சே.இம்ரான்
1917ஆம் வருடம். – அதுவரை இந்த பூமிப் பந்தையே சர்வாதிகாரம் செய்து கொண்டிருந்த உலக முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் தங்கள் தூக்கத்தைத் தொலைக்கத் துவங்கிய வருடம்! அன்று உலகம் முழுவதும் இருந்த காலனி நாடுகளின் புரட்சிக் குழுக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தூரத்தில் ஒரு நம்பிக்கைக் கீற்று தென்படத் துவங்கிய வருடம்! ஆம், அதுவரை ஆட்சி கவிழ்ப்பு, அரியணையை கைப்பற்றுவது என்பதெல்லாம் ஆயுதமேந்திய இராணுவக் குழுக்கள் தான் செய்து வந்திருக்கின்றன. தொழிலாளர்களும், விவசாயிகளும் ஆயுதமேந்தி, புரட்சி செய்து கொடுங்கோல் மன்னராட்சியை வீழ்த்தி உழைப்பாளர்களே நிர்வகிக்கும் உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவியது வரலாற்றில் அதுவே முதல் முறை. இந்த பூமிப் பந்தில் அதுவரை இருந்த இயங்கியல் விதியையே புரட்டிப் போட்ட யுகப்புரட்சி அது. அதை தலைமையேற்று நடத்தி உலக ஏகாதிபத்தியங்களுக்கு கிலி ஏற்படுத்தியவர் தான் விளாடிமிர் இல்யிச் உல்யனோவ் என்ற இயர் பெயர் கொண்ட லெனின்!
ஜார் மன்னரின் கொடுங்கோன்மை
ரஷ்யாவில் ஜார் மன்னரின் கொடுங்கோன்மை உச்சத்தில் இருந்த 1870ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் தேதி பிறந்தார் லெனின். அவரின் மூத்த சகோதரர் அலெக்சாண்டர், தன் நண்பர்களோடு சேர்ந்து ஜார் மன்னருக்கு எதிரான பிரச்சாரங்களையும், கிளரச்சிகளையும் அவ்வப்போது செய்ததின் விளைவு, 1887ம் வருடம் அவர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதுவே லெனினின் வாழ்வை மாற்றிய நிகழ்வாக அமைந்தது. தன் வாழ்வில் தலையிட்ட அரசியலில் தான் தலையிட வேண்டும் என்று அவர் முடிவு செய்த தருணமும் அதுவே! ஆம், 1887க்குப் பின் தன் அண்ணனைப் போலவே தான் பயின்ற சட்டக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மன்னருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடத் துவங்கினார். விளைவு, கல்லூரியில் இருந்து நீக்கம், கைது, நாடு கடத்தல், தலைமறைவு வாழ்வு என்று பல இன்னல்களுக்கு ஊடே தான் தன் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்.
நாடு கடத்தப்படுகிறார்
அன்றைய ரஷ்யாவில் கிளர்ச்சியாளர்களை நாடு கடத்தும் வழக்கம் இருந்ததன் பொருட்டு, லெனினும் அவரது சிந்தனையை ஒத்த அவரது காதலி க்ரூப்ஸ்கயாவும் சைபீரியாவிற்கு நாடு கடத்தப் படுகிறார்கள். அங்கே அவர்களின் திருமணம் நடைபெற்றதோடு ரஷ்ய முதலாளித்துவத்திற்கு எதிராக தனது முதல் புத்தகத்தை எழுதினார். இறுதி இலக்கான ஆயுத புரட்சியை காகித புரட்சியின் ஊடே செய்யத் துவங்கிய சமயம் அது. விடுதலை அடைந்து இருவரும் நாடு திரும்பினாலும், மீண்டும் தொழிலாளர்களை அணி திரட்டுதல், கிளர்ச்சிகள், போராட்டங்கள் என்று தம் பணிகளை லெனின் தொடர, மீண்டும் கைது, நாடு கடத்துதல் என்று அரசாங்கமும் தொடர்ந்தது. கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ரஷ்யாவை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் இதர நாடுகளில் அடுத்த 7 ஆண்டுகள் வெவ்வேறு பெயர்களிலும் (அப்படி அவர் சைபீரியா நாட்டு லெனா நதியின் நினைவாக வைத்துக் கொண்ட புனைப்பெயரான லெனின் அவர் அடையாளமாகவே நிலைத்து விட்டது), வெவ்வேறு அடையாளங்களிலும் இயங்கிய லெனின், தன் எழுத்துக்கள் மூலம் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து கொண்டே இருந்தார்.
