CHALLENGES OF WORKING WOMEN – புத்தக விமர்சனம்

பாரதி

பெண்களின் முன்னேற்றம் சம்பந்தமாக புத்தகங்கள் படிப்பதே ஒரு வித உற்சாகத்தை அளிக்கும். காரணம்,  காலம் காலமாக ஒடுக்கப்பட்ட இந்த மண்ணின் மணிகள் அவர்கள். பல ஆண்களின் வாழ்க்கையில் போராட்டங்கள் அங்கமாகியிருக்கும். ஆனால் அதே சூழலில் வாழ்க்கையே போராட்டமாகி போனது பெண்களுக்கு. அவற்றிற்கு மத்தியில் அவர்கள் முன்னேறுவதை சக உயிராக பெருமையோடு பார்க்கவேண்டும் நாம். அப்படி பெருமையோடும், புல்லரிப்போடும் படிக்க நேர்ந்தது தான் “CHALLENGES OF WORKING WOMEN” என்ற புத்தகம். இந்த புத்தகம் வீட்டின் சகல வேலைகளையும் பார்க்கும் உழைக்கும் பெண்களுக்கானது. மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பெண்களுக்கு உரித்தாக்கினோம். பெண்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல; அவர்கள் சரிசமமாய் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அது தான் மகளிர் தின கொண்டாட்டத்தின் ஆணி வேர். அப்படி இந்த புத்தகத்தில் என்ன தான் கூறப்பட்டுள்ளது?. நாம் அறிந்த மகளிர் தினத்தின் வரலாறு,  குறைந்த ஊதியத்தையும், பாலியல் சீண்டல்களையும்,  பொறுத்து கொள்ளலாம் என்னும் புரிதலுக்கு சாட்டையடி கொடுத்த நாள் அது. தனக்கு எதிரான அநீதிக்கு வாய் திறக்கமாட்டாளென நினைத்த நினைப்புக்கு முடிவு கட்டி, முஷ்டி உயர்த்தி போராடி காட்டிய நாள் அது.

இன்றளவிலேயே அறவழியில் போராடுவோர்க்கு எத்தனை எத்தனை இடையூறுகள் வருகின்றன;  அன்று, போராடச் செல்லும் பெண்களுக்கு இந்த சமூகம் எத்தனை துவேஷத்தை உமிழ்ந்திருக்கும்?. உடலாலும், உணர்வாலும் ஒட்ட சுரண்டப்பட்டு  இருந்த அந்த உழைக்கும் பெண்கள் போராட வருவார்கள் என்று இந்த சமூகம் எதிர்பார்த்திருக்காது தான். இளம்வயதில் கணவனை இழந்ததால் வீட்டை விட்டு வெளியே அனுமதிக்காத இந்த சமூகத்தில் வேட்டியும் சட்டையும் தலையில் தலைப்பாகையும் என புரட்சியை விதைத்தவர் மணலூர் மணியம்மாள். இவர் ஓர் எடுத்துக்காட்டு தான். இவரைப் போல பல போராளிகள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். வீரம் செறிந்த போராட்டங்கள் இருந்தால் அதீத தியாகங்களும் இருக்கும் தான். பல போராளிகள் உயிர் நீத்து இருக்கிறார்கள்; பலர் தம் உறவுகளை இழந்திருக்கிறார்கள். அவர்கள் யாருக்கோ போராடி செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நமக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற, போராட வலிமையான ஒரு சங்க கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் முறை சாரா தொழிலாளர்களின் நிலைமை என்ன? அவர்களுள் பெண்களின் நிலை தான் என்ன.? என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது. ஏன் இன்றளவும் கூட பீடி சுற்றுதல், பூ கட்டுதல்,  வெடி உற்பத்தி, விவசாயம், கட்டுமானம் போன்ற பல துறைகளில் பெண்களுக்கு ஊதியம் என்பது சொற்பம் தானே.

ஐடி துறை என்பது அதி வேக வளர்ச்சி கொண்ட துறை. பெண்களுக்கு ஊதிய குறைவு இல்லையென்றாலும், சரியான தொழிற்சங்க வழிகாட்டுதலும் ஒற்றுமையும் இல்லாமல் ஐடி பெண் ஊழியர்கள் பல ஏற்ற தாழ்வை சந்திக்கிறார்கள். “பெண்கள் பங்களிப்பல்லாத தொழிற்சங்கம் ஒற்றை காலில் நடப்பதற்கு சமம் “ என்கிறார் தொழிற் சங்க ஆசான் BT RANADIVE. அப்படியான பெண்கள் பங்களிப்பிற்கு தொழிற்சங்க மூத்த தோழர்கள், அந்த பெண்களின் வீட்டிலுள்ளோரோடு பேசவேண்டும்” என்கிறார் NM SUNDARAM. பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கென்று தனிக்கழிவறை கேட்டு போராடக்கூடிய நிலையில் தான் இந்த 21 ம் நூற்றாண்டிலும் நாம் இருக்கிறோம் என்பதையும், கணவருக்கு, குழந்தைக்கு என்று பார்த்து பார்த்து சமைக்கும் பெண்கள் தனக்கு பிடித்த உணவுகளை பற்றிய கவலையே இல்லை என்பதையும் வேதனையோடு இந்த புத்தகம்  சொல்கிறது. இந்த புத்தகத்தின் TO SHARE IS FAIR என்பது என்னை ஈர்த்த ஒரு தலைப்பு. வீட்டு வேலைகளை, குழந்தை பராமரிப்பை பகிர்ந்து கொள்வாயா என்று பெண்கள் ஏக்கத்தோடு இன்றளவும் பெருமூச்சு விட்டு கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலும், வெளியிலும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்துவிட்டு இதுவே பெரிய உடல்பயிற்சி தான் என்று சிரித்து கொள்ளும் பெண்கள் ஏராளம். அரசியலமைப்பு சட்டத்தில் பெண்களுக்கென்று எண்ணற்ற சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. அவையனைத்தும் அவர்களை சென்று சேர்கிறதா? என்பது இந்த புத்தகம் சொல்லும் பாடம்.  ”அநீதியை கண்டு கோபம் கொள்வாயானால் நீயும் என் தோழனே” என்கிற சேகுவேரா போல, எந்த ஒரு ஆண் பெண்களின் சிரிப்பின் பின் இருக்கும் வலிகளை உணர்கிறானோ அவன் தான் சிறந்த மனிதன். நாம் சிறந்த மனிதரா? இந்த புத்தகத்தை படித்து பதில் தெரிந்து கொள்வோம்.

6 comments

  1. A review on a book Challenges of working Women at a time when the world held the international women’s day is more apt. The author is to be greeted. I request that book review becomes a part of BWU every week.

  2. Challenges of working women artical மிக அருமை. மகளிர் தினம் கொண்டாட்ட மேடைக்கு பேச்சு பொருளாக அமைந்துள்ளது. நிச்சயம் பயன்படுத்துவேன். அற்புதமான படைப்பு.

  3. தெளிவான, எளிய நடையிலான விமர்சனம்…கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்…

  4. உணர்வுப்பூர்வமான வரிகள்..வாழ்த்துகள்

  5. அழகாக அருமையாக எழதப்பட்டுள்ள நடை. புத்தகத்தை படிக்க தூண்டும்.

  6. “அவர்கள் யாருக்கோ போராடி செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணம்” என்ற வரிகள் புத்தகத்தை வாங்கி வாசிக்க தூண்டுகின்றன 💐

Comment here...