நம்பிக்கை – வெளிச்சம் – திசைவழி தரும் நூல்
க.சுவாமிநாதன்
நூல் ஆசிரியர்: பி.சம்பத்
வெளியீடு:பாரதி புத்தகாலயம், விலை: ரூ.310
“சாதி – வர்க்கம் – விடுதலை” என்ற நூல் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக களமாடி வரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்புறு தலைவர் பி.சம்பத் அவர்கள் எழுதியுள்ளார்.
1990களில் நடை பெற்ற தென்மாவட்ட கலவரங்களுக்குள் இருந்த நுண் அரசியலை புரிந்து, சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக கனன்று எழுந்த தலித் எழுச்சியை உள்வாங்கி, “ஒற்றுமை” என்கிற பொதுவான முழக்கமாக மட்டும் அல்லாது பிரச்சனையின் வேர்களை ஆய்ந்தறிந்து ”சாதிய ஒடுக்குமுறை சாய்ப்போம்; மக்கள் ஒற்றுமை வளர்ப்போம்” என்கிற சரியான பார்வையை முன் வைத்ததுமான நிகழ்வுகளும் மிகமிக முக்கியமானவை.
30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணி யில் ஈடுபட்டவர், தலைமை தாங்கியவர்களில் ஒருவர் என்ற முறையில் அவரது அனுபவங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இது வெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அல்லாது சாதியின் வேர்களை தேடுவதில் துவங்கி சமகால விவாதங்களில் பங்கேற்பது வரை நம்மோடு நெருங்கி உரையாடுகிறது. 32 அத்தியாயங்கள் 300 பக்கங்கள் கொண்ட இந்த நூல் கால் நூற்றாண்டு காலமாக அவர் எழுதி வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
வேர்களைத் தேடி
இந்நூலின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் அம்சம், சாதி அமைப்பு பற்றிய வரலாற்று ரீதியான சித்திரத்தை தந்திருப்பது. சாதியின் தோற் றம், பரிணாமம் பற்றி மிக எளிமையாக கட்டுரைகள் விளக்குகின்றன. வருணாசிரமம், கோத்திரங்கள், கோத்திர சகோதரத்துவம், வர்ண சகோதரத்துவம், சாதிகள் உருவாக்கம், பஞ்சமர்கள், உட்சாதிகள், மதம், மனு தர்மம், தீண்டாமை என்று சமூக தளங்களில் நிகழ்ந்த மாற்றங்களை விளக்குகிற அதே நேரத்தில், இம் மாற்றங்கள் எப்படி பொருளியல் தளத்தில் சுரண்டல் முறைமைக்கு கச்சிதமாகப் பொருந்தியது என்பதை மிக அருமையாக விளக்குகிறார்.
சாதி என்பது வெறும் மேற்கட்டுமானம் அல்ல, அது அடிக்கட்டு மானத்துடனும், அதாவது பொருளுற்பத்தி முறைமையின் உறவுகளோடும் பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும் விளக்குகிறார். டி.டி.கோசாம்பி, உள்ளிட்ட அறிஞர்களின் மேற்கோள்கள் மிக அருமையாகக் கையாளப்பட்டுள்ளன.
சாதி அமைப்பு அப்படியே நிலைத்து நின்று விடவில்லை, மாறாக கடும் எதிர்ப்பிற்கு தொடர்ந்து ஆளாகி வந்துள்ளதையும், அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் விவரித்திருப்பது நம்பிக்கை அளிக்கிற பதிவுகள்.
சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்பு
இரண்டாவது அம்சம், சமூக சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய மதிப்பீடு.
அவரது கட்டுரைகள் பல இடங்களில் அம்பேத்கர், பெரியார், ஜோதிபா பூலே உள்ளிட்ட சமூக சீர்திருத்த ஆளுமை களின் பங்களிப்பை கொண்டாடுகிறது.
சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு, சமூக நீதி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட தளங்களில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மூச்சுத் திணறி இருந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயிர்க் காற்றை தந்தது என்பதை அழுத்தமாக பி.சம்பத் பதிவு செய்கிறார். அதே நேரத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் கடந்திருக்க வேண்டிய எல்லைகள் பற்றியும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை, விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வர்க்க அரசியலற்ற சித்தாந்தங்களும், வர்க்கமும் சாதியும் ஊடாடுகிற உண்மையை புறந்தள்ளுகிற அணுகுமுறையும் விடியலுக்கு இட்டுச் செல்லாது என்பதை அழுத்தமாக முன் வைக்கிறார்.
“விடுதலைப் போராட்டக் காலத்தில் விடுதலை இயக்கமும் சமூக சீர்திருத்த இயக்கமும் இணைந்து செயல்படாமல் முரண்பட்டு நின்ற தால் இரண்டு இயக்கங்களுமே பலவீனப்பட்டன” – பி.டி. இரணதிவே
இன்று வலதுசாரி திருப்பம் அரசியலில் நிகழ்ந்திருக்கிற சூழலில், பொதுவுடமை – பெரியாரிய – அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் இணைந்து நிற்க வேண்டிய புள்ளிகள் என்ன என்பதை பி.சம்பத் கட்டுரைகள் பொறுப்புணர்வோடு விவாதிக்கின்றன.
