சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை

பேட்டி:எஸ்.பிரேமலதா

சென்னை ஐஐடியில்  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி வேதியியல் துறையில் பிஹெச்டி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தனது சக மாணவர்களால் தொடர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். 2 முறை பாலியல் வல்லுறவு, தொடர்ந்து பாலியல் சீண்டல்கள், சாதீய ரீதியிலான வன்மம் தோய்ந்த பேச்சுகள் என தொடர்ந்த பாலியல் சுரண்டல்களால், மாணவி உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். தன் மீது நிகழ்த்தப்பட்டு வந்த தொடர் பாலியல் வன்முறைக்கு எதிராக துறை பேராசிரியர்கள், ஐஐடி நிர்வாகம், ஐஐடியின் உள்புகார் குழு, தேசிய மகளிர் ஆணையம், எஸ்சி எஸ்டி ஆணையம், சென்னை காவல் துறை என பல்வேறு மட்டங்களில் முறையிட்டு சளைக்காமல் போராடிய போதும், எந்தவித தீர்வும் கிட்டவில்லை. சமீபத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம் தனது பிரச்சனையை முறையிட்ட பின்னரே, இந்த கொடுமை பொதுவெளிக்கு வந்து சமூகத்தின் கவனத்தை ஈர்த்து, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது 

தீவிரமான தலையீட்டின் மூலம், இப்பிரச்சனையை கையிலெடுத்து போராடி வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுகந்தி, பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி மின் இதழுக்காக அளித்த பிரத்யேக பேட்டியின் மூலம் பகிர்ந்து கொண்டவை இதோ…

சென்னை ஐஐடியில் பயிலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஐடி ஆராய்ச்சி மாணவி மீதான பாலியல் வன்கொடுமை புகார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கவனத்திற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது?

பாதிக்கப்பட்ட மாணவி கடந்த ஒரு வருட காலமாக சென்னை காவல்துறையுடன் ஒரு பெரிய போராட்டத்தை நடத்தி வந்திருக்கிறார். அவரது நண்பர்களான சில ஐஐடி மாணவர்கள், ஜெய் பீம் படம் பார்த்த பின், இந்த பிரச்சனையில் உதவி கேட்டு நீதிபதி சந்துருவிடம் அந்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். நீதிபதி சந்துரு தான், சென்னை கமிஷனரிடம் பேசி விட்டு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கவனத்திற்கும் இப்பிரச்சனையை கொண்டு வந்தார்.

2017 முதல் பாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டங்கள் எந்த வித தீர்வையும்  உறுதி செய்யாத நிலையில், சட்ட ரீதியாக புகார் அளித்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தும் குற்றவாளி கைது செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. ஜனநாயக மாதர் சங்கம் இப்பிரச்சனையை கையிலெடுத்து, காவல்துறையின்  தாமதமான செயல்பாட்டையும், பாரபட்சமான அணுகுமுறையையும் வன்மையாக கண்டித்த பின், துரித நடவடிக்கைகளின் மூலம் முதல் குற்றவாளி இரண்டே நாட்களில் கைது செய்யப்பட்டு, உடனடியாக பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டியுள்ளது?

இந்தியாவில் இத்தகைய உயர் கல்வி நிறுவனங்களில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த மாணவர்கள் சாதிய வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நடக்கிற அம்சமாகத் தான் இருக்கின்றது. ஆனால் இந்த பிரச்சனைகளை வெளியில் சொல்வதற்கான வாய்ப்பு என்பது  நிச்சயமாக இல்லை. ஏனென்றால் கடந்த காலத்தில் எண்ணற்ற தலித் மாணவர்கள் எய்ம்ஸ், ஐஐடி, சென்ரல் யூனிவர்சிட்டியில் தற்கொலை செய்து கொண்ட பல வழக்குகளை பட்டியலிடலாம். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இந்த மாதிரியான தலித் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட வழக்குகளை நாம் சந்தித்திருக்கிறோம். இப்படி தற்கொலை வரைக்கும் தள்ளப்படுவதற்கான காரணம் என்னவென்றால், அவர்களுடைய பிரச்சனைகளை முறையிடவோ, தீர்வு காணவோ எந்த வழியும் இல்லை. உண்மையில், இத்தகைய பிரச்சனைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் பல்வேறு சமூக அமைப்புகளைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.

