உக்ரைனில் உடனே போரை நிறுத்து!

போர் மனித குலத்துக்கெதிரானது!

ஐ. ஆறுமுகநயினார்

பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி துவங்கி கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கக் கூடிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அமைதியை விரும்பக் கூடிய மக்களும்,  நாடுகளும் கோரி வருகிறார்கள். இரண்டு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு அரசு முறையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பல லட்சக்கணக்கான வெளிநாட்டினரும், மாணவர்களும், போர்ச் சூழலில் இருந்து தப்பிப் பிழைத்து வெளியே வந்துள்ளனர். உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. முக்கியமான நகரங்களும், தொழிற்சாலைகளும், அணுஉலைகளும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழே வந்துள்ளன. 600க்கும் மேற்பட்ட ரஷ்ய படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் போரில் பலியாகி உள்ளனர்.

எண்ணெய் விலை கடுமையாக உயர்வு

இந்த போர் எப்போது, எப்படி முடியும்? என உலகெங்கிலும் உள்ள அமைதியை விரும்பக் கூடிய மக்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகளில் எண்ணெய் சில்லரை விற்பனையில் ஒரு கேலனுக்கு மூன்றரை டாலரிலிருந்து ஐந்து டாலராக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 130 டாலரை எட்டியுள்ளது. அதிகளவில் சமையல் எண்ணெயும், கோதுமையும் உற்பத்தி செய்யக்கூடிய ரஷ்யாவும், உக்ரைனும் போரில் இறங்கி இருப்பதால் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெருகி வரும் எண்ணெய் நெருக்கடி / விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த போரை நிறுத்துவதற்கு முயற்சி எடுப்பதற்கு பதிலாக போரை நீட்டிக்க அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டுக் கொண்டே, அதேசமயம் எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைக்க, எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளின் கதவை தட்டி வருகிறது அமெரிக்கா. வெனிசுலாவை அது நிர்ப்பந்தம் செய்கிறது. சௌதி அரேபியா, அமீரகம் போன்ற நாடுகளை நிர்ப்பந்தித்து தோல்வி அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி போக்குகள் உலக பொருளாதாரத்தின் மீதும், விலைவாசி மீதும், சாதாரண மக்களின் வாழ்க்கை மீதும் மிக கடுமையான நெருக்கடியை வருகிற வாரங்களில் ஏற்படுத்தும்.

போரை நிறுத்த நிபந்தனைகள்

இந்த போரை நிறுத்துவதற்கான பிரதான கோரிக்கைகளாக இருக்கக் கூடிய விஷயங்கள்

¨          நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவடையச் செய்யக் கூடாது

¨          உக்ரைனுக்கு ரஷ்யாவை தாக்குவதற்காக நவீன ஆயுதங்கள் வழங்கக்கூடாது

¨          உக்ரைன் உள்நாட்டில் ரஷ்ய மொழி பேசக்கூடிய மக்களுக்கு நாசி தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்

ஆகிய மூன்று கோரிக்கைகளை ரஷ்யா முன்மொழிகிறது. இதற்கான உத்தரவாதத்தை வழங்குவதை விட்டுவிட்டு உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி அவர்களுக்கு அதிகப்படியான ஆயுதங்களும், ராணுவ தளவாடங்களும், விமானங்களும் வழங்கி போரை உக்கிரப்படுத்துகிற வேலையை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் செய்து வருவது கவலைக்குரியது.

எவ்வளவு நியாயங்களை கற்பித்தாலும் ரஷ்யாவின் போர் என்பது நியாயமற்றது, ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஆனால் அதே வேளையில் இந்த போரை ரஷ்யாவின் மீது நிர்ப்பந்தித்து இருக்கக் கூடிய ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் குற்றவாளிகளே.

¨          ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தான மின்ஸ்க் 2 ஒப்பந்தம் அமல் செய்யப்பட வேண்டும்.

