‘அதானி’ கா… ஹூக்கும்!!! பணக் கதவே… நீ திறவாய்!!!

ஜேப்பி

அண்மையில், அதானி நிறுவனத்தின் நவிமும்பை விமானநிலையக் கட்டுமானத் திட்டத்திற்கு ₹ 12,770 கோடி “கடன் உறுதி” (loan underwriting) செய்வோம் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியது. இது பற்றி சமூக ஊடகங்களில் கடனா, தள்ளுபடியா என விவாதங்கள் எழுந்தன.

2022ல் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உலகின் ஆறாவது ஆகப் பெரிய பணக்காரராகி உள்ளார். கோடிக் கணக்கானவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே புதிதாகத் தள்ளப்பட்டுள்ள நிலையிலும், இவர் சொத்துக்கள் மட்டும் எப்படி விண்ணை முட்ட உயர்கின்றன என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

கடன் உறுதி ஆவணம் (Loan Underwriting)

கட்டுமானப் பணித்திட்டங்களை முடிவு செய்ய “நிதி நிறைவு” (Financial Closure) அவசியம். கட்டுமானப் பணிக்காரர், திட்டத்தை எந்த நிதி ஆதாரத்தை வைத்து அல்லது எவர் கொடுக்கும் நிதி / கடனை வைத்து   முடிப்பார் என்பதற்கு ஆவணம் கொடுக்க வேண்டும்.


நவிமும்பை விமான நிலையத் திட்டத்திற்கு கடன் கொடுப்பதில் பல வெளிநாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், பாரத ஸ்டேட் வங்கி, இந்த நிதி ஆதாரம் வழங்கப்படுவதை நாங்கள் உத்திரவாதப் படுத்துகிறோம், என “கடன் உறுதி” (loan underwriting) ஆவணம் வழங்கியுள்ளது.

கடன் வழங்குவது வங்கித் தொழில் என்றாலும், இந்தக் கடனுக்கு மிகக் குறைவான வருடாந்திர வட்டி 7.1%  என ஸ்டேட் வங்கி தீர்மானித்துள்ளது. மற்ற நிதி நிறுவனங்களும் இதே வட்டிக்குத் தான் கடன் வழங்க வேண்டும்.

சாதாரண மக்களிடம் கூடுதல் வட்டி, சேவைக் கட்டணங்கள் என சரமாரியாக கறாராக வசூலித்து விட்டு, வருமானத்திலும், இலாபத்திலும் செல்வச் செழிப்பிலும் மிதந்து கொண்டிருக்கும் அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு இப்படிக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படுகிறது என்பது பெரிய முரண்.

பரந்து விரிந்த தொழில்

1988ஆம் வருடம் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் சரக்கு வியாபாரத்திற்கு அதானி எக்ஸ்போர்ட்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, 50 நாடுகளில் 70 இடங்களில், பல துறைமுகங்கள், விமான நிலையங்கள், இருப்புப் பாதைகள், சேமிப்புக் கிடங்குகள், நிலக்கரிச் சுரங்கங்கள், மின் உற்பத்தி மற்றும் விநியோகம், எரிவாயு, கட்டுமானம், சமையல் எண்ணை, உணவு பதப்படுத்துதல் என பரந்து விரிந்துள்ளது. ரூபாய் 5 லட்சத்தில் தொடங்கிய நிறுவனத்தின் சமீபத்திய மொத்த சொத்து மதிப்பு (பங்குகளின் சந்தை விலை அடிப்படையில்) கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ரூபாய்.

ஏற்கனவே ஆறு விமான நிலையங்களை அதானி நிறுவனம் கைப்பற்றிய நிலையில், 2019ல் மும்பை சர்வதேச விமான நிலையத்தின் 74% பங்குகளை அதானி நிறுவனம் வாங்கியது. இதில் நவிமும்பை விமான நிலையத் திட்டமும் அடங்கும்.

சர்ச்சைகளின் சாம்ராஜ்யம்

மாநில, ஒன்றிய அரசுகளின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுடன், அரசியல்வாதிகளுடன் நெருக்கம், கணக்கு காட்ட மறுக்கும் PM CARESக்கு 100 கோடி ரூபாய் நிதி வழங்கியது, இவற்றோடு கூட, முந்த்ரா நில ஒதுக்கீட்டுச் சலுகை, வரி ஏய்ப்பு, பணச் சலவை மோசடி, வட்டிச் சலுகை, வரிச் சலுகை, கடன் நிலுவை, சுற்றுச் சூழல் விதி மீறல்கள், ஒப்பந்த முன்னுரிமை, ஹவாலா, வரிப் புகலிடங்களில் ஷெல் கம்பெனிகள், ஊழல் எனப் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கிறது இந்நிறுவனம்.

