சிவில் உரிமைகள் பொருளாதார விடுதலையைச் சார்ந்ததே

டாக்டர் அம்பேத்கர்

சி.பி.கிருஷ்ணன்

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்றும் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் தந்தை என்றும் அறியப்பட்ட அளவிற்கு அவருடைய பொருளாதார சிந்தனைகள் மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லப்படவில்லை என்றே சொல்லலாம். 

பொருளாதாரத்தில் இரண்டு டாக்டர் பட்டங்கள்

வெளிநாட்டில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இங்கிலாந்தின் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பொருளாதாரத்தில் இரண்டு டாக்டர் பட்டங்கள் பெற்ற முதல் ஆசியர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தான். 

ரிசர்வ் வங்கி உருவாக்கம்

நமது நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் உருவாக்கத்தில் அம்பேத்கர் அவர்களின் பங்கு மகத்தானது. “ரூபாய் நோட்டு பிரச்சனை – அதன் துவக்கமும் தீர்வும்” என்ற அவரின் ஆராய்ச்சி கட்டுரையும், இந்திய நாணயம் மற்றும் நிதித்துறை பற்றிய ராயல் குழுவின் முன்பாக அம்பேத்கர் அவர்கள் முன்வைத்த ஆலோசனையும் ரிசர்வ் வங்கியின் துவக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன.  இந்தக் குழு தனது பரிந்துரையை 1926 ஆம் வருடம் சமர்ப்பித்தது. 1934 ஆம் வருடம் ரிசர்வ் வங்கி சட்டம் உருவாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்து, அது எவ்வாறு இயங்க வேண்டும் என்ற வரைபடத்தை உருவாக்கியது அம்பேத்கர் அவர்கள்தான். அந்த அடிப்படையில் 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது.

விவசாயம்

விவசாயத் துறை பற்றி அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தனியார் நிலத்தின் அளவு துண்டுதுண்டாக இருப்பதால் விவசாயத்தை லாபகரமாக நடத்துவதில் பிரச்சனை உள்ளது என்பதை கண்டறிந்தார். கூட்டுறவு அடிப்படையில் விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக கூறியவர் டாக்டர் அம்பேத்கார். கூட்டுப் பண்ணை முறை தான் நிலமற்ற ’தீண்டத்தகாத’ சாதியினருக்கு ஒரே விடியலாக அமையும் என்று அவர் உறுதிபட எடுத்துரைத்தார்..

நிலவரிக் கொள்கை

இந்தியாவில் நடைமுறையில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலவரிக் கொள்கை பற்றி தனது அறிக்கையில் தெளிவாக விளக்குகிறார். பிரிட்டிஷாரின் நிலவரிக் கொள்கை பாரபட்சமாகவும் அசமத்துவமும் இருக்கிறது என்று அவர் சாடினார். ”இந்தக் கொள்கை என்பது ஏழை மக்களின் மீது கடும் சுமையை ஏற்றுகிறது. எனவே அதில் உடனடியாக சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பணக்காரர்கள் மீது கூடுதலான வரியும் ஏழைகளின் மீது குறைந்த வரியும் விதிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வரையறை வரை வரி விலக்கு அளிக்கப்படவேண்டும். வரிவிதிப்பின் காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து விடக்கூடாது. நிலவரி என்பது நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டும். அதேசமயம் விவசாய நிலத்திற்கு வரி போடக்கூடாது” என்பது அவரது அறிக்கையின் சாராம்சம்.

சுரண்டலுக்கு எதிராக

ஒருபுறம் சிவில் உரிமைகளுக்காக வாதிட்ட அம்பேத்கர் மறுபுறம் சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார். பொருளாதார சுரண்டல் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் கேந்திரமான தொழில்கள் முழுவதும் அரசின் வசமே இருக்க வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த உரிமை வழங்கப்பட வேண்டும்.