2017ல் உடன் பயின்ற மாணவன் ஒருவனால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படும்போது, முதலில் இதை வெளியில் சொல்லலாமா என அந்த மாணவி மிகவும் தயங்கி இருக்கிறார். ஏனென்றால் பாதிக்கப்படும் பெண்ணை பொறுத்தமட்டில், இந்த சமூகம் நம்மை எப்படி பார்க்குமோ எனும் எண்ணம்தான் எப்போதும் முன் நிற்கிறது. அவரது பெற்றோர்களும், ”ஒரு தலித் சமூகத்தில இருந்து ஐஐடில பிஎச்டி படிக்கிறதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இந்த மாதிரியான வாய்ப்புகள் பல தலித் மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை. இந்த வாய்ப்பை தவறவிடாமல் சரியாக பயன்படுத்தி, படிப்பை முடித்து விட்டு வருவதைத்தான் யோசிக்கணும்; இந்தப் பிரச்சனையை பெரிதுப் படுத்த வேண்டாம்” எனும் ஆலோசனையையே தந்துள்ளனர். பெற்றோர்களின் ஆலோசனையால் அந்த மாணவி வெளியில் சொல்ல இயலாமல், 2 வருடம் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். கிட்டத்தட்ட மூன்றாண்டு காலம் மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

ஒரு முறை பாலியல் வன்புணர்வு செய்து புகைப்படம் எடுத்து, அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்து, ஆபாச மிரட்டல்கள் தொடர்ந்துள்ளன. இரண்டாவது முறையும் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் அந்த மாணவி. தலித் பெண் என்பதால் கூடுதலாகவே அந்த பாலியல் சுரண்டல் என்பது திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டியுள்ளது. உள்புகார் குழுவில் புகார் கொடுத்து, அது இந்த வழக்கை விசாரித்து நடந்ததெல்லாம் உண்மை என்று ஒத்துக்கொண்டாலும்கூட உரிய நடவடிக்கை இல்லாததால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தற்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலையீட்டால், பிரச்சனை பொது வெளியில் கொண்டு வரப்பட்டு, காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவும் கூட வெற்று கண் துடைப்பு தான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சென்னை ஐஐடியின் பாலியல்  உள்புகார் குழு (ஐசிசி), தனது  உள் விசாரணை மூலம் மாணவி இரண்டு முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை சாட்சியங்களுடன் நிரூபித்து,  இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால், சென்னை  காவல் துறை  பதிந்த முதல்      தகவல் அறிக்கையில், மாணவி பாலியல் வல்லுறவுக்கு  உள்ளாக்கப்பட்டதற்கான முக்கிய  சட்டப்பிரிவு இணைக்கப்படாமல்  விடப்பட்டதன் பிண்ணனி என்ன?

ஐசிசியின் ரிப்போர்ட் பாலியல் வல்லுறவு நடந்ததற்கான ஆதாரம்  இருப்பதை உறுதிபடுத்தினாலும்கூட முதல் தகவல் அறிக்கை அதற்கான முக்கிய சட்டப்பிரிவான 376ஐ இணைக்காமல் பதியப்பட்டுள்ளது.  அதற்கு காவல்துறை  சொல்வது நாம் எப்போதும் கேட்ட  அதே கதைதான். அதாவது  ”பாதிக்கப்பட்ட மாணவிக்கும் குற்றவாளிக்கும் கடந்த காலத்தில் காதல் இருந்ததாகவும், தற்போது அத்தகைய உறவு இல்லாததால் பாலியல் அத்துமீறல்  குற்றச்சாட்டை அந்த மாணவி முன்வைக்கிறார்” என்று பலமுறை கேட்டு புளித்துப்போன அதே கதையைத்தான் காவல்துறை சொல்கிறது. இதன் முக்கியமான மையக்கரு  என்னவென்றால் ”குற்றவாளிகளை பாதுகாக்கின்ற செயலாகத்தான் காவல் துறையின் செயல்பாடு உள்ளது”.

