ந.பொன்னையா
எல்ஐசியில் ஒன்றிய அரசின் பங்குகளில் 5 சதவீதத்தினை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் சுமார் ரூ.60000 கோடிகளை திரட்டிட அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பது தேசிய அளவில் விவாதமாவது என்பது இதுவே முதல் முறை.
1994ல் மல்கோத்ரா கமிட்டி எல்ஐசியின் பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும் என பரிந்துரைத்தது. அப்போதிலிருந்து இதை நோக்கிய ஒன்றிய அரசின் அனைத்து முயற்சிகளையும், மக்களை சந்தித்து எதிர்ப்புகளை உருவாக்கியதன் மூலம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தள்ளிப்போட வைத்தது. இதற்கான் முன்மொழிவு 2008ல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு பின் வாபஸ் பெறப்பட்டது. இதன்பின் சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டோடு பட்ஜெட்டாக Money Bill ஆக எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
ஏன் விவாதமில்லை?
மக்களவையில் அருதிப் பெரும்பான்மை கொண்டுள்ள ஓர் அரசு எல்ஐசி பங்கு விற்பனை குறித்து ஏன் விவாதிக்கத் தயங்குகிறது? இதுநாள் வரை அரசு ஒரு நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்து ஒரு கற்பிதத்தினை மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்திருந்தது. ஒன்று, ”நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது. அதனை சீரமைக்கப் பணம் தேவை”; அல்லது “நட்டமில்லாத நிறுவனம் என்றால் அதனை மேம்படுத்த பணம் தேவை, எனவே பங்குச் சந்தையில் திரட்டப்படும் பணம் அந்நிறுவனத்திற்கு அளிக்கப்படுவதற்காக பட்டியலிடப்பட்டது”. ஆனால் எல்.ஐ.சி பங்கு விற்பனையைப் பொறுத்தவரை பங்குச் சந்தை மூலம் திரட்டப்படும் ஒரு ரூபாய் கூட எல்.ஐ.சி நிறுவனத்திற்கு வழங்கப்படப் போவதில்லை. இந்நிறுவனத்திற்கு பணத்திற்கான எந்தத் தேவையும் இல்லை. இந்த கற்பிதம் எல்ஐசிக்கு பொருந்தாது..
”அரசுக்குப் பணம் தேவை அதனால் விற்கிறோம்” என்கிறார்கள். 38 லட்சம் கோடி சொத்து உள்ள ஒரு நிறுவனம், அரசு சொல்லும் இடர்ப்பாடு நிதியினை (solvency margin)விட ரூ.1.5 லட்சம் கோடி அதிகமாக வைத்துள்ள ஒரு நிறுவனம், ஆசியாவிலேயே 2வது பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம், 40 கோடி பாலிசிதாரர்களை கொண்ட ஒரு நிறுவனத்தின் 5 சத பங்குகளை விற்பதற்கு அரசு சொல்லும் காரணம்தான் பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசுக்கு பயத்தை கொடுத்திருக்கிறது. எனவேதான் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான விவாதத்திற்கும் ஒன்றிய அரசு தயாராக இல்லை அதுவே மக்கள் மன்றத்தில் விவாதமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தால் மாற்றப்பட்டிருக்கிறது.
பங்கு விற்பனை வந்தால் என்ன விளைவு?
தற்போது ஒன்றிய அரசு செபியின் அனுமதிக்காக காத்திருக்கிறது. பாலிசிதாரர்களுக்கு சலுகை விலையில் பங்குகள் விற்கப்படும் என்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் உண்மையில் இதுவரை எல்ஐசி என்கிற நிறுவனத்திற்கு அரசும் பாலிசிதாரர்களுமே பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக இலாபத்தில் 5 சதம் அரசுக்கும், 95 சதம் பாலிசிதாரருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. பங்குச் சந்தைக்கு போகும்போதே பாலிசிதாரர்களுக்கு இது வரை கொடுக்கப்பட்டு வந்த 95 சத லாபப்பங்கீடு என்பது 90 சதமாக குறைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பாலிசிகளுக்கு போனஸ் குறையும். அதோடு போனஸ் அல்லாத பாலிசிகளே எதிர்காலத்தில் அதிகம் வரலாம். இது எல்ஐசியின் வணிகத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும். அத்தாக்கம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதாக அமையும். எல்ஐசியில் நம்பிக்கையே விற்பனைப் பொருள். 1956லிருந்து இன்றுவரை இந்த நம்பிக்கையே மக்களை இந்நிறுவனத்தில் தக்க வைத்திருக்கிறது.
