மக்களைக் காப்போம்!!!தேசத்தைக் காப்போம்!!!

28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம் வெல்லட்டும்!!!

ஜேப்பி

இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் இந்திய மக்கள், தங்களுக்கென்று, தாங்களே  உருவாக்கியது எனச் சொல்லப்படுவது. அதன் முகப்புரை – இந்தியா  “சோஷலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையிலான ஒரு மக்களாட்சி” என்று அறிவிக்கிறது. “சமூக, பொருளாதார, அரசியல்” நீதி வழங்குவது குறிக்கோள் எனக் கூறுகிறது.

பொய்த்துப் போன மக்கள் கனவு

ஆனால் விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறிக்கோளாக் கூறப்பட்ட சமூக நீதி, பொருளாதார நீதி பெரும்பாலான மக்களுக்கு கிடைக்கவேயில்லை. சாதிக் கொடுமைகள் தீவிரமாகத் தொடர்கின்றன. பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் உண்மையில் இரண்டாம்  தரப் பிரஜைகளாகத்தான் நடத்தப் படுகின்றனர். ‘சொத்து ஏற்றத்தாழ்வு’, ‘வருமான  ஏற்றத்தாழ்வு’, ‘பாலின ஏற்றத்தாழ்வு’ ஆகியவை விரிவடைந்து கொண்டே போகின்றன. மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும், பாஜகவும் மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கப் பெருஞ் செல்வந்தர்களுக்கும், கூட்டுக் களவாணி முதலாளிகளுக்கும் உதவினார்களே அன்றி ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க,  அகற்ற எந்த முறையான நடவடிக்கையும் எடுக்க வில்லை. “புதிய தாராளமயக்” கொள்கைகளைத் தீவிரமாக அமல் படுத்தி ஏற்றத்தாழ்வுகளை மேலும் மேலும் அதிகப்படுத்தி” சமூகப் பொருளாதார அநீதியைத்தான் நிலை நாட்டுகின்றனர்.

பாய்ச்சல் வேக பாஜக

மோடியின் தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, முந்தைய அரசுகளை மிஞ்சி, இந்த அநீதி மயத்தை பாய்ச்சல் வேகத்தில் அமலாக்கி வருகிறது. கூட்டாட்சியைக் குழிதோண்டிப் புதைக்க முயல்வதன் மூலம் அரசியல் நீதியையும் மறுக்கிறது.

தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் செல்லாததாக்கி நான்கு தொகுப்புச் சட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் வென்றெடுத்த உரிமைகள் அனைத்தையும் பறிக்கிறது. இதன் மூலம் உழைப்புச் சுரண்டலை எளிதாக்கி உள்நாட்டு, வெளிநாட்டு மூலதனம் அபரிமித லாபம் ஈட்ட பாதை வகுக்கிறது.

விவசாயிகள் உடைமையான விளை நிலங்களைப் பறித்து முதலாளிகளுக்குப் படைத்திட சட்டங்கள் இயற்றியது. வலுவான போராட்ட எதிரொலியில், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும், குறைந்த பட்ச ஆதரவு விலை, உத்தரவாதக் கொள்முதல், இடு பொருள் செலவுக் குறைப்பு, மின்சாரச் சட்டத் திருத்த ரத்து ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலங்கடத்தி, விவசாயக் கருப்புச் சட்டங்களின் உண்மையான நோக்கங்களை மறைமுகமாக நிறைவேற்றத் துடிக்கிறது.

கல்வி என்கிற மனித உரிமையை மக்களுக்கு மறுக்க, அதை முற்றிலும் ஒரு வியாபாரமாக்க, தங்களின் பிரித்தாளும் கொள்கையை கல்வியைக் காவி மயப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமாகச் செயல்படுத்த, “தேசியக் கல்விக் கொள்கை” ஒன்றை உருவாக்கி உள்ளது.

பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் சுகாதாரத்தையும், மருத்துவத்தையும் வியாபாரச் சூதாட்டத்திற்கு இரை ஆக்குகிறது. கொரோனா காலத்தில் தடுப்பூசிக்கு நிர்ணயித்த விலைக் கொள்கை ஒன்றே போதும் ஒன்றிய பாஜக அரசு உண்மையில் யாருக்கு சேவை செய்கிறது என்பதற்கு.

