வணிக முகவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் தமிழ்நாடு கிராம வங்கி

சி.பி.கிருஷ்ணன்

2022 பிப்ரவரி 26ஆம் தேதி இதழில் சுரண்டப்படும் வணிக முகவர்கள் என்ற தலைப்பிலான கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே சொற்பக் கூலிக்கு கடுமையாக சுரண்டப்படும் வணிக முகவர்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் முயற்சி எடுத்தது. அதனால் அவர்களின் பணி நிலமைகள், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் வங்கி நிர்வாகத்தின் இந்த முயற்சியை கண்டித்து 500க்கும் மேற்பட்ட முகவர்கள் ஒன்று திரண்டு சேலத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் தலைமையகம் முன்பாக பிப்ரவரி 23 ஆம் தேதி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆனால் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் வணிக முகவர்களின் பிரச்சனையை தீர்க்க முன் வரவில்லை.

தொழிலாளர் ஆணையரிடம் புகார்

எனவே வணிக முகவர்கள் சங்கம் சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் முன்பாக தொழில் தாவா எழுப்பியது. அதில் பணி நிரந்தரம், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகை நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் முகவர்களை ஒப்படைக்கக் கூடாது என்றும் கோரியிருந்தனர். இடைப்பட்ட காலத்தில் பணி நிலைமைகளில் பாதகமான மாற்றம் ஏற்படாமல் இருக்கவும் கேட்டுக் கொண்டனர். தொழிலாளர் ஆணையர் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இடைக்காலத்தில் தொழில் தகராறு சட்டப் பிரிவு 33ன் படி வணிக முகவர்களின் பணி நிலைமையில் பாதகமான மாற்றம் ஏற்படுத்தக் கூடாது என்று நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

கடுமையாக சரியும் வருமானம்

நிர்வாகத்தின் புதிய ஏற்பாட்டின்படி முகவர்களின் வருமானம் கடுமையான சரிவை சந்திக்கும். தற்போது மாதம் குறைந்தபட்சம் 150 பரிவர்த்தனைகள் இருந்தால் ஊக்கத் தொகையாக 2000 ரூபாய் கிடைத்து வந்த நிலையில் அது கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் மாதம் குறைந்தபட்சம் 250 பரிவர்த்தனைகள் இருந்தால் தான் ரூ.1600 என்று மாற்றப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு மாதம் 249 பரிவர்த்தனைகள் இருந்தாலும் ஊக்கத்தொகை எதுவும் கிடைக்காது. தற்போது ஒரு பரிவர்த்தனை – உதாரணமாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒருவருக்கு 1000 ரூபாய் பட்டுவாடா செய்தால் முகவருக்கு 3 ரூபாய் கமிஷன் கிடைக்கும். அது இனி கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் 1 ரூபாய் 20 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கமிஷன் என்பது கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ் தொகையின் அடிப்படையில் கமிஷன் என்று மாற்றப்பட்டுள்ளது. இப்படி மாற்றினால் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவை (Financial Inclusion) என்பதே அர்த்தமற்றதாகி விடும். முகவர்கள் ”அதிகம் பணம் போடுகிறவர்கள் மூலம்தான் அதிக கமிஷன் கிடைக்கும்” என்று செல்வந்தர்களுக்கு சேவை செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.

சட்டத்தை மீறும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்

இதையெல்லாம் காது கொடுத்து கேட்கும் நிலையிலேயே தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் இல்லை. அவர்கள் சட்டப்படி தொழிலாளர் ஆணையர் கொடுத்த உத்தரவை மீறி முகவர்களை பயமுறுத்தி கார்ப்பரேட் நிறுவனத்திடம் அவர்களை ஒப்படைக்கும் படிவத்தில் கையெழுத்து பெற்று வருகிறார்கள். நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி கையெழுத்திட்ட முகவர்கள் தங்கள் கடிதத்தை திரும்பப் பெற்றுள்ளனர். தாங்கள் தொழிலாளர் ஆணையரின் உத்தரவுக்கு பிறகுதான் வங்கி நிர்வாகத்தால் மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டோம் என்றும் புகார் செய்துள்ளனர். எனவே தொழிலாளர் ஆணையரின் உத்தரவை மீறும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகவர்கள் சங்கம் தொழிலாளர் ஆணையரிடம் கோரியுள்ளது.

