DBS வங்கியின் பென்சன் திட்டத்தை நிராகரிக்க வேண்டும்
D.ரவிகுமார்
வங்கி ஊழியர்களுக்கான பென்சன் திட்டம், பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு, ஊழியர் சங்கங்களுக்கும், வங்கிகள் நிர்வாகத்திற்குமிடையே 1993 ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் செயல்படுத்தப்பட்டது.
பின்னர் ஏற்பட்ட ஒப்நந்தம் மூலம், 01.04.2010 க்குப் பிறகு வங்கிப் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பென்சன் திட்டம் செயலாக்கப்பட்டது.
1993ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அனைத்து பொதுத்துறை வங்கிகளும், பல தனியார் வங்கிகளும் ஏற்றுக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டிலிருந்து செயல்படக்கூடிய லஷ்மி விலாஸ் வங்கியும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு அந்த வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பென்சன் பலனை அளித்து வந்தது.
2020 ல் லஷ்மி விலாஸ் வங்கி DBS எனும் அயல் நாட்டு வங்கியுடன் இணைக்கப்பட்டது. தற்போதைய DBS வங்கி நிர்வாகம் வங்கியில் தற்போது செயலில் உள்ள பென்சன் திட்டத்தை தொடருவதில் கூடுதல் பளு இருப்பதாகக் கூறி, அந்த திட்டத்தை முற்றிலும் மாற்றுவதற்கான முன்மொழிவுகளை ஊழியர்கள் முன் வைத்துள்ளது.
இதன் படி,
வங்கியில் தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கு, மார்ச் 2022 முதல், அவர்களுடைய தற்போதைய அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியை இணைத்து அதில் சரிபாதி அந்த ஊழியருக்கு பென்சனாக நிர்ணயிக்கப்படும் . அவருடைய சம்பளத்துடன், இந்தத் தொகை ஊழியருக்கு கூடுதலாக பென்சனாக தொடர்ந்து வழங்கப்படும். ஓர் ஊழியரின் பணிக்காலத்தை பொறுத்து ஒரு வருடம் முதல் அதிக பட்சமாக ஐந்து வருடம் வரை பென்சனை நிர்ணயிப்பற்கு கூடுதலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த பென்சன் தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. பணியில் உள்ள ஊழியர்களுக்கு பின்னர் கிடைக்கும் சம்பள உயர்வோ அல்லது பஞ்சப்படி உயர்வோ இவர்களுடைய பென்சன் தொகையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஊழியர் பணி ஓய்வு பெரும்போது கம்யூடேஷன் தொகை என்று எதுவும் கிடைக்காது. மாதந்திர குடும்ப பென்சன் திட்டமும் கிடையாது. ஊழியர் பணிக்காலத்திலேயோ அல்லது பணி ஓய்வு பெற்ற பின்னரோ இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஈட்டுத் தொகையாக ஒரே தவணையில் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்திற்கு மாறியபின் ஊழியர்களுக்கு வங்கி நிர்வாகம் மாதந்தோறும் வழங்க வேண்டிய 12 சதவீத மாதாந்திர பங்களிப்பு தொகை தனி கணக்கில் செலுத்தப்படும். வங்கி ஊழியர் பணி ஓய்வு பெறும்போது இந்தத் தொகை வட்டியுடன் மொத்தமாக அளிக்கப்படும்.
DBS வங்கி நிர்வாகம் அதன் ஊழியர்களின் ஆலோசனைகளுக்கு விட்டுள்ள
இந்தப் புதிய திட்டம் மேம்போக்காக பார்க்கும் போது அதன் ஊழியர்களுக்கு உடனடி பணப் பயனை அளிப்பது போல் ஒரு தோற்றத்தை அளிக்கும்.
ஆனால் உற்று நோக்கும்போது நீண்ட கால அடிப்படையில் இது பல பாதகமான விளைவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. .