கார்ப்பரேட் சேவகன்

கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் கோடிக்கணக்கான இந்திய மக்கள் சொந்த மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தனர். அவர்களுக்கு ரயில் பயணம் மறுக்கப்பட்டது. கால்நடையாக ஆயிரம் கிலோ மீட்டர் பயணப் பட்டவர்கள் அடித்து விரட்டப் பட்டனர், தண்ணீர், உணவு இன்றி பலர் இறந்தனர். லட்சக்கணக்கான குடும்பங்கள் வருமானம் இழந்து, வேலை இழந்து, சொந்தங்களை இழந்து, பொருளாதாரத் தேக்கத்தில் நாடே தத்தளித்தது. இத்தகைய அசாதாரண, கடுமையான சூழலில் கூட, 2021 ஆண்டில் மட்டும் புதிதாக 58 பில்லியனர்கள் உருவாகி இருக்கிறார்கள் (இந்தியாவில் மொத்தம் 215 பில்லியனர்கள் உள்ளனர்).  முகேஷ் அம்பானி உலகிலேயே ஒன்பதாவது ஆகப் பெரிய செல்வந்தர் ஆகி உள்ளார். தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்கப்பட்ட “சீரம் இன்ஸ்டிடியூட்” இன் சைரஸ் பூனாவாலா உலகின் 55வது பெரிய பணக்காரர் ஆகி இருக்கிறார். கௌதம் அதானி,  2021ஆம் வருடத்தில் உலகிலேயே அதிகம் சொத்து சேர்த்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறார். ஆனால், 2021 உலகப் பட்டினிக் குறியீட்டில், இந்தியா கீழே இருந்து ஆறாவது இடத்தில் இருக்கிறது.

இவ்வாறு ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் அபரிமித சொத்து சேர்த்திருந்தாலும், லாப வேட்டையாடி வருமானத்தைப் பல மடங்கு பெருக்கி இருந்தாலும், ”இன்னும் தருகிறேன், இந்தாருங்கள்!” என்று தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் மக்கள் வரிப்பணத்தில், தொழிலாளர் உழைப்பில் உருவாக்கப்பட்ட தேசச் சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கிறது ஒன்றிய அரசு.

ஒருபக்கம் கார்ப்பரேட்டுக்கு சேவகம் செய்யும் ஒன்றிய அரசு, மறுபக்கம்  தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.5% லிருந்து 8.1% ஆகக் குறைக்கிறது. உயிரைத் துச்சமென மதித்து கொரோனா காலத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட அங்கன் வாடி ஊழியர்களுக்குப் பல மாதங்கள் ஊதிய நிலுவை வைக்கப் பட்டுள்ளது. ஊதியம் கோரும் ஊழியர்கள் ‘எஸ்மா சட்டம்’ கொண்டு அடக்கப் படுகின்றனர்.

முன் எப்போதும் இல்லாத அளவு வேலையில்லாத் திண்டாட்டம் பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நிதியைக் குறைக்கிறது.

விலைவாசி தாறுமாறாக உயர்ந்து அனைத்து பொது மக்களும் பாதிக்கப்பட்டாலும், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை நாள்தோறும் ஏற்றி மக்கள் பணத்தைக் களவாடுகிறது.

வேலை நிறுத்தம் வெல்லட்டும்

மூன்று விவசாயக் கருப்புச் சட்டங்களை முறியடித்த விவசாயிகளின் வீரஞ்செறிந்த ஒன்றுபட்ட சமரசமற்ற போராட்டம், வாடும் இந்திய மக்களுக்கு ஒரு விடி வெள்ளி.

ஒன்றிய பாஜக அரசின் தேச விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் & விவசாயி விரோதக் கொள்கைகளை எதிர்த்து தேச நலன், மக்கள் நலன், உழைப்போர் நலன்களைக் கருத்தில் கொண்டு, 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி (இந்த சுட்டியில் கோரிக்கைகள் பட்டியல் காணலாம் 👉 – (https://bankworkersunity.com/2021/12/18/2022-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a/), 2022 மார்ச் 28-29 தேதிகளில் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐயுடியு, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்களும், 70க்கும் மேற்பட்ட அகில இந்திய சம்மேளனங்களும் சேர்ந்து அறைகூவல் விடுத்துள்ளன. வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

அனைத்து உழைப்பாளர்களும் திரளாக இந்த இரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்!!!. மக்களைக் காப்போம்!!! நாட்டைக் காப்போம்!!! இனியும் மக்கள் விரோதக் கொள்கைகளைச் சகிக்க மாட்டோம் என ஒன்றிய அரசுக்கு உரக்கச் சொல்லுவோம்!!!

3 comments

  1. நடைபெற இருக்கின்ற இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தை யொட்டி இக்கட்டுரையாளர் தொடர்ந்து எழுதி வருவது பாராட்டுக்குரியது. மக்களை விழிப்படையச் செய்வதில் இப்பத்திரிகையின் பங்கு பாராட்டுக்குரியது. ஒன்றுபட்ட மக்களின் போராட்டம் ஆட்சியாளர்களை கொள்கை மாற்றத்திற்கு இட்டுச் செல்லும்.

  2. The importance of the two day strike is well explained by JP. His command over the language and subject is astounding.

  3. Very neatly presented the justification for the two day All India Strike. Excellent narrative. Very simple and good readability.

Comment here...