இந்த நிலையிலாவது, தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் வணிக முகவர்களின் கோரிக்கைகளை ஏற்று, தங்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கை விட்டு, அனைத்து பகுதி கிராம மக்களுக்கும் நிதிச் சேவையை விரிவாக்க முயல வேண்டும்.

9 comments

  1. வங்கி வணிக முகவர்களின் வாழ்நிலையை மேம்படுத்தும் விதமாக வங்கி தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டும். தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரிந்து வரும் வணிக முகவர்களின் பணி நிலைமைகளை பணிச் சூழலை இக்கட்டுரை பிரதிபலிக்கின்றது. இவர்களின் பணி நிலைமைகளை பாதுகாக்கும் விதமாக 12 அனைவரும் போராடுவதே இன்றைய தேவை. இவர்களின் பிரச்சினையை இவ்விதழில் வெளிக்கொணர்ந்த குழுவிற்கு நன்றி

  2. நிர்வாகத்தின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உழைப்புச் சுரண்டலின் புதிய வடிவமான இது போன்ற நடவடிக்கைகள் அனைவராலும் ஒன்றுபட்டு எதிர்க்கப்பட வேண்டும்.

  3. கிராமின் வங்கியில் நிலவும் வணிக முகவா் பிரசனை அனைத்து வங்கியில் நிலவுகிறது! எனினும் இந்த பிரசனையில் கையில் எடுத்த சங்கத்திற்கு வாழ்த்துக்கள். மற்ற வங்கியிலும் சங்கங்கள் இது மாதிாி தலையிட வேண்டும். சுற்றிக்கை போராட்டம் மட்டும் நடத்தக்கூடாது!

  4. கிராமின் வங்கியில் நிலவும் வணிக முகவா் பிரசனை அனைத்து வங்கியில் நிலவுகிறது! எனினும் இந்த பிரசனையில் கையில் எடுத்த சங்கத்திற்கு வாழ்த்துக்கள். மற்ற வங்கியிலும் சங்கங்கள் இது மாதிாி தலையிட வேண்டும். சுற்றிக்கை போராட்டம் மட்டும் நடத்தக்கூடாது!

  5. இந்த நவீன கொத்தடிமை முறையினை அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்து ஒழிக்க வேண்டும்.இந்த போராட்டத்தை கையிலெடுத்த சங்கத்திற்கு பாராட்டுக்கள்.

  6. இந்த நவீன கொத்தடிமை முறையினை அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்து ஒழிக்க வேண்டும்.இந்த போராட்டத்தை கையிலெடுத்த சங்கத்திற்கு பாராட்டுக்கள்.

  7. இந்தியன் வங்கியிலும் இதே போன்று வணிக முகவர்களிடம் அதீத உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது.. எதிலும் வெளிப்படை தன்மை இல்லை. குறிப்பாக மாதத்தில் 10 நாட்கள் அவர்கள் இயந்திரம் முடக்க படுகிறது.. கடன் வசூல் செய்ய கிளை நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது. ஆனால் அதற்கான commissan கேட்டால் சரியாக பதில் சொல்வது இல்லை.. ஓய்வூதிய பட்டுவாடா வின் கமிசன் பாதி மட்டும் வருவதாக குமுறுகின்றனர்.. இங்கே அவர்களுக்கு என்று சங்கம் இல்லாததால் நாதியற்று நிற்கின்றனர் .. அவர்களின் குறைகளை யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை…

  8. நிர்வாகத்தின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உழைப்புச் சுரண்டலின் புதிய வடிவமான இது போன்ற நடவடிக்கைகள் அனைவராலும் ஒன்றுபட்டு எதிர்க்கப்பட வேண்டும்

Comment here...