அகில இந்திய வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி

பல்வேறு துறை வாரி தொழிற் சங்கங்களின் அறைகூவல்களின்படி அந்தந்தத் துறைகளில் தொழிலாளர்கள் தங்கள் துறைகளை பாதுகாப்பதற்காக வேலைநிறுத்தம் உட்பட பல கட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர். ஆனாலும் ஒன்றிய அரசு, தனது மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயி விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்த சூழலில் பரந்துபட்ட கூட்டுப் போராட்டம் தேவைப்பட்டது. எனவே, மார்ச் 28-29 ஆகிய தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு, மத்திய தொழிற்சங்கங்கள், துறை வாரி சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டு மேடை அறைகூவல் விடுத்தது.

அதன் படி, கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,  ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான தங்கள் ஒன்றுபட்ட கூட்டு எதிர்ப்பை இந்த மகத்தான வேலைநிறுத்தத்தின் மூலம் ஒன்றிய அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.



இதன் மற்றொரு சிறப்பம்சம் தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து நடத்திய கூட்டுப் போராட்டம். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத, நிரந்தர, தற்காலிக, பொதுத்துறை, அரசு அலுவலக, தனியார்துறைத் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் இணைந்து நடத்தியுள்ள ஒன்றுபட்ட போராட்டம் இது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காகவும்,  உரிமைக்காகவும், விவசாயத்தைக் காப்போம் என விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் குரல் கொடுத்தனர். இந்த உழைக்கும் வர்க்க ஒற்றுமை என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.



மக்களைக் காக்க தேசத்தைக் காக்க



இந்த வேலை நிறுத்தத்தில் மக்கள் நலனை, தேச நலனைக் காக்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மக்களுக்கு விரோதமான, கார்பரேட்டுக்கு ஆதரவான தேசிய பணமாக்கல் திட்டத்தை, தனியார் மயத்தைக் கைவிடுக, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக, வரி வரம்பிற்குள் வராத ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குக,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் ஒதுக்கீட்டை அதிகரித்திடுக, அதை நகர்ப்புறங்களிலும் விரிவுபடுத்துக எனக் கோரப்பட்டது. ஒன்றிய அரசின் கார்பரேட் கூட்டுக் களவாணிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பணக்காரர்களிடம் சொத்து வரி, கூடுதல் வருமானவரி வசூலித்து வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகிய பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்து எனக் கோரப்பட்டது. மின்சாரத் திருத்தச் சட்டம் மூலம் மக்களைக் கொள்ளையடிக்காதே, அதை ரத்து செய் என வலியுறுத்தப்பட்டது. இதனுடன் தொழிலாளர்கள் விவசாயிகள் கோரிக்கைகளும் இணைக்கப்பட்டன.



‘எஸ்மா’ பாயும், ‘எட்டு நாள் ஊதியம் வெட்டப்படும்’ என்று விடுக்கப்பட்ட மிரட்டல்களைக் கண்டு பயமுறாமல்,  இரு நாள் சம்பள இழப்பையும் ஒரு பொருட்டாக மதிக்காமல், கூட்டு மேடையின் அறைகூவலுக்கு  இணங்க, உழைக்கும் மக்கள், நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றிட முன்வந்துள்ளனர்.



பாரத் பந்த்



வேலை நிறுத்தம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெற்றிகரமாக நடந்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், ஊர்வலங்கள் என்ற போராட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கேரளா, திரிபுரா, தமிழ்நாடு, ஹரியானா, மேற்கு வங்கம், அசாம் முதலான மாநிலங்களில் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் பங்கேற்றதன் விளைவாக, வேலை நிறுத்தம் ‘பந்த்’ போன்று மாறியது.



