திரைப்பட விமர்சனம்
பாரதி
சமீப காலங்களாக சமூகத்தின் அடக்குமுறை, முடை நாற்றமெடுக்கும் பிற்போக்கு தனங்கள் இவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படங்களாக சில தமிழ் படங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவை மக்களால் பெருமளவில் பேசப்படுவதும், வணிகரீதியாக வெற்றி பெறுவதும் பெரும் நம்பிக்கையை இளம் இயக்குனர்களுக்கு அளிக்கிறது. அந்த வரிசையில் தூக்கமே வராத இரவுகளை கொண்டு வந்தது டாணாக்காரன். நாம் ஒரு நாளில் குறைந்தது ஒரு முறையாவது பார்த்த முகங்களை குறித்த படம் இது. DO WHAT I SAY என்று நம்மிடம் நம் அன்புக்குரியவர் சொன்னாலும் ஏன் என்று கேட்போம். ஆனால் தன் வேலையே அது தான் என்றால்? ஆம்; டாணாக்காரன் என்கிற காவல்துறையை தான் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் தமிழ்.
படத்தின் ஆரம்பமே காவல்துறை எப்படி உருவானது என்று சொல்லியிருப்பார். ஆங்கிலேய அரசு இந்திய மக்களை ஒடுக்குவதற்காக கடுமையான உடல்பயிற்சியோடு கூட யாரையும் கண்டு இரக்கம் கொள்ளாத பார்வையை பயிற்றுவித்ததை சொல்லியிருப்பார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்ட போதிலும், சுதந்திரத்திற்கு முன் இருந்தது போல காவல்துறை காவலர்களை பயிற்றுவிப்பதை மாற்றிக்கொள்ளவில்லை.
இதுவரை வந்த படங்கள் அடி கொடுக்கும் ஹீரோக்கள், நியாயம் பேசும் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளை பேசியுள்ளன. ஆனால் இந்தப் படத்தில் களப்பணியாளர்களாக, கடை நிலை காவலர்கள் சந்திக்கும் பாகுபாடுகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்கள்.
இங்கு இப்போது இருக்கும் காவல் துறை அதிகாரம் செலுத்தும் அரசிற்கும், நியாயமற்ற அரசியல்வாதிகளுக்கும் பிறந்த குழந்தை என்று சாடுகிறார் இயக்குநர். அடக்குமுறையை ஏவ அரசிற்கு இருக்கும் இரண்டு ஆயுதங்கள் நீதித்துறையும் காவல்துறையும் தானே.
போலீஸ் பயிற்சியில் மனித மனங்களை மிருகமாக்கும் பயிற்சி தான் அதிகம் என்பதை ஆழமாக காட்டியிருக்கிறார்கள். நெருக்கமாக ஏதோ பல காவலர்களிடம் அவர்களின் வலியை கேட்டு கேட்டு காட்சியாக்கியது போல இருந்தது படம் முழுவதும்.
படத்தில் ஒரு காட்சியில், இது என்ன, ஏன் என்ற கேள்வி கேட்கும் கதாநாயகனை போராட்டகாரனுக்கும், கேள்வி கேட்பவனுக்கும் போலீஸாக தகுதி இல்லை என்று பயிற்சியாளர் சொல்லும் விதத்தில் தெரியும் இன்றைய நிலை என்ன என்பது.
படத்தின் கதாநாயகனைவிட அராஜக போலீஸ் அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தியும், முத்துபாண்டியும் தான் அதிகம் கதையை நகர்த்துகிறார்கள். நிஜ காக்கி சட்டை கொடூரன்களாக வலம் வருபவர்கள். போலீஸ் வேலையில் படிப்பிற்கு, அனுபவத்திற்கு, வயதிற்கெல்லாம் மதிப்பில்லை என்பதை ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருப்பார்கள்.
எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்பது உழைப்பாளர்களின் உரிமை, ஆனால் 24/7 வேலை பார்க்கும் காவல் ஊழியர்களின் மனக்குமுறல்களை கேட்க, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட ஒரு தொழிற்சங்க அமைப்பு இல்லாததும் அவர்களின் இந்த மனோநிலைக்கு காரணம் எனலாம்.
சம்பளத்தில் RISK ALLOWANCE என்ற ஒரு சொற்ப பணத்திற்கு குடும்பத்தை, அமைதியை, உறக்கத்தை, ஏன் இயற்கை அழைப்பை கூட புறந்தள்ளும் காவலர்கள், தன் வாழ்வியலில் உள்ள வெறுப்பினால் தானோ என்னவோ இறுக்கமான மனநிலையிலேயே இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் டாணாக்காரன் பரிதாபத்திற்குரிய அடக்குமுறைக்காரன்.
மிகுந்த கருணையும், கணக்கு பார்க்காமல் நண்பர்களுக்கு செலவு செய்யும் என் நண்பர் ஒருவருக்கு காவல் துறையில் பணி கிடைத்தது..9 மாதம் வேலூர் பயிற்சி… வந்தவுடன் அவர் சொன்னது, “என்னிடம் இப்போது கருணை உணர்வு இல்லை.” இதுவே பயிற்சியின் விளைவு” Tanakaran படம் அதை உறுதி படுத்துகிறது என்ற கட்டுரையாளர் விமர்சனம் மிக சரியானது….. சிறப்பு…
இப்படத்தைப் பற்றிய அருமையான விமர்சனம். காவல் துறையில் பணிபுரிபவர்களின், அதுவும் குறிப்பாக அடிமட்டத்தில் வேலை பார்ப்பவர்களின் பணிச்சூழலில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும். இவ் விமர்சனம் படத்தைக் காணும் ஆவலைத் தூண்டுகிறது.
மிகச்சிறந்த படம்..மனிதர்களை மிருகமாக்கும் பயிற்சியும் விதிகளும்காவல்துறையை ஒரு ஏவல் படையாக மாற்றுகிறது.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய இளைஞர்களை குறிவைத்து அடக்குமுறை கருவியின் பகுதியாக மாற்றியது.இன்றும் ஆளும் வர்க்கம் அதைத்தான் செய்கிறது.அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.இயக்குனர் தோழர் தமிழ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
போலீஸில் சேர்ந்த மனிதன் எவ்வாறு மிருகமாக மாற்றப்படுகிறான் என்பதை அழகாக சொல்லப்பட்டுள்ளது. விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. சிறப்பு.
மனிதனாக காவல் துறை பயிற்சிக்கு செல்பவர்கள் எவ்வாறு மிறுகமாக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக கூறப்பட்டுள்ளது. சிறப்பான விமர்சனம். படம் பார்க்க ஆவலை தூண்டுகறது.