிலாந்தில், “பிரிட்டிஷ் இரயில்” 1996 இல் 25 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு பெரும்பகுதி தனியாருக்கு விற்கப்பட்டன. மற்றவை மூடப்பட்டன. தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வும், பல பெரிய விபத்துக்களும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. இறுதியில், பிரிட்டிஷ் அரசு இரயில் பாதை உள்கட்டமைப்பைக் கையகப்படுத்த ஒரு பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கியது. இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, பிற ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையோடு இருக்கின்றன.


நியூசிலாந்தின் அனுபவமும் இப்படித்தான். 1982 இல் தனியாரிடம் விடப்பட்ட தேசிய இரயில் கட்டமைப்பின் உரிமையை 2004 இல் மீண்டும் அரசே ஏற்க வேண்டி வந்தது.


இந்திய அனுபவம்
இரயில்வே துறையில் “பொது தனியார் கூட்டாண்மை” (PPP) மூலம் மும்பை, ஹைதராபாத், டெல்லி விமான நிலையங்களில் மாதிரி முயற்சி செய்யப்பட்டது. இவை அனைத்தும் தோல்வி அடைந்தன. டெல்லி விமானப் பாதை மின்மயமாக்கல், சிக்னலிங் உரிமையை ரிலையன்ஸ் பெற்றது.  நஷ்டம் என்று கூறி ரிலையன்ஸ் கைவிட்ட பின்னர் டெல்லி மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன் அதை ஏற்றுக்கொண்டது. மும்பை மெட்ரோ லைன் 1 இல் 11 கிமீ உயர் பாதையை முடிக்க ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்  7 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. மிக அதிக கட்டணம் வசூலித்தாலும், ஒவ்வொரு நாளும் சுமார் ரூ. 50 இலட்சம் இழப்பதாகக் கூறுகிறது.

இரயில்வேயை விற்காதே
இரயில்வே தனியார்மயமாக்கத்தைக் கைவிடு என்ற கோரிக்கையுடன் நடைபெறும் 28-29 மார்ச் வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொண்டு “இந்தியா விற்பனைக்கல்ல” என்று ஒன்றிய அரசுக்கு உரக்கச் சொல்வோம்.

3 comments

  1. பாஜக அரசு முன் எப்போதையும் விட மிக வேகமாக, அதிதீவிரமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதில் முனைப்போடு செயல்படுகின்றனர். இக்கட்டுரை ரயில்வே துறையின் பிரம்மாண்டத்தையும், அது மக்களுக்கு ஆற்றும் சேவை பற்றியும் விரிவாக எடுத்துக்காட்டுவதுடன் தனியார்மயம் ஆனால் இவையாவும் மக்களுக்கு பலனளிக்காமல் சென்றுவிடும் அபாயத்தையும் எடுத்துரைக்கின்றது. இது குறித்த கட்டுரை எழுதிய, விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  2. A well written article clearly explaining the ill effects of privatising Railways aptly referring to various countries which went back on privatisation.

Comment here...