ஆயுத கிளர்ச்சிக்கு முன் சில விஷயங்களை செய்து தீர வேண்டும் என்று தீர்க்கமாக நம்பினார். அது சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களுக்கு தான் சுரண்டப் படுகிறோம் என்பதை உணரச் செய்ய வேண்டும். பின்னர் அவர்களை அணிதிரட்ட வேண்டும். அதன் பின்னரே கிளர்ச்சி என்று தம் திட்டங்களில் தெளிவாக இருந்தார் லெனின். ‘கற்பி; ஒன்று சேர்; புரட்சி செய்’ என்பதன் ரஷ்ய வடிவம் அது!
நவம்பர் புரட்சி
சொற்ப கூலி, கூடுதல் வேலை நேரம், வறுமை, வேலையின்மை என்பதையெல்லாம் தாண்டி ஒரு துண்டு ரொட்டிக்கு கொலைகள் நிகழும் அளவுக்கு நிலைமை மோசமாகவே, கிளர்ந்து எழுந்த தொழிலாளர்கள் 1917 பிப்ரவரியில் ஜார் மன்னனை ஆட்சியில் இருந்து அகற்றினர். ஆனால் அரியணையில் அமர்ந்ததோ நிலக்கிழார்களும், பண்ணையார்களும். ஜார் மன்னர் ஆட்சியின் நீட்சியாகவே புதிய ஆட்சியும் மக்கள் துயர் துடைப்பதில் கவனம் செலுத்தாமல் நிலைமை மேலும் மோசமடைந்தது. லெனின் தலைமையில் மீண்டும் ஒரு புரட்சிக்கு தயாரானது ரஷ்ய உழைக்கும் வர்க்கம். பெட்ரோகிராட் நகரில் திரண்டிருந்த உழைக்கும் மக்களின் செஞ்சேனைப் படையின் முன்பு லெனின் ஆற்றிய எழுச்சி உரை உலக பிரசித்தம். 1917, நவம்பர் 7, அன்று ஆயுதங்களுடன் திரண்டிருந்த செம்படையின் முன்பு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரணடைந்தது பண்ணையார்களின் புதிய அரசு. உலகமே வியந்து பார்க்க ரஷ்யா என்னும் ஒரு மாபெரும் நிலப்பரப்பு தொழிலாளர்கள் கைகளில் வந்து சேர்ந்த தருணம் அது. ரஷ்யாவை பீடித்த கம்யூனிச பூதம் தங்கள் நாட்டையும் ஆக்கிரமித்து விடுமோ என்று சுரண்டி கொழுத்த உலக முதலாளிகள் எல்லாம் தூக்கத்தை தொலைத்தனர். இன்றும், உலகின் எந்த மூலையிலாவது, வெறும் நூறு தொழிலாளர்கள் ஒன்று கூடினாலும் ஆளும் வர்க்கங்கள் அலறி துடிப்பதற்ககுக் காரணம் லெனின் அன்று ஏற்படுத்திய தாக்கத்தின் எச்சமே! இன்னொரு லெனின் பூமியின் எந்த மூலையிலும் அவதரித்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வே அது!
பொது உடமை பூமியானது ரஷ்யா
லெனின் தலைமையில் அமைந்த ஆட்சியில், வாக்குறுதி அளித்தபடி செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்த நிலம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆலை நிர்வாகங்கள் தொழிலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஊதியமும், வேலை நேரமும் முறைப்படுத்தப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தேசமெங்கும் பரவலானது. இந்த பொதுவுடைமை சமூக அமைப்பு ரஷ்யாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளையும் கவர்ந்து மாபெரும் சோவியத் யூனியனாக நிமிர்ந்து நின்றது. முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் தான் என்ற பேசு பொருள் உலகெங்கும் ஒலிக்கத் துவங்கியது!
நாம் காண விரும்பும் கனவு தேசத்திற்கான குறிப்புகளை, செயல் திட்டங்களை, நூறு ஆண்டுகள் பிந்தைய வரலாற்றில் புதைத்து வைத்திருக்கும் லெனின் குறுகிய காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் 1924ம் ஆண்டு மறைந்தார். இன்றும் அவரது பூதவுடல் பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் தொழிலாளர்களின் விண்ணைப் பிளக்கும் கோஷங்கள் முதலாளிகளுக்கு கிலி ஏற்படுத்துகிறதோ அப்போதெல்லாம் அந்த உடல் நமட்டுச் சிரிப்பு சிரிக்கும்!
(ஏப்ரல் 22- லெனின் பிறந்த தினம்)