¨              உக்ரைனின் நான்கரை கோடி மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர் ரஷ்ய மொழி பேசக்கூடியவர்கள். ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியை தேசிய மொழியிலிருந்து நீக்கிய  தவறை சரி செய்ய வேண்டும்.

¨              ரஷ்யாவின் ஒரே கடல் துறைமுகமான சேவாஸ்டோபோல் மூலமாக ரஷ்யா செயல்படுவதை அமெரிக்கா உந்துதலின்பேரில் உக்ரைன் தடுக்க முயற்சி செய்வது தவறு. அது நிறுத்தப்பட வேண்டும்.

¨              உக்ரைனின் கிழக்கு எல்லையில் உள்ள லுஹான்ஸ்க், டோனட்ஸ்க் ஆகிய டான்பாஸ் பிரதேசத்தில் உள்ள ரஷ்யமொழி பேசக்கூடிய மக்கள் மீது கடந்த எட்டு ஆண்டுகளாக ஜெலன்ஸ்கி தொடுத்து வந்த உள்நாட்டு தாக்குதலில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பகுதி ரஷ்யமொழி பேசக்கூடிய அந்த பிரதேச மக்களின் கோரிக்கையின் பேரில் அந்த பகுதிகள் தனி நாடுகளாக அறிவிக்கப்பட்டு ரஷ்யா அதை அங்கீகரித்துள்ளது. அதை ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த பிரச்சனை குறித்து ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் வாய் திறவாமலிருப்பது போரை நீட்டிக்கவே வழி செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு / எண்ணெய் தேவையில்  சுமார் 65 சதவிகிதம் ரஷ்யாவினால் பூர்த்தி செய்யப்படுகிறது. அந்த எரிவாயு குழாய்கள் உக்ரைன் மூலமும், போலந்தின் மூலமும், நார்டு 1 என்ற திட்டம் கடலுக்கு அடியிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எண்ணையை எடுத்துச் செல்கிறது. நார்டு 2க்கான ஒப்பந்தம் ஜெர்மனி மற்றும் பிரான்சுடன் கையெழுத்திடப்பட்டு கடலுக்கு கீழே போடப்பட்டு வருகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதாகவும், ரஷ்யாவின் உபரி எண்ணையை வர்த்தகம் செய்யும் வழியாகவும் உள்ளது. இதை அமெரிக்கா தனது வர்த்தக லாபங்களை கணக்கில் கொண்டு தடுக்க முயற்சி செய்வதை நிறுத்த வேண்டும்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் நாசிகளுடைய படையிலிருந்து உலகத்தை பாதுகாக்க 2.75 கோடி ரஷ்ய போர் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். வரலாற்றில், நெப்போலியன் ரஷ்யாவுக்கு எதிராக தொடுத்த தாக்குதலும், பின்னர் ஹிட்லரின் தாக்குதலும் உக்ரைன் வழியாகத்தான் நடத்தப்பட்டது. எனவே, ரஷ்யா அதனுடைய தேச பாதுகாப்பிற்கு உக்ரைன் சுயேச்சையான, நடுநிலைமையான நாடாக இருக்க வேண்டும் என்று கருதுகிறது. ஆனால், எதிர்மாறாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கையை முறுக்கி உக்ரைனை ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மையமாக நேட்டோ மூலம் மாற்ற முயற்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

அமெரிக்காவின் சீர்குலைவு வேலை

மேற்கண்ட மிக முக்கியமான கோரிக்கைகளை நாடுகளுக்கு இடையேயான, அரசு ரீதியான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஒழுங்குப்படுத்திட வேண்டும். ஆனால், இந்த தீர்வை குலைக்க நேட்டோ மூலமும், உக்ரைனில் உள்ள நாசி ஆட்சியாளர்கள் மூலமும் அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் கூட டான்பாஸ் பகுதியில் ஜெலன்ஸ்கி குண்டு வீசி தாக்கினார். நேட்டோ நெருக்கடியை அதிகப்படுத்தியது. இது போரில் வந்து முடிந்தது.

