மானியமோ! மானியம்!

ஸ்ரீதேவி சக்திகுமார்

தீர்ந்து போயிருந்த ஆமணக்கெண்ணையை சின்ன அலுமினிய கிண்ணத்தில், ஒரு கண்ணாடி  புட்டியிலிருந்து ஊற்றிக்கொண்டிருந்தாள் இசக்கியம்மாள்.

குளிரால் உறைந்து போன காற்று தளர்வாய், தள்ளாடி ஊரெல்லாம் மெதுவாய்  வீசிக்கொண்டிருந்தது. நிரம்பி வழியும் நிசப்த்தம், ஊர் மொத்தமும்..

மூன்று மணி அதிகாலையின் அந்த பொழுதில் இசக்கியம்மாள் பால் கறக்கும் பாத்திரங்களோடு, எண்ணெய் கிண்ணத்தை ஏந்தி, கோழிக்கூட்டை அடுத்த மாட்டுத் தொழுவத்தை பார்த்து நடந்தாள்.

அப்போதுதான் இட்லி அரைக்க உளுந்தையும் அரிசியையும் படிக்கணக்கில் அளந்து தனித்தனி பாத்திரத்தில் நனையப் போட்டுவிட்டு வந்தாள்..

வாளியுடன் கக்கூசிலிருந்து அவளைக் கடந்த கந்தசாமி, என்ன இவ்வளவு வெள்ளனே கறக்க வந்துட்டே?என்றான்

ஆங்..

இன்னைக்கு டவுணுக்கு போணும்..

அங்க பேங்குல கொஞ்சம் வேல கெடக்கு, என்றபடி பசுவின் மடுக்களில் நீர் தெளித்துக் கழுவிக் கொண்டிருந்தாள்.

அவன் திரும்பவும் படுத்துத் தூங்க போய்விட்டான்..

அவள் மூன்று பெண்குழந்தைகளும் பாயில் அடுத்தடுத்துப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு பேங்குக்கு மறுநாள் செல்லப் போவதை நினைத்தாலே முந்தின நாள் இரவு முழுதும் தூக்கம் பிடிக்கவில்லை.

நேர் பஸ்ஸு, சுத்து பஸ்ஸு, ரெண்டே பஸ்ஸுதான் இருக்கு..

நேர்வழிக்காரன் அடிக்கடி வரமாட்டான்.

சுத்து வழி பஸ்ஸுல போனா போய் சேர மணி ஒண்ணே முக்கா மேல ஆயிப் போயிரும்..அப்புறம் பேங்குல உள்ளவங்க சாப்பிட ஈப்பிடண்ணு மணி இரண்டர ஆயிரும்.

அதுக்கப்பெறவு வீடு திரும்பி வந்து மாட்ட பத்தி தொழுவத்துல கட்டறதுக்குள்ள கருக்கல் ஆயிரக்கூடாது..

அதுக்குப் பெறகு போய் புல்லறுக்க முடியாததால், இப்ப கறந்து முடிச்சிட்டு வெயிலுக்கு முன்னாடி அறுத்துட்டு ஓடியாந்துரணும்.

இந்த மனியன நம்பி பிரயோஜனமில்ல.

இவ்வளவு வெள்ளனே கெடந்து தனியா லோல் படுதே நம்ம ஏதாவது ஒத்தாசயா ஒண்ணா, மண்ணா நிப்போமுன்னு நெனைக்குதா இந்த ஆளு?

மூணு பொம்புள்ளையள பெத்துருக்கோம்ங்குற பயம் கொஞ்சமும் இல்ல…

இந்த சின்னதாயி வீட்டுக்காரன் எப்புடி ஒண்ணுக்கொண்ணா அவகூட நின்று குடும்பத்த தூக்கி வுடுறான்

எல்லாம் நாம பொறந்த யோகம் தான். நமக்கு வாய்ச்சதெல்லாம் இப்புடித்தான் இருக்கு.

பால்…

சர்ர்..சர்ர்..

என அவள் விரல்கள் பழக்கிய வேகத்திற்கு ஈடு கொடுத்து பாத்திரத்தை நிரப்பி நுரையாய் அடர்ந்து மேலெழுந்து வந்து கொண்டிருந்தது.

தொழுவம் முழுதும் பால் வாசம் துளித்துளியாய் படர்ந்து கொண்டிருந்தது.

கன்றுகள் இனம் புரியாததோர் மகிழ்ச்சியில் பின்னங்கால்களை  மேலுயர்த்தி துள்ளிக்குதித்தன.

பசு அவள் மயிர் கற்றைகளோடு சேர்த்து அவள் தலையை நக்கிக் கொண்டிருந்தது..

வேப்ப மரக்கூட்டிலிருந்து காகம் ஒன்று கரைந்தது..

நேரம் கடந்துட்டே போவுது போலயே..

சரட்டுண்ணு வேலைய முடிக்கணும்..

பதினோருமணி நேர் பஸ்ஸ புடிக்கணும்..

என்றவளுள் வேலை வேகமெடுத்தது..

