புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மீளாத் துயரங்கள்!

சே.இம்ரான்

மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட கோவிட் முதல் அலை ஊரடங்கிற்குப் பிறகு நாட்டில் அதிகம் விவாதிக்கப்பட்ட, பலரின் மனசாட்சியை உலுக்கிய, அரசியலற்று இருந்தவர்களையும் அரசியல் பேச வைத்த நிகழ்வு இந்த தேசத்தின் கட்டுமானத்தையும் பொருளாதாரத்தையும் வெறும் அற்ப சொற்ப கூலிகளில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் தொழிற்கூடங்களும், குடியிருப்புகளும் கதவடைத்த பின் தங்கள் உடைமைகளையும், இயலாதவர்களையும் முதுகில் சுமந்து கொண்டு உலகின் ஏழாவது பெரிய தேசத்தை ஓர் எல்லையிலிருந்து வேறொரு எல்லைக்கு வெறும் கால்களாலேயே நடந்து சென்ற அந்த பெருந்துயர் நிகழ்வு தான்.

இந்த பிரச்சினையின் அடிவேர்களை ஆராயாமல், தொடர்ந்து அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்படும் அதீத உழைப்பு சுரண்டல்கள் பற்றியும், உரிமை மீறல்கள் பற்றியும் பேசாமல் ஊரடங்கின் போது அவர்களின் அந்த நெடுந்தூர நடைபயண துயரை பற்றி மட்டும் பேசியதின் விளைவு பிற்பாடு அவர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கியதின் மூலமும் (அதன் கட்டண விபரங்கள் வேறு கதை), அதை மணிக்கொரு முறை ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததன் மூலமும் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியது அரசாங்கம்.

உண்மையில் நாம் எங்கிருந்து பேசத் துவங்கியிருக்க வேண்டும்? தங்கள் லாப வெறிக்காக கடும் உடலுழைப்பு கோரும் வேலைகளை எல்லாம் அற்ப கூலிகளுக்கு செய்து கொடுப்பதற்காகவே புலம்பெயர் தொழிலாளர்கள் என்றொரு மாபெரும் இனத்தையே உருவாக்கி வைத்திருக்கும் இந்த முதலாளித்துவ கட்டமைப்பின் நரித்தன அரசியல் தந்திரத்தில் இருந்து துவங்கியிருக்க வேண்டுமல்லவா? சொற்ப கூலிக்கு பணியாட்களை உருவாக்குவதற்காக இந்திய விவசாயத் துறையையே முறித்துப் போட்டதில் இந்திய பெரு  முதலாளிகளுக்கும் ஆளும் அரசுகளுக்கும் பெரும் பங்கிருக்கிறது. சிறு குறு விவசாயிகள் எல்லாம் லாபம் தராத தங்கள் நிலங்களை எல்லாம் அந்த நிறுவனங்களுக்கே அடிமாட்டு விலைக்கு விற்று அங்கேயே கூலிகளாக சேர்ந்தும், சிலர் தற்கொலை செய்தும், எஞ்சியோர் நகரங்களை நோக்கியும், பிற மாநிலங்களை நோக்கியும் இடம் பெயர்ந்து குறைந்த பட்ச ஊதியமின்றியும், சமூக பாதுகாப்பு திட்டங்களின்றியும், சுகாதாரமான தங்குமிடமின்றியும், மனித உரிமைகளைத் துறந்தும் மாபெரும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரே வேலையை செய்ய ஒரு நிரந்தரத் தொழிலாளி பெறும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கையே இவர்கள் பெறுகிறார்கள் என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம். ‘ஒரே தேசம்; ஒரே பொதுமொழி; ஒரே ரேசன் காடு’ என்பதெல்லாம் எந்தத் தடையுமின்றி மாநில எல்லைகளை கடந்து தேசமெங்கும் இவர்களைக் கொண்டு நிரப்பி பெரும் லாபமீட்டவே!

Inter State Migrant Workmen’s act, 1979 (ISMW Act) சட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என பல வழிமுறைகளை வகுக்கிறது. சொந்த மாநிலத்திலும், பணியாற்றும் மாநிலத்திலும் அவர்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பணியமர்த்தும் நிறுவனம் அவர்களை பதிவு செய்து அவர்களின் முழு தகவல்களை பராமரிக்க வேண்டுமென பல வழிமுறைகளை சொல்கிறது. நடைமுறையில் இவைகளெல்லாம் பெருமளவில் பின்பற்றப்படாமல் இருந்தாலும் சட்டம் இருந்தது. ஆனால் இன்றைய ஒன்றிய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்பாக வெட்டி சுருக்கிய மசோதாவில் ISMW சட்டத்தின் முக்கிய கூறுகளையும் வலுவிழக்கச் செய்து OSHWC Act (Occupational Safety, Health & Working Conditions) சட்டத் தொகுப்பிற்குள் உள்ளடக்கியுள்ளது. இதனால் அவர்களின் உரிமைகள் மேலும் பறிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஊரடங்கில் வேலையிழந்த, மற்றும் வருமான வரி வரம்பிற்குள் வராத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூபாய் 7500 கொடுக்க வேண்டும் என்றும், ISMW சட்டத் திருத்தத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வரும் மார்ச் 28, 29 அகில இந்திய வேலைநிறுத்தம் தனது கோரிக்கையாக முன் வைத்து போராடுகிறது.

உழைக்கும் வர்க்கமாக நாம் கரம் கோர்த்து நம் போராட்டத்தை வெற்றி பெற செய்வோம்!

8 comments

 1. தோழர் இம்ரான் உங்கள் வார்த்தைகளின் ஆழம் அதிகமாக இருக்கிறது. நாம் கடந்து போன ஒரு விஷயத்தை இப்படி மனத்தை உலுக்கும் வகையில் பதிவிடுவது தான் உசிதம். அருமை எங்கள் தோழரே!

 2. புலம்பெயர் தொழிலாளிகள் அனுபவித்த வேதனைகளை கட்டுரையாளர் தத்துரூபமாக எடுத்துக்காட்டியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி பத்திரிகையும் தொடர்ந்து சமூக அவலங்களை அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எழுதி வருகிறது. இவையாவும் பெருமளவில் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் உள்ளது. இந்த இருநாள் பொது வேலைநிறுத்தம் அரசின் கொள்கைகளை பின்னுக்குத் தள்ளும் என்று என்னுகிறோம்.

 3. இந்த பொது வேலைநிறுத்தம் அவர்களின் நலனுக்காகவும்தான் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டா?

 4. Comrade Imran has brought out the basic issues which have to be addressed. His choice of words and sentence formations are unique and fresh. Great!!!

 5. அருமை அன்பு தோழரே
  அவர்களின் பாதங்களில் வழிந்த குருதி நம் இதயங்களை உலுக்குகிறது. நமது போராட்டங்கள் இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்போம்…..

 6. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களை ஆழமாக உறுக்கமாக கூறப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

 7. உதிரி பாட்டாளிகளின் பட்டாளம் உருவாக்கமும் அவர்களை இரக்கமற்று சுரண்டும் இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை சமூகத்தின் கோரம் மனதை உலுக்குகிறது.
  மார்ச் 28&29 அகில இந்திய வேலைநிறுத்தம் வெல்லட்டும் !

 8. Short,clear.
  பத்திரிகையும் தொடர்ந்து சமூக அவலங்களை அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எழுதி வருகிறது. இவையாவும் பெருமளவில் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் உள்ளது.

Comment here...