அதே நேரத்தில் நட்பு ரீதியான விமர்சனங்களையும் கூர்மையாக
முன்வைத் துள்ளார்.
பன்முக ஒடுக்குமுறை
மூன்றாவது அம்சம், எல்லா ஒடுக்குமுறைகளும் ஒரு சேர எவ்வாறு ஆளும் வர்க்கங்களால் பயன்படுத்தப்படுகின்றன, வர்க்க – சாதி – பாலின ஒடுக்குமுறைகளுக்கான தொடர்பு பற்றி கட்டுரைகள் விவாதிக்கின்றன. ஒடுக்கு முறை எதிர்ப்பு இயக்கங்களே கூட ஒன்றை விடுத்து ஒன்றை எதிர்க்கிற சூழலில் ஒருங்கிணைந்த அணுகு முறைகளுக்கான வெளிச்சத்தை இக்கட்டுரைகள் பாய்ச்சுகின்றன.
நான்காவது அம்சம், டாக்டர் அம்பேத்கர் விளக்கிய “படி நிலைச் சமத்துவமின்மை” எவ்வாறு களத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகள் மத்தியில், அவர்களுக்காகப் பாடுபடுகிற இயக்கங்கள் மத்தியிலேயே கூட வேறுபாடுகளை உருவாக்குகின்றன, அத்தகைய பிரச்சனைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்று விளக்குகிற கட்டுரைகள் உள்ளன. அருந்ததியர் உள் ஒதுக்கீடு போராட்டம் குறித்த கட்டுரை ஓர் உதாரணம்.
உழைப்பாளி மக்களுக்கு இடையேயான, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையேயான பிரச்சனைகள் எவ்வாறு நட்பு ரீதியாக அதே நேரத்தில் கொள்கையில் சமரசமின்றி கையாளப்பட வேண்டுமென்ற தெளிவைத் தருகின்றன. இப்போதும் அருந்ததியர் உள் ஒதுக்கீடு பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் தேசம் முழுமையுமே மிகச் சரியான பார்வை தேவைப்படுகிறது.
தமிழ்நாடு அனுபவம் அப்படியே இயந்திர கதியாக பொருந்துமா என்ற கேள்விகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் பார்வை, கருத்தொற்றுமை உருவான பாங்கு, அதற்கு களத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் நிச்சயம் பகிரப்பட வேண்டும். அதை இந்நூல் கட்டுரைகள் செய்துள்ளன.
களத்தில் கம்யூனிஸ்டுகள்
ஐந்தாவது அம்சம், சாதி ஒடுக்குமுறை எதிர்ப்புக் களத்தில் கம்யூனிஸ்டுகள் ஆற்றியுள்ள பங்கு பற்றி கட்டுரைகள் பேசுகின்றன. கம்யூனிச இயக்கத்தின் முதல் ஆவணமான “செயல்பாட்டிற்கான மேடை” (Platform for Action) முன் வைக்கிற தீர்க்கமான பார்வை, வர்ணாஸ்ரம தர்மத்திற்கு உட்பட்ட காந்தியப் பார்வை மீது அது வைக்கிற விமர்சனம் ஆகியன வியக்க வைக்கின்றன.
கீழத் தஞ்சை, புன்னப்புரா வயலார், தெலுங்கானா, தேபகா, வோர்லி ஆகிய முத்திரை பதித்த கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் எவ்வாறு வர்க்க ஒடுக்குமுறையையும், சாதிய ஒடுக்குமுறையையும் ஒரு சேர எதிர்த்து வினை ஆற்றின என்ற அனுபவங்கள் முக்கியமானவை
ஆறாவது அம்சம், அம்பேத்கர், காந்தி, பாரதி, சிங்காரவேலர், சீனிவாசராவ் குறித்த கட்டுரைகள், விடுதலைப் போராட்டக் காலத்தில் சமூகம் சார்ந்த “இந்தியாவின் கனவு” (Idea of India) எவ்வாறு பன்மைத்துவ உள்ளடக்கத்தோடு மலர்ந்தது என்பதை நமக்கு எடுத்துரைப்பதாகும்.
அரசியல் சுதந்திரம் என்ற “ஒற்றைக் கனவு” (Idea of Homogeneity) இந்திய தொழிலதிபர்களால் தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் திணிக்கப்பட்டு இருந்த காலத்தில், பல்வேறு வர்க்கங்களின், சமூகக் குழுக்களின் வேறுபட்ட தேவைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் எவ்வாறு பன்முக உள்ளடக்கம் கொண்ட “இந்தியாவின் கனவாக” உருவெடுத்தது என்பதை இந்த ஆளுமைகளின் செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.
காந்தி சனாதனிகளின் எதிரியாக கருதப்பட்ட நிகழ்வுகளை எடுத்துரைத்து மகாத்மாவின் சீரிய நேர்மறை பங்களிப்பை அழுத்தமாகச் சுட்டுகிறார்.