வெலவாசி கூடிப் போச்சு.. வீட்டு ஜாமான் வாங்கப் போனா ஐநூறு ரூவா ஒரு நாளைக்கு கூட பத்த மாட்டேங்குது.

ஆனா நெல்லும், காய்கறியும் அன்னைக்கே வெலைக்குத்தான் எடுக்குறானுவ.

நேத்தைக்கு நாட்டுப்பழம் ஒருகாயி ஒரு ரூவா கூட தேறாம ஓசில குடுத்ததா 10 கொல  வித்துட்டு வந்துருக்கு. வேலக்கூலிக் கூட தேறல.

நம்ம பிள்ளையள மட்டும் விவசாயம் செய்யிறவனுவளுக்கு  கெட்டிக் குடுக்கக் கூடாது.

பெறகு அதுவ மண்ணத்தான் தின்னும்.

ஓட்டுப் போட இவனுவ தலைக்கு ஐநூறு ஆயிரமுன்னு தற்றதுக்கு முன்னாடி, மத்தி அரசாங்கம் 6000 ரூபா பணம் அக்கவுண்டுல ஏத்தி உடுறதா சொன்னாவ. நானும் மத்தில உள்ள ஆளுவங்கறதால ஓட்டுக்கு தலைக்கு ஆறாயிரம்னு நெனச்சேன்.

பயிர் பணமாம்ல அது!

இந்த பயிர் பணம் ஆறாயிர ரூவா நம்ம அக்கவுண்டுல ஏறிருக்கும். சின்னதாயி, வேலம்மா எல்லாரும் எந்த மாசமே எடுத்து செலவு பண்ணிட்டாளுவ…

செல்லம்மா அதுல ஒரு அஞ்சாறு மாமரம் பாட்டம் எடுத்துட்டாளே.. லெச்சுமி அவ மவனுக்கு பீஸ கட்டிட்டா…

நாம, இவரு அப்பா செத்ததுக்கு காரிய செலவுக்கு வாங்குன  கந்து வட்டிக் கடன     தீத்துரணும்…

பால கறந்து கறந்து அவனுக்கே ஊத்திக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு..

கழனி தொட்டிக்கு பக்கத்தில் நின்றிருந்த நெல்லி மரத்திலிருந்து  பூனைக்குட்டி சரட்டென குதித்து  மியாவ் சொல்லிக் கொண்டே அவளைத் தொடர்ந்து, 

அவள் வைத்திருந்த

நுரை ததும்பி பொங்கலொ பொங்கலென நின்றிருந்த, பால் வாளியை ஒட்டிக்கொண்டு ஓடியது..

புல்லறுத்து போட்டுவிட்டு

காலை உணவாக கஞ்சி காய்த்து, இரவுக்கு மாவரைக்கப் போட்டு, மதியத்திற்கு கறிகாய் சமைத்து, 11 மணி நேர் பஸ்ஸை பிடிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது..

அவள் சாப்பிட்டாளா என்பதையே மறந்து போனாள்..

பேருந்தில் உட்கார்ந்ததும், எடுப்போர் கைக்குள் அமிழ்ந்து அன்பு ஸ்பரிசம் பெறும் குழந்தையென, அந்தக் காற்றின் வருடலில், தொடர்ந்த வேலைக்குப் பின் கிடைத்த அந்த சிறிய ஓய்வின் தாலாட்டில் தூங்கிப் போனாள்.

அளத்தூர்..

அளத்தூர்…

அளத்தூர்காரங்க எல்லாரும் எறங்குங்க..

பதறிக் கொண்டு எழுந்து ஓடினாள்

..

பாங்கில் அவ்வளவாக கூட்டம் இல்லை..

பாஸ் புக் இருக்கா…

அடிக்கடி பைக்குள் கைவிட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

ஒருநாள் இப்படித்தான் பாஸ்புக் இல்லன்னா ஒண்ணும் பண்ணமுடியாதுண்ணு சொல்லிட்டாங்க.

வெறுங்கையா திரும்பிப் போக வேண்டியதாயிட்டு.

கவுண்டரில் இரண்டு பெண் இரண்டு ஆண் இருந்தார்கள்..

சின்னப் பெண்ணாய் இருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கவும், அவளுக்கு அவள் மூத்தமகள் சீனியின் சாடையாய் இருந்தது..

அந்தப் பெண்ணிடம் போய்..

தாயீயீ..

தாயீ..

ஆறாயிரம் ரூவா பணம் எடுக்கணும்..

அந்தப் பெண் அவளைப் பார்காமலேயே..

கணினியைப் பார்த்தவண்ணம்,

அதோ அந்த சார்கிட்ட போய் கேளும்மா என்றாள்..

 மந்திர வார்த்தைக்கு கட்டுண்டவளாய் அந்த சார் முன் போய் நின்றாள் ..

ஐயா!!

ஒரு ஆறாயிரம் ரூவா பணம் எடுக்கணும்யா?

புத்தகத்தை வாங்கினார்..

