மாநில அரசுக்கு கொடுக்க முடியாது – தனியாருக்குத்தான் கொடுப்போம் – ஒன்றிய அரசு

க.சிவசங்கர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக  செயல்பட்டு வரும் HLL Life Care Ltd. என்ற ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது ஒன்றிய அரசு.

ஒன்றிய  அரசின் சுகாதாரத்துறையின் கீழ்

1966 ஆம் ஆண்டு Hindustan Latex Limited என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த ஆலை பின்னர் 2009 ஆம் ஆண்டு HLL Lifecare Ltd என்று பெயர் மாற்றம் பெற்றது. பல்வேறு வகையான மகளிர் உடல்நலம் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் இந்நிறுவனம் கருத்தடை சாதனங்கள், காண்டம்கள் போன்றவற்றைத் தயாரிப்பதில் நாட்டிலேயே முன்னணி நிறுவனமாக உள்ளது.

தொடர்ந்து லாபத்தில் இயங்கும் மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான இது சுமார் 300 கோடி ரூபாய் சொத்து மதிப்புகளைக் கொண்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் 7 துணைநிறுவனங்களையும், 7 உற்பத்தி ஆலைகளையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

எங்களிடம் கொடுங்கள் – கேரள அரசு

பொதுத்துறைகளை இலக்கு வைத்து விற்பனை செய்து வரும் ஒன்றிய அரசு, 2022-23ம் ஆண்டில் 65000 கோடி ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன் ஒருபகுதியாக கேரள மாநில அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, HLL Life Care நிறுவனத்தையும் தனியாரிடம் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது ஒன்றிய  அரசு. ”எங்களிடம் கொடுங்கள்; நாங்கள் நடத்துகிறோம்” என்று கேரள இடது முன்னணி அரசு மத்திய அரசிடம் கேட்டது; வாதிட்டது. ஆனால் ஒன்றிய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் இறுதியாக, அந்த ஏலத்தில் கலந்து கொண்டு தாங்களே அந்த நிறுவனத்தை வாங்கி நடத்திக் கொள்வதாகச் சொல்கிறது கேரள அரசு. ஆனால் அதற்கும் அனுமதி வழங்காமல் ஏலத்தில் மாநில அரசு பங்கு பெறுவதை ஏற்க மறுக்கிறது ஒன்றிய அரசு.

கேரள அரசு ஏற்கனவே தங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வந்த Hindustan Newsprint Limited என்ற பொதுத்துறை நிறுவனத்தை ஒன்றிய அரசு விற்க முயன்ற போது, அதனை வாங்கியது. தற்போது அந்த ஆலை சீரமைக்கப்பட்டு Kerala Paper Products Limited என்று பெயர் மாற்றம் பெற்று வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் தனது உற்பத்தியைத் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“பொதுத்துறை நிறுவனங்களை விற்று பணம் ஈட்டுவது மட்டுமே இந்த ஆட்சியாளர்களின் இலக்கு அல்ல. மாறாக நல்ல நிலையில் லாபத்துடன் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு கொடுத்து, அவர்களை கொள்ளை லாபம் அடைய வைத்து தங்கள் கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டுவதே அவர்களின் முக்கிய இலக்கு என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.”

இது போன்று மக்களின் வரிப்பணத்தை வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் உற்பத்திப் பயனை மக்களுக்கு வழங்காமல், ஒரு சில பெருமுதலாளிகளுக்கு மடைமாற்றம் செய்யும் ஒன்றிய ஆட்சியாளர்களின்  மக்கள் விரோத, தேச விரோத செயல்களை புரிந்து கொள்வோம்.

6 comments

  1. ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கை களை மக்கள் விரோத கொள்கைகளை மிகத் தெளிவாக இக்கட்டுரை எடுத்துரைக்கிறது வலதுசாரி அரசிற்கும் – இடதுசாரிகள் அரசிற்கும் உள்ள கொள்கை முரணை இடதுசாரிகளின் மக்கள் ஆதரவு கொள்கைகளை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார் கட்டுரையாளர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்

  2. தனியார்மயத்தின் நோக்கம் இறுதியில் அரசு நிறுவனங்களை தனியாருக்கு ஒப்படைப்பதுதான். முதலாளித்துவ சமுகத்தின் வளர்ச்சி போக்கில் பொதுத் துறை, சிறு தொழில் எல்லாவற்றையும் விழுங்குவது அவர்களின் இலக்காக இருக்கும்.

  3. ஒன்றிய அரசு என்பதைவிட அப்பட்டமான பிஜேபி கட்சியின் நண்பர்களான குஜராத் கார்பரேட் முதலாளிகளை குளிர்விக்கும் அய்யோக்கிய தனமான போக்கினை எளிதாக விளக்கி உள்ளது.கேரள அரசின் மக்கள் சார்ந்த போக்குக்கும் ஒன்றிய அரசின் மக்களுக்கு எதிரான போக்கையும் தெளிவுபடுத்தி உள்ளது.

  4. Crony capitalism த்தின் மற்றொரு உதாரணம். கார்பரேட் களவாணிகளை குஷிபடுத்த இந்த அரசுக்கு எந்த கூச்சமும் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  5. ஒன்றிய அரசின் தேச விரோத மக்கள் விரோத மனப்பான்மை கடும் கண்டனத்திற்குரியது !

Comment here...