என்றும் வலியுறுத்தினார்.அதன் மூலமாக மட்டுமே விரைவான தொழில்மயத்தை உருவாக்க முடியும் என்று அவர் எடுத்துரைத்தார். எனவே ”அரசு பெரும் தொழில்களை துவக்க முன் வரவேண்டும். குறிப்பாக காப்பீட்டுத் துறையும் போக்குவரத்துத் துறையும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சிறு தொழில்கள் மட்டுமே தனியாருக்கு விடப்பட வேண்டும். நிலத்தையும் கூட அரசு கையகப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சிவில் உரிமைகள்

”நாட்டு மக்களுக்கு உண்மையான சிவில் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் அது அவர்களின் பொருளாதார விடுதலையை சார்ந்தே உள்ளது. வெறும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் தனிநபர்களின் வாழ்க்கையை சில தனியார் முதலாளிகள் தீர்மானிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும். மேலும்  வாழ்வாதாரத்துக்காக தனிநபரின் அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க பெரும்பாலான மக்கள் நிர்பந்திக்கப் படுவர்”. 

”வேலையில்லாத ஒரு நபரை பார்த்து ஏதோ ஒரு ஊதியத்திற்கு கால நிர்ணயம் இல்லாத ஏதோ ஒரு வேலை வேண்டுமா அல்லது சங்கம் சேரும் உரிமையும், பேச்சுரிமையும். மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும் வேண்டுமா என்று கேட்டால் அந்த நபர் எதைத் தேர்ந்தெடுப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?  பசி கொடுமையில் வாடுவது, சொந்த வீட்டை இழப்பது, கொஞ்ச நஞ்ச சேமிப்பையும் இழப்பது ஆகியவற்றுக்கு முன்னால் ஒரு மனிதன் தன்னுடைய அடிப்படை உரிமைகளுக்காக நிற்பாரா? நிச்சயம் நிற்கமாட்டார்” என்று அம்பேத்கர் அவர்கள் எடுத்துரைத்தார்.

எது தனிநபர் சுதந்திரம்?

 ”தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் அரசின் தலையீடு மிகக் குறைந்த அளவே இருக்க வேண்டும்” என்று வாதிடுபவர்களை பார்த்து “அரசாங்கம் தொழில், விவசாயம் ஆகியவற்றிலிருந்து விலகிவிட்டால் தனிநபர் சுதந்திரம் பாதுகாக்கப்படும். ஆனால் அது யாருக்கான சுதந்திரம்? நிலச்சுவான்தார்கள் நிலத்தின் குத்தகை தொகையை உயர்த்துவதற்கான சுதந்திரம். முதலாளிகள் வேலை நேரத்தை கூட்டுவதற்கும், ஊதியத்தை குறைப்பதற்குமான சுதந்திரம்”. இத்தகைய சுதந்திரம் வேண்டுமா என்ற கேள்வியை அம்பேத்கர் அவர்கள் உரத்து எழுப்பினார்.

”பிரம்மாண்டமான பொருள் உற்பத்தியில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கான விதிமுறைகளை யாராவது உருவாக்கினால் தான் தொடர்ந்து உற்பத்திச் சக்கரம் சுழலும். அதனை அரசாங்கம் செய்யவில்லை என்று சொன்னால் தனியார் முதலாளிகள் செய்வார்கள். அதன்பிறகு தொழிலாளர்களின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை என்பதற்கான மறுபெயர் தனியார் முதலாளிகளின் எதேச்சாதிகாரம் என்றாகிவிடும். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது” என்றார் அம்பேத்கர்.

அரசியல் சமத்துவம்

”தனிச் சொத்துடமை என்பது ஆகப் பெரும்பாலான மக்களுக்கு பெரும் துன்பதுயரத்தை அளிக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது. எனவேதான் அவர் அரசியல் நிர்ணய சபையில் தன்னுடைய நிறைவுரையில் பொருளாதார, சமூக சமத்துவம் இல்லாமல் அரசியல் சமத்துவம் என்பது முடக்கப்பட்டுவிடும்” என்று கூறினார். 

