“ஜீ….. பூம்…… பா…….”!!! “மகிழ்ச்சி உண்டாகக் கடவது”!!!

ஜேப்பி

ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான வலையமைப்பால் (Sustainable Development Solutions Network) அண்மையில் “உலக மகிழ்ச்சி அறிக்கை 2022” (World Happiness Report) வெளியிடப்பட்டுள்ளது.

146 நாடுகளைத் தரவரிசைப் படுத்திய 2022 மகிழ்ச்சிக் குறியீட்டின்படி, இந்தியா 136வது இடத்தில், அதாவது “மகிழ்ச்சி இன்றி”, இருக்கிறது.

BRICS என்றழைக்கப்படுகிற நாடுகளான பிரேசில்-38, ரஷ்யா-80, சீனா-72, தென் ஆப்பிரிக்கா-91, நமது அண்டை நாடுகளான நேபாளம்-84, பாகிஸ்தான்-121, இலங்கை-127, பங்களாதேஷ்-94 என்று மகிழ்ச்சித் தரவரிசைக் குறியீடுகள் கொண்டுள்ளன. இந்த நாடுகள் யாவும் 2022 தரவரிசைப்படி இந்தியாவை விட ஒப்பீட்டளவில் “மகிழ்ச்சி நிறைந்த” நாடுகள்.

2012ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் இந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.  தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இந்த அறிக்கைகளின் தரவரிசைகளில், கீழிருந்து 10-20 வது இடத்தில் தான், இந்தியா  இருந்து வந்துள்ளது.

தரவரிசைகளில் இந்தியா எப்பொழுதும் கீழே இருப்பது என்பதும், ஒப்பீட்டளவில் அண்டை நாடுகளைவிடக் கீழே இருப்பது என்பதும் மிகவும் கவலை அளிக்கிறது.

மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு நிலை அல்லவா, மகிழ்ச்சியைக் கணக்கிட முடியுமா, இதெல்லாம் மேற்கு நாடுகளின் “வார்த்தை ஜாலம்” என்று சொல்லி இந்த அறிக்கையைப் புறந்தள்ள முடியுமா?

இந்த அறிக்கை, “வாழ்க்கை மதிப்பீடுகள்” (Life Evaluations), “நேர்மறை” மற்றும் “எதிர்மறை உணர்ச்சிகள்” (positive and negative emotions), இவற்றின் மூலம் அந்தந்த நாட்டு மக்களின் உணர்வு நிலை பற்றி ஆராய்கிறது.  கூடவே, அந்த நாட்டின் “தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி” (GDP per capita), “சமூக ஆதரவு” (Social support), “ஆரோக்கியமான ஆயுட்காலம்” (Healthy life expectancy), “சுதந்திரம்” (Freedom), “பெருந்தன்மை” (Generosity), மற்றும் “ஊழல்” (Corruption) ஆகிய ஆறு காரணிகளையும் கணக்கில் கொள்கிறது.

இந்த “உலக மகிழ்ச்சி அறிக்கை” மட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான பல அறிக்கைகள், மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையிலும், தனியாகவும், இந்திய அரசு எத்தகைய வாழ்க்கையை தன் குடிமக்களுக்கு அளித்து வருகிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.

  • உலக அசமத்துவ அறிக்கை – “மிகவும் சமத்துவமற்ற நாடு
  • ஆக்ஸ்ஃபாம் அறிக்கை – “கீழ் பாதி இந்தியர்களிடம் சொத்து எதுவும் இல்லை
  • உலக பசிக் குறியீடு – “101வது இடம்”
  • ஊழல் உணர்தல் குறியீடு – “85வது இடம்”
  • உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை – “140வது இடம்”
  • மனித வளர்ச்சிக் குறியீடு – “131வது இடம்”
  • தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை செய்த நிபுணர்கள் ஆய்வு –  “பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் நாடு”.

