2022 மார்ச் 28-29 பொது வேலை நிறுத்தம்
இ.பரிதிராஜா
2022 மார்ச் 28&29 தேதிகளில் இந்தியாவின் பல்துறை தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட்ட களம் காண்கின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தில் இந்தியாவின் அனைத்து கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் பங்கேற்கின்றனர். பொதுத்துறை பாதுகாப்பு, மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை முன்வைக்கும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகளோடு, தங்களின் துறை சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
ஒன்றிய அரசின் மூர்க்கமான தனியார்மய சிந்தனைகள் கிராம வங்கிகளையும் விட்டுவைக்கவில்லை. முதலில் நேரடியாக சந்தையில் விற்க முயன்று தோற்றுப்போன அரசு, தற்போது தந்திரமாக கிராம வங்கிகளை அவற்றின் ஸ்பான்சார் வங்கிகளாக இருக்கும் வணிக வங்கிகளுக்கே விற்றுவிடும் யோசனைக்கு வந்திருக்கிறது. அதை எப்படி ஏற்க முடியும்?
ஒன்றிய அரசு கிராம வங்கிகளை ஆரம்பித்த காலத்தில், குறைந்த செலவில் வங்கிச் சேவை என்பதை அதன் கொள்கையாக வைத்திருந்தது. அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (AIRRBEA) கீழ் ஒன்றுபட்டு சுமார் 26 ஆண்டு கால போராட்டங்களுக்குப் பின்னர், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படி கிராம வங்கி ஊழியர்களும் வங்கி ஊழியர்களாக நிறுவப்பட்டுள்ளனர்; வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தையும் சில சலுகைகளையும் பெற்றனர். ஆனால், அரசோ இன்னும் முந்தைய நிலைபாட்டிலேயே, கிராம வங்கி ஊழியர்களின் அலவன்சுகள், புரமோஷன் விதிகள் போன்றவற்றில் வணிக வங்கிகளில் இருப்பதை தர மறுக்கிறது; ஓய்வூதிய திட்டத்திலும் பலவித குழப்பங்களை செய்துள்ளது.
ஸ்பான்சார் வங்கிகள் என்ற பெயரில், வணிக வங்கிகளிலிருந்து வரும் சேர்மன்களிடம் கிராம வங்கிகள் சிக்கி பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகின்றன. வணிக கட்டமைப்புகள், தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் கிராம வங்கிகள் அடுத்தடுத்த கட்டங்களை எட்ட முடியாமல் திணறி வருகின்றன. இந்திய அளவில் 30 கோடி மக்களை வாடிக்கையாளராக கொண்ட, 90% மக்களுக்கான முன்னுரிமை கடன்களை வழங்குகின்ற கிராம வங்கிகளை ஸ்பான்சார் வங்கிகளிலிருந்து விடுவித்து, மாநில அளவிலான அமைப்புகளாக மாற்றி, இந்திய அளவில் அவற்றை தேசிய கிராமப்புற வங்கியின் (NRBI) கீழ் கொண்டுவந்து நிர்வாகம் செய்வது கிராம வங்கிகளின் நிகழ்கால மற்றும் எதிர்கால சவால்களுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்பது பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரையாக உள்ளது. ஆனால், அரசோ கிராம வங்கிகளையும் விற்று அழித்துவிட முயற்சி செய்கிறது.
இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்தும் இந்த மகத்தான போராட்டத்தில் மேற்சொன்ன கிராம வங்கிகளின் பிரத்யேக பிரச்சினைகளையும் சேர்த்து கிராம வங்கி ஊழியர்கள் AIRRBEAவின் தலைமையில் இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.
கிராம வங்கிகளில் சேவைகளைப் பற்றியும் அவற்றின் இன்றியமையாத தேவை களைப் பற்றியும் அவை பொதுத்துறையில் காக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியும் ஆசிரியர் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கிராம வங்கி ஊழியர்களை வங்கி ஊழியர்களென இந்த அரசும் அமைப்பும் பார்க்க வைக்க 26 ஆண்டு கால வரலாறு தேவைபட்டது போல தேசிய கிராம வங்கியை உருவாக்க மாபெரும் போராட்டம் தேவை.
சுருக்கமாக அதே சமயத்தில் ஆழமாக கிராம வங்கிகளின் பங்கு பாத்திரத்தை ஊழியர்களின் அவலங்களை எளிமையாக கூறப்பட்டுள்ளது.