கல்வியைக் கடைச் சரக்கு ஆக்காதே!!!

28-29 மார்ச் 2022 வேலை நிறுத்தக் கோரிக்கை!!!

ஜேப்பி

கல்வி ஒரு சுதந்திர வேட்கை

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடிநாதம் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்பதே. காலனி நுகத்தடியில் ஒட்டச் சுரண்டப்பட்ட இந்திய மக்கள் சமூகம் சுதந்திரத்தின் மூலம் உணவு, உடை, வசிப்பிடம், பொதுச் சுகாதாரம் மட்டுமல்ல, இவை அனைத்தையும் உறுதி செய்ய அனைவருக்கும் பாகுபாடின்றி பொதுக்கல்வியும் கிடைக்கும் என்று கனவு கண்டது.

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடிய மகாகவி பாரதி, தன் விடுதலைக் கனவை இப்படிப் பதிவு செய்து பாடினான்:

“வீடுதோறும் கலையின் விளக்கம்,

வீதிதோறும் இரண்டொரு பள்ளி,

நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்

நகர்களெங்கும் பலபல பள்ளி.”

சாந்திநிகேதன், விஷ்வபாரதி நடத்திய கவி குரு ரவீந்திரநாத் தாகூர்,

“... … where knowledge is free… … let my country awake”

என்று தன் விடுதலைக் கனவைப் பதிவு செய்தார்.

மறுக்கப்படும் மனித உரிமை

கல்வி ஒரு அடிப்படை மனித உரிமையாகக் கருதப்படுகிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டு காலம் ஆன பின்பும், கல்வி இன்னும் பெரும் பகுதி மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. ஒன்றிய அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் தொடங்கி தற்போதைய பாஜக வரை பொதுக்கல்வியை மலிவாகவும், நல்ல தரத்துடனும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் எந்த முனைப்பும் காட்டவில்லை. மகாத்மா காந்தி கண்ட “வாழ்க்கைக்கான கல்வி, வாழ்க்கையின் மூலம் கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கல்வி” என்ற கனவு பெரும்பகுதி மக்களுக்கு நனவாகவில்லை.

இந்திரா காந்தி எமர்ஜென்சி சமயத்தில், கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். இன்று வரை அது பொதுப்படியலிலேயே இருக்கிறது. கல்விக்கான செலவு ஒதுக்கீடு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4% அளவைக்கூட ஒரு போதும் தொட்டதே இல்லை. 1966-இல் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷனின் பரிந்துரையான “உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கான ஒதுக்கீடு” என்பது இன்றுவரை கனவாகத்தான்  இருக்கிறது.

கடைச் சரக்காகும் கல்வி

பொதுக்கல்விக்கான கொள்கை இல்லை. திட்டம் போட்டாலும் ஒதுக்கீடு செய்வது இல்லை. அரசுப் பள்ளிகள் அநாதைகளாக்கப்பட்டு தனியார் கல்வி நிலையங்களை நாட மக்கள் உந்தப்படுகிறார்கள்.  இதன் மூலம் மக்கள் வருமானத்தில் ஒரு கணிசமான பகுதி தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணக் கொள்ளையில் பறிபோகிறது. இதனால் நிரந்தர வருமானம் அற்ற, குறைந்த வருமானம் பெறும் ஏழைகள், SC/ST பிரிவினர் தங்கள் சந்ததிக்கு தொடர்ந்து தரமான கல்வியை உறுதி செய்ய முடியவில்லை.

இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான செலவு ஒன்றிரண்டு கோடி ஆகும் என்ற நிலையில், நடுத்தர வர்க்க மக்களும் கூட 30-40 இலட்சம் செலவில் மருத்துவம் படிக்க தங்கள் குழந்தைகளை உக்ரைன் போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்ப மறைமுகமாக நிர்ப்பந்தப் படுத்தப் படுகிறார்கள். உயர்கல்வி கற்க, நீட், காட் என்று பல நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருப்பதால், தனியார் கோச்சிங் நிறுவனங்களுக்கு இலட்சக் கணக்கில் தண்டச் செலவு செய்ய மக்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

காவி மயமாகும் கல்வி

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, 2020 பொதுக் கல்வியின் சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்க நினைக்கிறது.  கல்வித் துறையில் முழுத் தனியார் மயமாக்கலுக்கான கதவை அகலத் திறந்து வைக்கிறது. சமத்துவமின்மை, சமூகப் பாகுபாடுகளை ஒருபோதும் கேள்வி கேட்காத, ஒருபோதும் மீறாத ஒரு இளைஞர் / மாணவர் சமூகத்தை உருவாக்குவதையே இக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வி வழங்க “உண்மையான தொண்டு நிறுவனங்களுக்கு” வரவேற்புக் கொடி காட்டுவதன் மூலம் சங்பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ்சின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களுக்கு இடத்தை உருவாக்கி காவிமயப் படுத்தப்பட்ட கல்வியை உறுதி செய்ய முயல்கிறது. அறிவியல் மனப்பான்மைக்கு பதிலாக, ஆதாரமற்ற மற்றும் அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகள் மற்றும் கட்டுக்கதைகளை கல்வியின் கோட்பாடாக மாற்ற பாஜக அரசு முனைகிறது. “பழமை”, “இந்துப் பெருமை” என்று பொய்க்கதை பேசி “மாற்றான்கள்” மீது வெறுப்பு உணர்வைத் தூண்டும் கலாச்சாரச் சீரழிவுக்கு வழி வகுக்கும், பன்முகத் தன்மையைப் பகைக்கும் கல்வியைத் திணிக்க முயல்கிறது.

தேவை ஒரு மாற்றுக் கொள்கை

  • நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய, நல்ல தரமான கல்வியை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகளை அதிகம் திறக்க வேண்டும்.
  • தொழில்நுட்பக் கல்வி, தொழில்முறைக் கல்வியை அனைவருக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
  • அரசுப் பள்ளிகள் கல்லூரிகளின் உள்கட்டமைப்பை நன்கு ஒழுங்கமைக்க வேண்டும்.
  • அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு போதிய சமபள நிச்சயிப்பின் மூலம் நல்ல கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 6 சதவீதமாவது கல்விக்காக ஒதுக்கீடு செய்து செலவிட வேண்டும்.
  • கல்வித்துறையில் ஆதாயம் தேடிக் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை, விரிவாக்கத்தை அரசு கட்டுப் படுத்த வேண்டும்.
  • உயர்கல்வி நிலையங்களின் சுயாட்சியை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
  • அரசியல் சாசன மாண்புகளின் ஆதாரத்தில், அறிவியல் மனப்பான்மையின் அடிப்படையில் கல்வி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • கல்வியை லாபம் ஈட்டும் தொழிலாகக் கருதும் கொள்கைகளைத் திரும்பப் பெறு!!!

அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்காதே!!!

28-29 மார்ச்  2022 பொது வேலை நிறுத்தத்தில் திரளாகக் கலந்து கொண்டு, இது போன்ற மக்கள் விரோதக் கொள்கைகளை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று ஒன்றிய அரசுக்கு தெளிவாகச் சொல்வோம்.

5 comments

  1. எல்லோருக்கும் இலவச கல்வி என்பதை நோக்கி அரசு நகர வேண்டும். இது குறித்த பல தகவல்களை இக்கட்டுரை நன்கு விளக்குகின்றது. வாழ்த்துக்கள்

  2. அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு ஒதுங்கக் கூடாது !

Comment here...