பெண்கள் – தலித்துகளின் பங்கு

”இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தி பெண் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். இந்த முறையில் தான் அவர்களை பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க வைக்க முடியும். பெண்களின் மோசமான பொருளாதார நிலை காரணமாகத்தான் இந்தியாவின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. எனவே பெண்களின் பொருளாதார நிலை உயர்த்தப்பட்டு அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்” என்று அம்பேத்கர் அவர்கள் வலியுறுத்தினார். மேலும் ”ஏழைகளும், தாழ்த்தப்பட்ட மக்களும் எல்லா மனிதர்களையும் போல் சமத்துவமான சமூக அந்தஸ்த்து உள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்தப் பகுதி மனித வளத்தை நாட்டு பொருளாதார வளர்ச்சியில் உபயோகப்படுத்த முடியாது” என்றும் தெளிவாக எடுத்துரைத்தார்.

அரசியல் ஜனநாயகம் பெற

அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணய சபையின் உரையில் ”1950 ஆம் வருடம் ஜனவரி 26ஆம் நாள் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்வில் நுழைய உள்ளோம். அரசியல் ரீதியாக நமக்கு சமத்துவம் இருக்கும். ஆனால் நம்முடைய சமூக-பொருளாதார வாழ்வில் இன்றைக்கு இருக்கக்கூடிய சமூக-பொருளாதார கட்டமைப்பின் காரணமாக ”ஒரு மனிதன் ஒரு மதிப்பு” என்ற தத்துவம் மறுக்கப்படும். எவ்வளவு காலம் நம்மால் வாழ்வின் இத்தகைய முரண்பாடுகளோடு வாழ முடியும்? எவ்வளவு காலம் சமூக-பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை மறுக்க முடியும்? நாம் நீண்டகாலம் இவ்வாறு மறுத்துக் கொண்டே இருந்தால் நம்முடைய அரசியல் ஜனநாயகம் என்பது மிகவும் பேராபத்துக்குள்ளாகும்.  நாம் இந்த முரண்பாட்டை எவ்வளவு விரைவாக முடிவுக்கு கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லை என்றால் நாம் மிகுந்த உழைப்புடன் உருவாக்கிய அரசியல் ஜனநாயக கட்டமைப்பு தகர்த்தெரியப்படும்” என்று கூறினார்.

(2022 ஏப்ரல் 14ம் தேதி டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்த தினம்)

4 comments

  1. அண்ணல் அம்பேத்கரை பற்றிய இக்கட்டுரை இன்றைய சமூக பொருளாதார அரசியல் சூழலில் மிகவும் தேவை. இக் கட்டுரையின் ஆசிரியருக்கு வாழ்த்துகள். அண்ணலின் கருத்துக்களை அவரின் உயரிய நோக்கங்களை அனைவருமே கடைபிடிக்க வேண்டிய தருணம்.

  2. அம்பேத்கார் தினம்!!!வங்கி ஊழியர் இயக்கங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.. அதன் மூலம் அனைத்து பகுதி ஊழியர்களிடம் அண்ணலின் பங்களிப்புகள் கொண்டு செல்லப்பட வேண்டும். இன்னும் ஏராளமான சமூக, அரசியல் கருத்துக்களை பரவலாக்கும் வகையில் கட்டுரை நல் முயற்சி…

  3. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் அளவுக்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள் யாருமில்லை.பன்முகத் தளத்தில் ஆழமான அறிவு பெற்ற அவர் ஆய்வு கண்ணோட்டத்துடன் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் விடுதலைக்கு குரல் கொடுத்ததை கட்டுரை பதிவு செய்கிறது.RBI உருவாக்கத்தில் அவரது கருத்தும் ஆய்வும் பெரும் பங்கு வகித்தது மிக சிறாப்பானது.

  4. மிகவும் முக்கியமான கட்டுரை… எளிமையான நடையில் அம்பேத்கர் குறித்தும் அவரது பங்களிப்பையும், அவரது சமூகம் குறித்த தெளிவான பார்வையையும் இக்கட்டுரை முன்வைத்து உரையாடுகிறது.

    அருமை தோழர்….

Comment here...