வங்கித் துறை



வங்கித் துறையில் AIBEA, BEFI & AIBOA சங்கங்களின் சார்பில் விடுக்கப்பட்ட அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டில் 50000  ஊழியர்களும்-அதிகாரிகளும், இந்தியா முழுவதிலும் 5 லட்சம் ஊழியர்களும்-அதிகாரிகளும் இணைந்து வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கினர். வங்கி ஊழியர்கள் பொதுக் கோரிக்கைகளுக்காக மக்கள் நலனுக்காக முன்வந்து போராடியது பாராட்டுதலுக்குரியது.
பொது – தனியார் துறைகள்



பொதுத்துறை, தனியார்துறை, அரசு அலுவலகங்கள் என எல்லாத் துறைகளிலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இன்சூரன்ஸ், விசாகப்பட்டினம் உருக்குத் தொழிற்சாலை, திருச்சி, ராணிப்பேட்டை பிஎச்இஎல், தெலுங்கானாவில் உள்ள சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கம், தூத்துக்குடி துறைமுகம், பாரதீப் துறைமுகம் இவற்றில் 100சதவீதம் வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. ‘பவர் கிரிட்’ நிறுவனத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. பல மாநிலங்களில் உள்ள பெரிய தொழிற்சாலை மையங்களில், தொழிற்பேட்டைகளில் வேலை நிறுத்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.



ஒன்றிய அரசு, மாநில அரசு ஊழியர்களும், பிஎஸ்என்எல் ஊழியர்கள், அஞ்சல், வருமான வரி, மற்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் பெருமளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தெலுங்கானாவில் உள்ள சாண்ட்விக், தோஷிபா போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும் முழு வேலை நிறுத்தம் நடந்தது. அசாம், வட கிழக்கு மாநிலங்கள், கொச்சி, மங்களூரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சமையல் எரிவாயு நிறுவனத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பெரிய அளவில் பங்கேற்றனர்.  ஆட்டோ, டாக்சி, ஓலா மற்றும் உபேர் போன்ற சாலைப் போக்குவரத்து பல மாநிலங்களில் செயல்படவில்லை.



அமைப்புசாராத் துறை



அங்கன்வாடி, ‘ஆஷா’, மதிய உணவு ஊழியர்கள் உட்பட 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கடைப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், கயிறு திரிக்கும் தொழிலாளர்கள் என பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் மிகப் பெரிய அளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளார்கள். முறைசாராத் தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், சுமைப்பணித் தொழிலாளர்கள், தனியார் போக்குவரத்து ஊழியர்கள் ஆகிய  கோடிக்கணக்கான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை



வெற்றிகரமாக நடந்துள்ள இந்த அகில இந்திய வேலை நிறுத்தம் தேச விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, கார்பரேட் ஆதரவுக் கொள்கைகளை கைவிட்டு,  மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி எச்சரிக்கிறது.

5 comments

  1. வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது; வாழ நினைத்து சொல்வதெல்லாம் சட்டம் ஆகணும் என்பதை ஆணித்தரமாக தங்களது போராட்டத்தின் மூலம் பதிவு செய்த கோடானு கோடி இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கும் விவசாயத்திற்கும் எனது வாழ்த்துக்கள். மிக அருமையாக நேர்த்தியாக ரத்தினச் சுருக்கமாக இப்போராட்டத்தின் வெற்றியை எழுத்தில் வடித்து கொடுத்திருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  2. அகில இந்திய வேலை நிறுத்தம் தாக்கம் – வெற்றி குறித்த நம்பிக்கை அளிக்கும் நல்ல தொகுப்பு.

  3. ஊடகங்கள் வேலை நிறுத்த வெற்றியை மறைத்தாலும் தொழிலாளி விவசாயி வேலை நிறுத்தம் மிக பிரம்மாண்டமாக நடந்தேரி உள்ளது. இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அருமையாக எழுதியள்ள ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  4. ஊடகங்கள் மறைத்த உண்மையை வெளிக் கொணர்ந்ததற்கு பாராட்டுக்கள். ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

  5. அதிகாரங்கள் ஆயிரம் இருந்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையின் முன்னால் அவை தூள் தூளாக்கப்படும்…சம்பள இழப்பையும் பொருட்படுத்தாது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு புரட்சி வாழ்த்துகள்…இறுதி வெற்றி உழைக்கும் மக்களுக்கே…

Comment here...