கெமுன் ஆச்சே கொல்கத்தா? – நூல் விமர்சனம்

அ.ஆறுமுகம்

அழகன் சுப்புவின் ”கெமுன் ஆச்சே கொல்கத்தா” என்ற புத்தகம் ஒரு  ரசிக்கத்தக்க பயணக் கட்டுரையாகத் திகழ்கிறது. பயணக் கட்டுரை என்றால் ஏதோ அவர் சுற்றுலா சென்றார் என்பதல்ல. பணி நிமித்தம் சென்ற இடத்தில் தான் கண்ட காட்சிகளை, அனுபவங்களை,  நம் கண் முன்னே விரியச் செய்கிறார். சொல்லப் போனால் அவர் கொல்கத்தா மக்களிடையே வாழ்ந்துள்ளார்.  வெகுசிலரே மிகச் சிறந்த ரசனையோடு, இவ்வாறு  தான் பணிக்காகச் செல்லும் ஊர்களையும், மக்களையும் கொண்டாடுவர். அதில் அழகன் சுப்புவும் ஒருவர்.

பயணப்பட்ட வாகனங்களைப் பற்றி அவர் விவரிக்கிறார். ரிக்ஷாக்களில் மிதி மற்றும் மோட்டார் வகை இருப்பதை கூறுகிறார். பயணத்தின் மற்ற வகைகளான டாக்சி, ஆட்டோ, பஸ், ட்ராம் எனப்பல அம்சங்களையும் அவற்றின் அனுபவங்களையும் சுவையோடு அனுபவித்து எழுதியுள்ளது மிகச் சிறப்பு.  டாக்சிகளும் மஞ்சள் நிறத்தில் நீலப் பட்டை அணிந்து அம்பாசிடர் கார்களாகவே உள்ளன என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கத்தையும் மீறி அவை மக்களை ஈர்த்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார். ஆரியாவையும் எமி ஜாக்சனையும் ட்ராம்களில் தேடுவதாகக் கூறி மதராசப்பட்டினம் திரைப்படத்தை நினைவு கூர்ந்தது நல்ல பொருத்தம். ட்ராம் சேவை எந்த நேரத்திலும் நிறுத்தப்பட்டு கொல்கத்தா மக்கள் இதைப் பிரியவேண்டி வரலாம்  என்று கூறும் போது, ஒரு காலத்தில் நாட்டின் தலைநகர் டெல்லியிலும், மாநிலத் தலைநகர் சென்னையிலும் ஓடிக்கொண்டிருந்த ட்ராம்கள் நினைவுக்கு வந்தன.  ஹூக்ளி நதியில் படகு சவாரியும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டு ஏன் கொல்கத்தாவில் முக்கியம் பெற்றது என்பதற்கான வரலாற்றுக் காரணங்களை அவர் கூறும் விதம் மிகச் சிறப்பு. மோகன் பகான் vs ஈஸ்ட் பெங்கால் என்ற வார்த்தைகள் நாம் சிறுபிள்ளையாக இருந்த காலத்திலிருந்து காதில் ஒலித்தவை. ஆனால், பூர்வகுடிகளுக்கும், வந்தேறிகளுக்குமான ஓர் உணர்ச்சிப் போராட்டத்தின் தொடர்ச்சியே இது என்று ஓர் ஆய்வின் வழியே அதனை விளக்கியிருப்பது சிறப்பு. அதுபோன்று, தனக்கும் மற்றும் தனது இணையருக்கும்  கிடைத்த மொழி அனுபவங்களை மிகவும் ரசனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மொழி புரியாத இடங்களில், சைகை எவ்வாறு உதவியது என்பதையும் ரசனையோடு காட்சிப்படுத்தியுள்ளார். துர்கா பூஜை எவ்வாறு வங்கத்தின் கலாச்சார விழாவாகத் திகழ்கிறது என்பதையும், தமிழகத்தின் பொங்கல் போன்று, கேரளத்தின் ஓணம் போன்று நடத்தப்படுகிறது என்பதையும் அழகாகக் காட்சிப்படுத்துகிறார். 