கடன் எனும் ஒரு கருவி

2014 முதல் 2019 வரை வளர்ச்சியடைய, அதானி குழுமம் நிதி ஏற்பாடு செய்தது பற்றி ஸ்க்ரோல் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் முக்கியமான தகவல்கள் பல வெளியிடப்பட்டன. குழும நிறுவனங்கள் எவ்வாறு வங்கிக் கடன் பெறுகின்றன, எவ்வாறு  பரஸ்பரம் ஒருவர் பங்கை இன்னொருவர் வாங்கி அதன் அடமானத்தில் வங்கிக் கடன் பெறுகின்றன, எப்படி பரஸ்பரம் கடன் கொடுத்துக் கொள்கின்றன, இதன் மூலம் வங்கிக் கடன்களை எவ்வாறு நிரந்தரக் கடன் மறு சுழற்சி (ever greening) செய்கின்றன, குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெறுகின்றன என்பது வெளிச்சமாக்கப்பட்டது. அதானி கட்டுமான நிறுவனத்தில் மூலதனம்:கடன் விகிதம் = 1:107.

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு

பிணையில்லாத, சொத்து அடமானம் ஏதும் அற்ற கடன்களை வங்கிகள் கொடுப்பதன் வரையறை பற்றி 2013ம் வருடம் இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த கொள்கை முடிவின்படி சம்பந்தப்பட்ட வங்கிகளின் நிர்வாகக் குழுக்கள் அடமானம் அற்ற கடன் வரையறையைத் தீர்மானித்துக் கொள்ளலாம். கடன் பெறும் நிறுவனத்தின் பணப் புழக்கத்தின் (Cash Flow) அடிப்படையில், பிணையில்லாக் கடன் (Unsecured Loan) வழங்கலாம். வசூலில் சிக்கல் ஏற்பட்டால் மட்டும் கடன் தொகைகளின் அளவுக்கு முன் ஒதுக்கீடு (100% provision for unsecured loans) செய்தால் போதும். பல பெரு நிறுவனங்களுக்கு வரம்பற்ற பிணையில்லாக் கடன் கொடுப்பதையும், பின்னால் வாராக்கடன் என அவற்றைத் தள்ளுபடி செய்வதையும் ரிசர்வ் வங்கியின் இந்தக் கொள்கைத் தளர்வு சாத்தியமாக்கியது எனலாம்.

ஸ்டேட் வங்கியும் அதானியும்

ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி கடன் ஏற்பாடு செய்து பின்னர் சுற்றுச்சூழல் சர்ச்சைகள் காரணமாக கடன் வழங்குவதில் இருந்து ஒதுங்கியது.அதானி காப்பிடல் நிறுவனத்துடன் சேர்ந்து விவசாயக் கடன் வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை ஸ்டேட் வங்கி சமீபத்தில் செய்து கொண்டது. வாபஸ் பெறப்பட்ட 3 கருப்பு விவசாயச் சட்டங்களின் நோக்கமான “விவசாயத்தில் அதானி ஆதிக்கம்” என்பதை இந்த ஸ்டேட் வங்கி-அதானி ஒப்பந்தம் மறைமுகமாக நிறைவேற்ற உதவும் எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில் தான், அதானி நிறுவனத்திற்கு, 7.1%  குறைந்த வட்டியில், ₹12,770 கோடி நவிமும்பை விமான நிலையக் கட்டுமானக் கடன் உறுதி வழங்க இருக்கிறது ஸ்டேட் வங்கி. இது பிணையில்லாக் கடனா என்பது தெரியாது. இக்கடன் வாராக் கடனாகினால் தள்ளுபடி செய்யப்படும் அபாயம் உள்ளது. அதானி ஆணையிட்டால் பணக் கதவு தானாக திறக்கும்.

ஸ்டேட் வங்கி, அதானி நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன்கள் பற்றிய தகவல்கள் கேட்கப்பட்ட பொழுது, கடன்கள் தொடர்பான பதிவுகள் “வங்கி-வாடிக்கையாளர் மற்றும் வணிக ரகசியம்”, ஆகையால் அவற்றை வெளியிட முடியாது என மத்தியத் தகவல் ஆணையம் கூறியது.

1913 ஜூன் 19ல் பிராவ்தா இதழில் மாமேதை லெனின் எழுதியதை இங்கே குறிப்பிட வேண்டும்.

“Capitalists are not inclined to be frank about their incomes. “Commercial secrets” are strictly guarded and it is very difficult for the uninitiated to penetrate the “mysteries” of how riches are piled up. Private property is sacred—no body is permitted to meddle in the affairs of its owner. Such is the principle of capitalism.”

“முதலாளிகள் தங்கள் வருமானத்தை வெளிப்படையாக அறிவிக்க விரும்ப மாட்டார்கள். “வணிக ரகசியங்கள்” முற்றிலும் காக்கப்படும். செல்வக் குவிப்பின் “மர்மங்களை” விபரமற்றவர்களால் கண்டுபிடிக்க  முடியாது. தனியார் சொத்து புனிதமானது – அதன் உரிமையாளரின் விவகாரங்களில் தலையிட யாருக்கும் அனுமதி இல்லை. முதலாளித்துவ அமைப்பின் கொள்கை இது.”

Comment here...