டாக்டர் அம்பேத்கர் காந்தியுடன் வேறுபட்ட சூழல் பற்றி மார்க்சிய அறிஞர் பி. பி. சான்ஸ்கிரி யின் ஆழமான பார்வை இதில் இடம் பெற்றுள்ளது. மகாத்மா காந்திக்கு 25.05.1921 இல் சிங்காரவேலர் எழுதிய கடிதம் வரலாற்று பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
“20 கோடி மக்களின் அவலம் தீராமல் சுயராஜ்யப் போராட்டம் நன்மை பயக்காது. நாம் விரும்புவது உண்மையான சுதந்திரம். அதனுடைய மாயை அன்று” என்ற தலித்துகளின் விடுதலையை இணைத்தது என்பது இன்று வரை வழி காட்டும் கலங்கரை விளக்கம்.
தீ.ஒ.மு.வின் 13 ஆண்டு பயணம்
ஏழாவது அம்சம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 13 ஆண்டு கால செயல்பாடுகள் விரிவான கட்டுரைகள்.
எத்தனை களங்கள்! எத்தனை வகை தீண்டாமைகள்! பொதுச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்குகிற முன்முயற்சிகள்! சாதி ஆதிக்க சக்திகளை தனிமைப்படுத்தி ஜனநாயக உள்ளம் கொண்ட எல்லா சாதி உழைப்பாளிகளையும் களத்திற்கு கொண்டு வந்தது, குறிப்பிடத்தக்க தீர்வுகளை எட்டியது, எல்லா ஒடுக்கப்பட்ட அமைப்புகளும் ஏற்கத்தக்க அமைப்பாக தீ.ஒ.மு அங்கீகாரம் பெற்றுள்ளதுமான அனுபவங்களை நிறைய கள உதாரணங்கள் வாயிலாக விளக்குகிறார்.
கள ஆய்வுகள், வன்கொடுமை தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கைகள், பஞ்சமி நில மீட்பு, தலித் கிறித்தவர் உரிமை, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தொடர் இயக்கங்கள் – பாதிக்கப்பட்டோர்க்கு நீதி கிட்ட போராட்டங்கள், எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்கள் ஆகிய தளங்களில் தீ.ஒ.மு ஆற்றியுள்ள பணிகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த நூல் மீது விமர்சனங்கள் எழுவது இயல்பு. இந்த நூலின் சில கருத்துக்கள் ஆழமான விவாதத்திற்கும் உரியவை. மார்க்சிய அணுகுமுறை என்பது அத்தகைய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்பதும், தன்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்வதாகவுமே இருக்கும்.
நூல் அறிமுகம் அருமை. அனைவரும் படிக்க வேண்டிய நூல் ஆகிறது. சமூகம் சார்ந்த விஷயங்களை இம்மாதிரியான நூல்கள் வாயிலாக உண்மை நிலையை அறிய அனைவரும் வாசிக்க வேண்டும். அந்தவகையில் இந்நூலைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது இவ்வறிமுகம்.
Very good initiative of Shri Sampath. Men created these type of discrimination. எங்கேயும் உன் சாதி என்ன? மதம் என்ன? என்கிற கேள்விகள் கேட்காமலும் ஆவணப்படுத்தாமலும், கலப்பு திருமணங்களை ஆதரித்து சட்ட பூர்வ பாதுகாப்பும், முழு ஆதரவும் அளித்தாலே போதும். சாதி மத பேதங்கள் ஒழிந்துவிடும். ஏதாவது ஒரு மாநிலத்தில் நடத்தினாலும் போதும்.
சரியான வர்க்கப் பார்வையைக் கொண்டே சாதிய ஒடுக்குமுறைகளைக் களைய முடியும். வர்க்கக் கண்ணோட்டம் அற்ற போக்குகளால் சீர்திருத்தவாதங்களை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர தீர்வுகளைத் தர இயலாது.
இதனை இந்த நூல் உரிய முறையில் கள எதார்த்தங்களோடு விளக்கும் என்று இந்த புத்தக விமர்சனம் மூலம் தெரிகிறது.அந்த வகையில் புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது இந்த கட்டுரை.
சிறப்பான ஒரு அறிமுகம். தோழருக்கு வாழ்த்துக்கள்.
சாதி ஒழிப்பு, சாதி மறுப்பு, சாதி விடுதலை ஆகிவற்றைப் பேசுபவர்கள் தமிழ் இன மக்களிடையே பகைமையை விதைத்து தமிழின ஒற்றுமையைக் குலைப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
Today the country is grabed and run by right wing forces. They went to the extent of dictating terms what to eat and when to eat. This is book will create awarness among Hindus that all are not equal and some are more equal than others in terms of their caste and greed.
Always Uppper Caste are instigators and Lowrer Castes are executors. Majority Hindus within the Hindu framework are treated badly even now. Read this book and one will realise.
தீ.ஒ.மு.வின் 13 ஆண்டு பயணம்
எல்லா சாதி உழைப்பாளிகளையும் களத்திற்கு கொண்டு வந்து, குறிப்பிடத்தக்க தீர்வுகளை எட்டியது