மேலும்,ஐஐடியின் உள் புகார் கமிட்டியிலும், ஐஐடி நிர்வாகத்திடமும் இந்த கோணத்தையே முன்வைத்து, அவர்களது உள்விசாரணையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது காவல்துறை.

கல்லூரி நிர்வாகமும்,  உள் புகார் கமிட்டி விசாரிச்சிருத்துக் கொண்டிருக்கும் போதே மாணவி காவல்துறையில் புகார் அளித்ததன் காரணமாக தனது விசாரணையை நிறுத்திவிட்டது.

நிச்சயமாக இது அந்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி.  உள்புகார் கமிட்டி தனியாகவும்,காவல் துறை தனியாகவும்  விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை.ஆனால் அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

பெரும்பாலான வழக்குகளில் காவல் துறையின் செயல்பாடு இப்படித்தான் பொறுப்பற்ற விதத்தில் உள்ளது.பதியப்படும் பாலியல் வழக்குகளில் 100ல் 25ல் தான்  குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.75 சதவீதம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு நிச்சயம்காவல் துறைதான் துணைபோகிறது. அந்த வேலையைத்தான் மயிலாப்பூர் காவல்நிலையமும் செய்திருக்கின்றது.

மேலும் மாணவி பட்டியல் இனத்தைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடப்படாமல், வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவும் இணைக்கப்படாமல் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி இந்திய தேசிய மகளிர் ஆணையம்,எஸ்.சி/எஸ்.டி. ஆணையம் என  பல்வேறு மட்டங்களில்  சளைக்காமல் புகார் அளித்து  போராடி வரும் பிண்ணனியில்,  அவரது சாதிப் பின்புலம் தெரியாது எனும் காவல்துறையின் வாதம்ஏற்றுக் கொள்ளத்தக்கதா?

இந்த வழக்கில் முக்கியமாக 2 சட்டப்பிரிவுகளை இணைக்க வேண்டும். ஒன்று 376,மற்றொன்று எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம். இந்த இரண்டு பிரிவுகளையும் காவல்துறை  வசதியாக இணைக்காமல் விட்டுள்ளது.  ஏனெனில் இவைமிகக் கடுமையான பிரிவுகள். இந்தப் பிரிவுகளை இணைத்திருக்கும் பட்சத்தில், குற்றவாளிகள் நிச்சயமாக தப்பிக்க முடியாது. எனவே குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நோக்கத்தில் தான் இந்த பிரிவுகள் விடுபட்டுள்ளன என்பதை நம்மால்  பார்க்க முடிகிறது. அந்த  மாணவியின் புகாரின் ஆரம்பத்திலேயே தலித் சமூகத்தை  சார்ந்தவர் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வார்த்தை மட்டும் எப்படி காவல்துறையின் கண்களை  மறைத்தது என்பது தெரியவில்லை. பல்வேறு வன்கொடுமை வழக்குகளில் காவல் நிலையங்களில் வழக்கமாக பின்பற்றப்படுகின்ற ஒரு அநீதியான நடைமுறை தான் இது.அதே அணுகுமுறை இந்த பிரச்சனையிலும் பின்பற்றப்பட்டுள்ளது

சென்னை ஐஐடியின் பாலியல்  புகார் குழு மாணவியின் புகார்மீதுஉள் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவி தனது  ஆராய்ச்சியை தடைகளின்றி மேற்கொள்வதற்கான முழு ஒத்துழைப்புவழங்கப்பட வேண்டும் என்றும்,  அவர் ஆய்வு அறிக்கையை  சமர்ப்பித்து ஐஐடி    வளாகத்தை விட்டு வெளியேறும் வரை முதல் மூன்று  குற்றவாளிகள் வளாகத்திற்கு உள்ளேயே  வரக் கூடாது என்றும்  நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இந்தப் பரிந்துரைகள்     பெயரளவில் கூட  அமுல்படுத்தப்படவில்லை  என்பதற்கு ஐஐடி நிர்வாகம்  தார்மீக                   பொறுப்பேற்க வேண்டுமல்லவா?