எந்த பணம் ஏறணும்மா உனக்கு? உன் அக்கவுண்டுல பணம் ஒண்ணும் இல்லியேம்மா என்றார்..

பயிரு துட்டு ஆறாயிரம் யா..

இங்க யாருக்கும் இன்னும் ஏறலமா..

என் அக்கா, மைனி எல்லாருக்கும் ஏறிருக்கு சார்..

அவங்களுக்கு எங்க அக்கவுண்டு இருக்கு?

அது வேற பாங்குல சார்..

ஓ…

நம்ம பாங்குல ஏற இன்னும் ஒரு வாரம் ஆகும்மா..

இப்படி எத்துன வாரம் சொல்லிட்டாங்க இந்த பெரியவங்க எல்லாம்..

என்று மனதுக்குள் புழுங்கினாள்.

அப்ப அடுத்த வாரம் திங்ககிழம வாறேன் சார்..

இல்ல இல்ல திங்ககிழம கூட்டமா இருக்கும்..

செவ்வாய் வாம்மா..

சரிசார் என்றவள், பாங்கின் வெளியில் வந்தாள்..

நெஞ்சு துடிதுடித்தது..

சார்! நம்ம பாங்குல மட்டும் ஏன் பணம் ஏறல சார், ஹெட் ஆபிஸ் ல என்ன சொல்றாங்க? என்று எழுத்தர் மேலாளரிடம் கேட்டார்.

ஏன்னு தெரியல, மேலையும் ஒண்ணும் சொல்லல, நாமளும் பணம் ஏறும், ஏறும்னு நெறைய அக்கவுண்ட ஓப்பன் பண்ணி விட்டுட்டோம்..

 எத்தனையோ தடவ ஹெட் ஆபிஸ் ல இன்பார்ம் பண்ணியாச்சு..

உனக்கு வந்ததுக்கு எனக்கென்னங்கற மாதிரி ஹெட் ஆபிஸ்  இருக்கு….

ஏமாந்து போற மக்கள் கிட்ட என்ன சொல்றதுன்னே தெரியல..

இனிமேலும் ஊறுன வெத்து மட்ட மாதிரியே இவனுங்க ஒரு ரெஸ்பான்ஸும் இல்லாம இருந்தானுங்கன்னா, நாமளே இனி இங்க பயிர் பணத்துக்காக அக்கவுண்ட் வச்சிக்காதீங்க..

வேற பாங்க ஐ பாத்து போங்கன்னு சொல்லிர வேண்டியது தான்..

லேசாய் கறுக்கும் வானத்தின் சமிங்சையில் மகிழ்ந்து விதைநெல்லை தயார் செய்யும் போது, வானம் திடீரென மாறி கூர் வெயிலால் காடு கழனியின்  பச்சையங்களை சாம்பலாக்குகையில் வரும் வேதனையும், ஏமாற்றமும் 

இப்போது ஒருசேரவந்து அவள் தொண்டையை அடைத்தது..

கொஞ்ச தூரம் விறு விறுவென நடந்து போனாள்.

செண்பக மரமொன்றின் கீழ் போய் நின்று மூச்சு வாங்கினாள்.

மரம் அவள் கவலை முகத்தைப் பார்த்து அசைவற்று நின்றது, அவளை மட்டுமே கவனித்தார் போல..

ஓ வென அழுதாள்..

மரத்தின் மேலிருந்த காகங்கள் பயந்து சிதறிப் பறந்தன..

5 comments

  1. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களின் அன்றாட போராட்டத்தையும் அவர்கள் அரசுகள் சொல்வதை நம்பி இருப்பதையும் பெரிய ஏமாற்றம் அடைவதையும் தத்துரூபமாக இக்கதை மூலம் வடித்திருக்கிறார் ஆசிரியர். வாழ்த்துக்கள். வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் இம்மாதிரியான சாதாரண ஏழை எளிய வாடிக்கையாளர்களிடம் இன்னும் நெருக்கமாக செயல்படவேண்டிய தேவையையும் இக்கதை உணர்த்துகிறது

  2. இந்த நாட்டில் ஒரு சாதாரண விவசாயின் நிலைமையை கிராமிய அழகியலோடு அற்புதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. படித்தவுடன் மனம் கனத்து விட்டது.

  3. சிறப்பான பதிவு..உண்ர்வுப்பூர்வமான வரிகள்

  4. கிராமத்து விவசாயி மத்திய அரசின் மானியத்தை நம்பி வங்கிக்கு அலைவதை நன்கு படம் பிடித்து காட்டுவதோடு அவர்களின் ஒருநாள் பணி வீணாவதையும் சுட்டியிருக்கிறார்.
    தி.க.கனகசபை

  5. ஒன்றிய அரசின் வஞ்சனையா…
    எளிய மக்களின் உணர்வுகளை உணராத கணினி கட்டமைப்பா…
    விளை பொருட்களுக்கு விலை தராத சந்தை அமைப்பா….
    கிராமத்து எளிய மக்களின் துயரப் பெருமூச்சு…..
    சிறப்பான சிறுகதை !
    பாராட்டுக்கள் 💐

Comment here...