“கைப்புண்ணைக் காண்பதற்கு கண்ணாடி எதற்கு” என்பார்கள். இந்த அறிக்கைகள் மூலமாகத்தான் இந்தியாவில் மகிழ்ச்சி குறைவு என்பதை அறிய முடியுமா, இல்லை. இந்தியாவில் மகிழ்ச்சி இல்லை என்பதற்கு மேலும் சில அத்தாட்சிகள் இதோ:

  • சராசரி 46 குடியானவர்கள் நாள்தோறும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
  • 1995-2019 காலத்தில், 1.7 இலட்சம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பெண் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகின்றன.
  • தலித்துகளின் மீதான வன்முறை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 46000 பதிவாகின்றன.
  • 2021ஆம் வருடம் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும், நாடு முழுவதும் மத சிறுபான்மையினருக்கு எதிராக குறைந்தது 300 வன்முறைச் செயல்கள் நடந்துள்ளன.
  • பெருந்தொற்றுக் காலத்தில் கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இழந்து தங்குவதற்கு இடம் கூட இல்லாமல் இடம் பெயர்ந்தனர்.

மாமேதை காரல் மார்க்ஸ், நியூயார்க் டெய்லி டிரிப்யூன் பத்திரிகைக்கு செப் 16, 1859இல் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறினார்:

“There must be something rotten in the very core of a social system which increases its wealth without diminishing its misery”

“ஒரு சமூகம் தன் செல்வத்தை மட்டும் அதிகரித்துக் கொண்டு அதன் துயரத்தைக் குறைக்காமல் இருந்தால் அந்த சமூக அமைப்பின் அடிப்படையில் ஏதோ உள்ளார்ந்த கோளாறு இருக்கிறது”.

இந்தியாவில் செல்வம் மட்டும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வரும் பொழுது, அந்த செல்வத்தை உற்பத்தி செய்யும் மக்கள் மட்டும் மகிழ்ச்சி அற்று துயரத்தோடு இருப்பது, அடிப்படையில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது அல்லவா?

இந்தக் கோளாறை,“ஜீ… பூம்…. பா…..” என்று ஏதாவது மந்திர உச்சாடனம் செய்து சரி செய்ய முடியுமா? அல்லது வேலையில்லாத் திண்டாட்டத்தை, விலைவாசி உயர்வைக் குறைத்து, இலவசக் கல்வி, பொது மருத்துவம், ஆண்-பெண் சமத்துவம், குறைந்தபட்ச வருமானம், மனித உரிமை, மத நல்லிணக்கம், சாதிக் கொடுமையற்ற சமூகம், ஜனநாயகம் ஆகியவற்றை உத்திரவாதப் படுத்துவதன் மூலம் சரி செய்ய முடியுமா? ஆட்சியாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

4 comments

  1. 1991 முதலே மத்திய அரசாங்கங்கள் கடைபிடித்துவரும் கொள்கைகள் அதிலும் குறிப்பாக கடந்த எட்டு வருடங்களாக இதே கொள்கைகளை அவசர கதியில் செயல்படுத்த துடிக்கும் பாஜக அரசும் இன்றைய மக்களின் விளிம்புநிலை வாழ்க்கைக்கே காரணிகளாக மாறியுள்ளனர். கட்டுரையாளர் சர்வதேச அளவில் இந்திய மக்களின் நிலையை விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். மக்கள் நலன் சார்ந்த கொள்கை மாற்றமே இன்றைய தேவை.

  2. இந்தியாவின் சரி பாதி மாநிலங்களில் இன்னும் நில பிரபுத்துவ -பண்ணை அடிமை முறை நீடிக்கிறது.. எனவே, தான் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எல்லாம் பிறப்பில் தான் காரணம் இருக்கிறது என சுலபமாக நம்ப வைக்க முடிகிறது. அதற்கான . தொழில் வளர்ச்சி ஒன்று தான் இது போன்ற குறியீடுகளில் இந்தியா முன்னேற வழி….. கட்டுரையாளர் குறியீடுகளின் மூலம் மக்கள் நிலைமை எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்பதை விளக்கியுள்ளது சிறப்பு…

  3. காரப்பரேட் களவாணிகளுக்கு சேவை செய்வதில் முதலிடம், மாய பிம்பத்தை உருவாக்குவதில் முதலிடம் , ஏழைகளுக்கான ஆட்சி என்று கூறிக்கொண்டு ஏழைகளின் வாழ்வை சிதைப்பதில் முதலிடம் ……….. என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

  4. ஜீ… பூம் பா… என்னும் ஜனநாயக மந்திரக் கோலை பாசிஸ்டுகளிடம் இருந்து பறிக்காமல் இங்கே மகிழ்ச்சி குறியீட்டில் நாம் மாற்றம் காண முடியாது!

    நல்ல தரவுகளுடன் கூடிய சிந்திக்க தூண்டும் கட்டுரை!

Comment here...