நிச்சயமாக… ஐஐடியின் உள்புகார் கமிட்டியின் விசாரணையைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகள் 3பேர் ஐஐடி வளாகத்திற்குள்ளும், வகுப்பிற்குள்ளும் வரக்கூடாது. மற்றும் அந்த மாணவி ஆய்வறிக்கை சமர்ப்பித்த பிறகு தான், அவர்கள் தங்களது ஆய்வுப்பணிகளை துவங்க வேண்டும் என்று ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த நடவடிக்கை பெயரளவில் கூட அமுல்படுத்தப்படவில்லை என்பதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  மிகப் பெரிய மன அழுத்தத்தை கொடுத்துள்ளது.

அந்த மாணவர்கள் கல்லூரி  வளாகத்திற்குள் சுதந்திரமாக  நடமாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றிகொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள், பாதிக்கப்பட்ட மாணவியோடு, குற்றவாளிகளையும் இணைத்துக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன. மாணவி மீதான பாலியல் வன்கொடுமை ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, அதற்கான குறைந்தபட்ச நியாயம் கூட ஐஐடி நிர்வாகத்தால் உத்திரவாதப்படுத்தப்படவில்லை. அந்த அநீதியை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் தேசிய மகளிர் ஆணையம், எஸ்சி/எஸ்டி ஆணையம்,டிஜிபி,சென்னை  கமிஷனர் இப்படி பல்வேறு மட்டங்களில் தனது புகாரை கொண்டு சென்றுள்ளார்.  

இன்னும் குறிப்பிட்டு சொல்வதென்றால், நிர்வாகத்தால் கண் துடைப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு தான், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும்மோசமாக அந்த பெண்ணிடம் நடந்து கொண்டுள்ளனர். அந்த மாணவி எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து செல்வது, அவருக்கு முன்பாக அவரது அந்தரங்க உறுப்புகளின் புகைப்படத்தை காட்டுவது, ஆபாசமான மற்றும் சாதிய ரீதியிலான வசவுகளை பிரயோகிப்பது என உடல் ரீதியாக துன்புறுத்தல்களும், மன ரீதியாக அச்சுறுத்தல்களும் தொடர்ந்துள்ளன. இந்த அநீதிகளுக்கு, ஐஐடி நிர்வாகம் பெருமளவு துணைபோயிருப்பது வெட்ட வெளிச்சம்.

ஐஐடி போன்ற ப்ரீமியர் கல்வி  நிறுவனங்களை ஆக்கிரமித்துக்  கிடக்கும் அதிகாரப் போக்கும்,  ஆதிக்க மனோபாவமும், சாதி  உணர்வும், கைகோர்த்துக்  கொண்டு, மாணவி மீதான  பாலியல் வன்கொடுமை புகாரை நீர்த்துப் போகச் செய்வதற்கு  துணை புரிந்துள்ளதா?

பெருமளவு துணைபுரிந்துள்ளது. அந்த மாணவியின் கோ-கைடு, இந்த பாலியல் துன்புறுத்தலை அவரிடம் முறையிட்டபோது, சாதிய ரீதியிலான ஒடுக்குமுறை  வார்த்தைகளை பயன்படுத்தி, அந்த மாணவியை புண்படுத்தியுள்ளார்.

மாதர் சங்கத்திற்கு வந்தபோது கூட, தான் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்று அந்த மாணவி சொல்லவேயில்லை. காவல்துறையில் அவர் அளித்த புகாரின் நகலைப் பார்த்தபோது தான், எங்களுக்கே தெரியவந்தது. அந்த மாணவி இதை ஏன் முதலிலேயே எங்களிடம் சொல்லவில்லை என்று நாங்கள் கேள்வியெழுப்பினோம்.