இந்த போரை துவங்கிய ரஷ்யா உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோவும் ஒத்துழைக்க வேண்டும். இது நடைபெறாவிடில் போர் நீடித்த ஒன்றாக நடக்கும். ரஷ்யா மீது பொருளாதார தடைகளையும், அதன்மூலம் ஒரு பொருளாதார யுத்தத்தையும் துவங்கியுள்ள அமெரிக்கா இதை செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. குறுகிய அவகாசத்தில் உக்ரைனின் நகரங்களையும், கேந்திரமான பகுதிகளையும், அணுஉலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் ஒரு பலம் வாய்ந்த நிலையிலிருந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென ரஷ்யா கருதுகிறது. இவ்வாறாக போர் நீடித்து நடப்பது ஏகாதிபத்தியவாதிகளுக்கும், ராணுவ தளவாட உற்பத்தியாளர்களுக்கும் ஒரு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. எனவே அவர்கள் போரை நிறுத்துவதற்கு பதிலாக தீவிரப்படுத்தும் வேலையை செய்து வருகிறார்கள்.

இந்தியா சீனா அமைதி கோருகின்றன

இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் இரண்டு பக்கமும் சேராமல் உடனடி போர் நிறுத்தத்தையும், அமைதியை நிலைநாட்டுவதையும் கோரி வருகிறார்கள். உலக மக்களுக்கான அமைதி சூழலை உருவாக்க, பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உலக பொருளாதாரம் மீட்சி அடைய வேண்டிய சூழலில் அதை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடிய போரை நிறுத்த வேண்டும் எனவும், உலகெங்கிலும் உள்ள சமாதானத்தை விரும்பக்கூடிய நாடுகளும், மக்களும் போர் நிறுத்த கோஷத்தை வலுப்படுத்தி வருகிறார்கள்.

“ரஷ்யாவே உடனே போரை நிறுத்து ; போர் என்பதே மனித குலத்துக்கு எதிரான பெருங்குற்றம் ; அமைதிச் சூழல் உலக மக்களின் அடிப்படை உரிமை” என்று உரக்கக் கூறுகிறார்கள்.

எனவே, பேச்சுவார்த்தைகள் மூலமாக ஒரு அமைதி ஒப்பந்தத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். எக்காரணத்தை கொண்டும் போர் தீவிரமடைவதை அனுமதிக்க முடியாது. போரை தூண்டி விடும் தீய நோக்கம் கொண்ட நாடுகளின் நடவடிக்கையை வரலாறு மன்னிக்காது.

5 comments

  1. போர் பற்றிய அபாயத்தை பேசுகின்ற அதேநேரத்தில் அமெரிக்க தலைமையிலான அமைப்பினர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களையும் இக்கட்டுரை நன்கு விளக்குகின்றது. பல புதிய தகவல்களை எனக்கு தந்துள்ளது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  2. மிக சிறப்பாக போர் பற்றிய பின்புலம் விளக்கபட்டுள்ளது. பல நுட்பமான தகவல்கள் தந்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  3. The photograph of an old woman training a gun is most disturbing. Of course, the war should be stopped as the most affected are innocents. The article has explained in detail the situation which pushed Russia into this war, which could have been avoided had the western greed been controlled.

  4. உலக நன்மையை கருத்தில் கொண்டு உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கட்டுரை சரியாக வலியுறுத்தியுள்ளது. நேட்டோவின் சட்டவிரோத விஸ்தரிப்பு முயற்சிகளையும், ரஷ்யாவின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும் இன்னும் அழுத்தமாக குறிப்பிட்டிருக்கலாம்..

  5. உக்ரைன் மீதான போரின் பின்புலத்தை புரிந்து கொள்ள உதவுகிறது கட்டுரை.
    போர் நிறுத்தப்பட வேண்டும்.
    மக்களின் துயரம் நீங்க நேட்டோ ஒத்துழைக்க வேண்டும்.

Comment here...