மகளிர் தின வாழ்த்துக்கள்

பாரதி

சர்வதேச மகளிர் தினத்திற்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும். என்ன எழுதலாம் என்று யோசிக்கும் போது தான், சாதித்த பெண்கள்,  சரித்திரத்தில் பெண்கள், மங்கையராய் பிறந்ததற்கு செய்த மாதவம் என பலவற்றை யோசிக்கும் நம் மனது. அன்னையர் தினத்தன்று அம்மா அம்மா என்று துதிகள் பல பாடி, மறுநாளே மாறிப்போகும் சூழலில் இந்த வருடமும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் வந்துவிட்டது. வருடா வருடம் இந்த தினத்தில் ஓர் ஆணின் வாழ்வில் பெண்களின் பங்கு அளப்பரியது என்று பேச்சுக்கள் பல பேசுவோம்.

ஆனால் நிதர்சனம் என்ன?

காலம் காலமாக திணிக்கப்படும் கட்டுப்பாடுகளை பெண்களின் நன்மைக்கு என்றும், பிற்போக்குத்தனங்களை பெண்களின் அழகியல் என்றும் இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து இயங்கும் இந்த சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் இப்படி பேதங்கள் கற்பிக்கப்படுவது தான்.

முகநூலில் வேடிக்கையாக என் நண்பர் பதிவிட்டு இருந்தார், பண்டிகை காலங்களில் வரும் வீட்டு வேலைகள் எல்லாம் ஆண்கள் தான் செய்ய வேண்டும் என்ற பாரம்பரியம் இருந்திருந்தால் பல பண்டிகைகள் என்றைக்கோ வழக்கொழிந்தே போயிருக்கும் என்று.

குடும்பத்தில், இந்த சமூகத்தில் தனக்கான மதிப்புமிக்க ஒர் இடத்தை பிடிக்க நேரம் காலம் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் பெண்கள். தனக்கான இடத்தை தக்க வைக்க கடுமையாக முயல்கிறார்கள்.

எழுத்தாளர் மாதவராஜ் ஒரு கவிதை எழுதியிருந்தார்

பெண்கள் பணிபுரிகிறார்கள்,

படிதாண்டுகிறார்கள்,

படிக்கிறார்கள்,

பயணிக்கிறார்கள், ஆனாலும்…

என்று முடித்திருப்பார்.

ஆனாலும், பணிபுரியும் பெண்களுக்கு தன் சம்பளத்தில் பொருளாதார உரிமை இருக்கிறதா?

ஆனாலும், குடும்ப விஷயங்களில் கருத்து கூற உரிமை இருக்கிறதா?

ஆனாலும், பொதுப் பிரச்சனைகளில் தலையிட உரிமை உண்டா?

ஆனாலும், பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

ஆனாலும், படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு அவள் விருப்பட்ட கல்வி அளிக்கப்படுகிறதா?

என எண்ணற்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

ஏன், திடமாக தைரியமாக தன் கருத்தை வலிமையாக எடுத்துரைக்கும் எத்தனை பெண்களை நாம் ஊடகங்களில் பார்த்து பிரமித்திருப்போம்.  ஆனால் அந்தப் பெண் ஒரு வேளை நம் அக்கா தங்கையாகவோ,  மனைவியாகவோ இருந்தால்  அவ்வாறு பேச அனுமதிக்கிறோமா?

எல்லா நேரங்களிலும் பெண்களை கேள்வி கேட்டு கட்டுபடுத்தும் சமூகமாகத்தானே இந்த சமூகம் இருக்கிறது. இன்று சமூகத்தின் கேள்விகளுக்கு பல பெண்கள் நெற்றிப்பொட்டில் அடிப்பதுபோல் பதில் தர தொடங்கி இருக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது.

ஏன் பெண்களுக்கு மட்டும்  இப்படியொரு பாரபட்சம் என பல ஆண்கள் யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய முன்னேற்றம். இந்த முன்னேற்றம் தொடர்வதும் நம் கையில் தான் இருக்கிறது. அடுத்த தலைமுறையை உருவாக்கும் நம்மை போன்ற இளையோர் சரியான முறையில் இந்த பிற்போக்குதனங்களையும் ஏற்ற தாழ்வுகளையும், பாகுபாட்டையும் களைந்து சமூகத்தில் சமத்துவமும் ஒற்றுமையும் மலரச் செய்வோம்!!

பாலின பாகுபாட்டை உடைத்தெறிய முன்வரும் அத்தனை ஆண்களுக்கும், பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

8 comments

  1. வங்கி ஊழியர் ஒற்றுமை இணைய இதழ், பாலின சமத்துவத்தை போற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மார்ச் 8 – மகளிர் தின ‘அட்வான்ஸ்’ வாழ்த்துக்கள்.

    கட்டுரையாளர் பாரதிக்கும் வாழ்த்துக்கள்

  2. மகளிர் தின கொண்டாட்டங்கள் சந்தையை தீர்மானிக்கும் விஷயமாக மாறிவிடக் கூடாது. பெண்களுக்கான சம உரிமை என்பதெல்லாம் அனைவருமாக சமூகத்தில் இறங்கி போராடும் பொழுது தான் நிஜமாகும். இக்கட்டுரை இதுகுறித்த சில புரிதல்களை ஏற்படுத்துகின்றது. ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்

  3. சமூக யதார்த்தத்தை மிக
    நேர்த்தியாக பதிவு செய்திருக்கும் கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்…

    அதீத போற்றுதலும், வழிபடுதலும், தெய்வீகத் தன்மையைப் புகுத்துவதும் பெண்ணடிமைத்தனத்திற்கே வழிகோலும். பெண்ணைத் தோழியாக, சகமனுஷியாகப் பார்க்கும் பார்வையே அவசியத் தேவை…

  4. பெண்களின் நிலைமையை சரியாக எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் சடங்குகள் சம்பிரதாயங்கள் பெண்களை மையமாக வைத்து நடத்தப்படுவது அவர்களை அடிமையாக வைப்பதற்கான ஏற்பாடுதான்.

  5. ஆம். உண்மை தான்.அருமை. அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு இவற்றிலிருந்து “விட்டு விடுதலையாகி ” நாம் வெளிவரும் காலம் இன்னும் கொஞ்ச தூரம்.

  6. சிறப்பு!இன்னும் சிறப்பாக புதுமையாக எழுத முயற்சி செய்திருக்கலாம்.

  7. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமல்ல, ஆட்சியாளர்கள் மனமும் கொள்கையும் மாற வேண்டும். சட்டமியற்றும் அதிகார அமைப்புகளில் குறைந்தபட்சம் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு தரப்பட வேண்டும் !

Comment here...