2022 மார்ச் 28-29 பொது வேலை நிறுத்தம்
சி.பி.கிருஷ்ணன்
1990 களில் புதிய பொருளாதார கொள்கை அமுலாகத் தொடங்கியதிலிருந்து 21 வது முறையாக இந்திய தொழிலாளி வர்க்கம் 2022 மார்ச் 28,29 – இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
ஏன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்?
”எல்லாவற்றையும் சந்தை தீர்மானிக்கும் என்பது எங்களின் பழைய சித்தாந்தம். எல்லாவற்றிலும் தலையிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்து, சில ஏகபோக முதலாளிகளை உருவாக்குவதுதான் எங்கள் திட்டம்” என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ”இல்லை. நீங்கள் பதவி ஏற்கும்போது அரசமைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டுதான் பதவி ஏற்றீர்கள். அரசமைப்புச் சட்டம் ஏகபோகத்தினை தடுக்கும் வகையில் சட்டமியற்றப்பட வேண்டும் என்று வழிகாட்டும் நெறிமுறைகளில் தெளிவாகக் கூறியுள்ளது. எனவே எல்லோருக்கும் வருமானப் பகிர்வு சமமாகக் கிடைக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதை முன் வைத்து தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.
வாரம் 5 நாட்கள் – 35 மணி நேர வேலை
”தொழிலாளர்களை ஒட்ட சுரண்டுவதுதான் எங்கள் கொள்கை. எனவே நாங்கள் மாநில அரசுகள் மூலமாக வேலை நேரத்தை நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றுகிறோம்”. என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ”எட்டு மணி நேர வேலை-எட்டு மணி நேர உறக்கம்-எட்டு மணி நேர ஓய்வு என்பது நூறாண்டுகளுக்கு முன்பே எங்கள் மூதாதையர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமை. அதை ஒரு போதும் விட்டுத் தரமாட்டோம். ”வாரம் ஐந்து நாட்கள்-35 மணி நேர வேலை” என்பதுதான் எங்கள் புதிய கோரிக்கை” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதற்காகத் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.
கேந்திரமான துறைகள் அரசின் கையில்தான் இருக்க வேண்டும்
”உற்பத்தியில் ஈடுபடுவது அரசின் வேலை இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் என்பதே மரணிப்பதற்காக பிறந்தன. எனவே எல்லா தொழில்களிலிருந்தும் அரசு வெளியேறி விடும். சில கேந்திரமான தொழில்களில் மட்டும் அரசு பெயரளவுக்கு இருக்கும்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். ”இல்லை. உற்பத்தியில் ஈடுபடுவது அரசின் கடமை. பொதுத் துறை நிறுவனங்கள்தாம் பொருளாதார ஏற்ற-தாழ்வை குறைப்பதற்கான கருவிகளாக செயல்படுகின்றன. குறிப்பாக பாதுகாப்பு (Defense) சக்தி (Energy), போக்குவரத்து (Transport), தொலை தொடர்பு (Communication) நிதி (Finance), கல்வி (Education), சுகாதாரம் (Health) உள்ளிட்ட அனைத்து கேந்திரமான துறைகளும் முழுமையாக அரசின் கையில்தான் இருக்க வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதை வலியுறுத்தித் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.
“எதை அரசின் கைகளில் வைத்துக் கொள்வது; எதை தனியாரிடம் கொடுப்பது என்பதையெல்லாம் நாங்கள்தான் தீர்மானிப்போம். அதற்காக போராட்டம் எல்லாம் செய்யக் கூடாது. அதுவும் கேந்திரமான பாதுகாப்புத் துறையில் கூடவே கூடாது. மீறினால் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டம் (EDSO) கொண்டு வந்து போராட்டத்தை முடக்குவோம்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “அரசின் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்க மாட்டோம். எது அரசுத் துறையில் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. நாட்டின் பாதுகாப்பு அரசின் கைகளில் மட்டுமே இருக்க வேண்டும்; தனியார் கைகளுக்கு போகக் கூடாது. இதை வலியுறுத்தி நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். மீறி முடக்க சட்டம் கொண்டு வந்தால் அதையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதற்காகத் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.
குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும்
“விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க, விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிக்க, நியாய விலைக் கடைகளை இழுத்து மூட நாங்கள் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தால் அவற்றை எதிர்த்து போராடி முறியடிக்கிறீர்கள். எனவேதான் குறைந்தபட்ச ஆதார விலையெல்லாம் கொடுக்க முடியாது என்று இழுத்தடிக்கிறோம்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “விடமாட்டோம். அனைத்து விளைபொருட்களுக்கும் சட்டபூர்வமாக குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும்; அரசே அனைத்து கொள்முதலையும் மேற்கொள்ள வேண்டும்; மின்சார சட்டம் ரத்து செய்யப்படவேண்டும்; பழிவாங்கல் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்; விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதற்காகத் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.
சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்
“எங்கள் அரசு, தொழில் செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வசதி செய்து கொடுப்பதில் உலகத் தர வரிசையில் முன்னேறி உள்ளது. மேலும் முன்னேறுவதற்காக தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் நீர்த்துப் போகச் செய்வோம். “அமர்த்து-துரத்து” என்பதை நடைமுறையாக்குவோம். சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை – என்பதையெல்லாம் அங்கீகரிக்க மாட்டோம்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “நாங்கள் நெடிய போராட்டம் நடத்தி வென்றெடுத்த உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தொழிலாளர் நலச் சட்டங்களை பலப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.21000/- உறுதிப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன தீர்மானங்கள் 87 & 98 ”சங்கம் சேரும் உரிமை, கூட்டு பேர உரிமை” உடனே அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதற்காகத் தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம்.
“எல்லா வற்றையும் மீறி நீங்கள் போராட முன் வந்தால் உங்களை சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பிரித்தாள்வதற்கான எல்லா சதிகளையும் செய்வோம்” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “போராடும் தொழிலாளிக்கு சாதியில்லை, மதமில்லை; இன வெறி இல்லை; மொழி வெறி இல்லை. கொள்கை உண்டு; கோஷம் உண்டு. கோரிக்கைகள் வென்றெடுக்க கோடிக்கைகள் போராடும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள்.
செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள் யார்?
”கார்ப்பரேட் முதலாளிகள்தாம் இந்த நாட்டின் செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள் (wealth creators). எனவே அவர்களுக்கு சாதகமாகத்தான் அனைத்துப் பொருளாதார கொள்கைகளும் வகுக்கப்படும்” என்று ஒன்றிய அரசு அறிவித்து, அதற்கேற்றவாறு வரவு-செலவு கணக்கை சமர்ப்பிக்கிறது. ”இந்த நாட்டின் கோடானு கோடி தொழிலாளர்களும், விவசாயிகளும் தாம் செல்வாதாரங்களை உருவாக்குபவர்கள். உற்பத்தியான பொருட்களில் உழைப்பைக் கழித்துப் பார்த்தால் எஞ்சுவது வெறும் கச்சாப்பொருள்தான். உழைப்பாளர் கைப்படாமல் இந்த நாட்டில் எந்த பொருளும் உருவாகாது. எனவே அனைத்து பொருளாதாரக் கொள்கைகளும் உழைப்பாளிகளின் நலனை பாதுகாக்கும் வகையிலேயே உருவாக்கப்பட வேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதை நிலை நாட்டுவதற்காகத்தான் இந்த போராட்டம்.
வர்க்கப் போராட்டம்
”கார்ப்பரேட் முதலாளிகள் தாம் முதல் (capital) கொண்டு வருகிறார்கள்; அவர்கள் தாம் பொருளாதாரத்தின் அச்சாணி. எனவே அவர்களின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அதனை பாதுகாப்பதற்காகத்தான் இந்த அரசு உள்ளது” என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். “தொழிலாளிகளும், விவசாயிகளும்தாம் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் உழைப்பில்லாமல் ஓர் அணுவும் அசையாது. பெரு முதலாளிகளின் மூலதனம் எங்கள் முன்னோர்களின் உபரி உழைப்பின் குவியல். எனவே அனைத்து சட்டங்களும் உழைப்பாளிகளின் நலனை பாதுகாக்கும் வகையில்தான் இயற்றப்படவேண்டும்” என்று பாட்டாளிகள் சொல்கிறார்கள். அதை உறுதிப்படுத்தத்தான் இந்த போராட்டம்.
இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் பெரு முதலாளிகளுக்கும், பாட்டாளிகளுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம். இதில் பாட்டாளி வர்க்கம் நிச்சயம் வென்றே தீரும்.
அருமையான தலைப்பு.கட்டுரையின் உள்ளடக்கமும் நன்றாக உள்ளது.
இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தை முதலாளித்துவத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையேயான வர்க்கப் போராக எடுத்து வைத்துள்ள இக் கட்டுரையின் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
Good. Timely and needed article in a simple way.
A unique presentation comparing the contradicting agenda of the government and the working class.
அருமையான கட்டுரை. இரண்டு வேலைநிறுத்ததின் நியாயத்தையும் தேவையையும் படிப்பவரை உணரவைத்து தூண்டி விடுகிறது. சிறப்பு.
Very informative and convincing arguments stressing the need for the 2 days strike. Revolutionary greetings.
அழகாக ஆழமாக விளக்கப்பட்டுள்ள அரசு/கார்பரேட் கூட்டு அதை எதிர்த்த தொழிலாளர் நிலைபாடு . செரிவான கட்டுரை. வாழ்த்துக்கள்.
மார்ச் 28 &29 அகில இந்திய வேலைநிறுத்தத்தின் நியாயத்தையும் தேவையும் விளக்கி போராட்ட உத்வேகம் கொள்ள வைக்கிறது.