ஆ. ஸ்ரீனிவாசன்
ஹரியானா மாநிலத்தில் ஒருங்கிணைந்த குழந்தை பராமரிப்பு என்ற அரசாங்க திட்டத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அங்கன்வாடி பணியாளர்களாகவும், உதவியாளர்களாகவும். பணிபுரிந்து வருகின்றனர். கிராமப்புரங்களில் 6 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதே இவர்களுடைய பிரதான பணி.. இதுவல்லாமல் தேர்தல் பணிகள் உட்பட அரசாங்கத்தின் பிற அலுவல்களிலும் அரசாங்கம் இவர்களை ஈடுபடுத்தும்.
கொரானா தொற்றுகாலத்தில் இவர்களுடைய பணி மகத்தானது. சுகாதார அமைப்புகளுடன் இணைந்து, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி, தடுப்பூசி மற்றும் இதையொட்டிய பிரச்சாரங்கள் ஆகிய அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முன்னின்று பனியாற்றியுள்ளனர். இந்தப்பணிகளுக்காகவே இவர்கள் ஹரியானா அரசங்கத்தால் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். .இவர்களுடைய சேவையைப் பாராட்டி மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரியா ஒவ்வோர் அங்கன்வாடி ஊழியருக்கும் தலா ரூபாய் 1000 ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.
சொற்ப ஊதியம்
இத்தகைய கடுமையான சூழ்நிலையில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஹரியானா அரசாங்கம் மத்திய அரசின் பங்கினையும் சேர்த்து மாதத்திற்கு 11811 ரூபாயும், உதவியாளருக்கு 6045 ரூபாயும் கெளரவ ஊதியமாக வழங்குகின்றது. இந்தத் தொகை மிகவும் குறைவாக உள்ளது. ஒப்பத்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கூலியான ரூ.14330 – ரூ17,520 யைவிட குறைவாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2018ல் அறிவித்தபடி ஒவ்வோர் அங்கன்வாடி ஊழியருக்கும் ரூபாய் 1500 உதவியாளருக்கு ரூபாய் 700 கெளரவ ஊதிய உயர்வும் இதுவரை வழங்கப்படவில்லை. ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த கெளரவ ஊதியம் கூட கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக வழங்கப்படவில்லை.
தொடர் வேலைநிறுத்தம்
2018ல் மாநில முதலமைச்சர், அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பந்த பணியாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்றும், 2021 டிசம்பர் 21 அன்று அவர்களுடைய ஊக்கத் தொகையுடன் கெளரவ ஊதியமும் உயர்த்தபடும் என்றும் அறிவித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
கடுமையான பணிச்சூழலில் பணிபுரியும் இவர்கள், தங்கள் கெளரவ ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், நாளும் விலைவாசி தொடர்ந்து ஏறுமுகமாகவுள்ள இந்தச் சூழலில் தங்கள் ஊதியத்திற்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரி வருகின்றனர். இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால் இவர்கள் 2021, டிசம்பர் 8 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக 2022 பிப்ரவரி 14 முதல் மாநில முதலமைச்சர் தொகுதியான கர்னால் பகுதியில் முற்றுகை போராட்டம் துவக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஹரியானா அரசின் அடக்குமுறை
நூறு நாளை நெருங்கும் இந்த போராட்டத்தை நியாயமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்காத ஹரியானா அரசு இந்த போராட்டத்தை நசுக்க பல்வேறு வழிகளிலும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. பல நூற்றுக்கணகான ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். பல தொழிலாளர்கள் தினமும் பணியிலிருந்து நீக்கப்படுவது தொடர் செய்தியாகிவிட்டது. போராட்டத்தை ஒட்டி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு வரும் வாகனங்கள் மறிக்கப்படுகின்றன. 2022, மார்ச் 3 அன்று மாநில சட்டமன்றத்தை நோக்கிய பேரணியில் கலந்து கொள்ளவிடாமல் தொழிலாளர்கள் தடுக்கப்பட, மாநில தலைநகரின் எல்லைப் பகுதிகளிலேயே அவர்கள் குவிந்து போராடி வருகின்றனர். போராட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் இவர்களின் குடும்பத்தாரின் அழுத்தமும் போராடும் தொழிலாளர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. ஐம்பதாயிரம் பணீயாளர்களில் பெரும்பாலும் விதவைப் பெண்களே உள்ள நிலையில், மூன்று மாதத்திற்கு மேல் வருமானமற்ற சூழ்நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறையையும், குடும்பத்தாரின் அழுத்தத்தையும் மீறி இவர்கள் நடத்தும் தொடர் போராட்டம் மகத்தானது.
மாநில அரசு உடனடியாக இவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இவர்கள் மேல் ஏவப்பட்டுள்ள அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே அனைத்து ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பு.
இந்தக் கட்டுரையின் மூலம் மத்திய மாநில அரசுகள் குறிப்பாக அரியானா மாநில அரசு அங்கன்வாடி தொழிலாளிகளுக்கு எதிராக செயல்படுவது வேதனையையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அங்கன்வாடி தொழிலாளிகளின் பிரச்சனைகளை ஆசிரியர் சரியாக எடுத்துரைத்துள்ளார். தொழிலாளிகளின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்