இன்றைக்கு 5 சத பங்கு விற்பனை என்று ஆரம்பித்து, பின்னாளில் அரசுக்கு பணம் தேவை, தேச நலனுக்கு பணம் தேவை என்று ஏதாவது சொல்லி மேலும் மேலும் விற்க முற்படலாம். இதனை எதிர்த்த தொடர் இயக்கங்கள் காரணமாக தற்போதைய மசோதாவிலேயே AT ALL TIMES எல்ஐசி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். அரசின் உத்தரவாதம் தொடரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் அரசின் வார்த்தைகளில் என்றுமே நாம் நம்பிக்கை கொள்வதில்லை. வங்கித்துறையில் அரசு வாக்குறுதிகளை எல்லாம் மீறி வங்கிகளையே தனியார்மயமாக்கும் முடிவினையும், சங்கங்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புகளால் அது பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். எனவே அரசின் முடிவினை நாம் அப்படியே நம்பப்போவதில்லை. எனவே தான் அரசின் முடிவிற்கு எதிரான அனைத்து இயக்கங்களையும் நாம் எடுத்துச் செல்கிறோம்.
50% மட்டுமே சிறு முதலீட்டாளர்களுக்கு
5 சத பங்கு விற்பனை மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று சொன்னார்கள். பின் 78,000கோடி ரூபாய் என்று சொன்னார்கள். தற்போது 60000 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள். இதிலும் (5 சதத்தில்) 50 சத பங்குகள் நிறுவன முதலீட்டார்கள், அந்நிய முதலீட்டாளர்கள், முன்னுரிமை முதலீட்டாளர்கள் என்று அணுகப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 50 சதத்தினை retail investor என்ற வகையில் பாலிசிதாரர்கள், பொதுமக்கள் வாங்கலாம். அதாவது 30000 கோடி ரூபாய் பணமதிப்புள்ள பங்குகள் மட்டுமே அரசு சொல்கிற சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ”பாலிசிதாரர்களான சிறு முதலீட்டார்களையே பங்குச் சந்தை மூலமாக எல்ஐசிக்கு சொந்தக் காரர்களாக ஆக்கப்போகிறோம்” என்றெல்லாம் வீர வசனம் பேசி விட்டு, துவக்கத்திலேயே 50% பங்குகளை நிறுவன முதலீட்டாளர்களுக்கு என்று ஒதுக்குகிறது ஒன்றிய அரசு.
அரசின் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம்
இத்தகைய சூழல்களை கணக்கில் கொண்டு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து களமாடி வருகிறது. மக்களை தொடர்ந்து சந்தித்து அரசின் முடிவு நியாயமானதல்ல, அநீதியானது என்று எடுத்துரைப்பதற்கான இயக்கங்களை நாடு முழுவதும் எடுத்துச் செல்கிறது. அரசின் பங்கு விற்பனை முடிவு என்பதற்கு பணத்தேவை காரணம் அல்ல. அதுவே காரணமாயிருந்தால் அரசால் பணத்திரட்டலுக்கு செல்வ வரி, சொத்துரிமை வரி என்று பிற வழிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் அத்திசையில் ஒன்றிய அரசு செல்லாது. காரணம் ஒன்றிய அரசின் சித்தாந்தம் என்பது அரசின் கைகளில் பொதுத்துறைகள் இருக்கக்கூடாது என்பதே. அது தனியார் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே. அதனால் தான் இந்நாட்டின் தொழிலாளர் போராட்டம் என்பது அரசின் சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டமாக அமைகிறது. அதன் ஒரு பகுதியாகவே எதிர்வரும் மார்ச் 28,29 தேதி அனைத்து தொழி்ற்சங்க வேலை நிறுத்தத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்களும் இணைகின்றனர். இந்த வேலை நிறுத்தம் எல்ஐசியினை பாதுகாப்பதற்கும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்கும் மிகப் பெரும் நம்பிக்கையினை இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு நிச்சயம் அளிக்கும்.
அருமை
👍
அருமை
தெளிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. அரசின் உண்மையான நோக்கத்தை தேலுரித்து காட்டியுள்ளது.
தெளிவான கட்டுரை. தொழிற்சங்க போராட்டம் வெல்லட்டும்.
LIC has been contributing in nation building. It has served the common man in an incomparable manner. Its percentage of claim settlements is difficult to overcome by other similar institutions. As rightly stated in the article, this government has the only intention of doing away with he public sector. Its favouritism towards its corporate aides makes it stoop down to such levels, hitherto, unheard of. It is the urgent need of the working class to thwart and defeat the machinations of the Union Government to sell of public sector and its monetization policy. The two days strike on 28th and 29th March, hence, is most significant