உணவு வகைகள் பற்றி எழுதவே மூன்று தலைப்புக்கள் ஒதுக்கியுள்ளார் என்றால் பாருங்களேன். வெந்ததைத் தின்போம் என்றில்லாமல், ரசனையோடு, உண்ணும் உணவையும் ரசிக்கும் பாங்கு அனைவருக்கும் வாய்க்காது. பெங்காலி ஸ்வீட்ஸ் எனப்படும் வங்கத்தின் இனிப்பு உணவுகளைக் குறிப்பாக சூடான  (நம் ஊருக்கு பாட்டிலில் வருவது அல்ல)  ரசகுல்லாக்களைப் பற்றி எழுதும்போது நாமே உண்ணுவது போன்ற ஓர் உணர்வு வருகிறது. ஜால்மூரி, புச்கா,  தேலபாஜா, பெகுனி, பப்ரிசாட், மோமோ, சவ், கொட்டிகுரோம் என ஒரு பட்டியலே வாசித்துள்ளார். மட்பாண்டத்தில் பரிமாறும் தேநீர் பற்றியும் எழுதியுள்ளார். நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது போன்றே, கொல்கத்தாவின் உணவு வகைகளில் எளிய மக்களுக்கும் இடம் உண்டு என்பது புலனாகிறது.

நம்மூரின் அந்தக் காலத்து மூர்மார்கட்டை நினைவுகூரும் விதமாக,  கொல்கத்தாவின் பழைய புத்தகச் சந்தையான சண்டே ஸ்ட்ரீட் பற்றியும் இவர் எழுதத் தவறவில்லை. ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் விரல் நுனியில் தெரிந்து வைத்துள்ள, (பள்ளிப்படிப்புவரை மட்டுமே படித்த) அந்த விற்பனையாளர்கள் உண்மையிலேயே அதிசயிக்கத்தக்கவர்கள்தான்.

மிகக்குறிப்பாக நூலாசிரியரின் நகைச்சுவை உணர்வும், அவர் பயன்படுத்தும் உவமைகளும் அலாதியானது. போகிற போக்கில் பல இடங்களில் அவர் பயன்படுத்தும் சொல்லாடல்களில் அந்த உணர்வு இயல்பாக வெளிப்படுவதை நூல் முழுக்க பார்க்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு சொல்கிறேன்…,,,

● ஆட்டோ குறித்த கட்டுரையில், “இந்த ஆட்டோவில் பயணிப்பது என்பது  எமனின் எருமை மீது பயணம் செய்வது போன்றது.  ஓட்டுனர் மட்டும் உட்கார்ந்து செல்லக்கூடிய முன் இருக்கையில் ஒரு சில சமயங்களில் நான்கு பேர் வரை அமர வைக்கப்படுவர். அதுபோன்ற சமயங்களில் இந்த நான்காவது ஆள் அமர்ந்து உள்ளாரா அல்லது எங்காவது கீழே விழாமல் இருக்க மாட்டப்பட்டுள்ளாரா என்று கூட தோன்றும். திடீரென்று  ஓட்டுனர் நம் கால்களை மடக்கச் சொல்லுவார், கைகளை ஒடுக்கச் சொல்லுவார். அப்போதெல்லாம் நான் வேணும்னா வெளிய போய் உக்காந்துக்கவா?” என்று கேட்கத் தோன்றும் என்று சொல்வது…

● உணவு குறித்த கட்டுரை ஒன்றில், “தொண்டைவரை இல்லை, காது வரை சாப்பிட்டேன்” என்று சொல்வது…

● மொழி குறித்த கட்டுரையில், “மொழி என்பது தகவலை பரிமாறிக் கொள்ளும் ஒரு சாதனம் தான். உலகில் உள்ள எல்லா மிருகத்தையும் கண்டம் விட்டு கண்டம் மாற்றினாலும் அவை எளிதில் தகவல் பரிமாறிக் கொள்ளும். மனிதன் மட்டும்தான் விதிவிலக்கு. மனிதனின்  ஆறாம் அறிவு வாழ்தலை மிகவும் கடுமையாக்கி விட்டது” என்ற ஒப்பீடு…

