விவசாயத்தைப் பாதுகாப்போம்!!!மக்களைக் காப்போம்!!!

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம்!!!

ஜேப்பி

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய விவசாய நாடு.  மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தனது நிரந்தர வருமானத்திற்காக உருவாக்கிய ஜமீன்தாரி முறை, பணப்பயிர் சாகுபடி, ஏற்றுமதிக்கான சாகுபடி, பெருந் தோட்டத் தொழில்கள் ஆகியவற்றால் இந்திய மக்களுக்கு பஞ்சமும் பட்டினிச் சாவுமே பரிசாகக் கிடைத்தன. நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” ஆகும் என்பது ஏழை விவசாயிகளின் சுதந்திரக் கனவாக இருந்தது.  சுதந்திரத்திற்குப் பிறகும் பெரும்பகுதி இந்தியர்களுக்கு மகாகவி பாரதி கோரிய “காணி நிலம்” என்பது கனவாகவே இருக்கிறது.

விவசாயத்தை நம்பி வாழ்வை இழக்கும் சிறு குறு விவசாயிகளும், தொழிலாளர்களும், அன்றாடக் கூலி வேலை செய்து உயிர் பிழைக்க, மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்கின்றனர். புலம் பெயராமல் உழவு நடத்தும் விவசாயிகளில் கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வஞ்சக வாக்குறுதி அரசியல்

பெரும் பகுதி மக்கள் விவசாயத்தையே சார்ந்து இருக்கும் சூழ்நிலையில், ஆட்சிக்கு வருவதற்காக பாஜக போன்ற அரசியல் கட்சிகள் மக்களுக்கு விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் வாரி வீச சற்றும் தயங்குவதில்லை. 2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளாக நரேந்திர மோடியும் பாஜகவும் விவசாயிகளுக்கு அறிவித்த

 • சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி மொத்த உற்பத்திச் செலவை விட ஐம்பது சதவிகிதம் அதிகமாக சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்கும்.
 • உற்பத்திச் செலவு குறைக்கப்படும்.
 • விவசாய விளைபொருள் கொள்முதல் உத்திரவாதப் படுத்தப்படும்.

ஆகியவை எதுவும் நிறைவேற்றப்படவே இல்லை. மாறாக, பரிந்துரைப்படி C2 + 50% அளவில், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ உயர்வு வழங்குவதாக புனைந்த பொய்களை அள்ளி வீசியது பாஜக. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் 2022-23 ஆம் ஆண்டில் நெல் மற்றும் கோதுமை கொள்முதலுக்கு 2.37 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று பரபரப்பு ஏற்படுத்த முயன்றார். உண்மையில் இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூபாய் 2.48 லட்சம் கோடியை விட குறைவு

சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரை என்ன?

விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசனம், கூலித் தொழிலாளிகள், வாடகை இயந்திரங்கள் போன்ற இடுபொருட்கள் இவற்றுக்கு ஆகும் செலவு ‘A2’. ‘FL’ என்பது ஊதியம் இன்றி செய்யப்படும் விவசாயக் குடும்ப உழைப்பின் விலை. A2 + FL + நில வாடகை / சொந்த நிலம் மற்றும் நிலையான மூலதனத்தின் மீதான வட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது ‘C2’, அதாவது, மொத்த உற்பத்திச் செலவு. ‘C2 + 50%’ குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது சுவாமிநாதன் கமிஷன்.

ஆனால், பாஜக அரசு பணவீக்கம், கூடுதல் சாகுபடி செலவு போன்றவைகளைக் கூடக் கணக்கில் கொள்ளாமல் முந்தைய ஆண்டு விலையில் ஒரு சிறிய தொகையை இயந்திரத்தனமாகச் சேர்த்தது.

இதனால், விவசாயிகள் நஷ்டம்தான் அடைந்தனர். விவசாயிகளுக்குச் செய்யும் ‘வரலாற்றுத் துரோகம்’ இது என்று அனைத்திந்திய கிசான் சபா (AIKS) கண்டனம் செய்தது. உண்மையில், மாநில அரசுகள் தங்கள் செலவுக் கணக்கீடுகளின் அடிப்படையில் பரிந்துரைக்கும் விலை, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட விலையை விட அதிகம். உத்தரவாதப்பட்ட கொள்முதல் இல்லாததால், விற்பனைக்கு வணிகர்களின் தயவையே நாடி உள்ள பெரும்பான்மையான விவசாயிகளுக்கு இந்த அற்ப விலை கூட கிடைக்கவில்லை.