- இருதரப்பு ஒப்பந்தம் மூலம் அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக கொண்டு வரப்பட்டுள்ள ஒரு திட்டத்தை ஒரு வங்கியில் மட்டும் மாற்ற முயல்வது இருதரப்பு ஒப்பந்த நடைமுறைக்கே வேட்டு வைப்பதாக அமைந்து விடும்.
- தற்போது பென்சன் திட்டத்தில் ஏற்படுத்தப்படும் இந்த மாற்றம் ஒவ்வொன்றாக மற்ற சலுகைகளுக்கும் விரிவாக்கப்படும் அபாயம் உள்ளது.
- அதேபோல் தற்போது ஒரு வங்கியில் ஏற்படுத்தப்படும் இந்த மாற்றங்கள் சிறிது சிறிதாக பிற வங்கிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.
- ஊழியர்களுக்கான செலவினக்களுக்கு, குறிப்பாக பென்சன் திட்டத்திற்கான செலவினம் அதிக அளவில் இருபதால் இந்த மாற்றம் அவசியம் என்று கூறும் DBS வங்கி நிர்வாகம் இதையே அந்த வங்கி ஊழியர்களின் பிற சலுகைகளுக்கும் கூற மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
- அதே பாணியில் மற்ற வங்கிகள் பின் தொடருவதற்கும் இது வழி வகுக்கும்.
- தற்போது வங்கி நிர்வாகம் அளிக்க முன்வந்துள்ள கூடுதல் பணப்பயன் ஊழியர்களின் அன்றாட செலவினத்திலேயே கழிந்து விடும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது தற்போது அவர்களுக்கு கிடைக்கக்கூடிய கம்யூடேஷன் தொகை கிடைக்காத போது, அவர்கள் அப்போது சந்திக்ககூடிய குழந்தைகளின் கல்வி , திருமணம், போன்ற செலவினங்களுக்கு போதிய நிதி இன்றி தவிக்கக்கூடிய அபயாம் ஏற்படும்.
இருதரப்பு ஒப்பந்த நடைமுறைகளை தனிப்பட்ட வங்கியில் மாற்றுவது பல மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஆபத்து உள்ளதால், DBS வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் இந்த மாற்று முன்மொழிவை நிராகரிப்பதே நல்லது.
நவீன தாராளமயக் கொள்கைகளின் மற்றொரு கோர முகம் தான் DBS வங்கியில் முன்மொழியப்படும் ஓய்வூதியத் திட்டம். இந்நிகழ்வினை பொதுமேடையில் அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்கின்ற கட்டுரையின் ஆசிரியருக்கு பாராட்டுக்கள். வங்கியில் இயங்கும் தொழிற்சங்கங்கள் இத் திட்டத்தை நிராகரித்து ஒப்பந்தங்களின் மூலம் ஏற்படுத்தியிருக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு இதில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்
Well said comrade
மிகவும் ஆபத்தான திட்டம். இது DBS ஊழியர்கள் மட்டுமல்ல மற்ற வங்கி ஊழியர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குவதாகும். ஒன்று பட்ட போராட்டம் காலத்தின் கட்டாயம்.
வங்கி ஊழியர்களுக்கு எதிராக இதற்குமேல் கோர முகத்தை காட்ட முடியாது.தனிப்பட்ட வங்கி சார்ந்த விஷயம் அல்ல.ஒட்டு மொத்த வங்கி ஊழியர்கள் மற்றும் அவர் குடும்பங்களுக்கின் அடி வயிற்றிலேயே கைவைக்கும் விவகாரம்.இதனை அனைத்து துறை ஊழியர்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டும்.
வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கி ஒருசில மாநில அரசுகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற முன்னெடுப்புகள் அவற்றிற்கு பெரும் பின்னடைவாக அமையும் ஆபத்து உள்ளது…முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியது இது…சம்பத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் உடனடியாக இதனை கையிலெடுத்து முறியடிக்க வேண்டும்.