● புத்தகக் கடைகள் குறித்த கட்டுரையில் “நகம் வளர்வதை எப்படி நம்மால் பார்க்க  முடிவது இல்லையோ, அதைப் போன்று தான் வாசிப்பு கொடுக்கும் மாற்றமும்” என்ற ஒப்பீடு…

● நம் ஊரில் புதிய மனிதர்களைப் பார்த்தால் சிறுவர்கள் “மாமா” என்று அழைப்பதைப் போல், இவர்கள் “காகா” என்று அழைப்பார்கள். அப்படி என்றால் சித்தப்பா என்று அர்த்தம்.  நாம் மூன்றாம் நபரைத் தாய்வழிச் சொந்தத்தை வைத்து அழைக்கின்றோம்; அவர்கள் தந்தைவழிச் சொந்தத்தை வைத்து அழைக்கிறார்கள். இதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள கலாச்சார வேற்றுமையை வாசகர்களுக்கு எளிதாகக் கடத்தி விடுகிறார்.

மொத்தத்தில் மனிதர்கள் மிக அழகானவர்கள் என்பதை இந்தப் பயணத்தின் மூலம் புரிந்துகொண்டதாக நூலாசிரியர் கூறுகிறார். முற்றிலும் உண்மை. புதிய மொழி, புதிய மனிதர்கள், புதிய கலாச்சாரம் ஆகியவை உண்மையிலேயே மனதை அகலப்படுத்துகிறது.  அழகன் சுப்பு, ரசனை மிகுந்தவர் என்பதோடு, எளிய மக்களோடு ஈடுபாட்டுடன் பழகக் கூடியவர், தொழிற்சங்க உணர்வு உள்ளவர், பல விஷயங்களையும் ஆய்வு செய்யும் மனப்பான்மை உடையவர் என்பன போன்ற விஷயங்கள் இந்தக் கட்டுரைகள்  மூலம் புலப்படுகிறது..

பதிப்பகம்: செங்கனி

ஆசிரியர்: அழகன் சுப்பு (வங்கி அதிகாரி)

நூல் விலை: ரூ.100

L

5 comments

  1. கொல்கத்தா நம் நாட்டின் கலாச்சார தலைநகர் என்றே கூறலாம். அண்ணா நகரை பற்றி அம்மக்களைப் பற்றி அவர்கள் வாழ்வு முறைபற்றி ஆசிரியர் விவரித்திருப்பது அருமையாக உள்ளது. மூலக் கட்டுரையை படிக்கும் ஆவலை தூண்டுகிறது. இந்நூலை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியருக்கு வாழ்த்துகள்

  2. விமர்சனத்துக்கு நன்றி.
    “அந்நகரைப் பற்றி ” என்பதற்கு பதிலாக ” அண்ணா நகரைப் பற்றி ” எனத் தவறுதலாகப் பதிவில் வந்துவிட்டது போலும்.

  3. தத்ரூபமாக அதே சமயம் சுவாரஸ்யமாக எழதப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பற்றிய பல விஷயங்களை இந்த நூல்
    மூலமாக கொண்டு வந்துள்ளதை நூல் வமர்சனம் மூலமாக அழகாக வடிவம் கோடுத்துள்ள ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

  4. கொல்கத்தா குறித்து நிறைய புதிய தகவல்களை சுவாரசியத்தோடு இந்நூல் வாசகர்களுக்கு வழங்கும் என்று தெரிகிறது. இந்த நூல் அறிமுகக் கட்டுரை புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்…

  5. கொல்கத்தாவை கொஞ்சம் கிள்ளி எங்கள் மனதில் பதியமிட்டுவிட்டது இப்புத்தக அறிமுகம் !
    திருவாளர்கள் அழகன் சுப்புவிற்கும் ஆறுமுகத்திற்கும் பாராட்டுகளும் நன்றியும் 💐
    புத்தகங்கள் அறிமுகப்பகுதி தொடர வேண்டுகிறேன் 🙏

Comment here...