இரட்டிப்பாகிய துயரம் – சுருங்கிய வருமானம்

2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாக 2016ல் மோடி அரசு அறிவித்தது. ஆனால், விவசாயிகளின் துயரங்கள் இரட்டிப்பாகி, உண்மையான வருமானம் சுருங்கிவிட்டது. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) வெளியிடப்பட்ட தேசிய மாதிரி ஆய்வு 77வது சுற்றறிக்கை இந்திய விவசாயியின்  சராசரி ஒருநாள் வருமானம் வெறும் ரூ.27 என்கிறது.


அதிகரித்து வரும் சாகுபடி செலவும்,  வருமானம் குறைவதும் விவசாயிகளைக் கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது. 50 சதவீத விவசாயக் குடும்பங்கள் கடனில் தத்தளிக்கின்றன. ஒரு விவசாய குடும்பத்திற்கு சராசரியாக நிலுவையில் உள்ள கடன் ரூ.74,121 ஆக உள்ளது.ஆறு அம்சக் கோரிக்கைவிவசாயிகளுக்கு வழங்கிய  வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதோடு நிற்காமல், அவர்கள் பிழைப்புக்கே உலை வைத்து, விவசாய நிலங்களை கார்ப்பரேட் களவாணிகளிடம் ஒப்படைக்க, மூன்று கருப்பு சட்டங்களை இயற்றியது மோடி அரசு. இறுதியில், விவசாயிகளின் வீரஞ்செறிந்த தொடர் போராட்டத்தினால் கருப்புச் சட்டங்களை வாபஸ் வாங்கியது. போராட்டத்தினை முடித்துக் கொள்ள ஆறு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்தனர் விவசாயிகள்.

 1. C2+50% குறைந்தபட்ச ஆதரவு விலையை அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் பொருட்களுக்கும் சட்டபூர்வமாக்கு;
 2. மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு;
 3. காற்று மாசு மேலாண்மை சட்டத்தின் விவசாயி விரோத ஷரத்துக்களை நீக்கு;
 4. விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் உடனடியாக விலக்கிக்கொள்;
 5. விவசாயிகளைக் கார் ஏற்றிக் கொன்ற அமைச்சரைப் பதவி நீக்கம் செய்;
 6. உயிர்த் தியாகம் செய்த  விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கு;

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஒன்றிய பாஜக  அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. ஆனால், இவை நிறைவேற்றப்படவில்லை. எனவே, ஏமாற்றப்பட்ட விவசாயிகள் 31 ஜனவரி 2022ஐ ‘துரோக தினமாக’ அனுசரித்தனர். ஒன்றிணைந்த விவசாயிகள் இயக்கத்தின் 6 அம்ச கோரிக்கைகளை பாஜக அரசு ஏற்க வேண்டும் என்று கூட்டு தொழிற்சங்க இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூன்று விவசாயச் சட்டங்கள், நான்கு தொழிலாளர் குறியீடுகள் மற்றும் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் முயற்சிகள் அனைத்தும் புதிய தாராளமயக் கொள்கைகளின் பகுதியே.

ஒன்றுபட்ட 28-29 மார்ச் 2022 பொது வேலைநிறுத்தம் உழைக்கும் மக்களுக்கு ஆதரவான கொள்கை மாற்றத்திற்கான போராட்டத்தின் பகுதி.

தொழிலாளர்களே, விவசாயத் தொழிலாளர்களே, விவசாயிகளே! ஒன்றுபட்டுப் போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

5 comments

 1. The six point demands of the farmers unions are just and right. India depends on agriculture, yet the farmers are at the mercy of the government. This article has brought out the nuances of farmers plight. Will this government hear and redress the issues is a bilion dollar question. The two days strike will see the light at the end of the tunnel

 2. விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்துவது வேதனையான விஷயம்.

 3. விவசாயிகளின் போராட்டத்தை வெற்றியடையும் செய்ய தொழிலாளர் இயக்கங்கள் முழுமையாக களத்தில் இறங்க வேண்டும்.

 4. காஞ்சும் கெடுக்கும், பேஞ்சும் கெடுக்கும்..விவசாயிகளின் வாழ்க்கை எப்போதும் நிலையற்றதா?விவசாயிகளின் பிரச்னைகளை வங்கி ஊழியர்கள் அறிந்து கொள்ள உதவும் கட்டுரை…

 5. The rationale behind the farmers joining the two days All India Strike is explained in a clear and simple terms. Indian farmers ver much deserve to get their due share.👌

Comment here...