அதற்கு அவர், “என் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் பாலியல் வன்முறையை பார்த்து  எல்லோரும் கவலைப்படுவார்கள், இரக்கப்படுவார்கள், எனக்கு உதவி செய்ய மனதார முயற்சிப்பார்கள். ஆனால் நான் தலித் சமூகத்தை சார்ந்தவள்னு தெரிந்த பிறகு, அப்படியே விலகி விடுவார்கள். எனவே நீங்களும்  அப்படி இருந்திருவீங்களோ எனும் பயத்தினாலேயே நான் முதலில் அது குறித்து சொல்லவில்லை. ஆனால் நீங்கள்  இவ்வளவு தீர்க்கமாக ஒரு  ஒடுக்கப்பட்ட பெண்ணிற்காக, போராட்டத்தை முன்னெடுப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

இதுபோன்ற வன்முறைகள் நடக்கும்போது நிர்வாகமே முன்னின்று  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு    சட்ட உதவியை செய்ய வேண்டும்  என்பதுதான் பெண்கள் மீதான  பாலியல் வன்முறையை தடுக்கும் என சட்டம் சொல்கின்றது. ஆனால் அதுபோன்ற சட்ட  உதவிகளை செய்யாமல்  குற்றவாளிகளை  பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் ஐஐடி போன்ற உயர்கல்வி  நிறுவனங்கள் மேற்கொள்கின்றன  என்பதுதான் மனவேதனை  அளிக்கின்றது.

ஒரு புறம், CRACK IIT எனும் பெயரில் ஐஐடி போன்றஉயர்கல்வி நிறுவனங்களில்  சேர்ந்து படிப்பதற்காக,  மாணவர்களையும்,  பெற்றோர்களையும் குறிவைத்து  ஒரு பெரிய கல்விச் சந்தை  கொள்ளையடித்துக்  கொண்டுள்ளது.

மறுபுறம், ஐஐடி உள்ளிட்ட நாட்டின்பல்வேறு உயர் கல்வி  நிறுவனங்களில்   புரையோடிக் கிடக்கும் சாதி, மத, பாலின ரீதியிலான  ஒடுக்குமுறைகளுக்கு மாணவர்கள்பலியாவதும் தொடர்ந்து  கொண்டுள்ளது.

இந்த சமூக அநீதிக்கு எதிராக,  மாணவர்கள், ஆசிரியர்கள்,  பெண்கள் மற்றும் தலித்  இயக்கங்களை ஒன்றிணைத்த  கூட்டுப் போராட்டத்தின் அவசியம் முன்னெப்போதையும் விட தீவிரமாக முன்னுக்கு வந்துள்ளது.

5 comments

  1. இந்தியாவில் மட்டுமின்றி உலகில் உள்ள பலராலும் மிக உயர்வாக தங்கள் பிள்ளைகளின் கனவாக நினைத்து கொண்டிருக்கும் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் அவள் அதையே இக்கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பெண்ணிற்கான நீதியை பெற்றுத்தர அகில இந்திய மாதர் சங்கம் தங்களை உட்படுத்திக் கொண்டு இருப்பது பாராட்டுக்குரியது.

  2. நோ்த்தியான ஒரு நோ்காணல். AIDWAவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால் உறுதியாக இறுதிவரை விடாமல் நியாயம் கிடைக்கும் வரை போராடி நீதி கிடைக்க செய்யும். இதை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம்

  3. எப்படிப்பட்ட உயர் மட்ட படிப்பு கற்பிக்கும் நிறுவனம்/ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்களுடைய மேல் ஜாதி மனோ நிலைதான் மேலோங்கி நிற்கிறது. காவல் துறையும் விதிவிலக்கல்ல. தவறு நடப்பதற்கு துணைபோகிற இப்படிப்பட்டவர்கள் தான் முதல் குற்றவாளிகள். AIDWA வின் சமரசமற்ற நடவடிக்கை நிச்சயம் வெல்ல வாழ்த்துக்கள்.

  4. ஜாதி மதத்தை வைத்து நடைபெறும் குற்ற செயலகள் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆளும் வர்க்கம் அதிகார வர்க்கம் இதை பற்றி எள்ளலுவும் கண்டிப்பது இல்லை.. அதுவே இது போன்ற செயல்கள் அதிகரிக்க காரணம்..

  5. அதிர்ச்சியான தகவல்… சிறப்பான நேர்காணல்!

Comment here...