அமேசான் நிறுவனத்தில் உதயமாகும் முதல் தொழிற்சங்கம்

க.சிவசங்கர்

அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தில் முதல்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தனது தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 16 லட்சம் ஊழியர்கள் பணிபுரியும் இந்நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் உழைப்புச் சுரண்டல் நடைபெறுவதாக ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாக உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் இந்நிறுவனத்தின் லாபம் பல மடங்கு அதிகரித்தது. 

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

இந்நிலையில் சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நியூயார்க் குடோனில் பணிச்சுமை குறைப்பு, வேலை நேர உத்தரவாதம், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு,  மருத்துவக் காப்பீடுகள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பணிச் சூழல்களை வலியுறுத்தி ஊழியர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அவற்றில் முதன்மையாக இருந்த கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் என்ற ஊழியரை அமேசான் நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியது. 

அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர் அமேசான் ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்தைத் துவக்கி ஊழியர்கள் மத்தியில் அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மறுபுறம் அமேசான் நிறுவனம் தன்னுடைய அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி இதனைத் தடுத்திட அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. ஆனாலும் சுமார் இரண்டு வருட தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் சமீபத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் சுமார் 55 சதவீதம் பேர் தொழிற்சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்இது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும்.

புதிய நம்பிக்கை

ஆனால், இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதையே விரும்புவதாகவும் நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஓர் அமைப்பு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. தொழிலாளர்களோ, இது தங்கள் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என கொண்டாடி வருகின்றனர். பிற பகுதிகளில் உள்ள அமேசான் குடோன்களிலும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதுமே தொழிலாளர் உரிமைகளும், தொழிலாளர் நல சட்டங்களும் தொடர்ந்து நசுக்கப்படும் சூழலில், அமேசான் தொழிலாளர்களின் இந்த வெற்றி என்பது உலகத் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை விதைகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

குறிப்பாக தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் எதிரான மனநிலையைக் கொண்ட முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் அதன் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்கும் அமேசானில் ஒரு தொழிற்சங்கம் உருவாகியிருப்பது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

தொழிற்சங்கத்தால் மட்டுமே முடியும்

மேலும் ஒரு நிறுவனம் ஒப்பீட்டளவில் அதிக சம்பளமும், மேம்படுத்தப்பட்ட பணிச் சூழலையும் கொண்டிருப்பது போல் தோற்றமளித்தாலும் அங்கும் உழைப்புச் சுரண்டல் இருக்கும் என்பதற்கும், அதனை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்ப தொழிற்சங்கத்தால் மட்டுமே முடியும் என்பதற்கும் அமேசான் தொழிலாளர்களின் இந்த முடிவு சான்றளிப்பதாக உள்ளது. 

ஏகாதிபத்தியத்தின் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனத்தில் பற்றவைக்கப்பட்டிருக்கும் இந்த தீப்பொறி மற்ற பகுதிகளுக்கும் பரவட்டும். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

4 comments

  1. முதலாளி வர்க்கத்தின் கோர முகம் வெளிப்படும் இடங்களில் தொழிலாளி வர்க்கம் ஒன்று திரள வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதை இக்கட்டுரை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இதன் ஆசிரியரை மனதார வாழ்த்துகிறேன். தொழிலாளி வர்க்கம் ஒன்று திரள வேண்டிய காலச் சூழல் தான் இன்று நாம் சந்தித்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாகத்தான் அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களில் கூட தொழிற்சங்கம் இன்றியமையாத ஒன்றாக மாறுகின்றது. புதியதோர் உலகம் செய்ய பாட்டாளி வர்க்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள்

  2. அபாரம்!! நம்பிக்கை அளிக்கும் நடப்பாகும். நடக்காததை நடந்ததாக புரடா விடும் இக்காலத்தில்.. உலக நடப்பின் உண்மை நிகழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டிய bwu க்கு பாராட்டுக்கள்.

  3. வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றம் அதிலும் குறிப்பாக ஒரு ஏகாதிபத்திய நாட்டிலிருந்து என்பது உலக தொழிலாளர்களுக்கு உற்சாகம் அளிக்கின்ற ஒன்று.

  4. டாலர் தேசம் என்னும் கற்பிதங்களோடு கட்டமைக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரு தொழிற்சங்கம் அமைக்க இத்தனை சிரமம் உள்ளது என்பதை இயல்பாக கட்டுரை உடைத்து காட்டுகிறது.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொழிற்சங்க போராட்டங்களால் சிவந்து கிடந்த மண்ணை ஏகாதிபத்தியம் வென்றதாக கண்ட கனவுகள் எல்லாம் அமேசான் தொழிலாளர்கள் துடைத்து எறிந்துள்ளனர்.

    பொருள்முதல்வாத இயங்கியல் என மார்க்ஸ் குறிப்பிட்டது இதைத்தான். Changes are inevitable!

    நல்ல கட்டுரை…. வாழ்த்துகள் தோழர்!

Comment here...