2022 மார்ச் 28,29 பொது வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

சி.பி.கிருஷ்ணன்

சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து வங்கித் துறையில் ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ, ஏஐபிஓஏ ஆகிய மூன்று சங்கங்கள் 2022 மார்ச் 28,29 ஆகிய இரு தினங்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை விடுத்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள பொதுக் கோரிக்கைகளுடன் வங்கித் துறை சார்ந்த கோரிக்கைகளயும் முன் வைத்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிவடையவுள்ளன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது 27 அரசு வங்கிகள் இருந்தன. அவற்றில் ஐடிபிஐ வங்கியை இந்த நிதி ஆண்டிற்குள் முழுமையாக தனியார்மயப்படுத்தும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மற்ற 26 அரசு வங்கிகள்  2017, 2019, 2020ஆம் ஆண்டுகளில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 12 வங்கிகளாக சுருங்கிவிட்டன. ஆனால் மறுபுறம் ஐடிஎப்சி, பந்தன் வங்கி என்ற 2 வணிக வங்கிகள், 11 பேமண்ட் வங்கிகள், 9 சிறிய தனியார் வங்கிகள் உள்ளிட்ட 22 தனியார் வங்கிகள் 2015-17 காலகட்டத்தில் துவக்கப்பட்டுள்ளன. ”தற்போதுள்ள 12 வங்கிகளில் அதிகபட்சமாக 4 வங்கிகள் மட்டுமே பொதுத்துறையில் நீடிக்கும்” என்று ஒன்றிய அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. முதல் கட்டமாக இரண்டு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று சென்ற ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் இரண்டு நாட்கள் (2021 டிசம்பர் 16,17) வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக அது தள்ளி போடப்பட்டுள்ளது.

மக்கள் சேவையில் அரசு வங்கிகள்

சாமான்ய மக்களுக்கான விவசாய கடன், சிறு, குறுந் தொழில் கடன், கல்விக்கடன், சுயஉதவி பெண்கள் குழுக்களுக்கான கடன் என்று கடன் வழங்குவது அரசு வங்கிகள் மட்டுமே. மறுபுறம் புதிய தனியார் வங்கிகளும், சிறிய தனியார் வங்கிகளும் சாமான்ய மக்களை கந்து வட்டிக்காரர்களைப் போல் கசக்கிப் பிழிகின்றன. ஆனாலும் அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில்தான் இந்த அரசு செயல்படுகிறது.

அரசு வங்கிகளையும் தனியார் வங்கிகளைப் போல் மாற்றுவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்படுகின்றன: தேவையான ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை; சேவைக் கட்டணம் என்ற பெயரில் சாமான்ய வாடிக்கையாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்; வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது; அத்துக் கூலிக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்; குறைந்த சம்பளத்தில் வணிக முகவர்கள் மூலம் நிரந்தர வங்கிப் பணிகள் செய்யப்படுகின்றன; வங்கிப் பணிகள் வெளியாட்களுக்கு விடப்படுகின்றன. இவற்றையெல்லாம் கைவிட்டு, முறையான நியமனங்கள் மூலம் ஆட்களை நியமித்து அரசு வங்கிகளை பலப்படுத்த வேண்டும்; தற்போதுள்ள வெளிப்பணியாளர்கள், முகவர்கள், தினக் கூலிகள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.

ஐபிசி சட்டம், பேட் பாங்க்

அரசு புள்ளி விவரத்தின் படியே 2020 மே மாதம் முடிய நான்காண்டுகளில் ”ரூபாய் 4.3 லட்சம் கோடி வராக் கடனுக்காக 221 வழக்குகள் ஐபிசி சட்டத்தின் மூலமாக தீர்த்து வைக்கப்பட்டன. இதில் 2.29 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது”. இதில் 7 பெருநிறுவனங்களுக்கு மட்டும் 1 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது பேட் பாங்க் என்ற ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டு, 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பிக் கட்டாத பெரு நிறுவனங்களின் கடன் ரூ. 2 லட்சம் கோடி வரை தள்ளுபடி செய்ய ஏற்பாடு செய்கிறது ஒன்றிய அரசு. கார்ப்பரேட் வராக்கடன்களை முழுமையாக வசூல் செய்ய வேண்டும். வசதி இருந்தும் திருப்பி செலுத்தாத கடனாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆகியவற்றிற்காக சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

வராக்கடன்

2014ல் மோடி அரசு ஆட்சிக்கு வரும்போது அரசு வங்கிகளின் மொத்த வராக் கடன் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் கோடி. இந்த 7 ஆண்டு காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல். அதற்குப் பிறகும் தற்போதுள்ள வராக் கடன் ரூ. 10.72 லட்சம் கோடியை தொட்டுள்ளது. இவ்வராக் கடனில் சுமார் 90% அளவிற்கு பெருங்கடனாளிகளால் ஏற்படுத்தப்பட்டது.  சாமான்ய மக்களுக்கு வழங்கப்படும் விவசாய கடன், குறுந்தொழில் கடன், கல்விக்கடன், பெண்களுக்கான சுயஉதவிக்குழு கடன் ஆகியவற்றால் ஏற்படும் வராக் கடன் ஒட்டுமொத்த வராக் கடனில் 2 சதவீதம் கூட கிடையாது.

கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதி

2020 நவம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட கொள்கை அறிவிப்பின் படி பெரிய கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டால் அத்தொழில் நிறுவனங்கள் தங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துக் கொள்வார்கள்; மக்கள் நலனை புறக்கணிப்பார்கள். இதுதான் 1969க்கு முன்னால் நமது அனுபவம். எனவே தான் 1969 ஜூலை 19ஆம் நாள் 14 பெரிய தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன. இருந்தும் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிற ஒன்றிய அரசு அதே பாதையில் பயணிக்க எத்தனிக்கிறது.

கிராம வங்கிகளின் பங்கு விற்பனை

2016ல் பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலமாக கிராம வங்கிகளின் பங்குகளில் 49 சதவீதம் வரை தனியாரிடம் கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு கிராம வங்கிகள்தான் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கான கடன் வழங்குவதில் முன்னணியில் நிற்கிறது. 22,000 கிளைகளைக் கொண்ட 43 வங்கிகள் நாடெங்கிலும் உள்ள 650க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்றால் எந்த நோக்கத்திற்காக 1976ல் இவ்வங்கிகள் உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் முற்றிலுமாக சிதைந்துவிடும். தற்போது முதல் கட்டமாக ஒன்றிய அரசின் பங்குகளை ஸ்பான்ஸார் வங்கிகளிடம் கொடுக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கிகளையும் தனியார்மயமாக்க முயற்சி

2020ஆம் ஆண்டு வங்கிகள் ஒழுங்கமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்ததன் மூலமாக இந்திய அரசாங்கம் கூட்டுறவு வங்கிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நேரடியாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டது. மேலும் நகர கூட்டுறவு வங்கிகளை சிறிய தனியார் வங்கிகளாக மாற்றுவதற்கான முயற்சியிலும் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆக ஒட்டுமொத்தமாக கூட்டுறவு வங்கிகளின் மக்களுக்கான மகத்தான சேவையை முடக்கும் விதத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

உத்திரவாதமான பென்ஷன் திட்டம்

புதிய பென்ஷன் திட்டம் ஓர் ஏமாற்று திட்டமாக உள்ளது. அதில் உத்தரவாதமான பென்ஷன் கிடையாது. பஞ்சப்படி கிடையாது. எனவே உத்தரவாதமான பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் நீட்டிக்க வேண்டும், அனைவருக்கும் பென்ஷன் அப்டேஷன் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு போராடி வருகிறது.

இக்கோரிக்கைகளையெல்லாம் முன் வைத்து  நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வங்கித் துறையிலும் வெற்றிகரமாக்குவோம்.

7 comments

  1. Ever since the Neo liberal policies pursued in our country, the PSUs in general and PSBs in particular are being privatised at the cost of sufferings of the poor. The author of this article has brought out in detail the problems faced by these banks in commercial, co-operative and RRB. The remedy before employees and officers is to organise to fight out such policies of the powers that be.

  2. ஏன் இந்த வேலை நிறுத்தம் என்று சுருக்கமாகவும், தெளிவாகவும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

  3. மார்ச் 28-29 வேலை நிறுத்தம்
    வங்கி ஊழியர்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? என்பதற்கான, சிறந்த கருத்து பிரச்சாரம் …. சிறப்பு…

  4. வேலை நிறுத்தத்திற்கான காரணங்கள்/கோரிக்கைகளை எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

  5. The article gives a clear picture of the need to thwart the government’s move to privatise public sector. It is the duty of all bank men to make this 2 days strike successful. This article should be widely circulated amongst the public in general and bank employees in particular.

  6. பொதுத்துறை வங்கிகளை சீரழிக்க ஒன்றிய அரசு எடுத்துவரும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தெளிவாக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது.

  7. ஓய்வு பெற்ற நான் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டு போராடும் கைகளோடு இணைந்து போராடுவேன்.வெல்லட்டும் வேலை நிறுத்தம்

Comment here...